சந்திரகுப்தனின் தாய்மாமன் தன் தங்கை மூராவிடம் தன் பலத்த சந்தேகத்தைச் சொன்னார். “சிலர் ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதாகச் சொல்லி அழைத்துச் சென்று தங்களுக்கு அடிமைகளாகவோ, கூலி இல்லாத பணியாட்களாக ஆக்கிக் கொள்வதுண்டு என்று சொல்கிறார்கள். இவன் சொல்வது உண்மையாக இருந்தால் கூட இவன் சொல்கிறபடி அவர் பண்டிதர் தானா இல்லை ஏமாற்றுப் பேர்வழியா என்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை.”
அவர் அப்படிச் சொன்னது மூராவுக்கு மனதில்
கலக்கத்தை ஏற்படுத்தியது. தாய்மாமன் சொன்னதைக் கேட்டு சந்திரகுப்தன் உறுதியாகச் சொன்னான். “அவர் அப்படிப்பட்டவர்
அல்ல மாமா. அவர் பண்டிதர் தான்”
தாய்மாமன் சொன்னார். “உனக்கு
உலக அனுபவம் போதாது சந்திரா. இது கலிகாலம். மனிதர்களில் ஏமாற்றுக்காரர்களும், உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசுபவர்களும்
அதிகமாகி விட்டார்கள்.”
ஆனால் விஷ்ணுகுப்தரை நேரில் பார்த்தபின் சந்திரகுப்தனின் தாய்மாமனுக்கு
அந்தச் சந்தேகம் விலகியது.
அவர் பேசியவுடன் சந்திரகுப்தன் சொன்னது எதுவும் கற்பனை அல்ல என்றும்
உறுதியாகியது.
விஷ்ணுகுப்தர் சொன்னார். “சந்திரகுப்தன் சாதாரண சிறுவன் அல்ல.
நான் இதுவரை பார்த்தவர்களில் மிகவும் புத்திசாலி மட்டுமல்ல. கனவு காணவும் முடியாத சூழலில் பிறந்திருந்தும் கனவு காணும் துடிப்பையும்,
கனவை நனவாக்கத் தேவையான அறிவையும் தன்னிடம் வைத்திருக்கிறான்.
அப்படிப்பட்டவன் மாடு மேய்த்து அடிமட்ட வாழ்க்கை வாழ்ந்து முடிப்பவனாக
ஆகிவிடக்கூடாது. நான் அவனை தட்சசீலம் அழைத்துப் போய் அனைத்தையும்
கற்றுக் கொடுக்கிறேன். அவன் கனவின் உயரத்தை அவனடையும் அளவுக்கு அவனை உருவாக்கவும் என்னால் முடியும்.
அவனுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க நீங்கள் என்னோடு அவனை அனுப்பி வைக்க
வேண்டும்”
அவர்கள் இருவருக்கும் அவர் சொன்ன வார்த்தைகள் தெரிந்தன என்றாலும்
அதன் துல்லியமான அர்த்தம் புரியவில்லை.
ஏதேதோ பெரிய வார்த்தைகளைச் சொல்லும் அவரிடம் சந்திரகுப்தனின் தாய்மாமன்
சொன்னார். “கனவுகள் காலி வயிற்றை நிரப்புவதில்லை அந்தணரே.
எங்கள் இனத்தில் யாரும் கல்வி கற்றதில்லை. எங்கள்
வாழ்வாதாரத்துக்கு அது அவசியமும் இல்லை….”
விஷ்ணுகுப்தர் சொன்னார். “கல்விக்கு முக்கிய தேவை அதற்கான தாகமும்,
அதைப் புரிந்து கொள்ள முடிந்த அறிவுமே ஒழிய இனமோ, குலமோ அல்ல. கனவுகள் காலி வயிற்றை நிரப்புவதில்லை என்றீர்கள்
உண்மை தான். ஆனால் மாடு மேய்த்துக் கொண்டே வாழ்ந்து விடுவது வயிற்றை
நிரப்ப மட்டுமே செய்யுமே ஒழிய அவன் நிலைமையை உயர்த்தி விடப் போவதில்லை அல்லவா?
ஆக இந்தப் புத்திசாலியான சிறுவன் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தும்
வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதல்லவா அவனை நேசிக்கும் நீங்கள் செய்ய வேண்டியது…”
தாய்மாமன்
என்ன சொல்வதென்று தெரியாமல் மூராவைப் பார்த்தார். மூரா தன் மகனைப் பார்த்தாள். அவன் கண்களில் ஏக்கம் தெரிந்தது. அவன் சாதாரண சிறுவர்களைப்
போல் அல்ல என்பதை அவள் எப்போதுமே கவனித்திருக்கிறாள். நடக்கவே
நடக்காது என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்த விஷயங்களை எல்லாம் ஒரு காலத்தில் செய்து
காட்டுவதாக எத்தனையோ முறை அவன் அவளிடம் சொல்லும் போதெல்லாம் அவள் அடிமனதில் ஒரு சோகத்தை
உணர்ந்திருக்கிறாள். ஒரு அரசகுலத்திலோ, செல்வந்தர் வீட்டிலோ அவன் பிறந்திருந்தால் அவன் சொல்வதில் ஒன்றிரண்டாவது சாத்தியமாகலாம்.
‘என் பாழும் வயிற்றில் பிறந்தது தான் இவனுடைய துரதிர்ஷ்டம்’ என்று எண்ணி எத்தனையோ முறை தனிமையில் கண்ணீர் விட்டிருக்கிறாள். இப்போது இறைவனே அனுப்பியது போல இந்தப் பண்டிதர் வந்திருக்கிறார்…..
மூரா சொன்னாள்.
“அந்தணரே. எங்கள் குடும்ப சூழல் எங்கள் வசிப்பிடத்தைப்
பார்க்கையிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவனுக்கு கல்வி
கற்பிக்க தட்சிணை தரவும் எங்களிடம் சேமிப்பு எதுவுமில்லை..”
விஷ்ணுகுப்தர்
சொன்னார். ”நீங்கள் எதுவும் தர வேண்டியதில்லை தாயே. எல்லா செலவுகளையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் இவனை அனுப்பி வைத்தால் போதும். இவனுக்கு
வேண்டியதெல்லாம் கற்றுக் கொடுத்து சிறந்த எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்தி அனுப்புவது
என் பொறுப்பு”
“இவன் கல்வி
கற்று முடிய எத்தனை காலம் தேவைப்படும் அந்தணரே?” மூரா கேட்டாள்.
“குறைந்தது
பத்து வருடங்களாவது ஆகும்”
பத்து வருட காலம் என்பது குறைந்த காலமல்ல....
மூரா மனதில் இருவேறு உணர்ச்சிகள் போராடிக் கொண்டிருந்தன. அவர்கள்
குலத்தில் இது வரையில் யாருக்கும் வாய்க்காத வாய்ப்பு அவள் மகனுக்குக் கிடைக்கவிருக்கிறது. கல்விக்குத்
தகுதியில்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட அவர்களிடம் இந்தப் பண்டிதர் தானே வலிய வந்து
அவள் மகனுக்குக் கற்பிக்கிறேன் என்கிறார். அதற்கு
எந்தச் செலவும் செய்ய முடியாத அவர்களிடம் எல்லாச் செலவுகளையும் பெருந்தன்மையாக அவரே
ஏற்பதாகச் சொல்கிறார். ஆனால் ஒரே மகனை பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருக்க வேண்டும்
என்பது தான் அவளுக்கு மிகவும் கஷ்டமாகத் தோன்றுகிறது.
விஷ்ணுகுப்தருக்கு அந்தத் தாயின் மனநிலையைப்
புரிந்து கொள்ள முடிந்தது. சந்திரகுப்தனின் தாய்மாமனும் யோசித்து முடியவில்லை. அவர் அவர்களுக்கு
யோசனை செய்து முடிவைச் சொல்ல மாலை வரை நேரம் கொடுத்து விட்டுப் போனார். அவர் நாளை
அதிகாலையே பாடலிபுத்திரத்தை விட்டுப் போகவிருப்பதால் அவர்கள் இருவரும் சம்மதித்தால்
சந்திரகுப்தனை நாளை அதிகாலையிலேயே அழைத்துப் போக வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டுப்
போனார்.
பயணியர் விடுதி நோக்கிப் போகும் போது
அவர் மனம் பின்னோக்கிப் போனது. அவர் பாடலிபுத்திரத்தை விட்டுப் போகையில் அவருக்காக யோசிக்கவோ, கவலைப்படவோ
யாருமிருக்கவில்லை. இன்று எத்தனை வறுமையில் இருந்தாலும் சந்திரகுப்தனுக்கு அவனைப்
பிரிய மனமில்லாத தாயும், ஒரு தாய்மாமனுமாவது உறவென்று இருக்கிறார்கள்...
சந்திரகுப்தன் வீட்டில் அவன் தாயும் தாய்மாமனும் யோசித்துக்
கொண்டிருக்கையில் அவன் தன் மனதின் ஆழத்தில் தோன்றியதைத் தன் தாயிடம் சொன்னான். “அம்மா நான்
அவருடன் போகிறேன் அம்மா. எனக்கு நிறைய படிக்க வேண்டும். நிறைய தெரிந்து
கொள்ள வேண்டும். மாடுகளுடனும், பாடலிபுத்திரத்துடனும்
என் வாழ்க்கை கழிந்து போவது எனக்குப் பிடிக்கவில்லை அம்மா”
மூரா சகோதரரைப் பார்த்தாள். அவர் இன்னமும் குழப்பத்திலேயே இருந்ததால் தங்கையே என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும் என்று அமைதியாக இருந்தார். அவருக்கு மருமகனின் கனவுகள் பைத்தியக்காரத்தனமாகவும், நடவடிக்கைகள் யதார்த்தத்திற்குப் பொருத்தம் இல்லாததாகவும் எப்போதுமே தோன்றியிருக்கிறது. அதை தட்சசீலத்து அந்தணர் ஒரு பொருட்டாக நினைத்து அவர்கள் குலத்துக்கு விதிக்கப்பட்டு இருக்காத கல்வியைக் கற்பிப்பதாகச் சொன்னதை இன்னமும் நம்ப முடியவில்லை. அந்தணர்களே அதை அனுமதிக்க மாட்டார்களே, இவர் மிக வித்தியாசமாகவும், புரட்சிகரமான மனிதராகவும் தோன்றுகிறாரே என்றெல்லாம் அவருக்குத் தோன்றியது. அந்த அந்தணர் அவனுக்குக் கற்பிக்க ஏதாவது தட்சிணை அல்லது செலவுக்கு சிறிய தொகை கேட்டிருந்தாலும் அவர் யோசிக்காமல் வேண்டாமென்று சொல்லி இருப்பார். ஆனால் அந்த அந்தணர் பணம் எதுவும் கேட்காதபடியால் அவருக்கு ஆட்சேபணை தெரிவிக்க முடியவில்லை.
மூராவுக்கும் இன்றைய தினம் வரை மகனுடைய
கனவுகள் யதார்த்த நிலை அறியாத பிள்ளைப் பிராயத்தின் அதீதக் கற்பனையாகத் தோன்றியிருந்தது. ஆனால் அந்த
அந்தணர் மிகத் தெளிவான மனிதராகவும், உறுதியான மனிதராகவும்
தெரிந்தார். சந்திரகுப்தனிடம்
ஏதோ சிறப்பான ஒன்றை அவர் உணர்ந்ததால் தான் வந்து அப்படிச் சொல்லி இருக்கிறார். மற்றபடி
இரக்கத்தினாலோ, வேறு உள்நோக்கத்தினாலோ தங்களிடம் வரவில்லை என்று அந்தத் தாயின் உள்ளுணர்வு சொன்னது. என்னவானாலும் சரி, கண்டிப்பாக
இங்கேயே அவன் இருப்பதை விட சிறிதாவது மேலான நிலைக்கு அவனை உயர்த்துவார். அது போதும், அவனாவது
அவர்களைப் போல் இல்லாமல் நன்றாக இருக்கட்டும் என்று அந்தத் தாய் நினைத்தாள்.
அன்று மாலை விஷ்ணுகுப்தர்
சந்திரகுப்தனின் வீட்டுக்குப் போன போது தூரத்திலேயே அவரைப் பார்த்து விட்டு
ஓடி வந்த சந்திரகுப்தன் அவன் தாயும், தாய்மாமனும் அவருடன்
அவனை அனுப்பச் சம்மதித்து விட்டதை ஆனந்தம் பொங்கச் சொன்னான்.
மூரா தன் சம்மதத்தோடு தன் நன்றிகளையும்
தெரிவித்துக் கொண்டு கண்கலங்க அவனை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படியும் அவன் எதாவது
சிறு தவறுகள் செய்தாலும் பொறுத்துக் கொள்ளும்படியும் சொன்னாள். விஷ்ணுகுப்தருக்கு
அவருடைய தாய் நினைவு வந்தது. அவளும் இறப்பதற்கு முன்தினம் கோபாலனின் தாயிடம் தனக்கு ஏதாவது
ஆகி விட்டால் விஷ்ணுவைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டி கொண்டது நினைவுக்கு வந்தது. தாய் மனம்
என்றும் குழந்தைகளின் நலனிலேயே கருத்தாய் இருக்கிறது...
மறுநாள் காலை மூரா சந்திரகுப்தனை அழுது கொண்டே தான் வழியனுப்பினாள். சந்திரகுப்தனின்
தாய்மாமன் விழிகளும் ஈரமாக இருந்தன. சந்திரகுப்தனும்
அவர்களைப் பிரிகையில் கண்கலங்கினான் என்றாலும் சிறிது நேரத்திலேயே உற்சாகத்திற்கு மீண்டான். புதிய
அனுபவங்களுக்கு அவன் தயாராகி விட்டான்.
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
A new chapter begins in the life of Chandragupta, because of chanakya.
ReplyDeleteI think we will come to know the unknown facts of Chandragupta in depth by reading this novel
ReplyDeleteசந்திரகுப்தனுக்கு தன்னுடைய கனவு வாழ்க்கை ... நிஜமாகத் தொடங்கியிருக்கிறது...
ReplyDelete