விஷ்ணுகுப்தர் கங்கையை
அடைந்த போது மாலையாகி விட்டது. கங்கைக் கரையில் சில அந்தணர்கள் சந்தியாவந்தனத்தை ஆரம்பித்திருந்தார்கள். அவரும்
கங்கையில் குளித்து சந்தியாவந்தனம் செய்தார். சிலர் புதியவராகத்
தோன்றிய அவரை யார் என்ற கேள்விக்குறியுடன் பார்த்தார்கள். ஆனால் அவர்
யார் முகத்தையும் பார்க்கவில்லை. யாரிடமும்
சிறு பேச்சு பேசும் மனநிலையிலும் அவர் இருக்கவில்லை. சந்தியாவந்தனம்
செய்கையில் அவர் பார்வை கங்கைக் கரையில் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் சிறிது நேரம்
தங்கியது. அதே இடம் தான். அவருக்குச் சந்தேகமேயில்லை. அந்த இடத்தில்
இப்போது நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.
கரைக்கு வந்த விஷ்ணுகுப்தர் அந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அதை நெருங்கிய போது ஒரு பெரிய யாகசாலை அந்த இடத்தில் உருவாகியிருந்ததை அவரால் பார்க்க முடிந்தது. அருகில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விஷ்ணுகுப்தர் யாகசாலை அருகில் சென்று பார்த்தார். அதன் மரக்கட்டைகளாலான வாயிற்கதவு பெரிய சங்கிலியால் பூட்டப்பட்டு இருந்தாலும் அந்த மரக்கட்டைகளின் இடைவெளிகளில் உட்புறம் தெரிந்தது. உட்புறத்தில் பெரிய ஹோமகுண்டங்கள் தெரிந்தன. எப்போதாவது நடக்கும் பெரிய ஹோமங்களில் போது மட்டும் இது பயன்படுத்தப்படுவதாக இருக்கும் என்று விஷ்ணுகுப்தர் யூகித்தார். இது எப்போது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. அவர் பாடலிபுத்திரத்தில் இருந்த வரை இது கட்டப்பட்டிருக்கவில்லை.
விஷ்ணுகுப்தர்
திரும்பி நடக்க ஆரம்பித்தார். மாலை மங்க ஆரம்பித்தது.
இன்றைய தினம் பௌர்ணமியானதால் அவருக்கு வழித்தடம் தெளிவாகத் தெரிவதில்
பிரச்சினையிருக்கவில்லை. சிறுவயதில் பாடலிபுத்திரத்திலிருந்து
அவர் கிளம்பிய நாளுக்கு மூன்று நாட்களுக்கு முந்தைய இதே போன்ற ஒரு பௌர்ணமி இரவு அவருக்கு நினைவுக்கு வந்தது. சிறுவனான
விஷ்ணுகுப்தன் அன்றும் கங்கைக் கரைக்கு வந்திருந்தான். அன்று
அவன் தனநந்தனை இப்போது யாகசாலை இருக்கும் இடத்தில்
பார்த்திருந்தான். தனநந்தன் அப்போது தேரில் நின்று கொண்டிருந்தான்.
ஏதோ ஒரு அச்சவுணர்வு விஷ்ணுகுப்தனை ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து
நின்று பார்க்க வைத்தது. அன்று பார்த்த காட்சி இப்போதும் நினைவில்
பசுமையாக இருக்கிறது. ஆனால் அன்று அங்கே கண்ட காட்சியின்
பொருள் சிறுவன் விஷ்ணுகுப்தனுக்குச் சரியாக விளங்கியிருக்கவில்லை… வெள்ளைக் குதிரை பூட்டிய தனநந்தனுடைய தேரும், கருப்புக்
குதிரை பூட்டிய இன்னொரு பயண வண்டியும் கிளம்பிச் சென்று கண்களிலிருந்து மறையும் வரை
அங்கே ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்பு
தான் அவன் கிளம்பினான். அன்றிரவு
அந்த கங்கைக் கரையிலிருந்து மூன்று நாழிகை காலம் அவன் நடந்து
முடிகையில் வழியில் ஓரிடத்தில் அந்தப் பயண வண்டி நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது….
அதைப் பார்த்தவுடன் அங்கேயும் ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து
கொண்டு பார்க்க விஷ்ணுகுப்தனின் மனம் எச்சரிக்க அப்படியே அவன் செய்தான். எரிந்து கொண்டிருக்கும்
வண்டியிலிருந்து ஈனசுரத்தில் சில முனகல் சத்தங்கள் கேட்டன. மரணத்தின்
விளிம்பிலிருந்தவர்களின் கடைசி சத்தங்கள். சிறிது நேரத்தில் அந்தச்
சத்தங்களும் ஒடுங்கின. தனநந்தனின் தேர் அங்கே இருக்கவில்லை.
மறுபடி சிறுவன் விஷ்ணுகுப்தன் மனம்நடுங்கி நடக்கையில் ஏதோ புரிகிறது
போல் இருந்தது. இனி தந்தைக்காக காத்திருப்பதில் பொருள் இல்லை என்பதும் புரிந்தது. அவர் சிறையில்
இருக்கலாம், என்றாவது
ஒரு நாள் தண்டனை முடிந்து வெளிவரலாம் என்று மனதின் மூலையிலிருந்த சிறு நம்பிக்கையும்
தகர்ந்தது....
இன்றும் அந்த இடம் வந்த போது விஷ்ணுகுப்தர்
மனதில் பழைய காட்சி தத்ரூபமாக மறுபடி விரிந்தது. எரிகின்ற
தீயின் சத்தமும், இறந்து கொண்டிருந்தவர்களின் முனகல் சத்தமும் இரவின் பேரமைதியில்
தெளிவாக மறுபடி கேட்பது போலிருந்தது. அதற்குப் பின் இந்த
மகதத்தின் தலைநகரத்தின் எல்லைகளில் எத்தனை நிகழ்வுகள் அப்படி நடந்திருக்கின்றனவோ? தனநந்தன்
ஒருவனே அதை அறிவான்!
ராக்ஷசரால்
விஷ்ணுகுப்தரை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. அந்தத் துணிச்சலும், அசராத அமைதியும்
கொண்ட மனிதரை பற்றி முழுமையாக அறிந்து கொள்வது முக்கியம் என்று ஏனோ அவருக்குத்
தோன்றியது. அவர் அன்று மாலையே சக்ரபாணியைத் தன் இருப்பிடத்திற்கு வரவழைத்து பாராட்டிப்
பரிசுகள் அளித்தார். அரசரின் கோபத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சொன்னார். அரசவையில்
கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதும், சிறப்பாகப் பேசியும் பரிசுகள் ஏதும் கிடைக்காததும்
சக்ரபாணியின் மனதை வேதனைப்படுத்தி இருந்ததால் ராக்ஷசரின் பாராட்டும், பரிசுகளும் அவனுக்குப்
பெரும் ஆறுதலாக இருந்தன. மகத மன்னரைப் போல் அல்லாமல் மகத பிரதம அமைச்சர் அறிஞர்களை
மதிக்கத் தெரிந்தவர் என்று மனதில் சிலாகித்தான்.
ராக்ஷசர் அவனிடம்
அவனுடைய ஆசிரியர் விஷ்ணுகுப்தர் பற்றிய தகவல்களையும்
அறிய விரும்புதாகச் சொன்னவுடன் தன்னுடைய ஒப்புயர்வில்லாத
ஆசிரியரைப் பற்றி விரிவாகவே சொன்னான்.
அவரைப் பற்றி முன்பு கேள்விப்பட்டிருந்தாலும் கூட அவருடைய மாணவன் வாயாலேயே கிடைத்த
தகவல்கள் விஷ்ணுகுப்தர் பற்றிய தெளிவான அபிப்பிராயத்திற்கு வர ராக்ஷசருக்கு
உதவின. சக்ரபாணி சொல்வதைப் பார்த்தால் விஷ்ணுகுப்தர் ஓரிரண்டு துறைகளில்
மட்டுமல்லாமல் சகலகலா வல்லவராக ராக்ஷசருக்குத் தெரிந்தார்.
ஆசிரியரைப் பற்றிப் பேசும் போது சக்ரபாணி
முகத்தில் தான் எத்தனை பெருமிதம்! ஆசிரியர்
மிகவும் கண்டிப்பானவர் என்றும் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவில்லாத பதில்கள் சொல்வதைப்
பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்த சக்ரபாணி அதனாலேயே எல்லாவற்றையும் அவரது
மாணவர்கள் ஆழமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள் என்றும் சொன்னான். அந்த
சமயங்களில் அது பெருங்கொடுமையாகத் தெரிந்த போதும் கற்று முடிந்து அந்த பாடசாலையை விட்டு
வெளியே வருகையில் ஒவ்வொரு மாணவனும் அவர் மேல்
உணரும் நன்றி உணர்வு மிக ஆழமானது என்றும் அவன் சொன்னான். அவனைப்
போல எத்தனையோ மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை அவன் சொல்வதை வைத்து அவரால் யூகிக்க
முடிந்தது.
சக்ரபாணியை அனுப்பி
விட்டு ராக்ஷசர் யோசனையில் ஆழ்ந்தார். அந்த அளவு
பல துறைகளில் வல்லவரான விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் வந்திருப்பது அந்த நிகழ்ச்சியில்
பங்கு கொள்ளத் தான் என்று அவரால் நம்ப முடியவில்லை. ஏனென்றால்
ஆரம்பத்திலிருந்தே விஷ்ணுகுப்தர் எந்த வாதத்திலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. “உன் பிச்சை
எனக்கு அவசியமில்லை அரசனே” என்று சொன்னதும் ”இங்கே அறிவுக்கும்
அறிஞர்களுக்கும் என்ன மதிப்பிருக்கிறது என்று அறிய வந்தேன்.” என்று சொன்னதும்
பரிசுக்கோ, விவாதங்களில் கலந்து கொள்வதற்கோ
வரவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்தின. பாடலிபுத்திர அரசவையில்
அறிஞர்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டி தட்சசீலத்திலிருந்து
யாரும் இவ்வளவு தொலைவு வர மாட்டார்கள். பாடலிபுத்திரத்தின் அந்த
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் சிலரைக் கேட்டாலே அவர் அனைத்தையும் தெளிவாகத்
தெரிந்து கொண்டிருக்க முடியும். அப்படி இருந்தும்
அந்த மனிதர் இங்கு வரை வந்திருக்கிறார். என்பதற்கு உண்மையான காரணம்
என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்வது அவசியம் என்று நினைத்த ராக்ஷசர்
உடனே ஒரு ஒற்றனை அனுப்பி விஷ்ணுகுப்தரின் நடவடிக்கைகளை
இரகசியமாகக் கண்காணித்து வந்து தெரிவிக்கும்படி சொன்னார்.
மறுநாள் விஷ்ணுகுப்தர் நேரில் செல்லும் வரை சந்திரகுப்தன்
சொன்னதை அவன் தாயும், தாய்மாமனும் நம்பியிருக்கவில்லை. சந்திரகுப்தன்
மிகவும் பண்டிதர் போல் தோன்றிய ஒரு அந்தணர் தன்னை தட்சசீலம் அழைத்துப் போய் எல்லாம்
கற்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்று அவர்களிடம் சொல்லியிருந்தான். அவர் பெயர்
என்னவென்று கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவன் சொன்னது சந்திரகுப்தனின் ‘அரச’ கற்பனை
போல் ஒரு கற்பனையாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. அந்தணனனோ, அரச குடும்பத்தவனோ, செல்வந்தனோ
அல்லாத ஒரு ஏழைச் சிறுவனுக்கு யார் கல்வி தருவார்கள்? தட்சசீலம்
என்ற பெயரைக்கூட இருவரும் கேள்விப்பட்டிருக்கவில்லை. சந்திரகுப்தனின்
தாய்மாமன் தனக்குத் தெரிந்த ஒரு பண்டிதரிடம் போய் தட்சசீலம்
என்ற பெயரில் நகரம் அல்லது கிராமம் இருக்கிறதா என்று விசாரித்த போது அந்தப் பண்டிதர்
அப்படி ஒரு நகரம் இருக்கிறது அது காந்தாரத்தின் தலைநகரம் என்றும் சொன்னார். அது எங்கேயிருக்கிறது என்று கேட்ட போது பயண மாட்டு வண்டியில்
சென்றாலே அங்கு போய்ச் சேர நான்கைந்து மாதங்கள் ஆகி விடும் என்றும் அவர் சொன்னார். அதைக்
கேட்டு அவன் வீட்டார் முழுதும் நம்பிக்கை இழந்தாலும் சந்திரகுப்தன் மட்டும் அந்த அந்தணரை
நம்பிக் காத்திருந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
தற்போது தட்சசீலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற விபரம் தர வேண்டுகிறேன். வணக்கம்
ReplyDeleteஇந்நாளில் தட்சசீலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது. வணக்கம்
ReplyDeleteபாகிஸ்தானில் இஸ்லாமாபாதிலிருந்து சுமார் 30 கிமி தூரத்தில் உள்ள ராவல்பிண்டி மாவட்டத்தின் சில பகுதிகள் அக்காலத்தில் தட்சசீலமாக அழைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
ReplyDeleteதொடர் அருமையாக சென்றுகொண்டிருக்கிறது...
ReplyDelete