மூவரும் திகைத்தார்கள். தேவானந்தகிரி
தொடர்ந்தார். “டாக்டர் பக்கம் மண்டை ஓடு தெரியுது. பாண்டியன்
பக்கம் ஓநாய் தெரியுது…. ரெண்டு பேரோடு மணிப்புரா சக்ராவும் எரியறது தெரியுது….”
அவர் கடைசியாகச் சொன்னது பாண்டியனுக்கும், சுகுமாரனுக்கும்
புரியவில்லை. அவர்கள்
கேள்விக்குறியுடன் பிரம்மானந்தாவைப் பார்த்தார்கள். பிரம்மானந்தா
வயிற்றுப் பகுதியைக் காண்பித்து அது தான் மணிப்புரா சக்ரா என்று சைகையால் தெரிவித்தார்.
அவர்களுடைய வியப்பு அதிகரித்தது. அவர்களாக
எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இருந்த போதும், இத்தனை
கச்சிதமாகத் தகவல்களைச் சொன்னவர் இதன் பின்னணியையும் அப்படியே சொல்வார் என்ற நம்பிக்கை
பூரணமாகப் பிறந்தது.
சுகுமாரன் கேட்டார். ”இந்தப்
பிரச்சினைக்குக் காரணம் அந்தப் பொண்ணோட ஆவியா?”
தேவானந்தகிரி கண்களைத் திறக்காமலேயே
சொன்னார். “இல்லை. இது ஆவியோட வேலையில்லை. ஆட்களோட
வேலை”
பாண்டியனுக்குத் தன் சந்தேகம் பலித்து
விட்டது திருப்தியளித்தது. ஆவியைத் துரத்தலாமே ஒழிய பழிவாங்க முடியாது. துன்பம்
விளைவித்தவர்களைத் திருப்பித் தாக்காமல் இருக்கும் நிலைமை அவருக்குச் சிறிதும் உடன்பாடானதல்ல. எதிரிகள்
ஆட்களானால் தான் எதையாவது செய்ய முடியும். அதனால்
அவர் உடனடியாக ஆர்வத்துடன் கேட்டார். ”அந்த ஆட்கள் யார்னு
சொல்ல முடியுமா?”
தேவானந்தகிரி சிறிது நேரம் ஒன்றும்
சொல்லவில்லை. சிலை போல் அமர்ந்திருந்தவர் பின் மெல்ல சொன்னார். “ஒரு இளைஞன்
தெரியறான். அவனுக்கு 25 வயசுல இருந்து முப்பது
வயசுக்குள்ளே இருக்கும்.”
பாண்டியனும் பிரம்மானந்தாவும் திகைத்தார்கள். அவர்கள்
இருவரும் இதுவரையில் சைத்ராவின் தாத்தா தான் இதன் பின்னணியில் இருப்பார் என்று சந்தேகப்பட்டிருந்தார்கள். அதனால்
தேவானந்தகிரி இளைஞன் என்று சொன்னது அவர்களைக் குழப்பியது. அந்த இளைஞன்
எப்படி சைத்ராவுடன் சம்பந்தப்படுகிறான்? சைத்ராவுடன் சம்பந்தமில்லை
என்றால் ஏன் அவள் உருவம் அவர்களுக்குத் தெரிந்தது?
பிரம்மானந்தா கேட்டார். “அந்த இளைஞன்
தான் இவங்களுக்கு எதிராய் இந்தப் பிரயோகம் செய்தவனா? அவனுக்கு
இந்த வித்தை எல்லாம் தெரியுமா?”
“அவனுக்கு
இந்த வித்தை தெரியாது. அவன் என்னை மாதிரி ஒருத்தர் மூலமாய் இதைச் செய்ய வெச்சிருக்கான். செய்த ஆள்
ரொம்ப திறமைசாலி. அவர் நினைச்சிருந்தா இவங்க ரெண்டு பேரையும் சாகடிச்சிருக்கக்கூட
முடியும். இந்த அளவு போதும்னு அவர் நிறுத்திகிட்ட மாதிரி தான் இருக்கு.”
இந்தத் தகவல் மூவரையும் அதிர வைத்தது. ”யாரவர்” பாண்டியன்
உடனடியாகக் கேட்டார்.
தேவானந்தகிரிக்கு அந்த நபர் காட்சியாகத்
தெரியவில்லை என்றாலும், இக்காலத்தில் இது போன்ற வேலைகளில் அசாத்திய ஞானமும், தனக்குத்
தானே ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்ளும் கட்டுப்பாடும் உள்ள நபர் ஒரே ஒருவர் தான். பரசுராமன். ஆனால் அந்தப்
பெயரைத் தன் வாயால் சொல்லி பரசுராமனின் அதிருப்திக்கு ஆளாக அவர் விரும்பவில்லை. மேலும்
ப்ரஷ்னத்தில் தெரிவதைப் பார்த்துச் சொல்லத் தான் அவர் பணம் வாங்குகிறார். சரியாகவே
இருந்தாலும் அனுமானத்தைச் சொல்வதற்காக அல்ல...
அவர் மெல்லச் சொன்னார். “அது ப்ரஷ்னத்தில்
தெரியலை. இவ்வளவு சூட்சுமமான பிரயோகத்தை செய்திருக்கற அவர், தன்னை மறைச்சுக்கற
வித்தை தெரிஞ்சவராயிருக்கறதுல ஆச்சரியப்பட ஒன்னுமில்லை. ஒன்னு மட்டும்
நிச்சயம். அந்த ஆள் தானாய் ஒரு கட்டுப்பாட்டோட இத்தோட நிறுத்திகிட்ட
மாதிரி தான் இருக்கு. மணிப்புரா சக்ரால பிரயோகப்படுத்தினதை அவர் அனாஹதா சக்ரால
பிரயோகப்படுத்தி இருந்தால் இவங்களுக்கு மாரடைப்பு வந்திருக்கும். விசுத்தி
சக்ரால பிரயோகப்படுத்தியிருந்தால் பேச்சு நின்னு போயிருக்கும். ஆக்ஞ சக்ரால
பிரயோகப்படுத்தியிருந்தால் உடனடியாய் பைத்தியம் பிடிச்சிருக்கும். அதெல்லாம்
நடக்கலையேன்னு சந்தோஷப்படுங்க”
குழப்பத்துடன் பார்த்த பாண்டியனிடமும், சுகுமாரனிடமும்
பிரம்மானந்தா, அனாஹதா சக்ரா நெஞ்சுப்பகுதியில் உள்ளதென்றும், விசுத்தி
சக்ரா தொண்டைப் பகுதியில் உள்ளதென்றும், ஆக்ஞ சக்ரா இரண்டு
புருவங்களுக்கு மத்தியில் உள்ளதென்றும் விளக்கினார்.
பிறகு பிரம்மானந்தா தேவானந்தகிரியிடம்
கேட்டார். “இந்த மாதிரி பிரயோகங்கள் செய்ய முடிஞ்ச ஆட்கள் இந்தக் காலத்துல
நிறைய இருக்க மாட்டாங்களே. அதனால ஆளை உங்களால சாதாரணமாவே சொல்லிட முடியுமே”
தேவானந்தகிரி கண்களைத் திறந்தார். ”நீங்க நினைக்கற மாதிரி இல்லை. இந்த வித்தை தெரிஞ்சவங்க
நமக்குத் தெரியாம நிறைய பேர் இருக்காங்க. அதனால இதுல யூகங்கள்
தவறான ஆளை அடையாளம் காட்டிடலாம்… என்னைக் கேட்டால் இந்தப் பிரயோகம்
பண்ணினவர் பின்னால் போறது ஆபத்தும் கூட. அதனால அவரைச் செய்யச்
சொன்ன இளைஞனைக் கண்டுபிடிக்கப் பார்க்கறது தான் புத்திசாலித்தனம்…”
பாண்டியன் கேட்டார்.
“அந்த இளைஞனுக்கு எங்க மேல ஏன் இந்த வன்மம்னு பார்த்துச் சொல்ல முடியுமா?”
தேவானந்தகிரி மறுபடி கண்களை மூடிக் கொண்டார். சிறிது நேரம் மௌனமாய் இருந்து
விட்டுச் சொன்னார். ”அது தெளிவாய் தெரியலை…. கொஞ்சம் பொறுங்க….. அவன் இப்ப என்ன செஞ்சுகிட்டிருக்கான்கிற
தகவல் தெரியுது…..”
மூவரும் பேரார்வத்துடன் தேவானந்தகிரியைப் பார்த்தார்கள். அதை வைத்து அவர்களுக்கு
எதையாவது அனுமானிக்க முடியலாம்… ஒவ்வொரு வினாடியும் யுகமாய் நகர்ந்தது.
தேவானந்தகிரி கண்களை மூடியபடியே முழுக்கவனத்தை ஓரிடத்தில் குவித்துப்
பார்ப்பது போலிருந்தது.
சிறிது நேரம் கழித்து அவர் சொன்னார். ”இப்ப அவன் யாரோ ஒரு நிஜ
யோகியைத் தீவிரமாய்த் தேடிகிட்டிருக்கிற மாதிரி தெரியுது.”
உண்மையில் அந்த நேரத்தில் ஷ்ரவன் சைத்ராவின் ஆவி சொல்லி
இருந்த யோகியைப் பற்றித் தான் தீவிரமாக யோசித்தபடி இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். அதைத் தான் தேவானந்தகிரியால்
உணர முடிந்தது.
தேவானந்தகிரியின் பதில் மூவரையும் ஏமாற்றமடைய வைத்தது. ஆவி விஷயத்தை விடவும்
அதிகமாக இது குழப்பியது. யோகியைத் தேடுபவன் ஏன் அவர்களுக்கு
எதிரான வேலையில் இறங்குகிறான்?
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யோகியைத்
தீவிரமாகத் தேடுபவன் ஆன்மீக மார்க்கத்தில் ஆழமாக ஈடுபட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்டவனுக்கு
இவர்களுடன் என்ன பிரச்சினை? ஏன் இப்படிச் செய்கிறான்?
சுகுமாரன் தன் சந்தேகத்தைக் கேட்டார். “அந்த இளைஞன் தேடற யோகி
இவர் தானோ?” சுகுமாரன் பிரம்மானந்தாவைக் கை காட்டினார்.
அவருக்குத் தெரிந்த ஒரே யோகி பிரம்மானந்தா தான். சுகுமாரனையும், பாண்டியனையும் தண்டித்து விட்டு அடுத்த குறியாக பிரம்மானந்தாவை வைத்துக் கொண்டு,
அவர் தற்போது எங்கிருக்கிறார் என்று அவன் தேடிக் கொண்டிருக்கிறானோ?”
இல்லை என்று தேவானந்தகிரி தலையசைத்தார்.
சுகுமாரன் பரிதாபமாகக் கேட்டார். “இப்படி யார் வேணும்னாலும்
யார் மேலயும் சக்தியைப் பிரயோகிக்க முடியுமா?”
தேவானந்தகிரி உள்ளதை உள்ளபடி சொன்னார். “எப்பவுமே பலமானவங்க,
பலவீனமானவங்க மேல சக்தியை பிரயோகிக்க முடியும். பிரயோகம் செஞ்ச ஆள் பலமானவர். நீங்க பலவீனமானவங்க…”
மூவருக்கும் அவர் சொன்னது கசந்தது. மூவருமே தங்களை மிக வலிமை
வாய்ந்தவர்களாய் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பதால் அவரது இந்த வாசகம் அவர்களைச்
சிறுமைப்படுத்துவது போல் தோன்றியது. பிரம்மானந்தா சாமர்த்தியமாக,
தன் அதிருப்தியை மறைத்துக் கொண்டார். மற்ற இருவருக்கும்
அது முடியவில்லை.
அவர்கள் இருவருடைய முகபாவனையிலிருந்து, தான் சொன்னது அவர்களுக்குப்
பிடிக்கவில்லை என்பதை தேவானந்தகிரி உணர்ந்தார். பரசுராமனைப் போன்றவர்கள்
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நியாயம் இல்லாத ஒரு செயலில் ஈடுபட மாட்டார்கள்.
அதனால் இந்த இருவரும் ஏதோ பெரிய அநீதியைச் செய்திருக்க வேண்டும்.
’தவறான கர்மாவைச் செய்திருப்பவர்கள் அந்த விளைவுகளை அனுபவித்து முடியும் வரை
பலவீனமானவர்களே.’ என்று தேவானந்தகிரி விளக்க நினைத்து பின் அதைத்
தவிர்த்தார். அதையெல்லாம் விளக்குவது அவர் வேலை அல்ல.
தேவானந்தகிரி,
எப்படி இந்தப் பிரயோகம் நடந்திருக்கலாம் என்பதை, தொடர்ந்து சொன்னார். “நீங்க ரெண்டு பேரும் தினமும் பயன்படுத்திகிட்டு இருக்கற பேனா, கர்ச்சீஃப், சாக்ஸ், செருப்பு,
டவல், பனியன், வாட்ச்,
ட்ரஸ் மாதிரியான ஏதோ ஒரு பொருள் அவன் கைல கிடைச்சிருக்கு, உங்க இடத்து மண்ணும் அவங்களுக்குக் கிடைச்சிருக்கலாம்…”
சுகுமாரன் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் கைக்குட்டையை இழந்ததை நினைவு
கூர்ந்தார். பாண்டியனுக்கும் சுகுமாரனின் வீட்டுக்குப் போயிருந்த போது அவரது டவல் காணாமல்
போயிருந்தது நினைவு வந்தது. யோசித்துப் பார்த்தால் அவர்கள் அதைத்
தவற விடவில்லை. யாரோ திட்டமிட்டு எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
“அவங்க பிரயோகிச்சதை அவங்களுக்கே திருப்பி ஏவி விட முடியாதா?” பாண்டியன் ஆவலுடன் கேட்டார். அதைச் செய்து விட்டு அவர்கள்
படும் அவஸ்தையை நேரில் பார்த்தால் ஒழிய அவருக்கு மனம் ஆறாது.
(தொடரும்)
என்.கணேசன்
Pavam devanathagiri to see boomarrang effect
ReplyDeleteதேவானந்தகிரி....பெயரை குறிப்பிடாமல்...இவர்களிடம் இருந்து பரசுராமனை காப்பாற்றவில்லை...
ReplyDeleteபரசுராமனிடம் இருந்து தான் இவர்களை காப்பாற்றியுள்ளார்....
பரசுராமன் வெளிநாடு செல்லும் முன் ...ஏதோ செய்து விட்டு போகிறேன் என்றார்... ஆனால்,இவர்கள் எல்லாவற்றையும் கண்டறிந்து விட்டார்களே...?
வணக்கம் சார், புது நாவல் வருட இறுதியில் வரும் என்று சொன்னிர்கள். எப்போ வெளியீடு சார்?
ReplyDeleteபுதிய நாவல் ரட்சகன் டிசம்பரில் வெளிவரும்.
Delete