சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 25, 2021

யாரோ ஒருவன்? 55



தீபக் வீட்டை அடைந்த போது சரத் வாக்கிங் போயிருந்தான். நாகராஜின் விவரங்கள் கல்யாண் மூலம் சரத்திற்கு முன்பே கிடைத்திருந்தன என்பதால் தீபக் மூலம் புதிய தகவல் எதையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. தீபக் இரண்டு நாட்களாக அந்தக் கனவின் பிடியிலிருந்து தப்பித்தும் இருந்ததால் நிம்மதியடைந்திருந்த சரத் தீபக்கின் வரவுக்குக் காத்திருக்காமல் பழைய வழக்கப்படி தன் நேரத்திற்கு வாக்கிங் கிளம்பியிருந்தான்.

தீபக் வந்த போது ரஞ்சனி சமையலறையில் இருந்தாள். அவளிடம் அவன் ஆர்வத்துடன் சொன்னான். “அம்மா ஒரு ஆத்மா என் கனவுல வந்ததைச் சொன்னேனில்லையா. அதுபத்தி கூடுதல் ஒரு தகவல் கிடைச்சிருக்கு.”

ரஞ்சனி சொன்னாள். “அந்தக் கனவு தான் இப்ப ரெண்டு நாளா வர்றதில்லைன்னு சொன்னியே. அப்புறம் ஏன் திரும்பவும் ஆராய்ச்சி பண்றே. விட்டுட வேண்டியது தானே?”

நீயும் நாகராஜ் அங்கிள் மாதிரியே பேசறே. அதெப்படிம்மா ஒரு கொலை நடந்திருக்குன்னு ஒரு ஆத்மா வந்து என் கிட்ட சொன்னதுக்கப்புறம் நான் கண்டுக்காம இருக்க முடியும். அது எத்தனையோ பேர் கனவுல வராம என் கனவுல மட்டும் வந்து சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்குமில்லையா? அதுவும் நாகராஜ் அங்கிள் உனக்கு நெருங்கின ஆளோட ஆத்மாவா இருக்கலாம், அது உன் கூட தொடர்புகொள்ளப் பார்க்குதுன்னு வேற சொல்லி இருந்தாரே

ரஞ்சனிக்கு முன்பே அந்தப் பாம்பு மனிதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தது எல்லாம் இனம் புரியாத பயத்தை உண்டுபண்ணியிருந்ததால் மகன் இப்போது என்ன சொல்லப் போகிறானோ என்கிற  படபடப்பு மனதில் எழுந்தது. ”சரி என்ன தகவல்? அதைச் சொல்லுஎன்றாள்.

அந்த ஆத்மா ஒரு கவிதைப் பிரியன் போல இருக்கு. அதனால தான் கவிதைகள் பிடிச்சிருக்கிற ஆளான என் கனவில் வந்து அதைச் சொல்லி இருக்கு. நெருங்கினவன்னு நாகராஜ் அங்கிள் சொன்ன நெருக்கம் இந்த கவிதை ஆர்வத்துனால வந்த நெருக்கமாய் இருக்கலாம். என்ன சொல்றே?”

அதெப்படி கவிதைப் பிரியன்னு அந்த ஆள் கண்டுபிடிச்சாராம்....”

அம்மா அவர் எதையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லைம்மா. நடந்திருக்கறது எல்லாம் அவருக்கு கண் முன்னால அப்படியே தெரியற மாதிரி இருக்கும்மா. அவர் சொன்னார். “யாரோ ஒரு பெண் அந்த ஆத்மாவிடம் கவிதை சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவன் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான்...”னு

ரஞ்சனி கையில் பிடித்திருந்த பாத்திரத்தை அதிர்ச்சியில் நழுவ விட்டாள். அவள் அடிவயிற்றை ஏதோ ஒன்று கவ்வியது போல் உணர்ந்தாள். அவள் இதயத்துடிப்புகள் வேகமெடுத்தன.

என்னாச்சும்மா?”

ரஞ்சனி கஷ்டப்பட்டு சமாளித்தாள். “ஒன்னுமாகல. கைதவறிடுச்சு. அவ்வளவு தான். நீ சீக்கிரம் போய் குளி. காலேஜ் இருக்குங்கறது ஞாபகம் இருக்கட்டும்

தீபக் குளிக்கப் போன பிறகு அவன் சொன்ன வார்த்தைகளை திரும்பவும் மனதில் ஒலிக்க விட்டாள். அவள் மனதில் முன்னொரு காலம் நிகழ்காலமாக வந்து ஒளிபரப்பாகியது. நாகராஜ் சொன்ன நெருங்கிய ஆத்மா அந்த ஆத்மாவாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்த பிறகு அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அந்த சந்தேகம் வேறுபல சந்தேகங்களைக் கிளப்பியது. அவளுக்குள் ஒரு புயல் உருவாக ஆரம்பித்தது.



வரு உங்களப் பாக்காம போகமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார்.” என்று பியூன் சொல்லி விசிட்டிங் கார்டையும் நீட்டினான்.

நரேந்திரன் விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தான். ’ஜனார்தன் த்ரிவேதி’. “சரி அனுப்புஎன்றான்.

அடுத்த நிமிடம் வேகமாய் உள்ளே வந்த ஜனார்தன் த்ரிவேதி நரேந்திரனுக்கு வணக்கம் கூடச் சொல்லாமல் அவனுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்து காட்டமாகக் கேட்டார். “என்ன நடக்குது இங்கே?”

நரேந்திரன் குழப்பத்தை முகத்தில் காட்டி அவரே விளக்கட்டும் என்று காத்திருந்தான். ஜனார்தன் த்ரிவேதி அவன் காத்த அமைதியில் தன்  அமைதியை இழந்தார். “நீ யாரையெல்லாம் விசாரிக்கப் போகிறாயோ அவர்கள் எல்லாம் காணாமல் போகிறார்கள்என்று ஒருமையிலேயே சொன்னார்.

நரேந்திரன் அமைதியாகக் கேட்டான். “யாரெல்லாம் காணாமல் போனார்கள்?”

என் மருமகன், மதன்லால்...”

நரேந்திரன் உடனடியாகப் பதில் சொல்லாமல் தன்னுடைய லாப்டாப்பைத் திறந்து எதையோ பார்க்க ஆரம்பித்தான். ஜனார்தன் த்ரிவேதி அவனை எரிக்கிற மாதிரி பார்த்ததை அவன் லட்சியம் செய்யவில்லை. அவன் மூன்று நிமிடங்கள் கழித்து நிதானமாகச் சொன்னான். “கடந்த பத்து நாட்களாய் நான் சில வழக்குகள் சம்பந்தமாய் விசாரித்த ஆட்கள் 28. அத்தனை பேரும் காணாமல் போகவில்லை...”

அதைத் தெரிவித்துவிட்டுஇதற்கென்ன சொல்கிறாய்?’ என்பது போல அவன் பார்த்த விதம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதிகாரமாகவே அவர் கேட்டார். “சரி அவர்களில் இந்த இரண்டு பேர் மட்டும் ஏன் காணாமல் போனார்கள்?”

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.” என்று நரேந்திரன் அமைதியாகச் சொன்னான்.

ஜனார்தன் த்ரிவேதி கோபத்துடன் கேட்டார். “நான் ஏன் சொல்ல வேண்டும்?”

நீங்கள் தான் இரண்டு பேருக்கும் மிக நெருக்கமான நபர். அவர்களைப் பற்றி இங்கே வந்து கேள்வி கேட்குமளவு அவர்களுக்கு வேண்டியவர். நான் சென்று விசாரித்த பிறகு அவர்கள் காணாமல் போயிருப்பது இயல்பாய் இல்லையே. அவர்கள் இப்படித் தலைமறைவாக என்ன காரணம்?”

நான் உன்னைக் கேட்டால் நீ என்னைக் கேட்கிறாய். என்னவொரு அடாவடித்தனம்

நரேந்திரன் முகத்திலும் குரலிலும் கடுமை தெரிந்ததுஎது அடாவடித்தனம்? ஒருநாள் காலையில் உங்கள் மருமகனிடம் கேள்விகள் கேட்கப் போயிருந்தேன். கேட்ட கேள்வி எதற்குமே அவர் சரியாய் பதில் சொல்லவில்லை. மறுபடி நான் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாதபடி வசதியாக அந்த ஆள் தலைமறைவாகி விட்டார். மதன்லாலிடம் கேள்விகள் கேட்கப்போனேன். அவரும் அப்படித்தான். சரியாகப் பதில் சொல்லவில்லை. சிலநாட்கள் கழித்து மறுபடியும் அவரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அவருக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அது கிடைத்தபிறகு அவரும் தலைமறைவானார். அவரைக் கடத்திக் கொண்டு போனதாகவும் எத்தனையோ லட்சம் பணயத்தொகை கேட்டதாகவும் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களால் நம்ப முடிகிறதா? போலீஸ்காரனையே யாராவது கடத்துவார்களா? சிம்லாவில் அந்த ஆளை விடப் பெரிய  பணக்காரர்களே இல்லையா? எனக்குப் பதில் சொல்ல வேண்டிய ஆள்கள் வசதியாகத் தலைமறைவாகி விட்டார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. யாரோ செல்வாக்கான ஆள் தான் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பலத்த சந்தேகம். அந்தச் செல்வாக்கான ஆள் யாரென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் வந்து அடாவடித்தனம் பற்றிப் பேசுகிறீர்கள். உங்கள் மருமகன் பற்றி அக்கறையுடன் விசாரிப்பதையாவது உறவுமுறை வைத்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மதன்லால் பற்றியும் சேர்த்து இத்தனை தொலைவில் இருக்கும் நீங்கள் கவலைப்படுவது இயல்பாக எனக்குத் தெரியவில்லையே

குரலை உயர்த்தாமல், அமைதியிழக்காமல் அவரைக் கூர்ந்து பார்த்தபடியே அவன் பேசியது அவரைத் திகைக்க வைத்தது. அவருக்கு எழுந்த சந்தேகங்களை அவன் தன் சந்தேகங்களாகச் சொல்லி, கடைசியில் அவரையே சந்தேகப்படுவதை ஆணித்தரமாகச் சொன்னது அவருக்கு ஆத்திரம் வரவழைத்ததுஆனால் அதற்கு என்ன பதிலளிப்பது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அவர் மிக நுணுக்கமான கருவியை மறைவாக தன் ஆடைக்குள் வைத்து அஜீம் அகமதின் ஆலோசனைப்படி அவர்கள் பேச்சைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். அதனால் இந்தப் பேச்சில் நரேந்திரன் கையோங்குவதை அவரால் சகிக்க முடியவில்லை. இவன் திரும்பவும் கேள்வி கேட்பதாகச் சொன்னபின் தான் மதன்லால் காணாமல் போனதாகவேறு  சொல்கிறான். அது உண்மையாக இருந்தால் பிரச்சினை வேண்டாம் என்று மதன்லாலே தலைமறைவாயிருக்கலாம். விஷயம் அப்படியாக இருந்தால் இங்கே வந்து இவனிடம் பேசிக் கொண்டு இருப்பதே அபத்தமாகிவிடும்...

அவர் தன் குழப்பங்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் கோபமாகவே கேட்டார். “முடிவாக என்ன சொல்கிறாய்?”

உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட அவர்கள் இருவரையும் சட்டப்படி விசாரித்து என் கடமையைச் செய்ய ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும் என்று சொல்கிறேன்

கோபத்தோடு எழுந்த அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியேறினார்.

(தொடரும்)
என்.கணேசன்  

6 comments:

  1. ஏற்கனவே கதையில பல புதிர்கள் இதுல ரஞ்சனி வேறையா...😂😂😂?
    நரேந்திரன் ஜனார்தனை ஓட வைத்து விதம் அருமை....

    ReplyDelete
    Replies
    1. ஓட விட்டது..?

      Delete
  2. Is it possible to buy this book as ebook from Amazon or elsewhere? I live in Dubai. It is very difficult to buy your books from my place. I trust the same for most of your readers outside India.

    ReplyDelete
    Replies
    1. It is available in many online book stores. You may also contact Abi Books online through their mail abibooksonline@gmail.com or phone number 9840974053

      Delete