சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 27, 2020

இல்லுமினாட்டி 64



சிந்துவும் பேட்டி எடுக்க மறுபடி உதயின் அலுவலகத்திற்கு வந்த போது கண்ணியமாகவும் அழகாகவும் ஒப்பனை செய்து வந்திருந்தாள். அவளைப் பார்த்த உதய்க்குத் தன் பார்வையைத் திருப்பிக் கொள்வது எளிதாக இருக்கவில்லை. அவள் அவன் கூடுதலாய் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்ததைக் கவனித்து, அவனைப் பார்த்துச் சிறிது மெய்மறந்தது போலவும் பின் சுதாரித்துக் கொண்டது போலவும் காட்டிக் கொண்டாள். அவள் முகத்தில் சிறிதாய் வெட்கம் படர்ந்தது. அவனுக்கோ அவள் என்ன செய்தாலும் அது பேரழகாய்த் தெரிந்தது.

உதய் அவளிடம் சில தாள்களை நீட்டினான். அவற்றில் அவளுடைய கேள்விகளும் அவன் பதில்களும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருந்தன. அவளுடைய கேள்விகளுக்கான பதில் சில இடங்களில் இரத்தினச் சுருக்கமாகவும், தேவைப்பட்ட சில இடங்களில் விளக்கமாகவும் இருந்தன. அரசியல், அவன் தொகுதி, பாராளுமன்ற அனுபவங்கள், குடும்பம் என எல்லாவற்றிலும் அவன் பதில்களில் எந்தக் குறையும் இருக்கவில்லை. குடும்பம் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லி இருந்தான். அவன் தந்தையின் எளிமை, தாயின் பாசமும், வெகுளித்தனமும், தம்பியின் அறிவும் அடக்கமும் பற்றி எல்லாம் சொல்லி இது போன்ற ஒரு குடும்பம் தான் அவனுடைய பேரதிர்ஷ்டம் என்று நினைப்பதாகவும் சொல்லி இருந்தான்.

அவள் நிதானமாகப் படித்தாள். அவனைப் பார்ப்பதை விட அது சுலபமாக இருந்தது. அவனுக்கு அவள் படிப்பதைப் பார்ப்பதே இனிமையாக இருந்தது.

கேள்வி பதிலில்உங்கள் திருமணம் எப்போது?” என்று கேட்டிருந்ததற்கு அவன்கூடிய விரைவில்…” என்று இரண்டே சொற்களில் சொல்லி இருந்தான்.  

அவள் நிமிர்ந்து மெல்லக் கேட்டாள். “திருமணம் கூடிய விரைவில் என்று சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?”

அவன் புன்னகையுடன் சொன்னான். “ஒரு பெண்ணை சமீபத்தில் பார்த்தேன். பிடித்திருந்தது. ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை…”

அவள் மனதில் ஏற்கெனவே வேறு யாராவது இருந்தால்…?” என்று சிந்து குறும்பாகக் கேட்டாள்.

அவன் சிரித்தான். “மனமெல்லாம் உடைந்து போக மாட்டேன். அம்மாவிடம் சீக்கிரம் யாராவது ஒரு பெண்ணைப் பார். உனக்கு நன்றாகப் பிடித்திருந்து எனக்கு ஓரளவு பிடித்திருந்தால் கூட .கே என்று சொல்லி விடலாம் என்று இருக்கிறேன். ஏனென்றால் நான் காத்திருக்கிறேன் என்றாலும் என் அம்மா காத்திருக்கத் தயாரில்லை….”

அவள் அந்தப் பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கு அவள் மேல் இருந்த ஈர்ப்பு உண்மையாக இருந்தாலும் சினிமாத்தனமான சோகத்தில் ஈடுபடவெல்லாம் அவன் தயாராய் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ’என்ன இருந்தாலும் அரசியல்வாதியல்லவா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவளும் சிரித்தாள். “உங்கள் ப்ராக்டிகல் அப்ரோச் எனக்கு பிடித்திருக்கிறது. அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்டு விட வேண்டியது தானே.”

அவன் சின்னத் தயக்கத்துடன் சொன்னான். ”புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் பெண்ணிடம் திடீரென்று இந்த அளவு நெருக்கமான கேள்வியைக் கேட்பது சரி தானா என்றும் தோன்றுகிறது

சிந்து சொன்னாள். “நீங்கள் ஒன்றும் அந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்யவில்லையே. கட்டாயமும் படுத்தவில்லை. அதனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் தப்பேயில்லை

உதய் சின்ன வெட்கத்துடன், வேகமாய் அடிக்க ஆரம்பித்த இதயத்துடிப்புடனும் கேட்டான். “சரி உன் மனதில் என்ன இருக்கிறது சிந்து?”

அவளுக்குப் புரிய சிறிது நேரமானது போல் காட்டிக் கொண்டாள். பின் நம்ப முடியாத அதிர்ச்சி போல் காட்டிக் கொண்டாள். பின் திகைப்பு, தயக்கம், வெட்கம் என்ற உணர்ச்சிகளை வரிசையாகக் காட்டினாள். பின் வாயடைத்துப் போனது போல் மௌனமாக இருந்தாள்.

நான் தப்பாய் எதுவும் கேட்டு விடவில்லையேஎன்று உதய் கேட்டான்.

சிந்து ஒரு நிமிட அமைதிக்குப் பின் சொன்னாள். “நீங்கள் தப்பாய் கேட்கவில்லை. நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு தான்…..”

சரி என்ன சொல்கிறாய்? பதிலெதுவானாலும் பரவாயில்லை. நான் அதில் சங்கடப்பட மாட்டேன். உன் மனதில் வேறு யாராவது இருந்தாலும், உனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் கண்டிப்பாக நாகரிகமாக ஒதுங்கி விடுவேன்.”

சிந்து தயக்கத்துடன் சொன்னாள். “என் மனதில் யாரும் இல்லை. நான் ஒரு சாதாரண பெண். ஒரு முதலமைச்சரின் மகன், எம்.பி ஆன உங்களுக்கு அந்தஸ்திலும் மற்ற விஷயங்களிலும் எந்த விதத்திலும் நான் தகுதியானவளாகத் தெரியவில்லை
    
உதய் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தான். அவள் மனதில் வேறு யாரும் இல்லை…. சற்று முன் அவள் மனதில் யாராவது இருந்தால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னவன் இவளைத் தவிர இனி என் மனதில் இன்னொரு பெண்ணுக்கு இடமில்லை என்று அந்தக் கணத்தில் முடிவு செய்தான்.

சிந்து லேசாகக் கண்கலங்கத் தொடர்ந்தாள். “சாதாரணமானவளாகக் கூட என் நிலைமை இல்லை. ஒரு விதத்தில் நான் தனிமரம் மாதிரி தான். அன்பு செலுத்தவோ, அக்கறை கொள்ளவோ கூட எனக்கு யாரும் இல்லை. என் அப்பாவுக்கு நான் வேண்டாதவள். என் சித்திக்கு நான் பாரம். என் சகோதரிக்கு என் மேல் வெறுப்பு. என்ன வாழ்க்கை நான் வாழ்கிறேன், ஏன் வாழ்கிறேன், என்ன அர்த்தம் இருக்கிறது என்றெல்லாம் விளங்காத நிலைமையில் தான் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து, கடவுளிடம் எதாவது வழி காட்டு. என்று வேண்டிக் கொண்டு தான் மும்பையை விட்டுச் சென்னைக்கு வந்தேன்….”

கண்டிப்பாக அவள் பின்னணி பற்றி போலீசார் விசாரிப்பார்கள் என்று சிந்துவுக்குத் தெரியும். அப்படி விசாரிக்கையில் இத்தனை காலம் இருந்த மும்பையை விட்டு அவள் சென்னைக்கு ஏன் வந்தாள் என்ற நியாயமான கேள்விக்கு ஒரு பதிலைத் தயார் செய்து தரவேண்டி இருக்கும் என்பதை அவள் அறிவாள். அதனால் பேச்சோடு பேச்சாக அவள் இப்படி சென்னைக்கு வந்த காரணத்தை அவனிடம் சொல்லி வைத்தாள்.  

அவள் கண்கலங்கியதில் உதய் பதறிப் போனான். அவள் சொன்ன வார்த்தைகளில் அவன் உள்ளம் நெகிழ்ந்து போனான். இனிமேல் தனிமரம், யாருமில்லை என்றெல்லாம் சொல்ல வேண்டாம் என்று சொன்னான். அவனும், அவன் குடும்பமும் அவளுக்கு இருப்பதைச் சொன்னான். தன்னைப் பற்றிச் சொல்வதை விட அதிகமாகத் தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னான். அன்பானவர்கள் என்று சொன்னான். அவன் தாயைப் போல் ஒரு தாயை யாரும் எங்கேயும் பார்க்க முடியாது என்று சொன்னான்.

அவள் தயக்கத்துடன் கேட்டாள். “அவர்களுக்கு என்னைப் பிடிக்கா விட்டால்?”

அவன் உறுதியாகச் சொன்னான். “என் விருப்பம் தான் அவர்களுடைய விருப்பமுமாக இருக்கும். என் சந்தோஷம் தான் அவர்களுடைய சந்தோஷமுமாக இருக்கும்.”

அவன் தன் குடும்பத்தைப் பற்றி மேலும் சொல்லிக் கொண்டே போனான். சிந்துவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை கிடையாது. அவள் நினைவு தெரிந்த நாளிலிருந்து கடவுளை வணங்கியது கிடையாது. காரணம் கடவுள் இருப்பது அவளுக்கு நிச்சயமில்லை. இருந்தால் கூட இது வரை அவர் அவள் பக்கம் கடைக்கண் பார்வையைத் திருப்பின அறிகுறியும் தெரிந்ததில்லை. உதய் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கடவுள் இருந்தால் அவர் மிக பாரபட்சமானவர் என்றே தோன்றியது. குடும்பம், அன்பு விஷயத்தில் அவளுக்கு எந்த நல்லதையும் செய்யாத கடவுள் உதய்க்கு யோசித்து யோசித்து எல்லா நன்மைகளையும் செய்திருப்பது போல் தோன்றியது. அவன் சொன்னது எதுவும் அதிகபட்சமில்லை என்பதையும் அவள் அறிவாள். ஏற்கெனவே விஸ்வம் அனுப்பியிருந்த தகவல்களில் அவன் சொன்னது அத்தனையும் இருந்தன.

அவள் மனதில் ஓடிய எண்ணங்களை அவள் முகம் சிறிதும் காட்டவில்லை. அவள் முகத்தில் பிரமிப்பும், அன்பும், நன்றியும் மட்டுமே தெரிந்தன...

அவன் தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்ன போது கூடவே க்ரிஷின் காதலி ஹரிணியைப் பற்றியும் சொன்னான். அவளுடைய புத்திசாலித்தனம், தைரியம், பரந்த மனம் பற்றியும் சொன்னாள். அவன் தம்பி அவளைக் கவனிப்பதில் சில சமயம் அலட்சியம் காட்டினாலும் கூட அவனை விடாமல் காதலிப்பதைப் பற்றிச் சொன்னான். தனக்கு ஒரு சகோதரியாக அவள் மாறி விட்டதைப் பற்றிச் சொன்னான். தன் தாய் தினமும் ஒரு தடவையாவது அவளிடம் பேசாமல் இருப்பதில்லை என்று சொன்னான்...

அவள் முகத்தில் பிரமிப்பு காட்டிக் கேட்டுக் கொண்டே வந்தாள். தன்னுடைய திட்டத்தின் அடுத்த பகுதியில் இவ்வளவு சீக்கிரம் வெற்றியடைய முடியும் என்று அவள் நம்பியிருக்கவில்லை. விஸ்வம் இந்த வெற்றியைக் கேள்விப்பட்டால் மிகவும் சந்தோஷப்படுவான் என்பதில் அவளுக்குச் சந்தேகமேயில்லை. திருப்தியுடன் புன்னகைத்தாள்...

(தொடரும்)
என்.கணேசன்  

6 comments:

  1. Sindhu won Uday. Now what? What'll Krish do?

    ReplyDelete
  2. இந்த இடத்தில் கிரிஷ் இந்த சிந்துவை பார்த்தால் எல்லாமே கணித்து சொல்லி விடுவான்.

    ReplyDelete
  3. இ‌ந்த நாவலை வாங்குவது எப்படி?

    ReplyDelete
  4. உதய் எளிதாக இவ்வளவு சீக்கிரம் விழுந்து விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை...

    ReplyDelete
  5. உதய் எளிதாக வீழ்ந்து விட்டான்... சிந்துவும் வருங்காலத்தில் வீழ்ந்து விடுவாள்...என்பது என் கணிப்பு

    ReplyDelete