மவுனத்தின் முடிவில் நாகராஜ் சொன்னான். “நேரில்
வாங்க. பேசுவோம்”
நரேந்திரனுக்குத் தன் காதுகளை நம்ப
முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவனாகக் கேட்டான். “எப்ப சார்
வரட்டும்?”
“இப்பவே
வாங்க” என்றான் நாகராஜ்.
நரேந்திரன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரை. உடனடியாக
அவன் கிளம்பினான்.
நரேந்திரன் நாகராஜ் வீட்டு மெயின் கேட்டைத் திறந்து உள்ளே
வருவதைப் பார்த்த வேலாயுதத்திற்குப் பகீரென்றது. நரேந்திரன்
தன் சிந்தனைகளிலேயே மூழ்கியவனாக இருந்ததால் அவன் அவரைக் கவனிக்கவில்லை. அவர் அவனைக்
கூர்ந்து பார்த்து விட்டு மகனுக்குத் தெரிவிக்க அவசரமாக உள்ளே ஓடினார்.
கல்யாண் மணியைச் சந்திக்கக் கிளம்பத்
தயாராகிக் கொண்டிருந்தான். தந்தை முகத்தில் தெரிந்த கலவரம் அவனைப் பயமுறுத்தியது. மேகலா பக்கத்து அறையில் இருந்ததால் அவளுக்குக் கேட்காமலிருக்கும்
பொருட்டு கல்யாண் தாழ்ந்த குரலில் அவரைக் கேட்டான். “என்னப்பா?”
“அந்த ரா
அதிகாரி இப்ப பக்கத்து வீட்டுக்குள்ளே போயிருக்கான்”
கல்யாண் திகைத்தான். வீட்டில்
திருட்டுப் போயிருந்ததைக் கண்டுபிடித்து விட்டு அதற்காக ரா அதிகாரியை நாகராஜ் கூப்பிட்டு
விட்டானோ? சந்தேகத்தின் பேரில் நரேந்திரன் அடுத்ததாய் இங்கும் வரக்கூடுமோ
என்ற யோசனைகள் தான் ஆரம்பத்தில் அவன் மனதில் எழுந்தன. ஆனால் பிறகு
யோசிக்கையில் அது அபத்தமாகத் தோன்றியது. போலீஸைக்
கூப்பிடாமல் பழைய வழக்கை விசாரிக்க வந்திருக்கும் சிறப்பு அதிகாரியான நரேந்திரனை இதற்கு
ஏன் நாகராஜ் கூப்பிடப் போகிறான்? அவர்கள் இருவரும்
எந்த வகையில் தொடர்பு வைத்திருந்தாலும் அது ஆபத்தாகவே தோன்றியது. ஆழ்ந்து
சிந்தித்து விட்டு நரேந்திரன் பக்கத்து வீட்டிலிருந்து போன பிறகு இங்கிருந்து மணி வீட்டுக்குப்
போவதே நல்லது என்ற முடிவுக்கு கல்யாண் வந்தான். ஒருவேளை
ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டிக் கொண்டு
நரேந்திரன் இங்கே வந்தாலும் அவனைச் சந்தித்துப் பேசி அவனை அனுப்பியதற்குப் பிறகு
மணி வீட்டுக்குச் செல்வதே நல்லதென்று அவன் அறிவு எச்சரித்தது. அவன் தன்
முடிவைத் தந்தையிடம் சொன்னான்.
வேலாயுதம் பரபரப்புடன் சொன்னார். “அதுவும்
சரி தான். நான் வெளியே ஏதாவது செய்துகிட்டே பக்கத்து வீட்டைக் கண்காணிக்கிறேன். அந்த ரா
அதிகாரி என்ன பண்றான்னு பார்ப்போம்...”
நரேந்திரன் உள்ளே சென்ற போது நாகராஜ் முந்தைய சந்திப்பின்
போது அமர்ந்திருந்த நாற்காலியிலேயே
அமைதியாக அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் நரேந்திரன்
சென்ற முறை அமர்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. சுதர்ஷன்
சுவரில் சாய்ந்தபடியே நின்றிருந்தான். காலி நாற்காலியைப்
பார்த்துக் கைகாட்டிய நாகராஜ், நரேந்திரன்
அமர்ந்தபின் அமைதியாகச் சொன்னான். “எல்லாத்தையும் ஆரம்பத்திலிருந்து சொல்லுங்க...”
எல்லாவற்றையும் அவன் அறிந்திருப்பான்
என்றே தோன்றினாலும் அவன் அப்படிச் சொன்னது நரேந்திரனுக்குச் சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனாலும்
அதை வெளிக்காட்டாமல் அவன் நடந்திருப்பதைச் சுருக்கமாகச் சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட நாகராஜ்
கேட்டான். “அவங்க அந்த இடத்தைக் கண்காணிக்க வரலை, கண்டுபிடிக்கப்
போறதில்லைன்னு ஒரு நிலைமை தொடர்ந்தா அந்த ரெண்டு பேர் கதையை எப்படி முடிக்கறதா இருந்தீங்க?”
“எப்படியாவது
தண்டனை வாங்கித் தரணும்னு நினைச்சேன்.... ஆனா எப்படிங்கறதை
நான் தீர்மானிச்சிருக்கலை” நரேந்திரன் உண்மையைச் சொன்னான்.
“அவங்க செஞ்சிருக்கற
தவறுக்கு மரண தண்டனை தான் சரியாய் இருக்கும். ஆனால் அந்த
அரசியல்வாதி சட்டப்படி அது நடக்க விட
மாட்டாரு. நீங்க தனிப்பட்ட முறையில அவங்களைக் கொல்றது தான் நீதி வழங்கின
மாதிரி இருக்கும். அவங்கள உயிரோட விட்டா அவங்க எப்ப வேணும்னாலும் உங்கள காட்டிக்
கொடுத்துடற அபாயத்தையும் தவிர்க்கிற மாதிரி இருக்கும். நீங்க அதுக்குத்
தயாராய் இருந்தீங்களா?”
நரேந்திரன் சோகமாகப் புன்னகைத்தான். “எத்தனையோ
தடவை நானும் இதே வழில யோசிச்சிருக்கேன். அவங்களக் கடத்திக்
கொண்டு போய் உண்மையை
வரவழைச்ச விதம் சட்டப்படி தவறுன்னாலும், உண்மையை வரவழைக்க
எனக்கு வேற வழியிருக்கலைங்கற நியாயம் என் பக்கம் இருந்துச்சு. ஆனா உயிரை
எடுக்கறதுங்கறது அவங்க மட்டத்துக்கு என்னையும் இறக்கிட்ட மாதிரியாயிடும் இல்லையா. அதனால அதுக்கு
மட்டும் என் மனசாட்சி ஒத்துக்கல...”
நாகராஜ் சிறிது நேரம் அவனையே கூர்ந்து
பார்த்தான். அவன் முகபாவனையை வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்பது தெரியவில்லை. முடிவில்
சொன்னான். “சரி நான் சொல்லற மாதிரி செய்யிங்க...
மீதியை நான் பார்த்துக்கறேன்....”
ஒரு மணி நேரத்தில் நரேந்திரன் வெளியே வர வேலாயுதம் அவன் முகபாவனை, நடை வைத்து
ஏதாவது தெரிகிறதா என்பதை ஊகிக்க முயன்றார். அவன் அவர்
பக்கம் திரும்பவேயில்லை.... வேகமாக கார் ஏறிப் போய் விட்டான். அவர் மகனிடம் நரேந்திரன் போய் விட்ட தகவலைச் சொல்ல ஓடினார். கல்யாண்
சீக்கிரம் போய் மணியிடமிருந்து விசேஷ நாகரத்தினத்தை வாங்கி விட்டு வந்து விடட்டும்....
நேற்றிரவு ஒற்றை வறண்ட சப்பாத்திக்காகக் காத்திருந்த மதன்லாலும், சஞ்சய்
ஷர்மாவும் ஏமாந்து போனார்கள். இரவு பத்து மணியளவில் சஞ்சய் சொன்னான். “தடியன்
இத்தனை நாள்ல இப்படி செஞ்சதில்லை. கொண்டு வர்றது ஒரு சப்பாத்தி, அதுவும்
வறண்ட சப்பாத்தின்னாலும் அந்தந்த நேரத்துக்கு கொண்டு வந்துட்டு இருந்தான். இன்னைக்கு
என்ன ஆச்சுன்னே தெரியலை.... வர்ற வழியில அவன் எதாவது அடிபட்டு செத்து கித்துப் போயிருப்பானா
அண்ணா?”
மதன்லால் பசி எப்படியெல்லாம் மனிதனைத்
தரம் தாழ்த்தி விடுகிறது என்று நினைத்தான். இல்லா
விட்டால் அந்த வறண்ட சப்பாத்தி வரவில்லை என்று இருவரும் இப்படித் துடித்துப் போவார்களா?
பசி வயிற்றைக் கிள்ளியது….. உடல் ஒவ்வொரு
கணமும் வலுவிழந்து கொண்டே போகிறது. இதே ரீதியில் போனால் சில காலம்
கழித்து சங்கிலியைக் கழற்றி விட்டாலும் நடந்து வெளியே போகும் சக்தி கூட மிஞ்சாது.
“தண்ணியைக் குடிச்சுட்டு படுப்போம்…. சனியன் நாளைக்காவது
காலைல வந்து சேர்வான். கேட்டா எதாவது ஏடாகூடமாய் சொல்வான்….”
என்று சஞ்சயிடம் சொன்னாலும் ஒருவேளை வழியில் அப்படி விபத்தில் தடியன்
இறந்து போயிருந்தால்…. என்ற சந்தேகம் பயமுறுத்தியது.
“தண்ணி ரொம்பவே ஜில்லுன்னு இருக்குண்ணா?” பரிதாபமாக சஞ்சய்
சொன்னான்.
“இவன் ஒருத்தன் போதும் எல்லா நம்பிக்கையையும் ஒருத்தன் இழக்கறதுக்கு…”
என்று மனதில் விரக்தியுடன் நினைத்துக் கொண்ட அவன் அப்படியே உறங்கிப்
போனான். உடலின் பலவீனம் கடுங்குளிரிலும் எப்படியோ இருவரையும்
உறங்க வைத்தது.
காலை ஐந்து மணிக்கு சஞ்சய் ஷர்மா “அண்ணா….” என்றழைக்கும் சத்தம் கேட்டு மதன்லால் கண்விழித்தான். “என்ன?”
“எனக்கு ஜன்னி வந்துடும் போல இருக்குண்ணா? அவ்ளோ குளிருது….
பசியும் தாங்க முடியல….”
மதன்லாலும் அதைக் கேட்ட பிறகு அப்படியே உணர ஆரம்பித்தான். இந்த அதிகாலையில் இந்த இம்சை
அரசன் எழுப்பாமல் இருந்திருந்தால் கொஞ்சம் அதிகம் உறங்கி இருந்திருக்கலாம்…..
காலையாவது தடியன் வராமல் இருக்க மாட்டான்….
“சஞ்சய் சும்மா புலம்பாம இரு…. கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும்.
குளிரும் குறைஞ்சுடும்…. தடியனும் வந்துடுவான்….”
“தடியன் வருவான்னு நீங்க நிஜமாகவே நம்பறீங்களாண்ணா?”
மதன்லால் இங்கிருந்து தப்பிக்கும் வரை சஞ்சயைப் பகைத்துக் கொள்ள
விரும்பாததால் பொறுமை காத்து
“வருவான்னு தான் நினைக்கிறேன்….” என்று சொன்னான்.
காலம் நகர்ந்து கொண்டே போனது. தடியன் வந்தபாடில்லை… ஸ்ஸ்ஸ் சத்தம் திடீரென்று கேட்டது. ஒரு பாம்பு மதன்லால் அறைக்குள் நுழைய
மதன்லால் அலறினான். “சஞ்சய் பாம்பு…..”
“ஐயோ… என்னண்ணா சொல்றீங்க… இரும்புச்
சங்கிலியால அடிக்கப் பாருங்கண்ணா….. ஐயோ இங்கேயும் ஒரு பாம்புண்ணா…...”
வரிசையாக பாம்புகள் சில இருவர் அறையிலும் நுழைய இருவரும் பீதியில்
உச்சஸ்தாயியில் அலற ஆரம்பித்தார்கள்….
Super.
ReplyDeleteஇருவர்களும் கொல்லப்படுவார்கள்... அதுவும் நாகராஜின் பாம்புகள் மூலம்... என்பதை எதிர்பார்க்கவே இல்லை.... எதிரிகள் பீதியும் அடைவார்கள்...அதே நேரத்தில் குழம்பியும் போவார்கள்...
ReplyDeleteஇவ்வளவு சஸ்பென்ஸ் வைத்தது ஏன்? என்பது இப்போது தான் புரிகிறது...அருமையான திருப்பம்....
மணியின் நிலை என்னாயிற்றோ?
ஆமாம். நன்று சொன்னீர்கள் நீங்கள் நினைத்த மாதிரியே நானும் நினைத்தேன்.
Delete