சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 3, 2024

சாணக்கியன் 129


த்ரசாலுக்கு அன்றிரவு நீண்ட நேரம் உறங்க முடியவில்லை. சின்ஹரன் சொன்ன விஷயங்கள் அவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டிருந்தன. அவனுடைய பணப்பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தர முடிவுகட்ட முடிந்தவனாய் சின்ஹரன் தெரிந்தான். அவன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவன் காதில் ரீங்காரம் செய்கின்றன. “அங்கும் இதே பிரச்சினை தான். ஊதியம் மிகவும் குறைவு. ஒரு காலத்தில் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவர் பின் தன் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தானே தேடிக் கொண்டார்.... அதுவும் ஒரு விதமான வணிகம் தான். இப்போது இருவரும் மிக நன்றாகச் சம்பாதிக்கிறோம்.”

 

எல்லா இடங்களிலும் இது நடக்கின்றது என்பது பத்ரசாலுக்கு இப்போது தான் தெரிகிறது. இத்தனை நாட்கள் சில்லறை தில்லுமுல்லுகளையும் பயந்து பயந்து செய்து கொண்டிருந்த அவனுக்கு பெரிய அளவில் எப்படிச் செய்ய முடியும் என்பது புரியவில்லை. அதைச் சொல்லாமல் சின்ஹரன் போய் விட்டான். அதையும் அவன் சொல்லியிருந்தால் அது நமக்கு ஒத்து வருமா என்று இன்னேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ராக்‌ஷசர் மாதிரி ஆட்கள் இங்கிருக்கையில் பெரிய அளவில் செய்தால் ஆபத்து கண்டிப்பாக இருக்கும் என்று பத்ரசாலின் அறிவு எச்சரித்தது. ஆனால் எல்லாவற்றில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வழிகள் அறிவாளிக்குத் தெரியாமல் இருப்பதில்லை” என்று அலட்டிக் கொள்ளாமல் சின்ஹரன் சொன்ன விதம் அவனுக்குப் பிடித்திருந்தது.

 

சின்ஹரனைப் பார்த்தால் மிகவும் தெளிவான ஆளாகத் தான் தெரிகிறான். வெறுமனே வார்த்தைகளை வீசுபவன் போலத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கவனிக்க முடிந்தவனாக இருக்கிறான். சூதாட்ட விடுதியில் ஒற்றன் ஒருவனின் கண்காணிப்பை அவன் கவனித்திருந்த விதம் நினைவுக்கு வந்தது. உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்பவன் அல்ல அவன் என்பதற்கும் சூதாட்ட விடுதியில் கட்டுப்பாட்டோடு ஒரு நாளுக்கு ஒரு ஆட்டத்திற்கு மேல் ஆடுவதில்லை என்று சொன்னதை மிகுந்த உறுதியோடு பின்பற்ற முடிந்ததே சான்று. இப்போதும் சின்ஹரன் அவனிடம் எதையும் செய்யுங்கள் என்று வலிய வந்து சொல்லவில்லை. எங்கேயோ நடந்த ஒரு விஷயத்தைத் தகவலாக அவனிடம் நட்பு ரீதியாகச் சொல்லியிருக்கிறான். அவ்வளவு தான். இதையெல்லாம் யோசிக்க யோசிக்க விரிவாக சின்ஹரனிடம் ஒரு முறை பேசித் தெரிந்து கொண்டு தீர்மானிப்பது நல்லது என்று பத்ரசாலுக்குத் தோன்றியது.

 

மறுநாள் இரவு வரும் வரை மிகவும் கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டு இருந்த பத்ரசால் மாலை முடிந்தவுடன் பரபரப்புடன் சூதாட்ட விடுதிக்குப் போனான். அப்போது தான் சின்ஹரனும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். இருவரும் நட்புடன் வணக்கம் தெரிவித்துக் கொண்டார்கள். அன்று இருவரும் கலந்து கொண்ட சூதாட்டம் இருவருக்கும் பண இழப்பில் முடிந்தது. பத்ரசால் முன் இரண்டு நாட்களில் சம்பாதித்த பணத்தை இன்று இழந்து விட்டான். அதே நிலைமை தான் சின்ஹரனுக்கும் என்றாலும் அவன் சிறிதும் அலட்டாமல் வென்றவர்களுக்குப் பாராட்டு தெரிவித்ததை பத்ரசால் கவனித்தான். பத்ரசாலால் அந்த மனநிலையில் இருக்க முடியவில்லை.

 

சின்ஹரன் தான் முன்பே சொல்லியிருந்த நிலைப்பாட்டின்படி அடுத்த ஆட்டம் ஆட அங்கே தங்காமல் மதுவருந்த நகர்ந்தான். பத்ரசாலும் அவனுடனேயே நகர்ந்தான். அவனுக்கு சின்ஹரனிடம் இன்று பேசி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமிருந்தது. இன்று இருவரும் மற்றவர்களிடமிருந்து மிகவும் தள்ளி ஒரு மூலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார்கள்.

 

பத்ரசால் தானாக அந்தப் பேச்சை எடுப்பதற்குத் தயங்கினான். பேச்சை அந்த விஷயத்துக்குக் கொண்டு சென்ற பிறகு பேசுவது தான் இயல்பாய் இருக்கும் என்று தோன்றியது. அதனால் முதலில் சின்ஹரனின் வாணிபம் குறித்துப் பேசித் தகவல்களைத் தெரிந்து கொள்வதென்று பத்ரசால் முடிவெடுத்தான்.

 

“நீங்கள் குறிப்பிட்ட வாணிபம் மட்டும் செய்கிறீர்களா கார்த்திகேயன், இல்லை எல்லாமே செய்கிறீர்களா?”

 

“ஆரம்பத்தில் பலவிதமான வாணிபத்தைச் செய்து கொண்டிருந்தேன் சேனாதிபதி. சில வருடங்களாக குதிரைகள் மட்டும் தான் என் வாணிபமாக இருக்கின்றன.”

 

“எங்கெல்லாம் வாணிபம் செய்கிறீர்கள்?”

 

”தற்போது காந்தாரத்திலிருந்து கலிங்கம் வரை வாணிபம் செய்கிறேன்.”

 

“இங்கு தங்களை இதற்கு முன் பார்த்ததாய் எனக்கு நினைவில்லையே.”

 

“பாடலிபுத்திரமும், கலிங்கமும் இந்த முறை தான் என் வாணிபப் பயணத்தில் சேர்ந்திருக்கின்றன.”

 

“தங்கள் குதிரை வாணிபம் எப்படிப் போகிறது?”

 

“பொதுவாக நன்றாகவே போகின்றது சேனாதிபதி. குறிப்பாக வாஹிக் பிரதேசத்தில் சந்திரகுப்தன் சமீப காலமாக நிறையவே குதிரைகள் வாங்குகின்றான். முக்கியமாகப் பாரசீகக் குதிரைகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறான். பாரசீகத்திலிருந்து வரும் குதிரைகள் அனைத்தும் அவனிடமே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அவனைத் தாண்டி அவற்றைக் கொண்டு வர முடிவதில்லை”

 

சந்திரகுப்தனின் பெயரைக் கேட்டவுடன் பத்ரசாலுக்கு பாடலிபுத்திர அரசவைக்கு வந்து சபதமிட்டுச் சென்ற அந்தணரின் நினைவு வந்தது. தனநந்தனுக்கு எதிராகத் தனிமனிதனாக இருந்த போதும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அச்சமில்லாமல் பேசிய அந்த மனிதர் இன்று தனி மனிதரல்ல. அவர் மாணவன் பின்னணியில் உள்ள பெரும் சக்தி அவர் தான் என்று பலரும் சொல்கிறார்கள். பத்ரசால் கேட்டான். “சந்திரகுப்தன் பாரசீகக் குதிரைகளை அதிக அளவில் வாங்க நிறைய செல்வம் வேண்டுமே. அத்தனை  செல்வத்தை அவன் எப்படி பெற்றான்?”

 

சின்ஹரன் சிரித்தபடியே சொன்னான். “மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒருவன் மீது விழும் வரை தான் கஷ்டம் சேனாதிபதி. அப்படி கடைக்கண் பார்வை ஒருவன் மீது விழுந்து விட்டால் அதன் பின் செல்வம் வந்து கொண்டே இருக்கும். பின் நிற்காது. வந்து குவிய ஆரம்பித்து விடும். அவனுக்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போது அவன் செல்வத்தை வாரியிரைக்கிறான்.”   

 

பத்ரசால் முகத்தில் ஏக்கம் படர்ந்தது. செல்வத்தை வாரியிரைக்க வேண்டாம், அதைக் கணக்குப் பார்க்க வேண்டியிருக்காமல் விருப்பப்படி செலவு செய்ய முடிந்தாலே போதும். அதுவே பெரிய பாக்கியம். அவன் நிலைமையோ ஒரு ஜாண் ஏறினால் ஒரு முழம் சறுக்கும் நிலையில் இருக்கிறது. இன்றைய தோல்வி நினைவுக்கு வர அவன் சொன்னான்.  “கார்த்திகேயன், நீங்கள் சூதாட்ட நுணுக்கங்கள் எனக்கு நன்றாகத் தெரிவதாகச் சொன்னீர்கள். இப்போதும் தோற்று விட்டேன் பார்த்தீர்களா?.”

 

சின்ஹரன் சொன்னான். “எதிலும் நுணுக்கங்களை நன்றாகத் தெரிந்தவன் தோற்க மாட்டான் என்றில்லை. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஆட்டத்தின் நுணுக்கங்களுக்கு இணையாக மற்ற விஷயங்களும்  இருக்கின்றன சேனாதிபதி. அந்த மற்றவை ஒருவனுக்கு அனுகூலமாக இருக்கா விட்டால் நம் ஆட்டத்திறமை வெற்றி பெறப் போதாததாக அமைந்து விடுகின்றது. பின் உண்மையைச் சொல்லப் போனால் சூதாட்டம் என்றுமே செல்வம் சம்பாதிக்க நம்பத் தகுந்ததல்ல. அதன் இயல்பே யாராலும் கணிக்க முடியாதது தான். அதனால் தான் நீங்கள் சூதாட்டத்தினாலேயே கடைசி வரை செல்வந்தனாக இருக்கும் ஒருவனை எந்தக் காலத்திலும் காண முடியாது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். முந்தா நாள் பெற்ற செல்வத்தை இந்த இரண்டு நாட்களில் இழந்து பழைய நிலைமைக்கே வந்து விட்டேன்.”

 

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை யோசித்தவனாய் பத்ரசால் சொன்னான். “ஆனால் செல்வத்தை இழந்த போதும் நீங்கள் எந்த வருத்தமும் அடையாமல் இருந்தீர்கள். பார்க்க வியப்பாக இருந்தது.”

 

“எதிர்பாராதது நடக்கும் போது தான் அதிர்ச்சியும் வருத்தமும் வந்து நம்மைப் பாடாய்படுத்துகின்றன. இது எதிர்பார்த்தது தான். மேலும் இறைவன் அருளால் இப்போதைக்கு செல்வம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல சேனாதிபதி. நான் வாணிபத்திலும், நேற்று தங்களிடம் வெளிப்படையாகச் சொன்னது போல் என் நண்பன் மூலமாகவும் தாராளமாகச் சம்பாதிக்கின்றேன். அதனால் வருத்தப்பட ஒன்றுமில்லை”

 

சின்ஹரனாக அந்த விஷயத்தை மறுபடியும் பேசியது பத்ரசாலுக்குத் திருப்தியைத் தந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை அவன் நழுவ விட விரும்பவில்லை. அவன் சுற்றிலும் தன் பார்வையைச் சுழற்றினான். யாரும் அவர்கள் பேச்சைக் கேட்க முடிந்த தூரத்தில் இல்லை.

 

சின்ஹரன் மெல்லச் சிரித்தபடி சொன்னான். “ஒற்றன் இன்றும் நம் பேச்சைக் கேட்க வந்தமர்ந்தான். ஆனால் அவன் நான் சூதாட்டம் பற்றித் தத்துவம் பேச ஆரம்பித்தவுடனேயே இடத்தைக் காலி செய்து விட்டான்.”    

 

பத்ரசால் தன் மனதினுள் அவனுடைய புத்திசாலித்தனத்தையும், கூரிய பார்வையையும் மெச்சியபடி தாழ்ந்த குரலில் சொன்னான். “இழப்பையும், செலவுகளையும் பொருட்படுத்தாத அளவுக்கு செல்வத்தை ஈட்டும் இரகசியத்தை எனக்கும் சொல்லி உதவுங்களேன் நண்பரே”

 

சின்ஹரன் புரியாதவன் போலக் கேட்டான். “நீங்களும் வாணிபத்தில் ஈடுபட விரும்புகிறீர்களா நண்பரே?”

 

பத்ரசால் மறுபடியும் தாழ்ந்த குரலில் சொன்னான். “உங்கள் நண்பருடன் சேர்ந்து நீங்கள் செய்யும் வணிகத்தைப் போல நானும் செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன்.”

 

(தொடரும்)

என்.கணேசன்







1 comment:

  1. சாணக்கியர்...சின்ஹரனை இந்த வேலைக்கு ஏன் தேர்ந்தெடுத்து அனுப்பினார்? என்பது இப்போது புரிகிறது....

    ReplyDelete