அக்ஷயின் வீட்டுக்குப் பாதுகாப்பு தந்து கொண்டிருந்த ஆட்களில்
ஒருவன் இம்மானுவலுக்குப் போன் செய்து ஒரு சந்தேகத்திற்குரிய நபர் அக்ஷயின் வீட்டை
நோட்டமிட வந்திருந்தான் என்றும் அவனைப் பிடித்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த
போது அவன் காஷ்மீரில் வசிக்கும் ஒரு தலிபான் தீவிரவாதி என்று தெரிந்ததாகவும் சொன்ன
போது இம்மானுவல் பேரதிர்ச்சி அடைந்தான். முதலில் எர்னெஸ்டோவின்
வாஷிங்டன் பயண விவரம் கசிந்தது, இப்போது அக்ஷயின் வீட்டு விலாசம்
தலிபான் தீவிரவாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இரண்டாவது
தகவல் இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்குத் தெரியாதது. இல்லுமினாட்டி
உளவுத்துறைக்கு மட்டுமே, அதிலும்
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஆட்களுக்கு மட்டுமே, தெரிந்த
தகவல். இதுவும் வெளியே கசிகிறது என்றால் அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய
ஆட்களில் ஒருவன் தான் அந்தக் கருப்பு ஆடு என்பது நிச்சயம். முன்பே சந்தேகத்திற்குள்ளான சாலமன் மீதிருக்கும் சந்தேகம்
மேலும் கூடியது.
க்ரிஷை இங்கிருந்து அப்புறப்படுத்த
சிந்து மூலம் ஏற்பாடு செய்த விஸ்வம், அக்ஷயையும்
எர்னெஸ்டோ அருகிலிருந்து அப்புறப்படுத்த தலிபான் தீவிரவாதிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கக்கூடும்...
எல்லாம் ஒரு கோர்வையாக வந்ததால் இம்மானுவல் உடனடியாக எர்னெஸ்டோவைச் சந்தித்து
விஷயத்தைச் சொன்னான்.
”சாலமன்
இதில் தனியாகத் தான் சம்பந்தப்பட்டிருக்கிறாரா இல்லை அவருடன் வேறு யாராவதும் இருக்கிறார்களா?” எர்னெஸ்டோ
வறண்ட குரலில் கேட்டார்.
“தெரியவில்லை. சாலமனை
விசாரித்தால் தான் தெரியும்”
“பாகிஸ்தானின்
ஐஎஸ்ஐ தலைவனுக்குப் போன் செய்து கொடு” என்று சொன்ன எர்னெஸ்டோ
இது போன்ற சமயங்களில் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தும் தன் அலைபேசியை எடுத்து இம்மானுவலிடம்
தந்தார்.
இம்மானுவல் வாங்கி எண்களை அழுத்திப்
பேசினான். “ஹலோ தலைவர் உங்களிடம் பேச விரும்புகிறார்..”
பாகிஸ்தான் ஐ எஸ் ஐ தலைவன் பதற்றமடைந்தான். இல்லுமினாட்டியின்
தலைமையிடமிருந்து நேரடியாக வரும் அழைப்பு ஆபத்தானது. நிர்வாக
விஷயங்கள், கொள்கை முடிவுகள் முதலியவற்றில் கட்டளை பிறப்பிப்பது என்றால்
ஜனாதிபதி, பிரதமருக்குத் தான் அழைப்பு போகும். அவனுக்கு
அழைப்பு போகிறது என்றால் ஐ எஸ் ஐ அல்லது ஐ எஸ் ஐ ஆதரிக்கும் குழுக்களில் பிரச்சினை
இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் யாருமே இல்லுமினாட்டியின் பாதையில் குறுக்கிட விரும்புவதில்லை...
அப்படி இருக்கையில் இப்போது யார் என்ன செய்திருக்கக்கூடும் என்று யோசித்தபடி
பணிவுடன் சொன்னான். “மகிழ்ச்சி ஐயா. அடியேன் காத்திருக்கிறேன்...”
எர்னெஸ்டோ இம்மானுவல் கையிலிருந்து
அலைபேசியை வாங்கினார். “என் இந்திய நண்பர் அமானுஷ்யனைத் தேடிக் கொண்டு தலிபான் ஆட்கள்
யாரோ அவர் வீடு வரை போயிருப்பதாய் கேள்விப்பட்டேன். அதை நான்
விரும்பவில்லை. தலிபான் தலைவர்களிடம் நினைவுபடுத்து. நாங்கள்
அனுமதிப்பதால் தான் அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இது போன்ற
அதிகப்பிரசங்கித்தனம் இனியும் தொடருமானால் அந்த அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவி. இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷியா நாடுகளின்
நான்கு இராணுவங்களும் சேர்ந்து அவர்கள் இடம் தேடிப் போய் அழிக்க அதிக நேரமாகாது...”
ஐ எஸ் ஐ தலைவன் அவசர அவசரமாக மேசையில்
இருந்த ஒரு உறையின் மேலே அமானுஷ்யன் என்ற வார்த்தையைக் கிறுக்கியபடி சொன்னான். “ஐயா அந்த
உச்ச முடிவுக்குத் தாங்கள் போக வேண்டியதில்லை. அவர் உங்கள்
நண்பர் என்று தெரியாமலோ, தற்செயலாகவோ இந்தத் தவறு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்
ஐயா. உங்கள் கட்டளையை அவர்களுக்கு உடனடியாகத் தெரிவித்து விடுகிறேன். இனியும் உங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலை அவர்கள் செய்ய
மாட்டார்கள்...”
“இனி தெரியாமலோ, தற்செயலாகவோ
கூட்டாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்.” என்று சொல்லி
எர்னெஸ்டோ அலைபேசியைக் கீழே வைத்தார்.
சாலமன் ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள நான்கு நட்சத்திர
ஓட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடி அறை ஒன்றில் தங்கியிருந்தார். இம்மானுவலின் சந்தேகத்தால் அவர் மனம் அமைதியில்லாமல் தவித்துக்
கொண்டிருந்தது. சற்று முன் தான் வாங் வேயிடம் அவர் தன் மேல் இம்மானுவலுக்குச்
சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது என்கிற தகவலைத் தெரிவித்திருந்தார். வாங் வே
அதிர்ந்து போனார். இவ்வளவு ரகசியமாகச் செயல்பட்டும் அவர்கள் சந்தேகம் கொள்ளும்படியாக
என்ன நடந்திருக்கும் என்று படபடப்புடன் யோசித்தபடியே அவர் ஆறுதல் சொன்னார். “கவலைப்படாதீர்கள். இன்னும்
சில நாட்கள் தானே. எல்லாம் சரியாகி விடும். நீங்களே
தலைவரான பிறகு அவன் உங்களிடம் அடங்கி ஒடுங்கி இருப்பான். அது வரை
பொறுங்கள்.. இனி எந்த உதவியும் கேட்க மாட்டேன் என்று விஸ்வம் சொல்லியிருக்கிறான்
அல்லவா? அதனால் இனிமேல் பயப்பட எதுவுமில்லை...”
அந்த ஆறுதல் வார்த்தைகளில் சாலமனால்
ஆறுதல் அடைய முடியவில்லை. ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று அவரது உள்ளுணர்வு எச்சரித்த
வண்ணம் இருந்தது. அதனால் இரவு உறக்கம் வராமல் இருட்டில் ஜன்னல் அருகே நின்று
கொண்டு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஊரே உறங்கிக்
கொண்டிருந்தது. நகரிலிருந்த பெரிய பெரிய கட்டிடங்களில் விளக்குகள் மின்னிக்
கொண்டிருந்தன. வாங் வே சொன்ன சில நாட்கள் என்பது எத்தனை நிமிடங்கள், எத்தனை
வினாடிகள்... அவை எப்போது முடியும்.... என்று யோசித்தபடியே
நின்ற அவர் திடீரென்று கீழே ஓட்டலின் முகப்பில் ஒரு ஜீப்பும், ஒரு காரும்
வந்து நிற்பதைப் பார்த்தார்.
காரில் இருந்து இறங்கிய இரண்டு ஆட்கள்
அவருடைய உளவுத்துறை ஆட்கள். ஜீப்பில் இருந்து இறங்கிய மூன்று ஆட்கள் முரட்டுத் தனமான
ஆட்கள். அவர்களை அவர் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவர்களைச்
சேர்ந்து அங்கே பார்த்தவுடனேயே அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்பது அவருக்குப்
புரிந்து விட்டது. இது போல எத்தனையோ இடங்களுக்கு அவரும் ஆட்கள் அனுப்பியவர். இம்மானுவல்
சந்தேகம் தெளிந்து விட்டான்.... அவருக்கு அந்த ஏ.சி அறையிலும்
குப்பென்று வியர்த்தது. எல்லாம் முடிந்து விட்டது.... இனி வருத்தப்படவும்
பச்சாதாபப்படவும் கூட நேரமில்லை.
மின்னல் வேகத்தில் அவர் அலைபேசியை எடுத்து
வாங் வேயை அழைத்தார். வார்த்தைகளை வீணாக்காமல் வேகமாகச் சொன்னார். “என்னைக்
கண்டுபிடித்து விட்டார்கள். உங்களைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும்
இனி மேல் எச்சரிக்கையாக இருங்கள்.” சொல்லி முடித்து அந்த அலைபேசியிலிருந்த அந்த ’சிம்’மை வெளியே
எடுத்து டாய்லெட்டில் போட்டு தண்ணீரை அவசரமாக ஃபளஷ் செய்தார். அந்த சிம்
உள்ளே அடித்துச் செல்லப்பட்டது. பின் ஓடி வந்து அவருடைய சூட்கேஸில் இருந்த கைத்துப்பாக்கியை
எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து தன்னையே சுட்டுக் கொண்டார்.
அந்த ஐந்து பேரும் லிப்டில் ஐந்தாம்
தளத்தை வேகமாக அடைந்த
போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும், அவருடைய கோரமான
அலறலும் தான் அவர்களை வரவேற்றன.
வாங் வே தனக்கு மாரடைப்பு வந்து விடுமோ என்று பயப்பட்டார். நெஞ்சை
ஒரு பாறை அழுத்துவது போல் இருந்தது. சாலமன் சொன்ன வார்த்தைகள் அவரை என்னென்னவோ செய்தன. அவரை சாலமன்
கண்டிப்பாகக் காட்டிக் கொடுக்க மாட்டார், தானும் உயிரோடு
அவர்கள் கைக்குச் சிக்க மாட்டார் என்பது அவர் உள்ளுணர்விற்குத் தெரிந்திருந்தது. அவர் பேசிய
அவசரத்தைப் பார்த்தால் இன்னேரம் அவர் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பதும் புரிந்தது. மனம் கனத்தது. சும்மா
இருந்த நபரை இதில் இழுத்து அவரைச் சாகடித்து விட்டோமோ என்ற பச்சாதாபம் மனதில் எழுந்தது.
சாலமன் நினைத்திருந்தால் அவரைக் காட்டிக்
கொடுத்திருக்கலாம். எல்லாப் பழியையும் அவர் மேல் போட்டு இருக்கலாம். ஆனால் அவரைத்
தப்பிக்க வைத்து இனி எச்சரிக்கையாக இருங்கள் என்று கடைசியாகச் சொன்னது வேதனையைத் தந்தது.
சாலமன் சொன்னது போல அவர் இனி மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாலமன் தடயங்கள் எதையும் விட்டுச் சென்றிருக்க மாட்டார் என்ற
போதும் ஆபத்து இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஏதாவது
ஒன்று அவரையும் அடையாளம் காட்டி விடலாம் என்று நினைத்த போது கர்னீலியஸ் அவர் நினைவுக்கு
வந்தார்...
உடனே வாங் வே பதற்றத்துடன் விஸ்வத்துக்குப்
போன் செய்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
Super crime thriller..
ReplyDeletePeak la beat ah raise pannitu தொடரும் podrathu innum heart beat raise pannuthu sir..
ReplyDeleteSolomon romba viswasam ah irunthutaar.. unexpected..
வாங் வே அவர்களின் பதட்டம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இப்படியே அடுத்த வாரம் வரை காத்திருக்க வைத்து விட்டீர்களே!
ReplyDeleteVery interesting. You are beautifully explaining both hero and villain sides and their feelings. Feeling sorry for Solomon. Waiting for next.
ReplyDeleteஇந்த எபிசோடு... பயங்கர பரபரப்பு... நெருப்பில் நடப்பது போல இருந்தது...
ReplyDeleteஎர்னெஸ்டோ தலீபான்களை மிரட்டி வைத்த விதம் முதல் சாலமன் தற்கலை வரை....சரியான வேகம்...
Amazing episode... வர்ணிக்க வார்த்தையில்லை... ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல இருந்தது...
ReplyDeleteஇன்றைய பரபரப்பை பார்க்கும் போது கதை முடிவை நோக்கி நெருங்குவது போல் தெரிகிறது. அடுத்த புதுக் கதை என்ன ஐயா. Eagerly waiting for next episodes and new story.
ReplyDeleteஇன்னும் ஆறு மாதங்கள் இக்கதை தொடரும். அடுத்தது சாணக்கியன் என்ற வரலாற்று நாவல்.
Delete,👍
DeleteInnum 6 months ah? Ippove final kita iruka maari padapadappaa iruku, ithula 6 months ku epdi thaan thaakku pudikka porom ohh therila,
DeleteKonjam seekram utd's pottaa nallarukkum sir
"சாணக்கியன்".-புத்திசாலிகளின் கூடாரம் தங்களின் ஹீரோக்களும் வில்லன்களும்.வாழ்த்துகள்.
ReplyDelete