சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 28, 2021

இல்லுமினாட்டி 126


தய் க்ரிஷ் முன்பு விஸ்வத்தின் திட்டத்தைச் சொன்னவுடனேயே தகவலைத் தந்தைக்குத் தெரிவித்திருந்தான். க்ரிஷ் ஆரம்பத்திலேயே உதய்க்கு ஓரளவு நிஜத்தைத் தான் சொல்லியிருந்தான். அதுவும் சிறிது திரித்துத் தான் சொல்லியிருந்தான். அதிலும் பாதியைத் தான் கமலக்கண்ணனிடம் உதய் சொன்னான். க்ரிஷுக்கு சக்தி வாய்ந்த மர்ம எதிரி யாரோ இருக்கிறான் என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்ததே ஒழிய மற்றதெல்லாம் அவருக்கு குழப்பமாக இருந்தது. இளைய மகனின் வெளிநாட்டுப் போக்குவரத்துகளில் ஆபத்து நிறைந்திருக்கிறது என்று ஆரம்பத்திலிருந்தே உள்ளுணர்வில் அவர் உணர்ந்து வந்தார். சம்பந்தப்பட்டிருப்பது க்ரிஷ் ஆனதால் கண்டிப்பாக அது தவறான விதங்களில் இருக்க வழியில்லை என்று தெரியும். இப்போது நடத்த வேண்டி இருக்கும் நாடகத்தை உதய் சொன்ன போது அவர் சொன்னார். “இப்படி நாம பயந்து இருக்க அவசியம் என்னடா இருக்கு. நம்ம செல்வாக்கால எதாவது செய்ய முடியாதா?”

உதய் சொன்னான். “அப்படிச் செய்ய முடியற மாதிரியிருந்தால் நானே செய்திருப்பேனே. இது சர்வதேச அளவுல இருக்கற விஷயம்ப்பா....”

அவனுக்கு ஆபத்து எதுவும் இல்லையேகமலக்கண்ணன் கவலையோடு கேட்டார்.

இல்லப்பா. அந்த எதிரியைப் பிடிக்கறதுக்குத் தான் இந்த நாடகம் தேவைப்படுது. எல்லாம் சரியாய் போச்சுன்னா சீக்கிரமே அந்த எதிரியை அழிச்சுடலாம்னு அவன் சொல்கிறான்...”

பாதி புரிவது போலவும், பாதி புரியாதது போலவும் இருந்தாலும் அவர் அதற்கு மேல் துருவிக் கேட்காமல் சரியென்று சொல்லி விட்டுஉங்கம்மாவை ஒழுங்கா நடிக்க வைக்க முடியுமாடா?” என்று கேட்டார்.

கிழவி ஏடாகூடமாய் எதுவும் செய்யாமல் இருக்க நான் ஹரிணியையும் சிந்துவையும் நம்பியிருக்கேன். சொல்றது எவ்வளவு தூரம் புரியும்னு தெரியல

எனக்கே சரியாய் புரியல. அவளுக்கு எங்கே புரியப் போகுது....” என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்தார். பத்மாவதியிடம் சாவகாசமாக இரண்டு நாள் பொறுத்துச் சொல்லலாம் என்று நினைத்திருந்த உதயிடம் க்ரிஷ் போன் செய்து அன்றே நாடகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னான். ஹரிணிக்கு க்ரிஷே போன் செய்து சொல்லியிருந்ததால் பத்மாவதிக்கும் சிந்துவுக்கும் சொல்லும் பொறுப்பு உதய்க்கு வந்தது.

உதய் சிந்துவை உடனடியாக வரவழைத்தான். அவளிடம் க்ரிஷ் சொன்னதை அப்படியே சொன்னான். க்ரிஷ் சிந்துவைக் காட்டிக் கொடுக்காமல் அதே நேரத்தில் உண்மையை வேறு விதமாகச் சொல்லி ஏற்பாடு செய்திருக்கும் விதம் புரிந்து க்ரிஷுக்கு சிந்து மனதார நன்றி சொன்னாள். அவள் அவனுக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறாள். அவள் விஷயத்தில் அவசரப்படாமல் பொறுமையைக் கடைப்பிடித்து எப்படியோ அழிந்து போகவிருந்த அவள் வாழ்க்கையை அவன் மீட்டுக் கொடுத்திருக்கிறான்.

உதய் அடுத்ததாக தாயை உட்கார வைத்து க்ரிஷுக்கு சக்திவாய்ந்த மர்ம எதிரி ஒருவன் இருக்கிறான், அவனால் ஆபத்து இருக்கிறது என்று ஆரம்பித்தான். பத்மாவதிக்கு அந்த ஆரம்பத்தையே நம்ப முடியவில்லை. “அவனுக்கு அன்பைத் தவிர எதுவுமே தெரியாதேடா. அவனுக்கு ஒரு எதிரியா. என்னடா சொல்றே?” என்று திகைப்புடன் கேட்டாள்.

உதய் பெருமூச்சு விட்டுச் சொன்னான். “அவனை அந்த எதிரி தப்பாய் புரிஞ்சுகிட்டான். அதனால தான் எதிரியாய் நினைக்கிறான்.”

ஆட்சி உங்கப்பா கைல இருக்கு. நீ ஒரு எம்.பி. இப்படி இருக்கறப்ப அதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையாடா. அந்த அறிவுகெட்ட எதிரியை நாலு தட்டு தட்டி அடக்கி வைக்க வேண்டாமாடா. இதுவும் கூட உனக்குச் சொல்லியா தரணும்...”

சிந்து புன்னகைக்க உதய் அவளிடம் சிரித்துக் கொண்டே சொன்னான். “கிழவி அரசியலுக்கு வந்திருந்தா நாடே ரணகளமாயிருக்கும். இது வயித்துல க்ரிஷ் எப்படி பிறந்தான்னு தான் ஆச்சரியமாயிருக்கு

அப்புறம் என்னடா. யார் வம்புக்கும் போகாமல் பாவம் ஆராய்ச்சி, படிப்பு, தியானம்னு இருக்கறவனை எதிரியாய் ஒருத்தன் நினைச்சா ஒன்னா அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேர்க்கணும். இல்லாட்டி தட்டி அடக்கி வைக்கணும்... அதைச் செய்யாமல் அவனால் க்ரிஷுக்கு ஆபத்துன்னு சொன்னா கோபம் வராதாடா

சரி. நான் சொல்றதை முதல்ல கேளு. அப்பறமா வசனம் பேசு. அந்த எதிரி ரகசியமா ஒளிஞ்சு திட்டம் போட்டுகிட்டிருக்கான். க்ரிஷ் இப்ப ஒரு இடத்துல பாதுகாப்பா இருக்கறதுனால அவனை அந்த எதிரிக்குப் பழி வாங்க முடியலை. அதனால அவன் பாசம் வெச்சிருக்கிற என்னைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கான். அது க்ரிஷுக்குத் தெரிஞ்சு போச்சு. அந்த திட்டம் வெற்றி அடைஞ்சுதுன்னு தெரிஞ்சா தான் ஒளிஞ்சுகிட்டிருக்கற எதிரி வெளியே வருவான்னு க்ரிஷ் நினைக்கிறான். அவன் வெளிய வந்தா தான் அவனைப் பிடிக்க முடியும்னு நிலைமை இருக்கு. அதனால நாம ஒரு நாடகம் போடப்போகிறோம்.” என்று சொன்ன உதய் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் யார் யார் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினான்.

பத்மாவதிக்கு ஆரோக்கியமாய் இருக்கும் மகனை நடிப்புக்காகக்கூட உயிருக்கு அபாயமான நிலையில் இருப்பதாய் சொல்வது சரியென்று தோன்றவில்லை. “அந்த மாதிரி பொய்யாய் கூடச் சொல்லக்கூடாதுடா. அதே மாதிரி உண்மையாகவே நடந்தாலும் நடந்துடும்.” என்று பயப்பட்டாள்.

உதய் சிந்துவைப் பார்த்துநீ தான் சொல்லேன்என்ற பார்வை பார்த்தான்.

சிந்து பத்மாவதியிடம் சொன்னாள். “அத்தை நீங்க இப்படி யோசித்துப் பாருங்க. இப்ப இவர் ஜாதகத்தில் ஏதோ கண்டம் வரும் நேரம் இருக்கு. இவர் ஆஸ்பத்திரியில் சில நாள் இருக்க வேண்டியிருக்குன்னு வெச்சுக்குவோம். இந்த மாதிரி நாடகம் போடறதுலயே அந்தக் கண்டம் கழிஞ்சுடலாம் இல்லையா

பத்மாவதிக்கு கணவரிடம் ஜோதிடர் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வர அவள் உடனே சம்மதித்தாள். ”நீ சொல்றதும் சரி தாம்மா. அந்தக் கண்டம் அதோட போகட்டும். செய்யுங்க...”

நீயும் சோகமா இருக்கற மாதிரி நடிக்கணும். வாயைத் திறந்து பத்திரிக்கைக்காரன் கிட்டயோ, டிவி காரன் கிட்டயோ பேசக்கூடாது. அமைதியா இருக்கணும். சரி தானா. ஏன்னா இது சம்பந்தமா வர்ற செய்தியை எல்லாம் அந்த எதிரி கவனிச்சுகிட்டேயிருப்பானாம். உன் மூலமா இதெல்லாம் நாடகம்னு அவன் தெரிஞ்சுக்கக் கூடாது. சரியா...”

பத்மாவதி யோசித்து விட்டுச் சொன்னாள். “சரிடா. என் சின்ன வயசுல எங்கம்மா நிறைய கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாளையெல்லாம் நினைச்சு நான் சோகமாய் இருக்கேன்.”


ங்கி லாக்கரில் இருந்த இரகசிய ஆவணத்தை கர்னீலியஸ் வெளியே  எடுத்து பரபரப்புடன் புரட்டினார்.  அந்த முக்கியப் பக்கம் வந்தவுடன் படிக்க ஆரம்பித்தார்.

முன்கூட்டிக் கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம் போய்ச் சேர்க்கும்.. உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம்  கொண்டது... அங்கே மறுபிறவி மனிதனுக்குக் கவிதை வழி காட்டும். பெருவிழியில் பெரும் சக்தி  பெறுவான். நட்பு அறிவுறுத்தும். முடிவை விதி அங்கே அவ்விருவர் மூலம் முடிவு செய்யும். அப்போது எழுதப்படும் விதி அவனுக்கும் உமக்கும், இவ்வுலகுக்குமாய்ச் சேர்த்து எழுதியதாய் அமையும்... ”


கர்னீலியஸ் வரும் போது டைரியைக் கொண்டு வந்திருந்தார். அதில் இதற்கு முன் பயிற்சியின் மூலம் கண்டுபிடித்து எழுதியிருந்த வார்த்தைகளைச் சரி பார்த்தார். ‘நீங்கள் தொழுத இடம் போய்ச் சேர்க்கும்என்பதற்குப் பதிலாகசேரும்என்று நினைவுபடுத்திய சிறு தவறைத் தவிர எழுதியதில் வேறு பிழை இல்லை. இரு தளம் கொண்டது என்ற வாக்கியத்திற்கு அடுத்து வரும்  மீதி வார்த்தைகளையும் டைரியில் அவர் எழுதிக் கொண்டார்.

(தொடரும்)
என்.கணேசன்

10 comments:

  1. Both sides are doing their best and tension is building up. Super sir.

    ReplyDelete
  2. அப்போ...விஸ்வம் ஏதோ பெரு விழியின் மூலம்...பெரும் சக்தி பெறப் போகிறான்...போல... ஆனால், இவ்விடத்தில் முடிவும் நிர்ணயிக்கப்படும் போல....

    ReplyDelete
    Replies
    1. பெரு விழி என்றால் இல்லுமினாட்டி. பெரும் சக்தி என்றால் இல்லுமினாட்டி யின் தலைவர்.

      Delete
  3. Sir.. Diwali bonus episode?...

    ReplyDelete
  4. ஐயா வணக்கம் ஐயா நான்திதினமும்மாலையில் கநந்தர்சஷ்டிபாராயணம்செய்வேன் அதையேமந்திரதியானமாக செய்யலாமா தயைகூர்ந்து வழிகாட்டுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அது தியானமாகாது. மிகச்சுருக்கமான ஓரிரு வார்த்தைகள் மட்டுமே மந்திர தியானம் செய்யப் பயன்படுத்த முடியும்.

      Delete
  5. ஐயாவணக்கம்ந ன்றி நீங்களேகுருவாய்எனக்குஒருமந்திரம்அருளினால்மிகஆர்வமாக பயிற்சி செய்வேன் தயைசெய்துஅருளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஓம் என்ற மந்திரத்தையோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையோ மந்திரமாக ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்யுங்கள்.

      Delete