சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 17, 2020

சத்ரபதி – 138


யேசாஜி கங்க் சிவாஜியிடம் கேட்டான். “முடிசூட்டிக் கொள்ளும் நாள் பற்றி முடிவு செய்து விட்டாயா சிவாஜி?”

சிவாஜி சொன்னான். “சில உடனடி இலக்குகள் இருக்கின்றன. அவற்றை அடைந்த பின்பு தான் முடிசூட்டிக் கொள்வேன் என்று அன்றைக்கே சொன்னேனே?”

யேசாஜி கங்க் சொன்னான். “கோட்டைகள் பல வென்று விட்டாய். சூரத்திலிருந்து வேண்டுமளவு வந்து விட்டது. முடிசூட்டிக் கொள்ளும் சமயத்தில் மடியில் ஆண்குழந்தை இருந்தால் அதுவும் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். அதற்கென்றே பிறந்தது போல உனக்கு இன்னொரு மகனும் பிறந்து விட்டான். இன்னும் என்ன உடனடி இலக்குகள்?”

“ஒரு ராஜ்ஜியத்துக்கு அரசன் என்று ஊரறியக் கூவி நான் அரியணையில் அமர வேண்டுமென்றால் அதற்கென்று சில அளவுகோல்கள் என் மனதில் இருக்கின்றன. சுயராஜ்ஜியம் என்ற நம் கனவு முழுவதுமாக இப்போதே நமக்குக் கைகூடா விட்டாலும், அதை நோக்கிச் சில அடிகளாவது போய் விட்டோம் என்று எனக்குத் திருப்தியாகத் தோன்ற இன்னும் அடைய வேண்டிய சில இலக்குகள் இருக்கின்றன. பொறு. அதை அடைந்த பின் நானே முடிசூட்டு விழா பற்றிச் சொல்கிறேன்…..”

சிவாஜி சொன்னதைக் கேட்டு யேசாஜி கங்க் பெருமூச்சு விட்டான். அந்த சமயத்தில் ஒற்றர் தலைவன் வந்தான்.

சிவாஜி ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “புதிதாக என்ன தகவல்?”

“அரசே! முகலாயர்களுக்கு வடக்கில் பிரச்னைகள் வெடித்திருக்கின்றன. கைபர் கணவாயில் ஆப்கானியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதே போல சத்னமிக்களும் தலைநகருக்குச் சற்றுத் தொலைவிலேயே கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.”

சிவாஜிக்கு ஆப்கானியர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவது புதிதாகத் தோன்றவில்லை. அது கால காலமாய் அடிக்கடி நடப்பது தான். ஆனால் இராமர், கிருஷ்ணர், ஹனுமான் தெய்வங்களை வணங்கும் வைணர்வர்களான சத்னமிக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “சத்னமிக்கள் ஏன் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள்”

“முகலாயச் சக்கரவர்த்தி இந்துக்கள் மீது விரிக்கும் கூடுதல் வரி பிரச்னை முன்பே இருக்கிறது. அத்துடன் ஒரு சத்னமியை முகலாய வீரன் கோபத்தில் கொன்று விட்டானாம். அது கிளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்து இருக்கிறது. தலைநகருக்கு அருகிலேயே கிளர்ச்சிகள் தொடங்கி இருப்பதால் சக்கரவர்த்தியே சென்று அடக்க நினைத்திருப்பதாகத் தலைநகரில் பேசிக் கொள்கிறார்கள்”

சிவாஜி நண்பனிடம் சொன்னான். “யேசாஜி! முகலாயச் சக்கரவர்த்திக்கு அந்தப் பக்கங்களில் அதிகம் பிரச்னைகள் இருப்பது நமக்கு அனுகூலமே. வேறு எங்கும் பிரச்னைகள் இல்லா விட்டால் கூட அவர் தன் மகனுக்கு அதிகமாய் படைகள் அனுப்பத் தயக்கம் காட்டுவார். இப்போது அங்கே பிரச்னைகள் இருக்கும் காலத்தில், அப்படித் தாராள மனதுடன் அவர் அனுப்பினாலும் சிறிய படைகள் மட்டுமே இங்கு வந்து சேரும். அதனால் நாம் நம் விருப்பப்படி இங்கே இயங்கலாம்……”

யேசாஜி கங்க் கேட்டான். “எங்கே என்ன செய்யப் போகிறாய்?”

சிவாஜி சொன்னான். “அது முகலாயப்படைகள் இப்போது எங்கே எல்லாம் எந்த அளவில் இருக்கின்றன என்பதை அறிந்த பின் தான் திட்டமிட வேண்டும்….”

சிவாஜி உடனே ப்ரதாப்ராவையும், மோரோபந்தையும் வரவழைத்தான்.  அவர்கள் இருவரும் வந்த பிறகு ஒற்றர் தலைவனிடம் சொன்னான். “தற்போது தக்காணத்தில் முகலாயப்படைகள் எங்கெங்கு எந்த அளவில் இருக்கிறது என்ற நிலவரத்தை விளக்குவீர்களா ஒற்றர் தலைவரே”

சிவாஜி கேட்டவுடன் ஒற்றர் தலைவன் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தான். சிவாஜி கவனம் சிதறாமல் கேட்டுக் கொண்டே வந்து இடையிடையே தன் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தியும் செய்து கொண்டான்.  ப்ரதாப்ராவ், மோரோபந்த், யேசாஜி கங்க் மூவரும் கேட்க நினைக்காத கேள்விகளை எல்லாம் சிவாஜி கேட்டான். அவன் கேட்ட பிறகு தான் அந்தக் கேள்விகளின் முக்கியத்துவத்தை மூவரும் உணர்ந்தார்கள்.

எல்லாம் தெளிவாகக் கேட்டுக் கொண்டபின் ஒற்றர் தலைவனை அனுப்பி விட்டு சிவாஜி ப்ரதாப்ராவ், மோரோபந்த் இருவரைப் பார்த்தும் சொன்னான். “நாளையே நீங்கள் இருவரும் தனித்தனிப் படைகளுடன் செல்கிறீர்கள். முகலாயப்படைகள் விரைவில் நெருங்க முடியாத இடங்களில் உள்ள கோட்டைகளைக் கைப்பற்றுகிறீர்கள். செல்வந்தர்கள் அதிகம் வாழும் முகலாயர் வசமுள்ள பகுதிகளுக்குச் சென்று அவர்களிடம் பேசுகிறீர்கள்….”

என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் விளக்கி பேரம் பேச வேண்டி வந்தால் எந்த அளவு வரை இறங்கலாம் என்பதையும் தெரிவித்து விட்டு அவர்கள் இருவரும் தனித்தனிப் படைகளுடன் போக வேண்டிய பாதைகளை சிவாஜி வரைந்தும் காண்பித்தான். வழியில் இருக்கும் சிறிய கோட்டைகளை இருவரும் எப்படிக் கைப்பற்றப் போகிறார்கள் என்பதையும் விளக்கமாகச் சொல்லச் சொன்னான். இருவரும் தனித்தனியாக ஒவ்வொரு கோட்டையையும் பிடிக்க உத்தேசித்துள்ள தந்திரங்களைத் தெரிவித்தார்கள். சில திட்டங்களை அருமை எனப் பாராட்டினான். சில திட்டங்களில் சின்னத் திருத்தங்கள் சொன்னான். சில திட்டங்களுக்கு மாற்றுத் திட்டங்களைக் காரணத்தோடு சொன்னான். கூர்ந்து கவனித்து வந்த யேசாஜி கங்குக்குத் தன் நண்பனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

ப்ரதாப்ராவும் மோரோபந்தும் இது போன்ற பேரங்களில் இது வரை இறங்கியதில்லை. அதனால் அவர்களிடம் விவரமாகவே சிவாஜி விளக்கினான். போர்களும், கோட்டைகளைக் கைப்பற்றலும் இருவரும் நன்றாக அறிந்தவை. இருவரும் அனுபவஸ்தர்கள். அதனால் அவர்களையே சிந்திக்க வைத்து திட்டங்களைத் தெரிவிக்கச் சொல்லிக் கேட்டான். சிறப்பான திட்டங்களைப் பாராட்டி, நல்ல திட்டங்களை மேம்படுத்தி, மோசமானத் திட்டங்களை மாற்றி அவன் தன் படைத்தலைவர்களுக்கு வழிகாட்டிய விதம் ஒரு பெருந்தலைவனுக்கே சாத்தியமானது என்று நண்பன் மீது யேசாஜிக்கு பெருமையாக இருந்தது.

ப்ரதாப்ராவ் குசார் தலைமையில் பத்தாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட படை கிளம்பி காந்தேஷின் கிழக்குப் பகுதி, பேரார் என்ற செல்வந்தர்கள் அதிகம் இருக்கும் முகலாயப்பகுதிகளை ஆக்கிரமித்தது. அங்கிருக்கும் பெருஞ்செல்வந்தர்களிடம் வருடா வருடம் சிவாஜிக்கு சௌத் என்ற வரி கட்டினால் இனி இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நேராது, வேறு யாரும் ஆக்கிரமிக்காமலும் சிவாஜி பார்த்துக் கொள்வான் என்று எடுத்துச் சொல்லப்பட்டது. அங்கு அவர்களைக் காக்க வேண்டிய முகலாயப்படைகள் அவர்களைக் காக்கத் தவறியதால் அங்குள்ள செல்வந்தர்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டார்கள். முதல் வரியையும் கட்டினார்கள்.

அடுத்ததாக அவர்கள் சென்ற கரஞ்சியா என்ற பகுதியில் செல்வந்தர்கள் இதற்குச் சம்மதிக்க மறுத்துத் தங்கள் செல்வத்தை இழந்தார்கள். சிவாஜி பெண்களுக்கு எந்தச் சமயத்திலும் எந்த விதமான தொந்தரவும் செய்யக் கூடாது என்று கண்டிப்புடன் கட்டளை இட்டிருந்ததால் பல செல்வந்தர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் செல்வத்தை மண்ணில் புதைத்து விட்டுப் பெண்களின் உடைகளை அணிந்து முக்காடு போட்டுக் கொண்டு அங்கிருந்து தப்பித்தார்கள். அவர்கள் தப்பினாலும் புதைக்கப்பட்ட செல்வம் மராட்டியப் படையினரால் தோண்டி எடுக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. கடைசியில் கரஞ்சியா பகுதியினரும் சிவாஜிக்கு வரி செலுத்தி பாதுகாப்பாய் வாழச் சம்மதித்தார்கள்.

அதே போல் மோரோபந்த் பிங்க்ளே தலைமையில் இருபதாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட இன்னொரு படை காந்தேஷின் மேற்குப்பகுதி, பாக்லான் பகுதிகளுக்கு சென்றது. சென்ற வழியிலெல்லாம் ப்ரதாப்ராவ் படை செய்தது போலவே செல்வந்தர்கள் நிறைந்த பகுதிகளை ஆக்கிரமித்து சௌத் வரியை நிர்ணயித்து வசூல் செய்தது. அவ்ந்தா, பட்டா, சாலேர், முல்லேரி, த்ரியம்பக், கோட்டைகளும்,  பகுதிகளும் சிவாஜியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இருபடையினரும் முகலாயப் படைகள் விஷயமறிந்து கிளம்பி வந்து சேர்வதற்கு முன்பே ஒவ்வொரு இடத்தில் இருந்தும் சென்று விட்டார்கள். இருக்கின்ற படைகளை எப்படிப் பிரித்து எங்கெல்லாம் அனுப்புவது என்று புரியாமல் திகைத்த முவாசிம் தௌத்கானிடமே வேண்டியபடி பிரித்து எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டான். முன்பே நிறைய இழப்புகளால் குறைய ஆரம்பித்திருந்த படையை எப்படிப் பிரித்து எங்கேயெல்லாம் செல்வது என்ற திகைப்பு தௌத்கானுக்கும் ஏற்பட்டது.

சிவாஜியின் வெற்றிகளும், சௌத் வரி வசூல் தகவல்களும் ஔரங்கசீப்புக்குத் தெரிய வந்த போது அவன் மனம் கொதித்தான். யாருடைய பூமியில் யார் வரி வசூல் செய்வது என்று கொந்தளித்தான். நூதன விதங்களில் எல்லாம் செயல்பட்டு வெற்றி மேல் வெற்றி காணும் சிவாஜியைத் தடுத்து நிறுத்துவது மிக அவசியம் என்று தீர்மானித்தவனாய் உடனடியாகத் தன் ஒற்றர் தலைவனையும், ஆலோசகர்களையும் அழைத்து தக்காணத்தில் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் முழு நிலவரத்தையும் அறிந்து புள்ளி விவரங்களோடு வந்து தன்னைச் சந்திக்கக் கட்டளை இட்டான்.

(தொடரும்)
என்.கணேசன் 

2 comments:

  1. Both sides are preparing well. Next what?

    ReplyDelete
  2. சிவாஜியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... மகிழ்ச்சி

    ReplyDelete