சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 4, 2021

யாரோ ஒருவன்? 52


தன்லால் மனைவியுடன் கடத்தல்காரன் பேசியதை எல்லாம் நவீன உபகரணங்கள் மூலம் பதிவு செய்து கேட்டுக் கொண்டிருந்த போலீஸ் மேலதிகாரி உடனடியாக அந்த அலைபேசி விவரங்களைச் சேகரித்தார். இந்த முறை அவன் பேசியது ஆக்ராவிலிருந்து என்பது தெரிந்தது. அப்படியானால் போனில் பேசும் கடத்தல்காரன் பல இடங்களிலிருந்து கொண்டு சிம்லாவில் தன் ஆட்களை இயக்கிக் கொண்டிருக்கிறான்.... யோசித்துப் பார்த்தால் மதன்லாலை ஆரம்பத்திலிருந்தே சிம்லாவில் தான் அவர்கள் எதோ ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் போல் தோன்றியது.   பெரும்பாலும் கடத்தல்காரர்கள் இது போல் பல மணிநேரம் முன்னால் போன் செய்து பணம் கொண்டு வந்து தர வேண்டிய இடத்தைச் சொல்வதில்லை. போலீஸ் முன்கூட்டியே அந்த இடத்திற்குப் போய் வலைவிரித்துக் காத்திருக்கும் அபாயம் இருப்பதைக் கடத்தல்காரர்கள் அறியாதவர்களாய் இருப்பதில்லை. அதை லட்சியம் செய்யாமல் அவன் அதிகாலையிலேயே அவளுக்குப் போன் செய்து சொல்கிறான் என்றால் அந்த இடத்திற்கு அவள் போனவுடன் வேறு ஒரு இடத்தை மாற்றிச் சொல்லும் உத்தேசம் அவனுக்கு இருக்கலாம் போலத் தெரிந்தது.

அந்தப் போலீஸ் மேலதிகாரி காலையிலேயே ராஜ்தானி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் இருக்கும் பகுதிக்கு மாறுவேடங்களில் போலீஸ்காரர்களை அனுப்பி விட்டார்மதன்லால் மனைவி அங்கே போனபிறகு அவன் வேறு இடத்திற்கு வர மறுபடியும் சொல்லலாம் என்று தோன்றியதால் அவர் நகரின் பிரதான இடங்களில் கூட ஆங்காங்கே ஒன்றிரண்டு போலீஸ்காரர்களாவது மாறுவேடங்களில் இருக்கும்படி ஏற்பாடு செய்தார். மதன்லால் வீட்டருகேயும் இரண்டு போலீஸ்காரர்கள் மாறுவேடங்களில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்

மதியம் பதினோரு மணிக்கு அவர் மதன்லால் மனைவியிடம் போனில் பேசினார்.  ”... நீங்க ராஜ்தானி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் வாசல்ல நிக்கறப்ப அவன் போன் செய்வான். அவன் உங்களை அங்கிருந்து வேறொரு இடத்துக்கு வரக்கூடச் சொல்லலாம். அப்படி சொன்னால் வேகமாகப் போகாதீங்க. மெள்ளவே போங்க. அப்ப தான் நீங்க போய்ச் சேர்றதுக்குள்ளே நாங்க தயார்நிலையிலே அங்கேயும் இருக்க முடியும். பணத்தைக் கொடுக்கறதுக்கு முன்னாடி மதன்லாலைக் காட்டச் சொல்லுங்க. பார்த்தால் தான் பணம் தருவேன்கிறதுல மட்டும் பிடிவாதமாய் இருங்க... மத்தபடி அவன் என்ன சொல்றானோ அந்த மாதிரியே செய்யுங்க. நாங்க ஏற்கெனவே சொன்ன மாதிரி 25 பேக்கட் ரெடி பண்ணிட்டீங்களா? ஒவ்வொரு பேக்கட்லயும் முதல்லயும் கடைசிலயும் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வெச்சிட்டீங்களா?”

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அளவிலேயே வெள்ளைத்தாள்களைக் கத்தரித்து வைத்து முதலிலும் கடைசியிலுமாக மட்டும் ஒவ்வொரு பேக்கட்டிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டு பேக்கட்டின் இரண்டு முனைகளிலும் இறுக்கமாய் ரப்பர் பேண்ட் போடும்படியும் ஏற்கெனவே அந்தப் போலீஸ் மேலதிகாரி அவளிடம் சொல்லியிருந்தார். பணத்தைத் தரும் போதே அவனைப் பிடித்துவிடுவோம் என்றும் உறுதியளித்திருந்தார். என்றாலும் எதற்கும் அவன் மேலோட்டமாக பைக்குள் பார்த்தான் என்றால் நம்புமளவுக்கு கட்டுகளில் பணம் தெரிந்தால் போதும் என்று அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் அப்படி இருபத்தைந்து பேக்கட்களுக்கு இரண்டிரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வைப்பது என்றால் ஐம்பது நோட்டாகிறது. ஐம்பது நோட்டுகள் என்றால் தொகை ஒரு இலட்சம் ஆகிறது. திடீரென்று அந்தப்  பையைப் பிடுங்கிக் கொண்டு ஒருவேளை அவன் ஓட்டமெடுத்து விட்டால்  அந்த அளவு பணத்தை இழக்க வேண்டியிருக்குமே என்று மதன்லாலின் மனைவி மேலே வைத்திருந்த ஐந்து பேக்கட்டுகளில் மட்டும் தான் அப்படி முன்னாலும் பின்னாலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாள். அப்படியே போனாலும் இருபதாயிரம் ரூபாய் தான் போகும். அதை அவள் அவரிடம் சொல்லவில்லை. அவருக்குச் சொன்னால் புரியாதுஅதனால் அவர் கேட்ட போதுஅப்படித்தான் வெச்சிருக்கேன்என்று கூசாமல் அவள் சொன்னாள். அதன் பின் அவள் தன் முக்கியக் கவலையைச் சொன்னாள். ”ஆனால் பணம் வாங்கிட்டு அந்த நாயிங்க தப்பிச்சுடாமல் மட்டும் பார்த்துக்கோங்க. வெளியே வந்துட்டா மீதியை அவர் பார்த்துக்குவார்

மதன்லாலை நன்றாக அறிந்திருந்த அந்த போலீஸ் அதிகாரிக்கு அதில் சந்தேகம் இருக்கவில்லை. அவன் இன்னேரம் உள்ளூரக் கொதித்துக் கொண்டிருப்பான். தப்பித்தால் வெறிநாய் போல் தான் அந்தக் கடத்தல்காரர்களிடம்  நடந்து கொள்வான்... போலீஸ் டிபார்ட்மெண்டிலேயே தன் சகாக்களிடமும், வாலாட்ட முடிந்த மேலதிகாரிகளிடமும் அவன் மகா மோசமானவன் என்று பெயரெடுத்தவன். அப்படிப்பட்டவன் தன்னைக் கடத்தியவர்களிடம் சாதாரண மோசமாய் நடந்து கொள்ள வாய்ப்பேயில்லை.

நீங்க எத்தனை மணிக்குக் கிளம்பறீங்க?” அவர் அவளைக் கேட்டார்.

அவள் சொன்னாள். ”ரெண்டரை மணிக்குக் கிளம்புவேன்..”

சரி ஜாக்கிரதை...”

அவர் அரை மணி நேரத்திற்கொரு முறை தன் ஆட்களிடம் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தார். அவள் வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் சந்தேகப்படும்படியாக யாரும் அந்தப் பகுதியில் நடமாடவில்லை என்று தெரிவித்தார்கள். ராஜ்தானி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பகுதியில் பக்கத்து ரோட்டில் நடமாடிக் கொண்டிருந்த சில சுற்றுலாப்பயணிகள் மீது சந்தேகம் இருப்பதாக ஒரு போலீஸ்காரர் சொல்ல மேலதிகாரி அவர்கள் மீதும் கண்காணிப்பு இருக்கட்டும் என்று சொன்னார்.

சிம்லாவிலேயே எங்கேயோ ஓரிடத்தில் மதன்லாலை அவர்கள் அடைத்து வைத்திருக்கக்கூடும் என்று சந்தேகம் வந்ததால் சிம்லாவில் அப்படி அதற்கு வாய்ப்பிருக்கும் இடங்களையும் அவர் ஆராயவும் ஆரம்பித்தார்.


தன்லாலின் மனைவி இரண்டு மணி ஐம்பது நிமிடமாகும் போது ராஜ்தானி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை அடைந்தாள். அந்த நேரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை.  நேரம் மெள்ள நகர்ந்தது. ஒவ்வொரு நாலுசக்கர வாகனம் தூரத்திலிருந்து வரும் போதும் மதன்லால் அதில் இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் கூர்ந்து பார்த்தாள். பல  வாகனங்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸைக் கடந்து சென்றன. அங்கே வந்து நின்ற ஓரிரு வாகனத்திலிருந்தும் ஆட்கள் இறங்கி ஸ்டோர்ஸின் உள்ளே போனார்களேயொழிய மதன்லால் எதிலும் தெரியவில்லை.

அப்படி வந்த கார் ஒன்றில் டிரைவர் மட்டும்  காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். அதற்குள் மதன்லாலைக் கட்டி வைத்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் கைவினைப் பொருட்கள் விற்பவன் வேடத்திலிருந்த ஒரு போலீஸ்காரன் காருக்குள் நோட்டமிட்டபடியே டிரைவரிடம் வியாபாரம் பேசினான். அந்தக் காரினுள்ளே மதன்லால் தெரியவில்லை. டிக்கியில் இருக்க வாய்ப்பிருக்கிறது... கார் டிரைவர் அந்த போலீஸ்காரனை ஏறெடுத்தும் பார்க்காமல்வேண்டாம் போஎன்று கையசைத்தான்.   

போலீஸ்காரன் நகர்ந்தாலும் எந்த நேரமும் அங்கே ஓடி வரும் தொலைவிலேயே நின்றான். சுமார் நூறடி தொலைவில் மப்டியில் இருந்த இன்னொரு போலீஸ்காரன் யாரிடமோ போனில் பேசுவது போல் பாவனை செய்து கொண்டு நின்றிருந்தான்.

சரியாக மணி 3.10க்கு கடத்தல்காரனிடமிருந்து மதன்லால் மனைவிக்கு அழைப்பு வந்தது. அவள் பரபரப்புடன் சொன்னாள். “ஹலோ

அங்கே போலீஸ் நடமாட்டம் இருக்கிற மாதிரி தெரியுதே. ஏம்மா நீ போலீஸுக்குச் சொல்லிட்டியா?”

திகைத்த அவள் வேகமாக மறுத்தாள். “சத்தியமா இல்லை.... போலீஸுக்குச் சொல்லியிருந்தா நான் ஏன் பணத்தோட இங்கே வந்து நிக்கப் போறேன்.... என் கண்ணுக்கு எந்தப் போலீஸும் தெரியலையே?”

அது உன் கண்ணுக்குத் தெரியாதும்மா. என் ஆளுக சொல்றாங்களே. சரி. சத்தியமா நீ சொல்லி அவங்க வரலையே....”

இல்லை...”

அப்படின்னா ஒன்னு செய். நீ அங்கேயிருந்து கிளம்பி சட்லெஜ் நதிக்குப் பக்கத்திலிருக்கிற ரிவர்வ்யூ ஓட்டலுக்கு வா. அந்தப் போலீஸ்காரனுக உன்னைப் பின் தொடர்ந்து வர்றாங்களான்னு பார்க்கலாம்....”

அவள் எதுவும் சொல்வதற்கு முன் அவன் இணைப்பைத் துண்டித்து விட்டான். அவளுக்குக் கோபம் பொங்கியது. ”நாயே. நீ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் நான் பணத்தோட வரணுமாடா. உனக்கு நேரம் சரியில்லை. நீ மட்டும் மாட்டினா நானே உன்னைச் செருப்பால அடிப்பேன்டா

கடத்தல்காரன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட போலீஸ் மேலதிகாரி நெற்றியைச் சுருக்கி யோசித்தார். எங்கேயிருந்து அவன் ஆட்கள் பார்க்கிறார்கள்?... அவன் சொன்ன சட்லெஜ் நதிக்கரையோர ஓட்டல் இருபது கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது. இன்னொரு இடத்திற்கு அவன் அழைப்பான் என்பதை அவர் எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அவன் அவளை அழைப்பான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை...

மதன்லாலின் மனைவி வேண்டுமென்றே டாக்ஸிகளை அழைத்துப் பேரம் பேசி மூன்றாவது டாக்ஸியில் ஏறி அமர்ந்தாள். அவள் போலீஸ்காரர்கள் அங்கே போக போதிய அவகாசம் கொடுத்திருக்கிறாள். அந்தக் கடத்தல்கார நாய்களுக்குச் சந்தேகம் வந்து தொலையாதபடி அவர்கள் அங்கே போய்ச் சேர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

டாக்ஸி கிளம்பியது.


(தொடரும்)
என்.கணேசன்     

3 comments:

  1. Thrilling. What next? Mondays and Thursdays are very special to me because of these two novels.

    ReplyDelete
  2. அடுத்தது என்ன ஆகும்னு தெரியலையே.... அதுக்குள்ள தொடரும் போட்டுட்டாரே😰😰😰

    ReplyDelete
  3. Dear Mr N Ganesan one small logical issue. Normally police prepare fake notes to trap kidnappers not.victim

    ReplyDelete