சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 23, 2022

சாணக்கியன் 10

 

வர்களுடைய பயணவழியிலிருந்த ஒரு கிராமத்தில் தட்சசீலத்தின் பழைய மாணவன் ஒருவனை ஒரு மாலை நேரத்தில் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. ஒரு சிற்றரசின் மந்திரி குமாரனாகிய அவன் ஒரு நட்பு நாட்டின் இளவரசியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் போகும் வழியில் சில வீரர்களோடு அங்கு தங்கியிருந்தான்.

 

விஷ்ணுகுப்தரைப் பார்த்தவுடன்வணக்கம் ஆச்சாரியரே! என்னவொரு ஆச்சரியம்...” என்று சொல்லி அவர் காலில் விழுந்து ஆசிகள் பெற்றுக் கொண்டான்.

 

அவருக்கும் பயண வழியில் அவனைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. “வல்லபா. நானும் உன்னைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை...”

 

யாரிந்த சிறுவன் ஆச்சாரியரே?” என்று வல்லபன் கேட்கஎன் புதிய மாணவன் வல்லபாஎன்று விஷ்ணுகுப்தர் புன்னகையுடன் பதிலளித்தார்.  அவர் தன் பழைய மாணவனை சந்திரகுப்தனுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

 

நள்ளிரவு வரை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க சந்திரகுப்தன் அருகில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சந்திரகுப்தன் அது வரை விஷ்ணுகுப்தரைஅந்தணரேஎன்று அழைப்பதையே வழக்கமாக வைத்திருந்தான்.  வல்லபன் அவரை ஆச்சாரியரே என்று அழைப்பதைக் கேட்ட பிறகு தான், அவன் அழைக்கும் விதம் தவறென்பதை சந்திரகுப்தன் புரிந்து கொண்டான். வல்லபன் அவரிடம் காட்டிய மரியாதையின் அளவைப் பார்த்த பிறகு தான் அவன் தரும் மரியாதையும் போதாதென்பது அவனுக்குப் புரிந்தது.

 

வல்லபனின் சிற்றரசைப் பற்றியும் அக்கம்பக்கத்து பிரதேசங்களைப் பற்றியும் விஷ்ணுகுப்தர் விசாரித்துத் தற்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொண்டார். சந்திரகுப்தன் அவர் கேட்கும் கேள்விகளை மிக உன்னிப்பாகக் கவனித்தான். அவர் எதையெல்லாம் கேட்கிறார், கிடைக்கும் பதில்களில் எதைத் தொடர்ந்து மேலும் கேட்கிறார் எதையெல்லாம் அதிகம் கேட்காமல் விட்டு விடுகிறார் என்பதையெல்லாம் சந்திரகுப்தன் உற்றுக் கவனித்தான். அவர்கள் உறங்கச் செல்லும் வரை அவன் உறங்கவில்லை.

 

மறுநாள் கிளம்பிச் செல்வதற்கு முன் வல்லபன் விஷ்ணுகுப்தரும் சந்திரகுப்தனும் நெடுந்தூரம் வரை குதிரைகள் பூட்டிய பயணவண்டியில் செல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்து கொடுத்து விட்டுத் தான் போனான். இடையில் ஒரு நதி குறுக்கிட்டதால் தான் அவன் அதுவரையோடு மட்டும் ஏற்பாடு செய்ய முடிந்தது.  விஷ்ணுகுப்தர் மறுத்தும் அவன் அவர் மறுப்பை ஏற்கவில்லை. ”அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருக்கா விட்டால் நானே உங்களுடன் வந்திருப்பேன் ஆச்சாரியரே

 

தன் ஆச்சாரியரிடம் எல்லையில்லாத அன்புடனும், நன்றியுடனும் வல்லபன் இருந்ததை சந்திரகுப்தன் கவனித்தான். அதோடு  விஷ்ணுகுப்தரிடம் அவன் பேசியதை வைத்துப் பார்க்கையில் விஷ்ணுகுப்தருக்கு வல்லபனைப் போன்ற நிறைய மாணவர்கள் பல பகுதிகளில் இருப்பதும் தெரிய வந்தது. போகிற போது வல்லபன் சந்திரகுப்தனிடம் தனியாக அழைத்துச் சொன்னான். “நீ மிகுந்த அதிர்ஷ்டசாலி சந்திரகுப்தா. நாங்கள் எல்லாம் பலராகச் சேர்ந்து தான் அவரிடம் கற்றோம். தட்சசீலம் சென்றடையும் வரை நீ அவரிடம் தனியாகப் படிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய்.  ஆச்சாரியர் ஞானப் பொக்கிஷம். அவரிடம் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவும் கற்றுக் கொள்....”

 

அதை வல்லபன் சந்திரகுப்தனிடம் சொல்ல வேண்டியிருக்கவில்லை.  அவன் பயணத்தை ஆரம்பித்த சிலநாட்களிலேயே தன் அதிர்ஷ்டத்தை உணர்ந்து விட்டான். அறிந்து கொள்ள இத்தனை இருக்கிறதா என்ற பிரமிப்பும், விஷ்ணுகுப்தர் அறியாதது எதுவும் கிடையாதா என்ற கூடுதல் பிரமிப்பும் அவனுக்குள் அடிக்கடி எழுந்து கொண்டே இருந்தது. 

 

ஒவ்வொரு இடம் செல்கையிலும் அவர் அவனுக்கு அந்த இடம் சார்ந்த விஷயங்களைச் சொன்னார். அந்த இடத்தின் வரலாறு, வித்தியாசமான பழக்க வழக்கங்கள் என அவருக்குச் சொல்ல ஏதோ ஒன்று இருந்தது. அவருக்குத் தெரிந்தது எதுவுமே மேற்போக்கானதாக இருக்கவில்லை. அவர் சொன்னதில் அவன் எதாவது கேள்விகள் கேட்டால் தெளிவாகப் பதில் சொல்லுமளவு அவருக்குக் கூடுதல் விஷயங்கள் தெரிந்திருந்தன.

 

வல்லபன் குதிரைகள் பூட்டிய பயண வண்டியை அவர்களுக்காக ஏற்பாடு செய்தது அவர்களின் பயணத்தை வேகப்படுத்தியது. சந்திரகுப்தனும் வல்லபனைப் போலவே அவரை ஆச்சாரியரே என்று அழைக்க ஆரம்பித்தான். அவரிடமிருந்து அவன் நிறைய கற்றான்.

 

அவர் ஆரம்பத்திலேயே அவனிடம் ஒரு நாள் சொல்லியிருந்தார். “சந்திரகுப்தா! கற்க வேண்டியதை எப்போதும் சரியாகவும் முழுமையாகவும் நீ கற்க வேண்டும். அப்படிக் கற்றால் தான் உன் கல்வி உனக்குப் பயன்படுவதாக இருக்கும். அரைகுறையாய் கற்பது, உனக்கு எல்லாம்  தெரிந்திருக்கிறது என்ற தவறான கர்வத்தை ஏற்படுத்தி விடும். உன் கல்வியில் உள்ள குறைபாட்டால் நீ கற்ற கல்வி உனக்கு முக்கியமான நேரத்தில் சரிவரப் பயன்படாமல் போய்விடலாம்...”

 

இன்னொரு நாள் சொன்னார். “முழு கவனத்தோடு கற்றால் எதையும் சீக்கிரமாகவே கற்றுக் கொண்டு விடலாம்.  அப்படிக் கற்பது தான் தலைவனாக விரும்புவனுக்கு முக்கியத் தேவை. யாருக்குமே, கற்றிருப்பதை விட கற்க வேண்டியது என்றுமே அதிகமாகத் தான் இருக்கிறது.  வாழ்க்கையோ மிகவும் குறுகியது. முக்கியமானதைக் கற்று முடிக்கவே காலம் நமக்குப் போதாது. அதனால் காலத்தை என்றும் வீணடிப்பது ஒருவன் தன் எதிர்காலச் சிறப்புகளைக் குறைத்துக் கொள்வது போன்றது...”

 

அவர் சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பொருள் பொதிந்து இருப்பதைக் கண்டு அவன் வியப்பான். வீணான வார்த்தைகள் என்பதே அவரிடம் கிடையாது. வல்லபன் ஆச்சாரியரை ஞானப் பொக்கிஷம் என்று அழைத்ததில் மிகைப்படுத்தலே இல்லை என்று சந்திரகுப்தனுக்குத் தோன்றியது.

 

போகுமிடங்களின் வரலாறுகளையும் மனிதர்களையும் பற்றிச் சொல்லும் போது “நீ அரசனாகும் லட்சியம் கொண்டவன். உனக்கு இது பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு தான் ஆரம்பிப்பார்.

 

ஒரு நாள் சந்திரகுப்தனுக்கு அவனை விட அவர் எல்லா விதங்களிலும் அரசனாக அதிகத் தகுதி படைத்தவரென்று தோன்றியது. அதை அவன் வெளிப்படையாகவே அவரிடம் தெரிவித்தான். அவர் சிறு புன்னகையுடன் சொன்னார். “உன்னிடம் இருக்கும் மிக முக்கியமான ஒன்று என்னிடம் இல்லை. அது எனக்கு ஒரு குறைபாடு தான்.”

 

சந்திரகுப்தன் திகைத்தான். அவனுக்குத் தெரிந்த வரையில் அவனிடமிருந்து அவரிடமில்லாத சிறப்பு அம்சம் எதுவுமில்லை... “அது என்ன ஆச்சாரியரே?” என்று அவன் குழப்பத்தோடு கேட்டான்.

 

“உன்னிடம் நீ அரசனாக வேண்டும் என்ற பெருங்கனவு ஒன்றிருக்கிறது. அது என்னிடமில்லை. “ என்று விஷ்ணுகுப்தர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

 

“அப்படியானால் உங்களிடம் இருக்கும் பெருங்கனவு என்ன ஆச்சாரியரே?” என்று ஆவலுடன் சந்திரகுப்தன் கேட்டான்.

 

இது அவன் ஏற்கெனவே அவரிடம் கேட்டிருந்திருக்க வேண்டிய கேள்வி. ஏனென்றால் அவர் முன்பே ஒருமுறை சொல்லி இருக்கிறார். “ஒருவனிடம் நெருப்பாக ஒரு கனவு அவனுக்குள்ளே அணையாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு கனவு இருந்தால் எவனும் வீணாய் போக மாட்டான். அவன் வீணாய்ப் போகாமல் அவன் கனவு அவனைப் பார்த்துக் கொள்ளும்.” மற்றவர்களுக்குச் சொல்கின்ற இவரும் ஒரு பெருங்கனவு இல்லாமல் இருக்க மாட்டார்.

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “சிறு சிறு இராஜ்ஜியங்களாக, சிற்றரசுகளாகப் பிரிந்து கிடக்கும் என் பாரதம் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்ட பாரதமே என் கனவு சந்திரகுப்தா. மொழிகளால், ஜாதிகளால், வர்ணங்களால், குலங்களால், பிரதேசங்களால் நாம் வேறுபட்டாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் சந்திரகுப்தா. இப்போது இந்த வித்தியாசங்களால் பிரிந்து அந்த வித்தியாசத்தையே தங்கள் தனிப்பட்ட அடையாளமாகவும், பெருமையாகவும் எண்ணி குறுகிய கண்ணோட்டத்திலேயே அவரவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி இல்லாமல் ஒன்றுபடுத்தும் இந்தப் புண்ணிய பூமியின் கலாச்சாரத்தை ஏற்று ஒன்றுபட்ட பாரதமாக முன் வந்தால் இந்த தேசத்தின் சுபிட்சமும், உயர்வும் என்றும் குறையாது. அந்த நிலையில் என் பாரத தேசத்தை நான் பார்க்க வேண்டுமென்பதே என் பெருங்கனவு சந்திரகுப்தா”

 

சொன்ன போது அவர் கண்களில் பேரொளி தெரிந்தது. முகத்தில் மென்மை தெரிந்தது. அவன் தன்னை அரசனாக உயர்த்திக் கொள்ள ஆசைப்பட்டது போல அவர் விஷ்ணுகுப்தர் என்ற தனிப்பட்ட மனிதனுக்கென்ற ஆசை எதையும் வைத்துக் கொண்டிருக்காததை எண்ணி அவன் பிரமித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


4 comments:

  1. Great characterization. Even tiny bits of information is taken care of. Super.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிகச் சரியானது. நன்று

      Delete
  2. நாங்களும் பிரமிக்கிறோம்..

    ReplyDelete
  3. விஸ்ணுகுப்தர் ஒரு பெரிய ஞானப் பொக்கிஷம்...இதன்மூலம் நாமும் நிறைய கற்போம்...

    ReplyDelete