போலீஸ் மேலதிகாரி மிக வேகமாகச் செயல்பட்டார். உடனடியாக
இரண்டு ஜீப்களில் போலீஸ்காரர்களை ரிவர்வ்யூ ஓட்டலிருக்கும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். போலீஸார்
வருவதைப் பார்த்து கடத்தல்காரர்கள் தப்பிக்க நினைத்தால் அங்கிருந்து எப்படிச் செல்வார்கள்
என்பதைக் கணக்குப் போட்டு அந்தப் பாதைகளிலும் போலீஸார்களை நிறுத்தி வைக்கும் ஏற்பாட்டையும்
வேகமாகச் செய்தார். போலீஸார் பைக்குகள், ஜீப்கள், வேன்கள்
என்று பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்.
மதன்லாலின் மனைவி டாக்ஸி டிரைவரை வேகமாக
ஓட்ட அனுமதிக்கவில்லை. அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், வேகமாய்
போனால் நெஞ்சுவலி வந்துவிடும் என்றும் சொல்லி நிதானமாகவே ஓட்ட வைத்தாள். அவள் டாக்ஸி
போய்ச் சேர்வதற்கு முன் போலீஸ் ஜீப்கள் ரிவர்வ்யூ ஓட்டலிற்கு அரை கிலோமீட்டர் தூரத்தில்
மறைவாக நின்று கொண்டன. மப்டியில் போலீஸ்காரர்கள் இருவர் ரிவர்வ்யூ ஓட்டலுக்கு வெளியே
நின்றிருந்தனர்.
டாக்ஸியிலிருந்து இறங்கிய மதன்லாலின்
மனைவி ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த ஒரு காரையும், வேனையும்
சந்தேகத்தோடு பார்த்தாள். இரண்டும்
காலியாகத் தான் நின்று கொண்டிருந்தன. அதில் வந்தவர்கள்
ஓட்டலின் உள்ளே போயிருக்கலாம். மெள்ள உள்ளே போனாள். ரிசப்ஷனில் “தங்க அறை
வேண்டுமா?” என்று கேட்ட ஆளிடம் “ஒருவரைச்
சந்திக்க வந்திருக்கிறேன்” என்று சொல்லியபடி அங்கேயிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். கடத்தல்காரனிடமிருந்து
அழைப்பு இன்னும் வரவில்லை.
பத்து நிமிடங்கள் காத்துப் பொறுமையிழந்து
கடத்தல்காரனை அவளே அலைபேசியில் அழைக்க நினைத்தாள். ஸ்விட்ச்டு
ஆஃப் என்ற தகவல் தான் வந்தது. மேலும்
ஐந்து நிமிடங்கள் போனபிறகு அவள் அலைபேசியில் கடத்தல்காரனிடமிருந்து குறுந்தகவல் வந்தது.
“எத்தனை
சொல்லியும் போலீஸாருக்குத் தெரிவித்து விட்டாயே நீ. உனக்கு
உன் கணவனை விடப் பணம் மிக முக்கியமாகப் போய் விட்டது. பாவம் உன்
கணவன் சம்பாதித்துக் கொடுத்த பணம் அவனுக்கு உதவாமலேயே போய்விட்டது.”
படித்து ஆத்திரமடைந்த அவள் அந்தத் தகவலை
போலீஸ் மேலதிகாரிக்கு அனுப்பி வைத்தாள். பத்து நிமிடங்களில்
ரிவர்வ்யூ ஓட்டல் முன் போலீஸார் வந்து குவிந்தனர். போலீஸ்
மேலதிகாரியைப் பார்த்தவுடன் மதன்லால் மனைவி காட்டமாகக் கேட்டாள். “கடத்தல்காரனைப்
பிடிச்சுட்டீங்களா? எங்கே என் புருஷன்?”
’மதன்லாலுக்குப்
பொருத்தமான மனைவி’ என்று மனதில் நினைத்துக் கொண்ட போலீஸ் மேலதிகாரி “சிறிது
நேரம் சும்மா இரம்மா” என்று எரிச்சலுடன் சொன்னதற்குப் பின் அவளைப் பார்ப்பதையே
தவிர்த்தார். அவரும்
மற்ற போலீஸ் அதிகாரிகளும் நேற்றிலிருந்து ரிவர்வ்யூ ஓட்டலில் யாரெல்லாம் தங்க வந்துள்ளனர்
என்பதை ஆராய ஆரம்பித்தார்கள். வந்து தங்கியவர்கள் யாரும் கடத்தல்காரர்களுக்குச் சம்பந்தப்பட்டவர்கள்
அல்ல என்பது தெரிய வந்தது.
அங்குள்ளவர்களை விசாரித்த போது ஒரு
டெம்போ டிராவலர் வண்டி மூன்றே கால் மணி வரை ஓட்டலின் எதிர்ப்புறம் நின்றிருந்தது என்பது
தெரிய வந்தது. கிட்டத்தட்ட அந்த நேரத்தில் தான் கடத்தல்காரன் டிபார்ட்மெண்ட்
ஸ்டோர்ஸ் எதிரில் நின்றிருந்த மதன்லால் மனைவியிடம் போனில் பேசியிருக்கிறான். பேசி முடித்து
சில நிமிடங்களில் அந்த வண்டி அங்கிருந்து கிளம்பி விட்டிருக்கிறது. அந்த வண்டியில்
கடத்தல்காரர்களும் மதன்லாலும் இருந்திருக்கலாம். எப்படியோ
போலீஸ் வருவதை மோப்பம் பிடித்து விட்டதால் அங்கிருந்து கிளம்பியிருக்கலாம். போலீஸார்
வருவதற்கு முன் தப்பித்து விட்டிருக்கிறார்கள். அந்த டெம்போ
டிராவலரை அந்தச் சுற்றுவட்டாரத்தில் மறுபடி கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீஸ் மேலதிகாரியின் பாராமுகத்தைப்
பார்த்தபின் கணவன் கிடைக்கும் வரை இவர்களிடம் அடக்கி வாசிப்பது நல்லது என்ற பாடத்தைப்
படித்திருந்த மதன்லால் மனைவி கவலையுடன் பவ்யமாகக் கேட்டாள். “இனி என்ன
செய்வது?”
போலீஸ் மேலதிகாரி சொன்னார். “கண்டிப்பாக
அவன் இன்னொரு தடவை போன் செய்வான். கடுமையாய் திட்டிப் பேசி எச்சரிப்பான். பணத்தைக்
கூடுதலாகக் கேட்டாலும் கேட்கலாம். என்ன சொன்னாலும் கேட்டுக்கோங்க. என்ன சொன்னாலும்
ஒத்துக்கோங்க. அடுத்த தடவை கண்டிப்பாய் பிடிச்சிடலாம்”
ஜனார்தன் த்ரிவேதிக்கு மதன்லாலும் காணாமல் போன செய்தி இரண்டு
நாட்களுக்கு முன் கிடைத்தது. யாரோ அவனைக் கடத்தி ஐம்பது லட்சம் கேட்டதாகவும், அதைத் தரப்போகும்
நேரத்தில் போலீசார் விரித்த வலையை உணர்ந்து கடத்தல்காரர்கள் தப்பித்து விட்டதாகவும்
நேற்று தகவல் வந்தது. அதன்பிறகு இதுவரை கடத்தல்காரர்கள் போன் செய்யவில்லை என்று
சற்று முன் தான் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ்காரனையே கடத்துவது பெரிய அடாவடித்தனமாக அவருக்குப்பட்டது. சிம்லாவில் எத்தனையோ கொழுத்த
பணக்காரர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மதன்லாலைக் கடத்தியிருப்பது இயல்பாய்
தெரியவில்லை. நரேந்திரன் சஞ்சய் ஷர்மாவைச் சந்தித்த பின் தான்
சஞ்சய் ஷர்மா காணாமல் போனான். அதே போல் நரேந்திரன் மதன்லாலைச்
சந்தித்தபின் மதன்லாலும் காணாமல் போயிருக்கிறான். இந்த ஒற்றுமையும்
இருவரும் ஒரே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற ஒற்றுமையும் சேர்ந்து ஒரு பேராபத்தின்
அறிகுறியாக அவர் உள்மனம் எச்சரித்தது. கடத்தப்பட்டதாகச் சொல்லி பணம் கேட்டிருக்கும்
வித்தியாசத்தை வைத்து அது வேறு இது வேறு என்று எடுத்துக்கொள்ள விடாமல் அந்த எச்சரிக்கையுணர்வு
தடுத்தது. மதன்லால் கடைசியாகப் பேசியபோது அவனிடம்
நரேந்திரன் கேள்விகள் கேட்டதை அஜீம் அகமது காதில் போட்டுவைக்கச் சொல்லியிருந்தான். இப்போது
அவன் கடத்தப்பட்டும் விட்டான் என்பதையும் சேர்ந்து சொல்ல வேண்டியிருக்கிறது.
நினைத்தவுடன் தொடர்பு கொள்ள முடியாத
ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டு அஜீம் அகமது உலகின் எங்கோ ஒரு இடத்தில்
இருப்பதை நினைக்கையில் ஜனார்தன் த்ரிவேதிக்கு ஆயாசமாக இருந்தது. இதுவரை
அவன் ஆளிடம் போனில் தகவல்கள் தெரிவித்தும் பலன் இல்லாததால் நேரிலேயே அவன் ஆளிடம் சொல்லி
நிலைமையின் தீவிரத்தைப் புரிய வைக்க எண்ணிய அவர் தன் அடியாள் ஒருவனை அழைத்து அஜீம் அகமதின் ஆளை உடனடியாக ரகசியமாய்
அழைத்துவரச் சொன்னார்.
அவன் பல இடங்களைச் சுற்றி, வரும் வழியில்
ஒரு மளிகைக் கடையில் நுழைந்து சில பொருள்கள் வாங்கிக் கொண்டு கல்லாவில் அமர்ந்த இளைஞனிடம்
பணத்தைத் தந்தபடியே “ஐயா உங்களை நேரில் வரச் சொன்னார். ராத்திரிக்குள்ளே
கட்சிக்காரன் மாதிரி வந்து சேருங்க” என்று மெல்லச் சொன்னான். கல்லாவிலிருந்த
இளைஞன் தலையைக்கூட ஆட்டவில்லை. ஆனால் மாலை ஏழு மணிக்கு அவன் கட்சிக்கொடியைச் சட்டையில் குண்டூசியால்
குத்திக் கொண்டு தொண்டன் வேடத்தில் வந்து ஜனார்தன் த்ரிவேதியைச் சந்தித்தான்.
“நான் இதுவரை
போன் செஞ்சு அஜீம் கிட்ட சொல்லச் சொன்னதை எல்லாம் அவர் கிட்ட சொல்லியிருக்கிறாயா, இல்லையா?” என்று ஜனார்தன்
த்ரிவேதி அவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்.
“சொல்லியிருக்கேன்” என்று மட்டும்
அந்த இளைஞன் சொன்னான். அவனும் நேரடியாக அஜீம் அகமதிடம் எதையும் சொல்ல முடியாதென்பதையும், அஜீம் அகமதுக்கு
நெருக்கமான வேறு ஒரு ஆளிடம் சொல்லி, பின் அவன் தான்
அஜீம் அகமதுக்குச் சொல்ல முடியும் என்கிற யதார்த்த நிலையை அவன் அவரிடம் சொல்லவில்லை. அவருக்குத்
தெரிந்த அஜீம் அகமது இப்போது எவ்வளவோ உயரத்துக்குப் போய்விட்டான் என்பதை அவருக்குத்
தெரிவித்துப் புரிய வைக்கும் சிரமத்தை அவன் மேற்கொள்ளவில்லை. ஆனால் இதுவரை
அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் அஜீம் அகமதை எட்டியிருக்கின்றன என்பது மட்டும் உறுதி.
சொல்லியிருந்தால்
பின் ஏன் அஜீம் அகமது நரேந்திரன் விஷயத்தில் அலட்சியமாய் இருக்கிறான் என்பது ஜனார்தன்
த்ரிவேதிக்குப் புரியவில்லை. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் அஜீம் அகமதுக்கு எல்லா
இடங்களிலும் எத்தனையோ வேலைகள் இருக்கலாம். இந்தியாவில்
நடப்பதை மட்டும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை என்ற உண்மையை நினைவுபடுத்திக் கொண்ட
அவர் அந்த இளைஞனிடம் மதன்லால் கடத்தப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். அதற்கு
முன் நரேந்திரன் அவனைச் சந்தித்து பழைய குண்டுவெடிப்பு பற்றிக் கேள்விகள் பல கேட்டிருக்கிறான்
என்பதை மறுபடி நினைவுபடுத்தி விட்டுச் சொன்னார். “என்ன நடக்குதுன்னு
ஒன்னுமே புரியல. ஆனால் ஆபத்துன்னு மட்டும் உள்ளுணர்வு சொல்லுது. என்ன நடந்திருக்குங்கறதைக் கண்டுபிடிக்கறதும், காணாமல்
போனவங்களைக் கண்டுபிடிச்சு மீட்கறதும் ரொம்ப முக்கியம். எங்க கட்சி
ஆட்சில இருந்திருந்தா நானே இதெல்லாம் செஞ்சிருப்பேன். இப்ப இருக்கற நிலைமைல அஜீம் மனசு வெச்சா தான் எதாவது செய்ய
முடியும். தயவு செஞ்சு சீக்கிரம் எதாவது செய்யச் சொல்லு”
அந்த இளைஞன் அஜீம் அகமதுக்கு அவர் சொன்னதை
உடனே தெரிவிப்பதாகச் சொன்னான்.
(தொடரும்)
என்.கணேசன்
Eagerly waiting for Ajeem Ahamed's entry and I am curious to know how you connect all these people.
ReplyDeleteமதன்லாலை கடத்தியவர் உளவுத்துறை அதிகாரியாச்சே....! போலீஸ்காரங்க அறிவுக்கும் எட்டாது...
ReplyDeleteபோலீஸ் விரிக்கும் வலையிலும் சிக்க மாட்டார்...