”அதைப் படித்து
முடித்த பின் அவர் இல்லுமினாட்டியிடம் சொல்லப் போவார். அவர்கள்
நம்மைக் கண்டுபிடிக்கவோ, வேறு முடிவுகள் எடுக்கவோ அவர் தெரிவிக்கும் தகவல்கள் உதவுவதாக
இருக்கலாம். அது நமக்குப் பாதகமாக இருக்கலாம். அதனால்
தான் அந்த மனிதர் அந்த சிக்னல் தாண்டாமல் பார்த்துக் கொண்டேன்.”
“அவர் கண்டுபிடிப்பது
நமக்கு மட்டும் தான் தெரியும் என்ற சூழ்நிலை இப்போது இருப்பதால்
இனி நீ அவரைத் தடுக்க வேண்டாம். கண்டுபிடிப்பதைக் கண்டுபிடித்த பின் அவரை
முடிக்க வேண்டியிருக்கிறது.
நம்மிடம் காலம் அதிகமில்லை…”
ஜிப்ஸி தலையசைத்தான்.
அன்று விஸ்வம் தியானத்தில்
ஆழ்ந்த போது மனம் இசைய மறுத்தது.
வாங் வே ‘உங்கள் பக்கத்தில் இருந்தும் தகவல் கசிந்திருக்கலாம்’
என்று சொன்னது அவன் மனதில் நெருடலாகவே இருந்தது. அவன் திட்டங்களைப் பற்றி
அதிகம் ஜிப்ஸியிடம் கூட பேசியதில்லை. அப்படி இருக்கையில் எர்னெஸ்டோவின்
வாஷிங்டன் பயணம் குறித்து அவன் அறிந்தான் என்று இல்லுமினாட்டி சந்தேகப்படக் காரணமே
இல்லை. விஸ்வம் நடந்ததை
வரிசைப்படி யோசித்துப் பார்த்தான். எர்னெஸ்டோவின் வாஷிங்டன் பயணம்
பற்றித் தெரிந்தவுடன் அவன் திட்டமிட்டது அந்த நேரத்தில் க்ரிஷ் இங்கேயோ, வாஷிங்டனிலோ இருக்கக்கூடாது என்பதைத் தான். அந்தச் சமயத்தில் க்ரிஷ்
இந்தியாவில் இருப்பது தான் பாதுகாப்பானது என்று
நினைத்து அவன் சிந்துவைத் தொடர்பு கொண்டான். சிந்துவிடம் கூட அவன் சொன்னது ’செவ்வாய் இரவு அந்த விஷத்தை
உதய் அல்லது பத்மாவதி உணவில் கலந்து விடு’ என்று மட்டும் தான்.
அவளும் சரியென்றாள்.
அவளிடம் விஷத்தைச் சேர்த்தாகியும் விட்டது. அதை
எப்படியோ க்ரிஷ் அறிந்து விட்டிருந்தால்….? என்ற கேள்வி அவன்
மனதில் எழுந்து தங்கியது. க்ரிஷும் சில சக்திகளை வசப்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அப்படி
அவன் சிந்துவின் மனதில் இருப்பதை அறிந்திருப்பானோ? அப்படி அறிந்திருந்தால்
அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியிடம் அல்லவா சொல்லியிருப்பான். இல்லுமினாட்டி அவளைக் கண்டிப்பாகச் சிறைப்படுத்தியிருக்குமே… அதெல்லாம் ஆகவில்லை என்பதே அவன் கண்டுபிடித்திருக்க வழியில்லை என்றெல்லவா சுட்டிக்
காட்டுகிறது. ஆனாலும் ஏனோ அவன் மனதில் அந்த சந்தேகம் தங்கியே
இருந்தது.
வாங் வே கர்னீலியஸுக்குப் போன் செய்தார். கர்னீலியஸ் வருத்தத்துடன்
சொன்னார். “என்னவோ தெரியவில்லை. மனம் என்
பயிற்சிக்கு இசைய மறுக்கிறது. நாளாக நாளாக எனக்கு இன்னும் கண்டுபிடித்தாகவில்லையே
என்ற பதற்றமும் கூடி
விடுகிறது. அதுவே ஒரு தடையாகவும் இருக்கலாம்…”
வாங் வே சொன்னார். “அது பரவாயில்லை.
கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச்
சொல்லத் தான் போன் செய்தேன். தலைவர் க்ரிஷ் மூலம் தெரிந்த இந்திய
மாந்திரிகர் ஒருவரை வைத்து அந்த சிக்னலில் விஸ்வம் செய்து வைத்திருக்கும் மாந்திரீக
முடிச்சை எடுத்து விட்டிருக்கிறார். அது இருந்ததால் தான் உங்களால்
போக முடியவில்லை என்று அந்த மாந்திரிகரும் சொல்லி இருக்கிறார். இனி நீங்கள் போகப் பிரச்னை இருக்காது.
நீங்கள் வங்கிக்குப் போய் ஆவணத்தை எடுத்துப் படித்து விட்டே வரலாம்…. ஆனால் தலைவர் உடனே
போய்ப் படித்து விட்டுச் சொல்லச் சொல்லியிருக்கிறார்.”
கர்னீலியஸ் நிம்மதியடைந்தார். அதிகாரத்தில் இருந்தால்
எப்படிச் சில வேலைகள் சுலபமாக முடிந்து விடுகிறது. இத்தனை நாள்
சிரமப்பட்ட வேலையை எவ்வளவு சுலபமாக எர்னெஸ்டோ தீர்த்திருக்கிறார் என்று மனதில் சிலாகித்தவராகச்
சொன்னார். “நல்லது… நான் இப்போதே போகிறேன்…
அந்தச் சுவடியையே கொண்டு வரட்டுமா? வியாழன் காலையில் நடக்கும் கூட்டத்தில் தலைவர் கையிலேயே
தரலாமே”
வாங் வே சொன்னார். “இப்போதைக்கு அது வேண்டாம்,
தகவல் மட்டும் தெரிந்தால் போதும் என்றார். அப்புறமாக
ஒரு நாள் உங்கள் வங்கி லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு போய் நம் ஆவணக்காப்பகத்தில்
நேரடியாக வைக்கலாம் என்று அவர் நினைக்கிறார். அதனால் நீங்கள் படித்து வந்து சொன்னால் போதும்….”
“நல்லது… இப்போதே கிளம்புகிறேன்…” என்று கர்னீலியஸ் சொன்னார்.
அவருக்கு வாங் வே போன் செய்து சொன்னது மன உளைச்சலைக் குறைத்தது. சில நாட்களாகவே
அவர் கடுமையான முயற்சிகள் எடுத்து வந்தாலும் அந்த இரகசிய ஆவணத்தின் அந்த முக்கியப்
பக்கத்தின் தொடர்ச்சி என்ன என்பதை நினைவுபடுத்திக் கொள்வதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
என்ன தான் செய்வது என்று புரியாமல் அவர் தவித்துக்
கொண்டிருக்கையில் தான் வாங் வே போன் செய்தார். கர்னீலியஸ் கடிகாரத்தைப் பார்த்தார்.
வங்கி நேரம் முடிய இன்னும் வேண்டுமளவு நேரம் இருக்கிறது. அதனால் பிரச்னை இல்லை. அவர்
அவசரமாய் கிளம்பினார்.
என்ன
தான் வாங் வே தைரியமளித்திருந்தாலும் அவருடைய கார் அந்தக் குறிப்பிட்ட சிக்னலை நெருங்க
நெருங்க அவர் மனம் படபடக்க ஆரம்பித்தது. விஸ்வத்தின் சக்திகளை மாந்திரீகத்தால் கட்டுப்படுத்த
முடியுமா என்று அவர் மனம் சந்தேகப்பட்டது. சென்ற முறை போல் கார் ஸ்தம்பித்து விடாமல்
இருக்க வேண்டுமே என்ற கவலையும் எழுந்தது. நல்ல வேளையாகக் கண்காணிக்கப்படும் உணர்வு
வரவில்லை. அதிலேயே மனம் பாதி தைரியம் பெற்றது. சிக்னலில் கார் நிற்கும் போதும் எந்தப்
பிரச்சினையும் இல்லை. பச்சை விளக்கெரிந்து ஆரம்பித்து கார் நகர ஆரம்பித்த போது அவர்
ஒரு குழந்தை போல சந்தோஷப்பட்டார்.
விஸ்வத்திற்கு சிந்து மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் அவள் மனதில்
இருப்பதை க்ரிஷ் தெரிந்து கொண்டிருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் மட்டும் லேசாக இருந்து
கொண்டே இருந்தது. அப்படி அறிந்து கொண்டிருந்தால் அவன் செவ்வாய்க்கிழமை அவளைக் கையும் களவுமாய் பிடித்து
விடுவதற்காகக் காத்திருக்கலாம். அல்லது அதற்கு யாரையாவது ஏற்பாடு செய்துமிருக்கலாம்.
இந்த சிந்தனைகள் அவனைச் சுட்டன. தன் சந்தேகம் சரி தானா என்று சோதிக்க அவனால் செவ்வாய்க்கிழமை
இரவு வரை பொறுக்க முடியும் என்று தோன்றவில்லை. உடனே அதிரடியாய் ஒரு முடிவுக்கு வந்து
சிந்துவுக்குப் போன் செய்தான்.
வெளிநாட்டு
அழைப்பு என்று பார்த்தவுடனேயே சிந்துவுக்கு இதயத் துடிப்பின் வேகம் கூடியது. இப்போது
என்ன சொல்லப் போகிறானோ என்று பயந்தபடியே பேசினாள். “ஹலோ”
“சிந்து.
நம் திட்டத்தில் சின்ன மாறுதல். அவர்கள் இருவரில் ஒருவருக்கு விஷத்தை இன்றே கொடுத்து
விடு. செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்க வேண்டாம்...”
சிந்து
மனப்போராட்டத்துடன் “சரி” என்றாள்.
“உனக்கு
சமீப காலத்தில் எப்போதாவது யாரோ உன் மனதை ஆக்கிரமிக்கிற மாதிரி அல்லது உன் எண்ணங்களைப்
படிக்கிற மாதிரி தோன்றியிருக்கிறதா?” என்று விஸ்வம் கேட்டான்.
சிந்து
சொன்னாள். “இல்லையே”
“நல்லது.
நினைவிருக்கட்டும். இன்று இரவே செய். மிகவும் கவனமாக இரு... அவர்களுக்கு உன் மேல் சந்தேகம்
வந்து விடக்கூடாது. உதயானாலும் சரி, பத்மாவதியானாலும் சரி, மயங்கி விழுந்த தகவல் கிடைத்தவுடன்
ஓடோடி நீயும் போ. ஆஸ்பத்திரியில் சோகமாக அவர்கள் கூடவே இரு. இறந்த பின்னும் ஓரிரண்டு
நாட்கள் அவர்களோடு இரு. பின் போய் விடலாம்....”
ஏன்
திட்டத்தை முன்கூட்டியே நிறைவேற்ற விஸ்வம் முடிவு செய்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை.
இதனால்
என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதும் தெரியவில்லை. உடனே சிந்து க்ரிஷுக்குப் போன்
செய்து விஷயத்தைச் சொன்னாள்.
க்ரிஷும்
ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “சரி சிந்து நீ இன்றைக்கு இரவு எங்கள்
வீட்டுக்குப் போ. உதய் கிட்ட ஏற்கெனவே விஷயத்தைச் சொல்லியிருக்கேன். அதை இன்னைக்கே
செய்யணும்னு சொல்லிடறேன். அவன் உன் கிட்ட மெல்ல சொல்லுவான். புதுசா கேட்கற மாதிரி கேட்டுக்கோ.
எங்கம்மாவுக்கு நடிக்க சுத்தமா வராது. அவங்க மட்டும் சொதப்பிடாமல் நீயும் ஹரிணியும்
தான் பார்த்துக்கணும்...”
அவன்
சாதாரணமாக எடுத்துக் கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்ற மனநிலையில் இருந்தது போல்
சிந்துவுக்கு இருக்க முடியவில்லை. விஸ்வத்துக்குச் சந்தேகம் வந்தால் ஆபத்து என்ற யதார்த்தம்
அவளை யதார்த்தமாய் இருக்க விடவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
Ovvoru line um padapadappa read pandren sir..
ReplyDeleteஇவ்வளவு தூரம் கண்டுபிடிச்ச விஸ்வம்... கண்டிப்பாக சிந்துவின் மாற்றத்தையும் கண்டுபிடித்து விடுவான்.... என நினைக்கிறேன்....
ReplyDeleteஅதற்குள் கிரிஷ் சுதாரித்து விடுவான்....