சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 23, 2024

யோகி 68

 

செல்வம் செருப்பைக் காட்டி எச்சரித்த, அவர் வீட்டருகே வசிக்கும் கிழவர், செல்வத்துடன் வேலை செய்யும் போலீஸ் கான்ஸ்டபிளின் உறவுக்காரர். அவர் செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் சூனியம், செய்வினை பற்றி அந்த போலீஸ் கான்ஸ்டபிளிடம் விரிவாகச் சொல்லியிருந்தார். அது மட்டுமல்ல அப்படிச் செய்வினை செய்த ஒரு வீட்டில் உள்ளவர்கள் ரத்தவாந்தி எடுத்து இறக்க நேர்ந்த கதையையும் அவர் அந்தக் கான்ஸ்டபிளிடம் சொன்னார்.

 

எல்லா செய்வினையும் ஒரே மாதிரி பாதிப்பைத் தான் தரும்னு சொல்ல முடியாது. அதை செஞ்சவங்க எப்படி ஆகணும்னு எதிர்பார்த்து செய்யறாங்களோ அப்படி ஆகும். செல்வத்துக்கு மனரீதியான பாதிப்பு வந்துட்ட மாதிரி தான் தெரியுது.”

 

இடமாற்ற ஆணை வந்து, மொட்டைக் கடிதமும் வந்த பிறகு அந்தப் போலீஸ் ஸ்டேஷனில் செல்வம் நடந்து கொள்வதெல்லாம் இயல்பாக இல்லை. அதை நினைவுகூர்ந்த கான்ஸ்டபிள் சொன்னான். “ஆமா தாத்தா. ஸ்டேஷன்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழறான் மனுஷன். கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி தான் நடந்துக்கறான்.”

 

தாத்தாவின் கண்கள் விரிந்தன. அவர் சந்தேகப்பட்டது சரிதான்.  இந்த அளவு பயங்கரமான செய்வினை செய்யற அளவு செல்வத்திற்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா?” என்று அவர் ஆர்வத்துடன் கேட்டார்.

 

அந்த ஆள் திமிர் பிடிச்சவன். அதனால ஆகாதவங்க நிறைய பேர் இருக்காங்க. அதுல எவன் இதைச் செஞ்சான்னு தெரியலையே தாத்தா.”

 

கிழவர்எதுக்கும் நீ ஜாக்கிரதையாய் இருந்துக்க. என்ன வேணும்னாலும் நடக்கலாம்? பைத்தியம் முத்தினவங்க எப்போ என்ன செய்வாங்கன்னு யாராலயும் உறுதியாய் சொல்ல முடியாது. ”

 

ஸ்டேஷன் ஏட்டு ஏற்கெனவே சந்தேகப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தார். “இந்த ஆளுக்கு எதோ புடிச்சுகிச்சுன்னு நினைக்கறேன். தூத்துக்குடிக்குப் போகறதுக்கு முன்னாடி நம்மள ஒருவழி ஆக்கிடுவான் போலருக்கு

 

அந்தப் போலீஸ் கான்ஸ்டபிள் தன் உறவுக்காரத் தாத்தா சொன்னதைத் தெரிவித்தது, ஏட்டின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது போலிருந்தது. போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பின் செல்வத்தை ஒருமாதிரியாகக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அது செல்வத்தின் கோபத்தை அதிகப்படுத்தி அவர் கூடுதலாக ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

 

அந்தப் போலீஸ் கான்ஸ்டபிள் தன் உறவுக்காரத் தாத்தாவிடம் சொன்னான். “நீங்க சொன்னது சரி தான். அந்தாளுக்கு நாளுக்கு நாள் ஆக்ரோஷம் அதிகமாயிட்டே வருது 

 

அந்தக் கிழவர் தன் அக்கம் பக்கத்து ஆட்களிடம் அந்தத் தகவலைத் தெரிவித்து விட்டு சொன்னார். ”போலீஸ் ஸ்டேஷன்லயே எல்லாரும் ஒதுங்கி தான் இருக்காங்களாம். நாமளும் அந்த ஆளை அதிகம் நெருங்கிடாம இருக்கறது நல்லது. எந்த நேரத்துல என்ன செய்வான்னு தெரியாதே!”

 

அதன் பின், வீட்டருகே இருப்பவர்களும் தூரத்திலிருந்து செல்வத்தை வினோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். செல்வத்துக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. ’என்ன ஆச்சு எல்லாருக்கும். எல்லாருமே மெண்டல் ஆயிட்டானுங்களா? இந்த லூஸுங்க கூட இருக்கறதை விட தூத்துக்குடிக்குப் போறதே தேவலை போல இருக்கே

 

தூத்துக்குடிக்குச் செல்வதற்கு முன் தினம் வந்த தபால்களில் ஒன்று முந்தைய அனாமதேயக் கடிதம் போல் இருந்தது. எடுத்துப் படிக்காமல் கிழித்தெறிய வேண்டும் என்று தோன்றினாலும், என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல்  கிழித்துப் போட அவருக்கு மனம் வரவில்லை.

 

இதயம் வேகமாய் படபடக்க செல்வம் அந்த உறையை எடுத்துப் பிரித்தார்.  முன்பு வந்தது போலவே இப்போதும் ஒரு கம்ப்யூட்டர் ப்ரிண்டவுட்.

 

கவலைப்படாதே செல்வம். நீ தனி ஆள் அல்ல. நான் எப்போதும் உன்னோடு தான் இருக்கிறேன்.

சைத்ரா

C/o செல்வம்

 

சென்ற முறை மொட்டைக் கடிதத்தில் C/o யோகாலயம் என்று எழுதியிருந்தது. ஆனால் இந்த முறையோ C/o செல்வம் என்றே எழுதியிருக்கிறது. அப்படியானால் அவரை ஆவி வந்து சேர்ந்து விட்டதோ?  கூட தான் இருக்கிறதோ?

 

செல்வம் கோபத்துடன் அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தார். இந்த மொட்டைக் கடிதம் எழுதினவன் நேரில் வந்தால் கண்டிப்பாய் லாடம் கட்டி அடித்திருப்பார்.

 

சிறிது நேரத்தில் யாரோ ஒருவன் வந்து தன்னுடைய கைபேசி திருட்டுப் போனதாய் ஏட்டிடம் சொல்வது காதில் விழுந்தது. ஏட்டு சில கேள்விகள் கேட்டு விட்டுஇன்ஸ்பெக்டரைப் பாருங்கஎன்று சொல்வதும் கேட்டது. செல்வம் உள்ளுக்குள் கொதித்தார். ’செல்போன் திருட்டுப் புகாரையும் இன்ஸ்பெக்டர்  தான் வாங்கணுமா? அப்படின்னா இவனுகளுக்கு எதுக்கு சம்பளம்?’

 

அடுத்த நிமிடம் அவருடைய அறை வாசலில் இளைஞன் வந்து நின்றான். செல்வம் தலையை நிமிர்த்தாமல் தன் கைபேசியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். “சார்என்று அந்த இளைஞன் அழைத்தான்.

 

தலையை உயர்த்திய செல்வம் அலட்சியமாய் கேட்டார். “என்ன?”

 

உள்ளே வந்த அந்த இளைஞன் சொன்னான். “என் செல்போன் திருட்டுப் போயிடுச்சு சார்.”

 

புகார் எழுதி அந்த ஏட்டு கிட்ட குடுத்துட்டு போஎன்று அலட்சியமாய் செல்வம் சொல்லச் சொல்ல அந்த இளைஞனின் பார்வை செல்வத்தின் பின்புறம் நிலைத்து, அவன் முகம் பேயறைந்தது போல் மாறியது. “யாரிது?” என்று திகிலுடன் அவன் கேட்டான்.

 

செல்வம் திகைப்புடன் பின்னால் திரும்பிப் பார்த்தார். பின்னால் சுவர் தான் இருந்தது. யாரும் இருக்கவில்லை.

 

யாரைக் கேட்கறே?” என்று செல்வம் அந்த இளைஞனிடம் கேட்டார்.

 

அந்த இளைஞன் அவரையும், அவர் பின்னாலும் ஒரு முறை பார்த்தான். அவன் முகத்தில் பீதி தெளிவாய்த் தெரிந்தது. மெல்ல மெல்ல வாசல் வரை பின்வாங்கியவன், பின் ஓட்டமெடுத்தான்.

 

வழிமறித்து போலீஸ் கான்ஸ்டபிள் கேட்டான். “என்ன ஆச்சு?”

 

லேடி…. ஒரு லேடி….” என்று வாய் குழறியபடி சொன்ன அந்த இளைஞன் கூடுதலாய்ச் சொல்ல நிற்கவில்லை. ஓடிப் போய் விட்டான்.

 

போலீஸ் கான்ஸ்டபிள் செல்வத்தின் அறை வாசலில் நின்று மெல்ல எட்டிப் பார்த்தான். செல்வம் எரிச்சலுடன்என்ன?” என்று கேட்டவுடன்ஒன்றுமில்லைஎன்று தலையசைத்து விட்டுப் போனான்.

 

ஏட்டு கான்ஸ்டபிளிடம் தாழ்ந்த குரலில் கேட்டார். “உள்ளே எந்த லேடி இருக்காங்க?”

 

என் கண்ணுக்கு யாரும் தெரியல. ஆனா சார் என்னவோ மாதிரி இருக்கார். நார்மலாய் இல்லை

 

பின் ஒவ்வொருவராக செல்வத்தின் அறைக்கு வெளியே நின்று ரகசியமாய் எட்டிப் பார்த்தார்கள். யாருக்கும் எந்தப் பெண்ணும் தெரியவில்லை என்றாலும் செல்வத்தின் முகம் யதார்த்தமாய்த் தெரியவில்லை. ஏதோ ஒரு துஷ்ட சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்டது போல் அவர் முகம் மிக உக்கிரமாய் அவர்களுக்குத் தெரிந்தது. 

 

ஏட்டு கான்ஸ்டபிளிடம் சொன்னார். ”நீ சொன்னது சரி தான். காலைல வந்தப்ப அவர் முகம் இப்படி இருக்கலை. அந்தப் பையன் கண்ணுல மட்டும் யாரோ ஒரு பெண் தெரிஞ்சிருக்கா. நீ போய்ப் பார்க்கறதுக்குள்ளே அவ அவர் உடம்புக்குள்ளே போயிருக்கணும். எத்தனை வருஷமாய் நாம பார்க்கறோம். அவர் முகம் இப்படி இருந்ததே இல்லை…”

 

ஸ்டேஷனில் உள்ள அனைவரும் தாழ்ந்த குரல்களில் ஏதேதோ பேசிக் கொள்வது செல்வத்தின் காதில் விழுந்தது.

 

செல்வத்தால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வெடித்து விட்டார். 

 

அன்று மாலையே கான்ஸ்டபுள் தன் உறவுக்காரத் தாத்தாவிடம் சென்று அன்று காலையில் நடந்ததைச் சொன்னான். “முதல்ல முகம் தான் மாறித் தெரிஞ்சுது. அப்பறம் பார்த்தா மனுஷன் பேயாட்டம் ஆடறான். எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைகள்ல திட்டறான். அந்தப் பையனைப் புடிச்சு இழுத்துட்டு வாங்கன்னு சொல்றான். அந்தப் பையன் யாரு என்னன்னே தெரியல. பேயோ, ஆவியோ பார்த்து பயந்து ஓடினவன் திரும்பியே வரலை. செல்போன் போனா போயிட்டு போகுது. பேய் பிடிச்சுதுன்னா தாங்க முடியுமான்னு நினைச்சிருப்பான்னு நினைக்கிறேன்…”

 

தாத்தா அந்தத் தகவலை, சில வார்த்தைகளைச் சேர்த்து தன் பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசல்களில் இருந்தபடியே செல்வத்தின் வருகைக்காக ஆவலாகக் காத்திருந்தார்கள். செல்வம் பைக்கில் வந்து வீட்டு வாசலில் நின்ற போது அவர் மீது அனைவர் பார்வையும் இருந்தது. 

 

செல்வத்துக்கு தூத்துக்குடி போவது பெரிய விடுதலை என்ற எண்ணம் மேலும் வலுக்க ஆரம்பித்தது.

 

 (தொடரும்)

என்.கணேசன்




3 comments:

  1. செல்வம் பாண்டியன் டாக்டர் பொரா போக்கை.பார்த்தால் அந்த கேரள manthrwegsr யோகி எல்லோரையும் ஆவி.ஆட்டுவிக்கும் போல் இருக்கே

    ReplyDelete
  2. செல்வத்தின் கதையை போலவே.....நம் ஊரில் கேள்விப்படும் பெரும்பாலான செய்வினை இப்படி தான் உள்ளது.... இதைப்பற்றி ஆள் ஆளுக்கு ஒன்று சொல்லுவார்கள்... பிறகு அவர் மனநிலை மீதி வேலையை செய்து...ஆளை காலி செய்துவிடும்.

    ReplyDelete