சின்ஹரன் பத்ரசாலைக் கூர்மையாகப் பார்த்தான். ’என் காதில் விழுந்தது சரி தானா?’ என்பது போல் அவன் பார்வையிருந்தது.
பத்ரசால் சரிதான்
என்பது போல் தலையை லேசாக அசைத்து விட்டுச் சொன்னான். “ஆனால் இங்கே கண்காணிப்பும், பரிசோதனைகளும்
அதிகம்”
சின்ஹரன் புன்னகையுடன்
அமைதியாகச் சொன்னான். “எல்லாக் கண்காணிப்பு, பரிசோதனைகளிலும் ஏதாவது ஒரு பலவீனம் இருந்தே
தீரும் சேனாதிபதி. அதை நாம் சரியாகப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும். சிறிது கவனக்குறைவும் இருக்கக்கூடாது. அவ்வளவு தான்.”
பத்ரசாலுக்கு அவன்
சொன்னது உற்சாகத்தைத் தந்தது. “என்ன செய்யலாம் என்ற விவரங்களைச் சொல்லுங்கள் கார்த்திகேயன்”
என்று பேரார்வத்துடன் கேட்டான்.
சின்ஹரன் சுற்றிலும்
மீண்டுமொரு முறை பார்த்து விட்டுத் திருப்தியடைந்தவனாய் சொன்னான். “இப்போது பாரசீகக்
குதிரைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது சேனாதிபதி. நான் சொன்னபடி சந்திரகுப்தன் பாரசீகத்திலிருந்து
வரும் குதிரைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக வாங்கி விடுவதால் மற்ற பகுதி ஆட்களுக்கு பாரசீகக்
குதிரைகள் கிடைப்பதில்லை. உங்களிடம் ஏராளமான பாரசீகக்குதிரைகள் இருக்கின்றன”
பத்ரசால் ஒரு கணம்
திகைத்தபடி சொன்னான். ”குதிரைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் ஒரு அதிகாரி இருக்கிறான்.
அவன் என் நண்பன் தான். அது பிரச்னையல்ல. ஆனால் அவ்வப்போது குதிரைகளின் எண்ணிக்கை பரிசோதிக்கப்படும்
கார்த்திகேயன். பராமரிப்பு அதிகாரி கணக்கில் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையும்,
பரிசோதிக்க வரும் அதிகாரியின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும். அதில் ஒன்று குறைந்தாலும்
எங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசருக்குத் தகவல் உடனே தெரிவிக்கப்படும். அவர் விசாரணை
தீவிரமாக இருக்கும்”
சின்ஹரன் அமைதியாகச்
சொன்னான். “குதிரைகளின் எண்ணிக்கை மொத்தமாகத் தானிருக்குமேயொழிய இந்த ரகக்குதிரைகள்
இத்தனை என்று எங்கும் வகை பிரித்து எண்ணிக்கைக் கணக்கு இருப்பதில்லை. பாரசீகக் குதிரைகளுக்குப்
பதிலாக உள்நாட்டுக் குதிரைகள் லாயங்களில் மாற்றி வைக்கப்பட்டு இருந்தால் யாருக்கும்
தெரியப் போவதில்லை.”
பத்ரசாலின் கண்கள்
விரிந்து பிரகாசித்தன. சின்ஹரன் தொடர்ந்து தாழ்ந்த குரலில் சொன்னான். “உள்நாட்டுக்
குதிரைகளை நான் தருகிறேன். அதற்குப் பதிலாக பாரசீகக் குதிரைகளை நீங்கள் தாருங்கள்.
விலை வித்தியாசத்தை நாம் பிரித்துக் கொள்வோம். இப்போதிருக்கும் சந்தை விலையை வைத்துக்
கணக்குப் போட்டுப் பார்த்தால், குதிரை பராமரிப்பு அதிகாரிக்கு ஒரு சிறு பங்கைத் தந்தாலும்
கூட மீதியை வைத்துக் கொண்டு நீங்கள் விரைவில் செல்வந்தனாகி விடலாம்.”
உற்சாகப் பரபரப்புடன் பத்ரசால் யோசித்தான். பின் உற்சாகம் குறைந்தவனாகச் சொன்னான். “ஆனால் ஒன்றிரண்டை மாற்றுவதானால் இரகசியமாக எப்படியாவது மாற்றி விடலாம். அதிக எண்ணிக்கையில் செய்வதானால், லாயத்திற்கு உள்ளே வெளியே கொண்டு போகும் போது, கண்டிப்பாக யார் கவனத்திற்காவது வராமல் போகாதல்லவா கார்த்திகேயன்?”
சின்ஹரன் சொன்னான்.
“இந்த மாற்றம் லாயத்தில் செய்யப்பட்டால் கண்டிப்பாக நீங்கள் சொன்னபடி யார் கவனத்திற்காகவது
கண்டிப்பாக வரும். அதனால் கண்டிப்பாக அதைத் தவிர்க்க வேண்டும்.”
பத்ரசால் குழப்பத்துடன்
கேட்டான். “பின் எப்படி?”
சின்ஹரன் சொன்னான்.
”குதிரைகளை மேய்ச்சலுக்கு வெளியே குறிப்பிட்ட காலத்தில் விடுவதுண்டல்லவா? மேய்ச்சலின்
போது யாரும் குதிரைகளையே பார்த்துக் கொண்டிருப்பதில்லை. குதிரைகளின் பின்னாலேயே போய்க்
கொண்டிருப்பதில்லை. லாயத்திற்குத் திரும்ப ஓட்டிச் செல்லும் காலம் வரை அவை சுதந்திரமாகவே
மேய்கின்றன. மேய்ச்சல் முடிந்து லாயத்திற்கு கொண்டு போகும் நேரத்திற்குள் குதிரைகளை
மாற்றி விடலாம். அதற்கு எங்களிடம் கச்சிதமான வழிகள் உண்டு”
பத்ரசால் நிம்மதியடைந்தான்.
சின்ஹரன் சொன்னது போல லாயத்திலிருந்து வெளியே வரும் போது எண்ணி வெளியே விடப்படுகின்றன.
திரும்ப அவை உள்ளே போகும் போது எண்ணி உள்ளே விடப்படுகின்றன. இடைப்பட்ட காலம் நீண்ட
நேரம் தான். யாரும் குதிரைகளையே கூர்ந்து கண்காணித்துக்
கொண்டிருக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளாமலிருக்கும் நீண்ட காலம்….. மிக சாமர்த்தியமாக
அந்தக் காலத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழியை இவர்கள் கற்றிருக்கிறார்கள்.
பத்ரசால்
கேட்டான். “அப்படியானால் நம் வணிகத்தை எப்போது ஆரம்பிப்பது கார்த்திகேயன்?”
சின்ஹரன்
சொன்னான். “அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் சேனாதிபதி. நான் புதியவன் என்பதால் நான் அவ்வப்போதாவது
கண்காணிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் என் ஆட்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.
அவர்கள் நீண்ட காலமாக குதிரை வணிகத்தில் தொடர்ந்து இங்கு வந்து போய்க் கொண்டிருப்பவர்கள்
என்பதால் அவர்களைக் கண்காணிப்பதை உங்கள் ஒற்றர்கள் நிறுத்தியும் சில மாதங்களாகி விட்டன.
அவர்கள் மூலமாக வணிகம் நடப்பது நமக்குப் பாதுகாப்பு.”
சின்ஹரன்
சொல்வது கூடுதல் புத்திசாலித்தனமாக பத்ரசாலின் அறிவுக்குத் தோன்றினாலும் வேறு ஆட்களுடன்
இந்த வணிகம் புரிவதில் பத்ரசால் சிறிது சங்கடத்தை உணர்ந்தான். அவனையே கவனித்துக் கொண்டிருந்த சின்ஹரன் சொன்னான்.
“என் ஆட்கள் மிக நம்பிக்கையானவர்கள். என்னுடன் நீண்ட காலம் இருப்பவர்கள். உயிரே போகும்
நிலை வந்தாலும் உயிரை விடுவார்களே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அதனால் நீங்கள்
அது குறித்து எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை சேனாதிபதி. மேலும் குதிரைகள் கை
மாறும் போது உடனடியாக பணமும் உங்கள் கைக்கு மாறியிருக்கும். இடையிடையே நானும் வருவேன்.
ஏதாவது நடைமுறைப் பிரச்சினைகள் நீங்கள் உணர்ந்து மாற்றங்கள் தேவையாக இருந்தால் அந்தச்
சமயங்களில் சரி செய்து கொள்வோம்.”
பத்ரசால்
ஓரளவு திருப்தியடைந்து தலையசைத்தான். சின்ஹரன் சொன்னான். “ஓரிரு முறை நம் வணிகம் பிரச்சினையில்லாமல்
முடியும் போது நீங்கள் எங்களை விட அதிக உற்சாகம் அடைந்து விடுவீர்கள் சேனாதிபதி…. நீங்கள்
ஆரம்பத்தில் எத்தனை குதிரைகள் மாற்றத் தயார் என்று சொன்னால் என் ஆள் அதற்கான பணத்துடன்
அடுத்த வாரம் வந்து உங்களைச் சந்திப்பான்.”
பத்ரசால்
யோசித்தான். முதல் முறையே அதிக எண்ணிக்கையில் ஆரம்பிப்பது ஆபத்து என்று அவனுக்குத்
தோன்றியது. இந்த வணிக முறை அவனுக்குப் பழக்கமாகும் வரை சிறிய எண்ணிக்கையே பாதுகாப்பு
என்று தோன்றியது. அவன் சொன்னான். “ஆரம்பத்தில் ஐம்பது குதிரைகள் போதும். பிறகு அதிகப்படுத்திக்
கொள்வோம்.”
சின்ஹரன்
அதற்குச் சம்மதித்தான். பத்ரசால் கேட்டான். ”உங்கள் ஆட்கள் எத்தனை காலத்திற்கு ஒரு
முறை வருவார்கள்?
“அவர்கள்
மாதமிரு முறை வருவார்கள். நான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவேன்”
“எத்தனை
குதிரைகள் வரை வாங்குவீர்கள்?”
“எத்தனையானாலும்
எங்களுக்குப் பிரச்சினை இல்லை சேனாதிபதி”
பத்ரசால்
உள்ளூர உற்சாகத்தை உணர்ந்தான். அதிர்ஷ்டம் உண்மையாகவே அவனிடம் வந்து விட்டது.
சின்ஹரன்
சொன்னான். “நாளை மறுநாள் நான் இங்கிருந்து கிளம்புகிறேன் சேனாதிபதி. நாளை நான் முதல்
விளையாட்டு விளையாடி விட்டு மதுவருந்த வந்து விடுவேன். ஆனால் நாளை நீங்கள் மதுவருந்த
என்னுடன் வர வேண்டாம். தொடர்ந்து விளையாடுங்கள். ஒற்றர்கள் பார்வையில் இது சூதாட்ட
இடத்தில் ஏற்படக்கூடிய பரிச்சயம் என்ற வகையிலேயே இருப்பது நல்லது. அதையும் தாண்டிய
நட்பு போலக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அது உதவும். நான் இனி மூன்று மாதங்கள் கழிந்து
தான் வருவேன். அதற்குள் நம்மிடையே ஆறு வணிகத் தொடர்புகளாவது நடந்து முடிந்திருக்கும்.
நீங்கள் ஒவ்வொரு முறை நம் வணிகம் முடியும் போதும் அதன் முடிவில் அடுத்த முறை எவ்வளவு
குதிரைகள் தர முடியும் என்று குறிப்பிட்டால் வசதியாக இருக்கும்.”
பத்ரசால்
அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் வகையில் தலையாட்டினான். இவனுடனான வணிகம் அவனுக்குப் பெருமளவு இலாபத்தைத்
தரும் என்ற நம்பிக்கை அவனுக்குள் எழுந்தது. கார்த்திகேயன் எல்லாவற்றையும் முன்கூட்டியே
யோசிக்க முடிந்தவனாய், எதையும் தெளிவாகப் பேசவும், செய்யவும் முடிந்தவனாய் இருக்கிறான்.
இது போன்ற புத்திசாலிகளின் சகவாசம் பிற்காலத்தில் சங்கடங்களை ஏற்படுத்துவதில்லை…
சின்ஹரன்
சுற்றிலும் பார்த்தான். எல்லோரும் மதுவருந்திக் கொண்டு அவர்களுக்குள் பேசியபடி இருந்தார்கள்.
யாருடைய பார்வையும், கவனமும் இங்கில்லை. சின்ஹரன் தன் இடுப்பிலிருந்து சிறிய பொன் முடிச்சு
ஒன்றை பத்ரசாலின் மதுக்கோப்பை இருக்கும் இடத்தில் வைத்து விட்டுத் தாழ்ந்த குரலில்
சொன்னான். “நம்மிடையே உருவாகியிருக்கும் இந்தப் புதிய வணிகத் தொடர்பிற்கு தங்களை வரவேற்கும்
விதமாக அடியேன் அளிக்கும் சிறு அன்பளிப்பு இது சேனாதிபதி. தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
நாளை நாம் சந்தித்தாலும் தனியாகப் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் இப்போதே விடைபெற்றுக்
கொள்கிறேன்.”
சின்ஹரன்
எழுந்து சென்று விட்டான். அந்தப் பொன்முடிச்சை உடனடியாக எடுத்துக் கொண்ட பத்ரசால் அதிர்ஷ்டம்
உண்மையாகவே வந்து விட்டது என்று சற்று முன் உணர்ந்தது நிரூபணம் ஆகி விட்டதென்று பெருமகிழ்ச்சி
அடைந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
சிலர் "வேலை ஆக வேண்டும், ஆனால் பணத்தை சீக்கிரம் தரமாட்டார்கள்"
ReplyDeleteஆனால், சாணக்கியர் பண விசயத்தில் சரியாக நடந்து கொள்கிறார்...