சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, October 30, 2024

யோகி 74

(தீபாவளி நல்வாழ்த்துக்கள்) 


தேவானந்தகிரிக்கு அர்த்தஜாம பூஜைக்காக மண்டலமும், யந்திரங்களும் வரைவதற்கு மட்டுமே ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. மனிதர் மிகவும் பொறுமையாக அவற்றை வரைந்தார். அவர் வேலை செய்கையில் அதிகம் பேசாதவராகத் தான் இருந்தார். அவர் வரையும் யந்திரங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரம்மானந்தாவுக்கு அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அர்த்தம் விளங்கவில்லை.  அதைக் குறித்துக் கேட்ட கேள்விகள் கேட்டால், இதையெல்லாம் குறித்து ஒரு காலத்தில் கற்றுக் கொண்டது பற்றிச் சொன்னது பொய்யென்று ஆகிவிடும் என்பதால் அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரியின் பிரயோகம் ஒவ்வொன்றிலிருந்தும் தற்காத்துக் கொள்ளும் சின்னங்கள், யந்திரங்களை தேவானந்தகிரி வரைந்திருக்கலாம் என்பது அவருடைய அனுமானமாக இருந்தது. இடையிடையே தலையை மட்டும் லேசாக அசைத்தார். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அவர் தலையை ஆட்டுவது போல் இருக்கும் என்று அவர் எண்ணினார்.

 

ஆனால் தேவானந்தகிரி அவர் பக்கமே திரும்பவில்லை.  அவரை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது, பொழுது போகாத சுகுமாரன் மட்டுமே. சுகுமாரனுக்கு பிரம்மானந்தா எல்லாவற்றையும் உட்கிரகித்துக் கொண்டு தலையை அசைப்பது போல் தோன்றியதால் பிரமிப்பாக இருந்தது. பிரம்மானந்தாவை ஞானக்கடல் என்று பலரும் பாராட்டுவது அர்த்தமில்லாமல் அல்ல என்று தோன்றியது.

 

தேவானந்தகிரி வரைந்து விட்டு நிமிர்ந்த போது அவரிடம் சுகுமாரன் தன் சந்தேகத்தை கேட்டார். “நீங்க மண்டை ஓடு, ஓநாய் எல்லாம் பார்த்துச் சொல்றதுக்கு முன்னாடி மயான காளியையும் சொன்னீங்க. யாரோ சொன்னாங்கன்னு நானும் அந்தக் காளி ஃபோட்டோவை வாங்கி வீட்டுல வெச்சிருக்கேன். அதனால தான் அது உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமா? இல்லை, வேறெதாவது காரணமா?”

 

தேவானந்தகிரி சொன்னார். “இந்த செய்வினை பூஜை செய்தவர் மயான காளி உபாசகராயிருக்கும். அவர் அதை வெச்சு தான் பூஜையைச் செய்திருக்கார். அதனால தான் அது தெரிஞ்சுது. நீங்க உங்க வீட்டுல வெச்சிருக்கறதால அல்ல.”

 

சுகுமாரன் மனம் நொந்தார். ’சே! எதிரி பூஜை செய்யற சாமி ஃபோட்டோவை தான் வீட்டுக்குக் கொண்டு வந்து வெச்சிருக்கோமா? அதனால தான் அது எதிரிக்குச் சாதகமாகவே வேலை செஞ்சிருக்கா?’

 

சுகுமாரன் மெல்லக் கேட்டார். “அப்படின்னா அந்த மயான காளி படத்தை நான் வீசிடலாமா? அதனால் எதாவது பிரச்சனை வருமா?”

 

தேவானந்தகிரி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினார். ‘கணக்கு பார்த்தே கடவுளையும் மனிதன் வணங்குகிறான். மனிதனுக்கு எதாவது விதத்தில் பிரயோஜனப்படா விட்டால், கடவுளுக்கே கூட மனிதனின் மனதிலும், வீட்டிலும் இடமில்லை.’

 

அவர் சொன்னார். “உக்ர தெய்வங்களின் சிலைகளையும், படங்களையும் வழிபட்டுகிட்டு இருந்து பிறகு திடீர்னு சும்மா வீசிடக்கூடாது. அதனாலேயும் பிரச்சினைகள் வரலாம். அது வீட்டுல வேண்டாட்டி, கடைசியாய் கும்பிட்டு, குளம், ஆறு மாதிரியான நீர்நிலைகள்ல போட்டுடலாம்.”

 

சுகுமாரன் தலையசைத்தார்.

 

அர்த்தஜாம பூஜை சரியாக பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்தது. தேவானந்தகிரி பாண்டியனையும், சுகுமாரனையும் மரப்பலகைகளில் அமரச் சொன்ன போது சுகுமாரன் நினைவு வந்தவராகச் சொன்னார். “என்னோட டாமிக்கும் நீங்க தாயத்து கட்டணும் சாமி. அவன் கண்ணுக்கும் எல்லாமே தெரியுது. அவன் குரைக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேங்கறான்.”

 

சரியென்று தேவானந்தகிரி தலையசைத்தார். சுகுமாரன் கேட்டார். “அவன் கார்ல தான் இருக்கான். அவனையும் கூட்டிகிட்டு வரட்டுமா?”

 

தேவானந்தகிரி அவசரமாகச் சொன்னார். “பைரவர் அங்கேயே இருக்கட்டும். பூஜை முடிஞ்சவுடனே நானே அங்கே போய் அது கழுத்துல கட்டறேன்.”

 

புரியாமல் விழித்த சுகுமாரனிடம் பிரம்மானந்தா சொன்னார். “அவர் பைரவர்னு சொன்னது உங்க டாமியைத் தான்

 

பூஜை இரண்டு மணி நேரம் நீடித்தது. பூஜை முடிந்தவுடன் இருவர் கையிலும் தாயத்துக் கயிறு கட்டிய தேவானந்தகிரி சொன்னார். ”இந்தத் தாயத்து சரியாய் 48 நாள் உங்களை ரட்சிக்கும். ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் இதைக் கழட்டிடக் கூடாது. கழட்டினாலோ, அறுந்தாலோ அந்த சக்தி விலகிடும். திரும்ப இந்தப் பூஜை செஞ்சு மாட்டினா தான் பழையபடி ரட்சிக்கும். அதனால ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்.”

 

தீவிர நாத்திகராக இருந்து திருநீறு, குங்குமம், மந்திரித்த கயிறு, தாயத்து ஆகியவற்றுடன் இருந்த ஆட்களைக் கேலியும், கிண்டலும் செய்து வந்த தானே இந்த தாயத்தை அணிவது சுகுமாரனுக்குக் கொடுமையாகத் தோன்றியது. ’இதுவரை மற்றவர்களைச் செய்திருந்த கேலியும், கிண்டலும் வட்டியும் முதலுமாக அல்லவா திரும்பி வரும்? வாய் திறந்து சொல்லத் தயங்குபவர்களும் பார்வையாலேயே சிரிப்பார்களே….!’

 

பாண்டியனும் தாயத்து கட்டிக் கொள்வதில் மனக்கசப்பை உணர்ந்தார். அவருக்கு அடுத்தவர்கள் கேலியும், பார்வையும் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் ஒரு தாயத்தின் தயவில் தான் உறங்கவே முடியும் என்ற நிலை வந்திருப்பது, யார் சிரிக்கா விட்டாலும், அவருக்கே பெரும் அவமானமாக இருந்தது. 48 நாட்கள் இதை நம்பி வாழ்வது சகிக்க முடியாததாய் இருந்தது.  ஆனால் வேறு வழியில்லை. சகித்துத் தானாக வேண்டும்

 

சுகுமாரனின் காரிலிருந்த டாமி கழுத்தில் தாயத்தைக் கட்டின போது தேவானந்தகிரி சொன்னார். “இது கழுத்துல இருந்தும் தாயத்து அறுந்துடாம பார்த்துக்கோங்க. இல்லாட்டி இது பார்த்துட்டு குரைச்சுகிட்டே இருக்கும்.”

 

அவர் சொன்ன பிறகு தான் ஒரு உண்மை அவர்களுக்கு உறைத்தது. அவர்களுடைய இருப்பிடங்களில் அந்தப் பிரயோக சக்திகள் வந்து உலவிக் கொண்டு தான் இருக்கும். வந்தது அவர்கள் கண்ணில் படாமலிருக்கவும், பாதிக்காமல் இருக்கவும் தான் இந்தத் தாயத்து.  தேவானந்தகிரிஇந்தப் பிரயோகத்தில் தற்காத்துக்கறது ஒன்னு தான் நமக்கு ஒரே வழி.” என்று சொன்னதன் முழு அர்த்தம் இப்போது தான் அவர்களுக்கு விளங்குகிறது

 

எதிரியின் பிரயோக சக்திகள் இங்கு ஊடுருவி விட்டன, அவற்றைத் தடுக்க முடியவில்லை என்பதை நினைக்கவே பாண்டியனுக்குக் கசந்தது. அவர் கேட்டார். “அப்படின்னா இதைத் துரத்தவோ, அழிக்கவோ வழியேயில்லையா?”

 

தேவானந்தகிரி சொன்னார். “இல்லை. இந்த ஒரு மண்டல காலத்தில் நீங்க எதிரியைக் கண்டுபிடிச்சுட்டா பிறகு நாம ஏதாவது செய்யலாம். அதனால அதைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க.”

 

தலையசைத்த பாண்டியன் கேட்டார். “எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற வயிற்று வலிப் பிரச்னை இந்த தாயத்தால சரியாயிடுமா?”

 

தேவானந்தகிரி சொன்னார். “புதுசா எந்த பாதிப்பும் வராம தடுக்கும். ஆனா ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பை அது ஒன்னும் செய்யாது. அதை நீங்க மருந்தால தான் சரி செஞ்சுக்க வேண்டி வரும்.”

 

மருத்துவர்களோ பல நாள் பத்திய உணவையும், மருந்தையும் சாப்பிட்டு தான் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த வேண்டியிருக்கும் என்று சொன்னது சுகுமாரனுக்கும், பாண்டியனுக்கும் நினைவு வந்தது.

 

தேவானந்தகிரி வேலை முடிந்த பின் அங்கே அதிகம் தங்க விரும்பாமல், பணம் பெற்றுக் கொண்டு, பிரம்மானந்தாவை வணங்கி விட்டுக்  கிளம்பி விட்டார். 

 

அவர் சென்ற பிறகு, சுகுமாரனுக்கு உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தாயத்து வேலை செய்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கவும் அவருக்கு ஆவலாக இருந்தது. ”நான் கொஞ்சம் தூங்கிக்கறேன் யோகிஜிஎன்று சொல்லி பக்கத்து அறையில் உறங்கச் சென்று விட்டார்.

 

பிரம்மானந்தாவும், பாண்டியனும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பக்கத்து அறையிலிருந்து சுகுமாரனின் குறட்டை கேட்க ஆரம்பித்ததிலிருந்து தேவானந்தகிரியின் தாயத்து சரியாக வேலை செய்கிறது என்பது தெரிந்து விட்டது. 

 

பாண்டியன் சொன்னார். “உடனடிப் பிரச்சினை தீர்ந்துடுச்சு. ஆனால் எதிரி இருக்கற வரைக்கும் நிலைமை, தலைக்கு மேல் கத்தி மாதிரி தான் இருக்கும் போலருக்கு யோகிஜி.”

 

பிரம்மானந்தா சொன்னார். “எனக்கும் அப்படித் தான் தோணுது பாண்டியன். எதிரியைக் கண்டுபிடிச்சு அழிக்கறது தான் இதுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாய் இருக்க முடியும்.”


(தொடரும்)

என்.கணேசன்




3 comments: