சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, August 12, 2020

அமானுஷ்ய மணி ஓசைகளும் மாயையின் லீலைகளும்!


ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைச் சந்திக்க வருபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அதிசயம் காத்திருக்கும். ஒரு முறை நேர்ந்த அனுபவம் மறுமுறையும் கிடைப்பது மிகவும் அபூர்வம். அடுத்த முறை கிடைப்பது முற்றிலும் புதிதான அதிசய அனுபவமாக இருக்கும். அப்படிச் சிலருக்குக் கிடைத்த அனுபவம் அமானுஷ்ய மணி ஓசைகளைக் கேட்க நேர்ந்ததாக இருந்தது.

பேசிக்கொண்டிருக்கையில் நடுவே, வந்தவர் பேச்சை நிறுத்தி விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கச் சைகை காட்டி விட்டு உன்னிப்பாய் கவனித்துக் கேட்பதுண்டு. தொலைவிலிருந்து ஏதாவது இனிமையான லேசான மணியோசை கேட்க ஆரம்பித்து அந்த ஓசை அந்த அறையை நோக்கி அதிகரித்துக் கொண்டே வருவதைப் பலரும் கேட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பேச்சின் இடையே அப்படி அமைதியாக இருக்கச் சொல்லிச் சைகை காட்டி விட்டு அப்படிக் கேட்கும் மணியோசையை சுட்டிக் காட்டுவதுண்டு.

இந்த நிகழ்வுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கின்றன என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது நாற்பது, ஐம்பது ஆண்டுகள் கழிந்து 1930களில் தான் டேப் ரிக்கார்டர் எனப்படும் ஒலிப்பதிவுக் கருவி ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அதற்கும் முன்பான காலக்கட்டத்தில் முன்பே ஒலிப்பதிவு செய்து ஒலிக்கச் செய்திருக்கவும் முடியாது. அதே போல் வெளியே ஆட்களை ஏற்பாடு செய்து ஒலிக்கச் செய்திருக்கவும் வாய்ப்பில்லை என்பதற்கு அந்த மணி ஓசைகள் தொலைவில் இருந்து அருகே வரை வந்து கேட்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அறைக்குள்ளேயே விட்டத்திலும், அவர்களைச் சுற்றிலும் நகர்ந்தபடி மணி ஓசை கேட்கிறது என்பதால் மனிதர்களால் ஒலிக்கப்பட வைத்திருக்க  வழியில்லை என்பதை உணர்ந்து பலரும் வியந்திருக்கிறார்கள். சில நேரங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மரத்தில் கை வைத்தும் அந்த இனிமையான மணியோசையைப் பலரைக் கேட்க வைத்திருக்கிறார். சில சமயங்களில் சுவரில் கை வைத்தும், சில சமயங்களில் சிலர் தலையில் கை வைத்தும் உள்ளே அந்த மணியோசையைக் கேட்க வைத்து அசத்தியிருக்கிறார்.

ஒரு முறை சிம்லாவில் சின்னெட் என்பவரின் வீட்டில் அவர்கள் இருக்கையில் நட்சத்திரங்கள் மின்னிய இரவு நேரத்தில் திறந்த வெளியில் தொலைவில் இருந்து அந்தச் சிறுசிறு மணிகளின் ஓசையை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வரவழைத்ததை கர்னல் ஓல்காட்டும், சின்னெட் அவர்களும், வேறு சில அதிகாரிகளும் கேட்டு வியந்திருக்கிறார்கள். திகைத்து நின்ற ஒரு ஆங்கிலோ இந்தியரின் தலைக்குள்ளிருந்தும், இன்னொரு அதிகாரியின் கோட்டுப் பாக்கெட்டிலிருந்தும் கூட அவர் அந்த மணி ஓசையை வர வைத்திருக்கிறார்.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது என்று கர்னல் ஓல்காட் கேட்ட போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பதில் சொல்வது சிரமம் என்று சொல்ல அதை கர்னல் ஓல்காட் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அதற்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஓல்காட்டிடம்நீங்கள் விசில் அடிப்பீர்களா?” என்று கேட்டார்.

கர்னல் ஓல்காட் தனக்கு நன்றாக விசில் அடிக்கத் தெரியும் என்று சொன்னதுடன் விசில் அடித்தும் காண்பித்தார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார்எப்படி விசில் அடிக்கிறீர்கள் என்று விளக்குங்களேன்என்று சொல்ல அதை விளக்கத் தெரியாமல் கர்னல் ஓல்காட் விழித்தார். இப்படி உதட்டைக் குவித்து, இப்படி சத்தத்தை வரவழைத்தேன் என்று விளக்கி அவரால் அப்படிப் புரிய வைக்க முடியாதது போலவே சில அற்புத நிகழ்வுகளைச் செய்ய முடியும் ஆனால் அவற்றை விளக்க முடியாது என்பது ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் வாதமாக இருந்தது.

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் ஒரு அழகான பறவையை வளர்த்து வந்தார்கள். ஜென்னி என்று அவர்கள் பெயரிட்ட அந்தப் பறவையும், அதன் துணைப் பறவையும் எங்கிங்கிருந்தோ இலைகளையும், சருகுகளையும், சிறு குச்சிகளையும் கொண்டு வந்து அழகான கூடு ஒன்றை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கட்டின. அது கட்டி முடித்தவுடன் ஜென்னி தினமும் அந்தக் கூட்டின் மேலே இருந்து அடைகாக்க ஆரம்பித்தது. அது முட்டை இட்டிருக்கிறது என்று இருவரும் அனுமானித்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் காலம் சிறிது கடந்த பின்னும் குஞ்சு பொரிக்காமல் இருக்கவே இருவருக்கும் சந்தேகம் வந்தது. இரு பறவைகளும் இல்லாத நேரத்தில் இருவரும் கூட்டினுள் எட்டிப் பார்த்த போது கூடு காலியாக இருந்தது.

கர்னல் ஓல்காட் கேட்டார். “உள்ளே முட்டை எதுவும் இல்லையே பின் ஏன் ஜென்னி அடைகாத்து வந்தது

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மென்மையாகச் சொன்னார். “மனிதர்களைப் போலவே அதுவும் ஏதோ மாயையில் இருந்திருக்கிறது போலும்!”

ஆன்மிகப் பாதையில் பயணிக்கும் யாருமே மாயையின் லீலைகளைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. எத்தனை மனிதர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாகப் பாவித்து அதிலேயே தங்கி தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியைக் கழித்து விடுகிறார்கள். கற்பனைகளிலும், பிரமைகளிலும் தங்கிக் கழியும் காலங்கள் எத்தனை எத்தனை!

ஒரு நாள் அந்தஜென்னிபறவை இறந்து போனது. அது கடைசியில் மூச்சு விட முடியாமல் போராடிய தருணத்தில் அதை எடுத்து தடவிக் கொடுத்து தன் சக்திகளைக் குவித்து அதில் பிரயோகித்து அதை உயிரூட்ட ப்ளாவட்ஸ்கி அம்மையார் நிறையவே முயற்சித்தார். ஆனால் எத்தனையோ சக்திகள் வைத்திருந்தாலும் அந்தச் சிறிய பறவைக்கு உயிர் கொடுக்கும் அவர் முயற்சி வெற்றி பெறவில்லை. அது இறந்த பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தப் பறவையை அணைத்துக் கொண்டு அழுதது கல்லையும் கரைக்கும்படியாக இருந்தது.  அந்தத் தருணத்தில் மெல்லிய இனிய மணியோசை அவர்களைச் சுற்றிக் கேட்க ஆரம்பித்தது. அது அந்தப் பறவை விடைபெற்று அனுப்பிய ஆறுதல் செய்தியா, இல்லை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதற்காக எழுப்பிய இரங்கல் ஒலியா என்பது கர்னல் ஓல்காட்டுக்குத் தெரியவில்லை. எத்தனையோ மரணங்களைத் தினமும் பார்த்து வாழும் மனிதன் தனக்கு நெருங்கிய உயிர்கள் பிரியும் போது மட்டும் மனமுடைந்து துக்கத்தில் ஆழ்வது மாயையின் நித்திய அதிசயம் தான். அதற்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போன்ற ஆன்மிக அறிஞர்களும் தப்ப முடிவதில்லை என்பது இரட்டை ஆச்சரியம்.

படைத்தவனின் சக்தியை எடுத்துக் கொண்டு மிகவும் நேசித்த அந்தப் பறவையை அவரால் காப்பாற்ற முடியா விட்டாலும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பழையபடி தன் அற்புதங்களைத் தொடர்ந்தார். ஒருநாள் ஒரு வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு புட்டி மசி அவர் கை தவறி அவருடைய முன்புற ஆடையில் கொட்டி வழிந்து அந்த உடை பாழாகி விட்டது. வாயிற்கு வந்த வார்த்தைகளால் கடுமையாகத் திட்டிக் கொண்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பின் சமாதானமாகி இது சரி செய்ய முடியாதது அல்ல என்று சொல்லியபடியே அவருடைய அறையை நோக்கிச் சென்றார். போனவர் கதவருகே நின்று கொண்டு இரு கைகளாலும் ஏதோ சைகைகள் செய்வதை கர்னல் ஓல்காட் கவனித்தார்.

பின் உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் திரும்பி வந்த போது அவர் புதிய பழுப்பு நிற ஆடையில் இருந்தார். பழைய ஆடையோ, மசியின் தடயமோ இருக்கவில்லை. கர்னல் ஓல்காட்டின் திகைப்பிற்கு அளவேயில்லை.  ஒருசில வினாடிகள் கூடக் கழியவில்லை, இந்த அம்மையார் பழைய உடையைக் கழற்றியதும் தெரியவில்லை, வேறு உடையை எடுத்ததும் தெரியவில்லை.  எப்படி இந்த அதிசயம் நடந்தது என்பது அவருக்குப் புரியவில்லை. அதற்குப் பின்னரும் பல காலம் அம்மையாரின் ஆடைகளை கூர்ந்து கவனித்தும் அந்தப் பழைய வெண்ணிற ஆடையை அவர் பார்க்கவேயில்லை. பின் அடிக்கடி அவர் அணிய ஆரம்பித்த இந்தப் புதிய பழுப்பு நிற ஆடையின் நிறம் மங்கவுமில்லை. இதுவும் ஒரு மாயையோ?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 23.7.2019





2 comments:

  1. அம்மையாரின் அனைத்து அற்புதங்களும் அருமை....

    ReplyDelete