என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, November 3, 2025

யோகி 128

 

பாண்டியன் டாக்டர் சுகுமாரனைத் தனியாக வெளியே அழைத்துப் போய் ஷ்ரவனானந்தாவுக்கு இருக்கும் விசேஷ சக்தி விவரங்களைச் சொன்னார். சுகுமாரன் திகைப்புடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். ஷ்ரவன் நேற்று அவர்கள் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறான் என்று சொன்ன போது சுகுமாரன் தங்களுக்கு இத்தனை பிரச்சினைகளை உருவாக்கிய ஆளைப் பார்க்க வேண்டுமென்று துடித்தார். பாண்டியன் அவருக்கு அந்த நபரின் புகைப்படங்களைக் காட்டிய போது அவருக்கும் அந்த நபர் பரிச்சயமானவன் அல்ல என்று சொன்னார். பாண்டியன் தேவானந்தகிரியிடம் நேற்று பேசினதையும் சொன்ன போது சுகுமாரன் பரம திருப்தி அடைந்தார்.

 

இருவரும் அறைக்குத் திரும்பி வந்தார்கள். டாக்டர் சுகுமாரன் ஷ்ரவனைப் பார்த்த பார்வையில் மரியாதை தெரிந்தது.

 

ஷ்ரவன் சுகுமாரனிடம் சொன்னான். “என்னை மன்னித்து விடுங்கள். சில சமயங்களில் எனக்கு வேண்டாதது எல்லாம் தெரிகிறது. புதியவர்கள் பற்றி தெரிந்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் மண்டை ஓட்டைப் பார்த்ததும் பதட்டமடைந்து என்னை அறியாமல் சொல்லி விட்டேன்...”

 

சுகுமாரன் கைகூப்பினார். “தப்பேயில்லை....”

 

பாண்டியன் சுகுமாரனைத் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் இடைமறித்து ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்கள் நேற்று சொன்ன இளைஞனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன ஷ்ரவனானந்தா.”

 

ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். “எனக்கு அந்த ஆளைப் பற்றி வேறு எந்தக் காட்சியும் தெரியவில்லையேஜி.”

 

பாண்டியன் சொன்னார். “இது போன்ற சக்திகளின் பிரயோகங்களில் பரிச்சயமான ஒருவர் எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் கேரளாவில் காசர்கோட்டில் இருக்கிறார். அவரிடம் பேசிய போது அவர் அந்த ஆளைப் பற்றி மேலும் அதிகமாக உங்களுக்குத் தெரிவதற்குச் சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார்.”

 

இவர்கள் இதுவிஷயமாக தேவானந்தகிரியை உடனடியாகத் தொடர்ந்து கொண்டு பேசுவார்கள் என்பதை ஷ்ரவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதுக்குள் அவன் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தேவானந்தகிரி நேராக இங்கே வராவிட்டாலும் கூட, அவர் இதில் சம்பந்தப்படுவது அவனை எப்போதும் ஆபத்தின் எல்லைக் கோட்டில் வைத்திருக்கும் என்ற புரிதல் அவனுக்கு இருந்தது. ஆனால் ஆபத்தான விளையாட்டை அவன் ஆரம்பித்தாகி விட்டது. இனி இடையில் நிறுத்த வழியில்லை.

 

ஷ்ரவன் கேட்டான். “என்ன ஆலோசனைகள்ஜி...”

 

பாண்டியன் சொன்னார். “எதையுமே சரியான காலத்தில் முறையாக முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். இது போன்ற விசேஷ சக்தி சம்பந்தமான முயற்சிகள் அதற்குச் சாதகமான காலத்தில் தான் எடுக்கப்படவேண்டும் என்று அவர் சொல்கிறார்...”

 

ஷ்ரவன் தலையசைத்தாலும் அவன் முகத்தில் குழப்பம் தெரிவதை பாண்டியன் கவனித்தார்.  அவர் அவனிடம் விளக்கமாகச் சொன்னார். “இதெல்லாம் சரியான முகூர்த்த காலத்தில் ஆரம்பிக்கப்படுவது முக்கியம் என்று அவர் சொல்கிறார். இன்றைக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி மதியம் 11.57 க்கு நீங்கள் அந்த இளைஞன் மீது கவனம் குவிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக உங்களுக்கு அவனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று அவர் சொன்னார். இயல்பாக இருக்கும் எந்தச் சக்தியும் அந்த சமயத்தில் கூடுதலாகப் பெருகும் என்கிறார் அவர்.”

 

ஷ்ரவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 11.47.  சிறிது யோசித்து விட்டு அவன் பாண்டியனிடம் சொன்னான். “நீங்கள் 11.57க்கு அலாரம் வைக்கிறீர்களா ஜீ. நான் அது வரை என் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன். அலாரம் அடித்தவுடன் அந்த இளைஞன் மீது என் கவனத்தைக் குவிக்கிறேன். பார்ப்போம் எதாவது கூடுதலாகத் தெரிய வருகிறதா என்று...”

 

பாண்டியனுக்கு அவன் உடனடியாக அவர் சொன்னதை முயற்சி செய்து பார்க்கத் தயாரானது மிகவும் பிடித்தது.  சரியென்று அவரது கைபேசியில் அவர் அலாரத்தை 11.57க்கு வைத்தார். 

 

ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. மிகவும் கவனமாக அவன் இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும். இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல, தொடர்ந்து வரும் சூழ்நிலைகளையும் கச்சிதமாகக் கையாள வேண்டும். அவன் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து விட்டு மந்திர ஜபத்தை மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அதில் அவன் ஐக்கியமாகி லயிக்க ஆரம்பித்தான். பாண்டியனையும், சுகுமாரனையும், அந்தச் சூழ்நிலையையும் கூட மறந்தான். அவனுக்குள் அந்த மந்திரம் மட்டுமே நிறைந்திருந்தது. முடிவில் அவனே அந்த மந்திரமானான்.

 

சாந்தமும், பேரமைதியும் அவனிடம் தெரிய ஆரம்பித்தது. அவனிடம் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து பாண்டியனும், சுகுமாரனும் பிரமித்தனர். பாண்டியனுக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடையாது. அவருக்கு அதில் சிறிதும் ஈடுபாடும் இல்லாமல் இருந்ததால் அவர் மற்றவர்களிடமும் அவற்றைக் கவனித்தது இல்லை. ஆனால் அவன் இப்போது இருக்கும் நிலை நடிப்பல்ல என்பதையும் அவன் வேறெதோ உலகத்திற்குச் சென்று விட்டதையும் அவர் உணர்ந்தார். சுகுமாரனும் கிட்டத்தட்ட அவரைப் போலவே உணர்ந்தார்.

 

அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை ஷ்ரவன் உணரவில்லை. மந்திரமாய் அவனே எங்கும் வியாபித்திருந்தான். அதில் இன்னொன்றுக்கு இடம் இருக்கவில்லை. அலாரம் அடித்த போது தான் அவன் நிகழ்காலத்திற்குத் திரும்பினான். எங்கு, எதற்காக உட்கார்ந்து மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.  அவன் உருவாக்கிய கற்பனை எதிரியைப் பற்றி இனி எதையாவது சொல்லியாக வேண்டும்... மூளையில் ஒரு பொறி தட்டியது. கத்தி முனையில் நடக்கும் வித்தை தான். ஆனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

 

ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவன்... அவன் எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்....”

 

பாண்டியனும் தாழ்ந்த குரலில் பரபரப்புடன் கேட்டார். “என்ன தேடுகிறான்...?”

 

சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஷ்ரவன் சொன்னான். “யாரோ ஒரு நிஜ யோகியை?”

 

பாண்டியனும் சுகுமாரனும் ஒருவரை ஒருவர் பரபரப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பாண்டியன் கேட்டார். “எதற்கு அவன் நிஜ யோகியைத் தேடுகிறான்....?”

 

இதுவரை அவன் அவர்களுக்கு வேறொரு ஆள் மூலம் முன்பே தெரிந்ததைச் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்து விட்டான். அந்த இடத்திலிருந்து இனி அவர்களை அவன் எப்படி வழிநடத்துவது என்பதை அவனே புத்திசாலித்தனமாய் திட்டமிடலாம். திட்டம் அவனுடையதாய் இருந்தாலும் முடிவு அவர்களாய் எடுப்பது போல் இருப்பது மட்டும் இதில் மிக முக்கியம்

 

அவன் மெல்லச் சொன்னான். “அவரது காலடி மண் அவனுக்கு வேண்டியிருக்கிறது...”

 

இருவரும் திகைத்தார்கள். பாண்டியன் கேட்டார். “காலடி மண்ணா? எதற்கு?...”

 

எதோ ஒரு விசேஷ பூஜைக்கு.....”

 

என்ன பூஜை? எதற்கான பூஜை?...”

 

ம்ம்ம்....” ஷ்ரவன் எதையோ உற்றுப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டான். ”பூஜையில் பெரிய விளக்கொன்று தெரிகிறது, மயான காளியின் படம் ஒன்றும் தெரிகிறது.... நிறைய சின்னங்கள் தரையில் வரையப்பட்டு இருக்கின்றன.”

 

அவன் கூடுதலாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த பாண்டியன் அவன் எதையும் சொல்லாமல் போகவே மெல்லக் கேட்டார்.

 

அவர்கள் தேடும் நிஜ யோகி எங்கேயிருக்கிறார் என்று தெரிகிறதா?”

 

ஷ்ரவன் அந்தக் கேள்விக்கு பரசுராமன் சொன்ன பதிலையே சொல்வது நல்லது என்று எண்ணினான்.  ஏதோ தோட்டம் தெரிகிறது.....”

 

சொல்லி விட்டு அவன் மௌனமானான். பாண்டியன் பரபரப்புடன் கேட்டார். “பிறகு என்ன தெரிகிறது?”

 

பிறகு, பிறகு....” என்ற ஷ்ரவன் பின் முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டிச் சொன்னான். ”எல்லாம் மறைந்து விட்டது.” 

 

அவன் கண்களைத் திறந்த போது அவர்கள் இருவர் முகத்திலும் திகைப்பும், ஏமாற்றமும் கலந்து தெரிவதைப் பார்த்து வருத்தம் காட்டிச் சொன்னான். “காட்சி திடீரென்று வருவதைப் போலவே திடீரென்று போயும் விடுகிறது. என்னை மன்னிக்க வேண்டும்.”

 

பாண்டியன் சொன்னார். “மன்னிக்க எதுவுமில்லை ஷ்ரவனானந்தா. நீங்கள் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். அடுத்த முறையும் முகூர்த்தம் பார்த்து தொடங்குவோம். கண்டிப்பாக, கூடுதலாக எதாவது தெரிய வரும்...”

 

பாண்டியன் ஷ்ரவனை அனுப்பி விட்டார். சுகுமாரன் பாண்டியனிடம் ஏமாற்றத்துடன் சொன்னார். “நான் எதிரி பற்றிய எல்லா தகவலும் இப்போதே தெரிந்து விடும் என்று எதிர்பார்த்தேன்...”

 

பாண்டியன் சொன்னார். “அவன் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். எதிரி ஒரு நிஜ யோகியைத் தேடறான்னு கண்டுபிடிக்கவே தேவானந்தகிரிக்கு மந்திரம், யந்திரம், பூஜைன்னு எல்லாம் தேவைப்பட்டுச்சு. இவன் அது எதுவுமில்லாமல் நிமிஷங்கள்ல சொல்லிட்டான். கூடுதலாய் அவன் அந்த நிஜ யோகியை, அவரோட காலடி மண்ணுக்காக தான் தேடறான்னும் சொல்லிட்டான்.”

 

ஆனா அந்த மண் எதுக்குன்னு சொல்லலையே. அதை எப்படி தெரிஞ்சுக்கறது?”

 

தேவானந்தகிரிக்கு போன் பண்ணினா தெரிஞ்சுடப் போகுதுஎன்ற பாண்டியன் தன் அலைபேசியை எடுத்தார்..


(தொடரும்)

என்.கணேசன்

 



Thursday, October 30, 2025

சாணக்கியன் 185


 

லைகேது விரைந்து சென்று தன் சேனையுடன் சேர்ந்து கொண்ட பின் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். படைகளைச் சந்திக்கும் வரை அது முடியும் என்ற முழு நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் கடைசி வரை நம்பிக்கை தந்து அவனுடன் இருந்தவன் சுசித்தார்த்தக் மட்டுமே. அதனால் சுசித்தார்த்தக் மீது அவனுக்குப் பரமதிருப்தி இருந்தது. உயிர் காப்பாற்றி படைகளோடு சேர்க்கிற வரை உறுதுணையாக இருந்தவன் என்பதால் அவன் சுசித்தார்த்தக்குக்கு ஒரு தங்கச் சங்கிலியும், ஒரு முத்து மாலையையும் வழங்கி கௌரவித்தான்.

 

பின் ஆழ்ந்து சிந்தித்து என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று யோசித்து முடிவெடுத்து விட்டு அவன் காஷ்மீர குலு நேபாள மன்னர்களைச் சந்திக்கப் போனான்.

 

அந்த மூன்று மன்னர்களும் சற்று முன் தான் பர்வதராஜன் மர்மமான முறையில் இறந்து போனதைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த மரணத்தின் பின்னணி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால் கிடைக்கின்ற முதல் தகவலை உண்மை என்று முழுமையாக நம்பும் மனநிலையில் இருந்தார்கள்.

 

அவர்களிடம் அவன் பேசிய விதம் அவன் பர்வதராஜனின் மகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. “என் தந்தையின் ஆத்மார்த்தமான நண்பர்களே. அவர் தனக்காக யோசித்ததை விட உங்கள் மூவருக்காக யோசித்தது அதிகம். என்னிடம் அடிக்கடிமகனே வெற்றி அடைந்ததில் நமக்குச் சரியான பங்கு கிடைக்கிறதோ இல்லையோ, என் நண்பர்களுக்குச் சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனக்கு அதிமுக்கியம்என்று  சொல்வார். வெற்றிக்குப் பிறகு பங்கீடு குறித்து ஆச்சாரியரிடம் அடிக்கடி பேசியும் வந்தார். ஆனால் ஆச்சாரியர் அவரிடம் பிடிகொடுத்துப் பேசவில்லை. அது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட வருத்தத்துடன் சொன்னார். “மகனே. வெற்றி இப்படி ஆச்சாரியரை மாற்றி விடும் என்று நான் கற்பனையிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆச்சாரியர் இப்போதுவெற்றியில் நாமிருவரும் பங்கு பிரித்துக் கொள்வோம். உங்கள் நண்பர்களுக்கு நாம் ஏன் பங்கு தர வேண்டும்என்கிற வகையில் பேசுகிறார். நான் அதை ஏற்க ஆணித்தரமாக மறுத்து விட்டேன்.  ’எங்களுக்கு இல்லா விட்டாலும் பரவாயில்லை ஆச்சாரியரே. என்னை நம்பி வந்திருக்கும் என் நண்பர்களுக்குரிய பங்கைக் கொடுத்து விடுங்கள். அது அவர்களுக்கு மறுக்கப்பட்டால் இறந்தாலும் இந்தக் கட்டை வேகாதுஎன்று சொல்லியிருக்கிறேன் என்றார்....” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி விட்டு மலைகேது வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

 

காஷ்மீர மன்னன் கவலையுடன் கேட்டான். “பின் என்ன நடந்தது?” 

 

மலைகேது அவன் தந்தை இருந்திருந்தால் எப்படிப் பேசுவாரோ அப்படியே கற்பனையில் ஜோடித்துப் பேசினான். “தந்தை சொன்னதற்கு ஆச்சாரியரும் சந்திரகுப்தனும்முதலில் வெற்றியைக் கொண்டாடுவோம். பிறகு இந்தப் பங்கீட்டைப் பற்றிப் பேசுவோம்என்று சொல்லி விட்டார்கள். அப்பாவியான என் தந்தை அதை நம்பிவிட்டார். அவர்கள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற என் தந்தை உயிரோடு திரும்பவில்லை. என்னையும் அந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தார்கள். நல்ல வேளையாக உடல்நலக் குறைவு காரணமாக நான் செல்லவில்லை. அதனால் தான் உயிர் தப்பினேன் என்று சொல்ல வேண்டும்....”

 

நேபாள மன்னன் கேட்டான். “அவர் எப்படி இறந்தார்?”

 

விஷத்தால் இறந்ததாய் எனக்குச் செய்தி கிடைத்தது. அவர் குடித்த மதுவில் அவர்கள் விஷத்தைக் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.”

 

ஆச்சாரியர் என்ன சொல்கிறார்?” என்று குலு மன்னன் கேட்டான்.

 

மலைகேது சொன்னான். “யார் கேட்டார்கள்? கேட்க நான் அங்கேயே இருந்திருந்தால் அவர் எதாவது கதை திரித்துச் சொல்லியிருப்பார். பின் என்னை என்ன செய்வார் என்று யாருக்குத் தெரியும். நான் உடனே அங்கிருந்து தப்பித்து வந்து என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்இப்போது என்னை ஆட்டிப் படைக்கும் எண்ணமெல்லாம் என் தந்தையின் மரணத்திற்கு அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பதல்ல. அவர் கடைசி வரை உங்களுக்குப் பெற்றுத் தர நினைத்ததை உங்களுக்குப் பெற்றுத் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான்.”

 

அவர்கள் மூவரும் அவனை வியப்புடனும், மிகுந்த மரியாதையுடனும் பார்த்தார்கள்.

 

லைகேது அந்த மூன்று மன்னர்களின் இரக்கத்தையும், நன்மதிப்பையும் சம்பாதிப்பதில் வெற்றி கண்டாலும் அவன் அவர்களை சாணக்கியருக்கும், சந்திரகுப்தனுக்கும் எதிராகத் திருப்புவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. பர்வதராஜனின் மரணம் அநியாயமானது என்று அவர்கள் ஒத்துக் கொண்டாலும் அதற்காகவோ, தங்கள் பங்குக்காகவோ இணைந்து சந்திரகுப்தனுக்கு எதிராக போராட அவர்கள் தயங்கினார்கள்.

 

நேபாள மன்னன் வெளிப்படையாகவே சொன்னான். “மலைகேது உன் உத்தேசம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களை எதிர்ப்பது நம்மால் முடிகிற காரியமா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பெரிதாகப் படை என்று ஒன்று இல்லாத போதே யவன சத்ரப் பிலிப்பைக் கொன்றவர்கள் அவர்கள். வாஹிக் பிரதேசத்தை வென்ற பிறகு யவன சத்ரப் யூடெமஸைக் கொன்றார்கள். மேலும் பலத்தைப் பெருக்கிக் கொண்டு உன் தந்தையையும் கொன்று விட்டார்கள். இப்போது இணையற்ற பலத்தோடு இருக்கும் அவர்களை எதிர்த்து வெல்வதை விடு, நாம் உயிரோடு இருப்பதாவது முடிகிற காரியமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.”

 

அவன் சொன்னதை காஷ்மீர குலு மன்னர்கள் மெல்லத் தலையசைத்து ஆமோதித்தது மலைகேதுவை எரிச்சலடையச் செய்தது. அவன் இக்குறுகிய காலத்தில் அவன் தந்தையின் தந்திரத்தையும் பேச்சையும் திறம்படக் கற்றுத் தேர்ந்திருந்ததால் விடாமுயற்சியோடு சொன்னான். “நம் பயமும், தயக்கமும் தான் சாணக்கியரின் பலமாக இருக்கிறது. நாம் இத்தனை தூரம் போராடி நம் வீரர்களையும், ஆயுதங்களையும், குதிரைகளையும், யானைகளையும் இழந்தது ஒரு பலனுமில்லாமல் திரும்பப் போவதற்கா? இதையும் யோசித்துப் பாருங்கள்

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “உண்மை தான். ஆனால் எங்களையெல்லாம் விட அறிவும், அனுபவமும், வலிமையும் வாய்ந்த உன் தந்தையே அவர்களை எதிர்த்து பெற்ற பலன் உயிரை இழந்தது தான் என்கிற போது நாம் நம் வலிமையை பெருக்கிக் கொள்ளாமல் அவர்களை எதிர்ப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை மலைகேது

 

குலு மன்னனும் சொன்னான். “காஷ்மீர மன்னன் சொல்வது சரி தான். நாம் முன்யோசனை இல்லாமல், நம்மை மேலும் பலப்படுத்திக் கொள்ளாமல் எந்த முயற்சியில் ஈடுபடுவதும் நல்லதல்ல... அதனால் பொறு. நாம் யோசிப்போம்.”

 

மலைகேதுக்கு அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. ஒரேயடியாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவர்கள் தொடர்ந்து பாடலிபுத்திரம் செல்லாமல் அங்கேயே தங்கி யோசிக்கத் தீர்மானித்ததே ஆரம்ப வெற்றியாக மலைகேதுவுக்குத் தோன்றியது.  “நல்லது யோசியுங்கள். ஆனால் உங்களுக்காக என் தந்தை செய்திருக்கும் தியாகம் வீணாகக் கூடாது என்பதையும் மறந்து விடாதீர்கள்என்று சொன்னான்.

 

அவனுக்கு மறுநாளே ராக்ஷசரின் கடிதம் ஒரு தூதன் மூலம் வந்து சேர்ந்தது.

 

ஹிமவாதகூட இளவரசருக்கு வணக்கம்.

 

நாம் இதற்கு முன் சந்திக்கும் வாய்ப்பு இருந்திரா விட்டாலும் தங்கள் தந்தையைக் கண்டு பேசும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். நடந்ததை எல்லாம் மறந்து அவருடன் நட்பு பாராட்டும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்திருந்தது. நமது பொது எதிரியை எப்படி வீழ்த்துவது என்று சேர்ந்து ஆலோசித்து ஒரு முடிவையும் நாங்கள் எட்டியிருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் நம் பொது எதிரி சதி செய்து உங்கள் தந்தையைக் கொன்று விட்டது எனக்கு பேரதிர்ச்சியையும், பெருந்துக்கத்தையும் தந்தது. ஆனால் தாங்கள் தங்கள் தந்தையின் மரணத்தில் எச்சரிக்கையடைந்து பாடலிபுத்திரத்திலிருந்து தப்பித்துச் சென்றது  எனக்கு மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது. தாங்கள் இங்கேயே தங்கியிருந்தால் உங்கள் உயிருக்கும் ஆபத்து சம்பவித்திருக்கும் என்பது உறுதி.

 

தங்கள் தந்தை இறந்த போதிலும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பணி நாம் செய்வதற்காகக் காத்திருக்கிறது. அந்தப் பணியை நாம் செய்தால் ஒழிய அவர் ஆத்மா சாந்தியடையாது. அதைச் செய்யாமல் நீங்களும் தலைநிமிர்ந்து வாழ முடியாது. உங்களுடன் போருக்கு வந்த நட்பு மன்னர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் நம் பொது எதிரி உங்கள் தந்தையைக் கொன்றதோடு திருப்தியடையப் போவதில்லை. அடுத்ததாக எதிரி வீழ்த்த நினைத்திருக்கும் பட்டியலில் உங்கள் அனைவர் பெயர்களும் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஏனென்றால் வெற்றியில் பங்கு கேட்க வரும் யாரையும் எதிரியாக நினைக்கும் போக்கு எதிரியிடம் வெளிப்பட்டு வருகிறது. அதனால் தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பழி தீர்க்க மட்டுமல்லாமல் எதிரியின் எதிர்காலத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் ஒன்றிணைந்து போராடுவதே இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. இந்த உண்மை நிலையைத் தாங்கள் உணர்வது மட்டுமல்லாமல் தங்கள் நட்பு மன்னர்களுக்கும் புரிய வைத்து ஒருங்கிணையுங்கள். எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எதிரியை வீழ்த்துவது ஒன்றே நான் எதிர்பார்க்கும் ஒரே பலன்.   

 

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

 

இப்படிக்கு,

தங்கள் தந்தையின் கடைசி நண்பன்

 

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, October 27, 2025

யோகி 127

 

பாண்டியன் உறங்கத் தயாரான போது டாக்டர் சுகுமாரனின் அழைப்பு அவர் அலைபேசியில் வந்தது. ’தூக்கத்திற்கும் இந்த டாக்டருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கின்றதுஎன்று புன்னகையுடன் பாண்டியன் நினைத்தார். பெரும்பாலும் அவரை உறங்க விடாதவராகத் தான் டாக்டர் இருக்கின்றார்...

 

ஹலோ டாக்டர். சொல்லுங்க. என்ன விசேஷம்?”

 

விசேஷ காலமெல்லாம் முடிஞ்சு போயிடுச்சு. பிரச்சினைக் காலம் தான் இப்ப நடக்குது. அதனால என்ன பிரச்சினைன்னு தான் நீங்க கேட்கணும்.”

 

நடக்கறதை எல்லாம் பிரச்சினைன்னு நினைக்கறது தான் உண்மையான பிரச்சினை. எல்லாத்தையும் சரி செய்ய வேண்டிய சூழ்நிலைன்னு நினைச்சுப் பாருங்க. பிரச்சினைங்கறதே உங்க வாழ்க்கைல இருக்காது.”

 

தத்துவம் கேட்டு ரசிக்கற நிலைமைல நான் இல்லை. ஏதாவது முன்னேற்றம் இருக்கா? எதிரியைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?”

 

கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டோம்.”

 

யாரந்த நாய்?”

 

நாளைக்கு நேர்ல வாங்க. சொல்றேன். இப்ப நான் தூங்கணும்என்று சொல்லி  அழைப்பைத் துண்டித்து விட்டு பாண்டியன் படுக்கையில் சாய்ந்தார்.

  

டிட்டர் திவாகரன் அலுவலகம் உள்ள தெரு நள்ளிரவு நேரத்தில் வெறிச்சோடி இருந்தது. ஆள் நடமாட்டம் அங்கு இருக்கவில்லை. எப்போதாவது வரும் வாகனங்கள் கூட அந்த நேரத்தில் அதிகமில்லை. அதனால் அங்கே மயான அமைதி நிலவியது. அந்த அமைதியைக் குலைக்காமல் மின்சார பைக் ஒன்று மெல்ல அத்தெருவில் நுழைந்தது. அந்த பைக்கில் வரும் நபருக்கு வேலை ஆடிட்டர் திவாகரன் அலுவலகத்தில் தான் என்றாலும் அவன் அதற்கு நான்கு கட்டிடங்கள் முன்பாகவே உள்ள ஒரு வீட்டின் முன் தன் பைக்கை நிறுத்தினான். அந்த வீட்டின் முன் பகுதியில் கண்காணிக்கும் காமிராக்கள் இல்லை என்பது தான் அதற்குக் காரணம்.

 

அவன் ஒரு தொப்பியும், முகக்கவசமும் அணிந்திருந்ததால், காமிராக்கள் இருந்திருந்தாலும் அவனுடைய அடையாளம் யாருக்கும் தெரியப்போவதில்லை என்றாலும் தன் பைக்கோடு சேர்த்து, எந்தக் காமிரா பதிவிலும் சிக்க விரும்பவில்லை. பைக்கை அந்த வீட்டின் முன் நிறுத்தி விட்டு தலையைக் குனிந்து நடந்த அவன் ஆடிட்டர் திவாகரன் அலுவலகம் வந்தவுடன் தலையை நிமிர்த்தாமலேயே இரண்டு பக்கமும் பார்த்தான். யாரும் இல்லை. தன் கையில் இருந்த கள்ளச்சாவியால் பூட்டைத் திறந்து கொண்டு அவன் உள்ளே நுழைந்து, கதவை முன்பிருந்தது போலவே மூடினான்.

 

உள்ளே பணம் வைக்கும் ஒரு அறையைத் தவிர மற்ற இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லை. காரணம் அந்த இடங்களில் கம்ப்யூட்டர்களைத் தவிர திருட்டுப் போக விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லை.  ஹாலில் அவன் விளக்கைப் போடவில்லை. அப்படிப் போட்டால் கதவிடுக்கில் வெளியே வெளிச்சம் தெரியும். தன் கைபேசியில் உள்ள டார்ச் வெளிச்சத்தின் உதவியால் திவாகரனின் அறைக்கு வந்த அவன் இன்னொரு கள்ளச் சாவியால் அவர் அறைக்கதவைத் திறந்து விளக்கைப் போட்டு விட்டு சாவகாசமாக அவர் நாற்காலியில் அமர்ந்தான். பின் அந்த அறையில் ஒவ்வொன்றும் எப்படி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை முதலில் ஆராய்ந்து மனதில் ஒழுங்காக அதைக் குறித்துக் கொண்டான். அவன் கிளம்பிப் போகும் போது எல்லாம் இப்படியே இருக்க வேண்டும். இங்கு அவன் வந்து போயிருக்கும் சுவடே தெரியக்கூடாது...

 

பிறகு அவன் அவருடைய கம்ப்யூட்டரை ஆன் செய்தான். அவருடையபாஸ்வர்டைக் கண்டுபிடிக்க அவனுக்கு நிறைய நேரம் தேவைப்படவில்லை. அவன் அதில் கைதேர்ந்த நிபுணன். மேலும் அவரைப் போன்ற வயதானவர்களின் பாஸ்வர்டைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மிகவும் கஷ்டமான பாஸ்வர்டாக இருந்தாலும் அவனுக்குத் தேவையான அதிகபட்ச நேரம் ஒரு மணி நேரம் தான்.

 

அவருடைய கம்ப்யூட்டரைத் திறந்த அவன் அதில் உள்ள கோப்புகள் அனைத்தையும் அவனுடைய பென் ட்ரைவில் நகலெடுத்துக் கொண்டான்.  பின் அவர் மேஜை மீது வைத்திருந்த டயரியை ஆராய்ந்து அதில், முக்கியமாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றிய சில பக்கங்களை கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். வேறெதாவது ரகசியமாய் வைத்திருக்கிறாரா என்று மேஜை மற்றும் பீரோவுக்குள் இருப்பவற்றை ஆராய்ந்தான். அங்கிருப்பவற்றில் எதுவும் முக்கியமாய்த் தோன்றவில்லை. பின் அங்கிருந்து கிளம்பும் முன் எல்லாமே முன்பிருந்தது போலவே இருக்கிறதல்லவா என்று சரிபார்த்துக் கொண்டு கிளம்பினான். முன் கதவைத் திறந்து வெளியே வரும் போது, யாராவது பார்க்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் கவனித்தான். யாருமிருக்கவில்லை. வெளிக்கதவைப் பூட்டிக் கொண்டு அமைதியாக அவன் தலைகுனிந்தபடியே பைக்கை நோக்கிச் சென்றான்.

 

எதாவது சந்தேகம் வந்தால் ஒழிய, அந்த அலுவலகத்தில் யாரும் அந்த இரவு காமிராப் பதிவுகளை மறுநாள் பார்க்கப் போவதில்லை. சந்தேகம் வரும்படியாக அவன் உள்ளே எந்தத் தடயத்தையும் விட்டு விட்டு வரவில்லை.

 

றுநாள் காலையில் ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கையில் கல்பனானந்தா அவனை நெருங்கவில்லை. ஆனால் கண்ணன் அவனிடம் வந்து சொன்னார். “மேனேஜர் உங்களை அழைக்கிறார் ஷ்ரவனானந்தா

 

வேலையைப் பாதியிலேயே விட்டுப் போவதால் கல்பனானந்தாவிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று எண்ணி ஷ்ரவன் அவளைப் பார்வையால் தேடிய போது கண்ணன் சொன்னார். “நான் அவரிடம் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் போங்கள்.” 

 

ஷ்ரவன் போன போது பாண்டியன் மட்டும் தான் இருந்தார். பிரம்மானந்தா அங்கிருக்கவில்லை. பாண்டியன் நீண்ட காலம் பழகியவர் போல நட்புடன் புன்னகைத்தபடி வரவேற்றார். “உங்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும் ஷ்ரவனானந்தா. உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. அதனால் தான் அழைத்தேன்.”

 

தொந்தரவு என்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் அடியேனிடம் சொல்லாதீர்கள்ஜி.” என்று ஷ்ரவன் சொன்னான்.

 

பாண்டியன் அதற்கு மேல் உபசார வார்த்தைகள் எதுவும் சொல்லாமல் அவருடைய அலைபேசியில் இருந்த சில புகைப்படங்களை ஷ்ரவனிடம் காட்டினார். “நீங்கள் உங்கள் மனக்காட்சியில் பார்த்தது இந்த ஆளைத் தானா?”

 

அவற்றைப் பார்த்த ஷ்ரவன் முகத்தில் பெரும் திகைப்பைக் காட்டிச் சொன்னான். “இவனே தான். இப்படி உண்மையிலேயே ஒரு ஆள் இருக்கிறானா? நான் இதைப் பார்க்கும் வரையில், இப்படி ஒரு இளைஞன் இருப்பான் என்று நம்பவேயில்லைஜி

 

பாண்டியன் புன்னகைத்தார். அந்த நேரத்தில் அவருடைய உதவியாளன் வந்து சொன்னான். “டாக்டர் சுகுமாரன் வந்திருக்கிறார். அவரை அங்கேயே உட்கார வைக்கட்டுமா, இல்லை இங்கே அனுப்பி வைக்கட்டுமா?”

 

பாண்டியன் ஷ்ரவனைக் கூர்ந்து பார்த்தபடி யோசித்து விட்டுஅவரை உள்ளே அனுப்புஎன்றார். உதவியாளன் சென்ற பின் அவர் ஷ்ரவனிடம் சொன்னார். “அவர் எங்களுடைய நெருங்கிய நண்பர். பெரிய டாக்டர்.”

 

ஷ்ரவன் தலையசைத்தான். டாக்டர் சுகுமாரன் உள்ளே நுழைந்தார். அங்கு வேறொரு நபரும் இருப்பதைப் பார்த்த அவர் ஏமாற்றமடைந்தார். அவருக்கு பாண்டியனிடம் பேச நிறைய இருந்தது….

 

டாக்டர் இவர் எங்களுடைய புதிய துறவி ஷ்ரவனானந்தா.”

 

ஷ்ரவன் சுகுமாரனைப் பார்த்து கைகூப்பினான். டாக்டர் சுகுமாரனும் குழப்பத்துடன் கைகூப்பியபடி உட்கார்ந்தார். இதுவரை அவரிடம் பாண்டியன் அவர்களுடைய துறவிகள் யாரையும் அறிமுகப்படுத்தியதில்லை

 

டாக்டர் சுகுமாரனைப் பார்த்த ஷ்ரவனின் முகம் பயங்கரமாய் மாறியது. எதையோ பார்த்து பயந்தவன் போல் அவன் காட்டிக் கொண்டான். டாக்டர் சுகுமாரன் என்ன ஆச்சு இந்த ஆளுக்கு?’ என்று எண்ணியபடி அவனைப் பார்த்தார்.

 

பாண்டியனும் ஷ்ரவனைத் திகைப்புடன் பார்த்தார். “என்ன ஷ்ரவனானந்தா?”

 

ஷ்ரவன் தனக்கு திடீரென்று பேச்சு வராதது போல் காட்டிக் கொண்டு தடுமாறினான். பின் சொன்னான். “மண்டை ஓடு…. மண்டை ஓடு…”

 

டாக்டர் சுகுமாரன் சடாரென்று எழுந்து விட்டார். “எங்கே…. எங்கே…?” அவர் முகத்தில் பீதி தெரிந்தது. அதைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்ட பாண்டியன் ஷ்ரவனைக் கேட்டார். “என்ன சொல்கிறீர்கள் ஷ்ரவனானந்தா?”

 

இவரைப் பார்க்கும் போது பக்கத்தில் ஒரு மண்டை ஓடு தெரிகிறதுஜி….” ஷ்ரவன் சொன்னான்.

 

என்ன இழவிது? இவருக்கும் மண்டை ஓடு தெரியுதா? என்ன பாண்டியன் இது?” டாக்டர் சுகுமாரன் திகிலுடன் கேட்டார்.


(தொடரும்)

என்.கணேசன்