சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 16, 2024

யோகி 67

 பாண்டியன் சுகுமாரனுடன் பேசிய உரையாடல் பதிவை ஷ்ரவன் கேட்டான். நாளை மாலை ஐந்து மணிக்குள் வரப்போகும் மந்திரவாதி யார் என்று தெரியவில்லை. காசர்கோட்டைச் சேர்ந்தவர் என்பதை வைத்துக் கண்டுபிடிப்பது கஷ்டமல்ல. ஆனால் யோகாலயத்தை ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதால் அங்கு வந்து சேரும் அந்த மந்திரவாதி யார் என்பது அந்த ஆள் வந்தவுடன் தெரிந்து விடப்போகிறது. பாண்டியன் யோகியிடம் பேசியது பாண்டியனின் பொது கைபேசியிலிருந்து அல்ல என்பதால் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள அவருக்கு வேறொரு ரகசியக் கைபேசி இருக்கிறதென்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது.  அந்த ரகசியக் கைபேசி மூலம் அவர் பேசியிருப்பதும் பிரம்மானந்தாவின் பொது கைபேசி எண்ணுக்கல்ல என்பதால் அவருக்கும் பாண்டியனைப் போல் நெருங்கியவர்களுடன் பேச, தனி ரகசியக் கைபேசி இருப்பதும் தெரிகிறது. அந்த எண்கள் தெரியாததால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை ஒட்டுக் கேட்க முடியவில்லை

 

யோசிக்கையில் பிரம்மானந்தாவுக்குப் பல நிலைகளில் தொடர்பு இருப்பது ஷ்ரவனுக்குப் புரிந்தது. வேறு எத்தனை வட்டத் தொடர்புகள் இருக்கின்றனவோ, அதற்கு எத்தனை ரகசிய அலைபேசிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

 

பரசுராமனின் உக்கிர பூஜை மிக அருமையாய் வேலை செய்திருக்கிறது என்பது சுகுமாரனும் பாண்டியனும் பேசிக் கொண்டதிலிருந்து தெரிகிறது. வரும் காசர்கோடு மந்திரவாதியின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று யோசித்த போது ஷ்ரவனுக்கும் பரபரப்பாக இருந்தது.

 

நேற்று நள்ளிரவு மீண்டும் ஒரு முறை பிரம்மானந்தா பாண்டியனுடன் பேசுகையில் நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது அவருக்குத் தெரிய வந்தது. சுகுமாரனைப் போல் பிரச்சினைகளை விரிவுபடுத்திச் சொல்லிப் புலம்பி அழாமல் நிலைமையைச் சுருக்கமாகவே பாண்டியன் சொன்னாலும், அந்தச் சுருக்கமே பிரம்மானந்தாவை அதிர வைத்தது. பாண்டியன் கடுமையான வயிற்று வலியில் கஷ்டப்படுவதையும் சாதாரணத் தகவலாகவே சொன்னார்.

 

பாண்டியன் சின்னச் சின்னப் பிரச்சினைகளையும், எதிர்மறையான சூழல்களையும் என்றுமே பொருட்படுத்தாதவர். அதை ஒரு விஷயமாகவே அவர் நினைக்க மாட்டார்.  அப்படிப்பட்டவர் வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் அது சகிக்க முடிந்த வலியாக இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு மனிதர் இருப்பதால் அவர் எதைப்பற்றியும் பெரியதாகக் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கிறாரோ, எந்த ஒரு மனிதர் எல்லாப் பெரிய பிரச்சினைகளுக்கும் எளிதான ஒரு தீர்வை எப்போதும் கண்டுபிடித்து விடுவாரோ, அந்த மனிதரே உண்மை நிலைமை பிடிபடாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார் என்றால், நிலைமை மிகவும் மோசமாய் தான் இருக்கிறது என்று அர்த்தம். அது புரிந்த பின் பிரம்மானந்தாவுக்கு மதுரையில் இருப்பு கொள்ளவில்லை. அதனால் அவர் மறுநாள் முன்பு உத்தேசித்திருந்ததை விட இரண்டு மணி நேர முந்தைய விமானத்திலேயே கிளம்பி யோகாலயத்துக்கு வந்து சேர்ந்தார்.

 

சுகுமாரனுக்கும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்ல மனமில்லை. இந்தப் பிரச்சினை தீராமல் அங்கு போய் மனைவியுடன் ஆவியையும் சமாளிப்பது அவருக்கு ஆகவே ஆகாத காரியம். பாண்டியனுக்குப் போன் செய்த போது பிரம்மானந்தா சீக்கிரமாகவே வருவது தெரிந்து. எனவே பிரம்மானந்தா யோகாலயம் வந்து சேரும் முன் சுகுமாரனும் அங்கே வந்திருந்தார்.

 

பாண்டியனின் தூக்கமில்லாமல் சிவந்த கண்களையும், களைத்துக் கருத்த முகத்தையும் பார்த்த போது பிரம்மானந்தாவுக்குப் பகீரென்றது. ‘ஒரு மனிதன் மூன்று நாட்களில் இப்படி மாறிவிட முடியுமா?’. அதுவும், பாறை போல் திடமானவன் என்று அவர் எப்போதும் நம்பி வந்த மனிதன் இப்படி மாறியிருந்தது அவரைத் திகைக்க வைத்தது.

 

ஆனால் சுகுமாரனைப் பார்த்த போதோ, பாண்டியனே தேவலை என்று பிரம்மானந்தாவுக்குத் தோன்றியது. முன்பெல்லாம் கர்வமும், கம்பீரமும் சேர்ந்து நாகரிகக் கனவானாக வலம் வந்து கொண்டிருந்த டாக்டர் சுகுமாரன், எங்கிருந்தோ போரிலிருந்து தப்பி வந்த அகதி போல் இப்போது பரிதாபமாகத் தெரிந்தார்.

 

சுகுமாரனுக்கு, பிரம்மானந்தாவைப் பார்த்தவுடனேயே, பாதி நம்பிக்கை வந்து விட்டது. அவர் பிரம்மானந்தாவுக்கு இணையான அறிவாளியைப் பார்த்ததில்லை. எதைப் பற்றிக் கேட்டாலும் சிறிதும் யோசிக்காமல் விஞ்ஞானம் கலந்து விரிவாய் பதில் சொல்ல முடிந்த அவரிடம் தங்கள் பிரச்சினைகளுக்கான அனைத்து பதில்களும் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் நம்பினார். ஆவிகளை ஓட்டக்கூடிய ஒரு மந்திரவாதியையும் பிரம்மானந்தா வரச் சொல்லியிருக்கிறார் என்பதால் பிரம்மானந்தாவும், அந்த மந்திரவாதியும் சேர்ந்து எல்லாவற்றையும் இன்றே சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்து, சுகுமாரனின் கண்களில் நீர் பெருகியது.

 

காரிலிருந்து இறங்கிய பிரம்மானந்தாவை நோக்கி ஓடிய சுகுமாரனுக்குத் தன் துக்ககரமான அனுபவங்களை அங்கேயே சொல்லி அழத் தோன்றியது. அவர் வாயைத் திறந்த போது பாண்டியனின் இரும்புக் கை அவர் தோளைப் பிடித்து அமுக்கியது. “இங்கே வேண்டாம்என்று பாண்டியன் மெல்லச் சொன்னார்.  உடனே சுகுமாரன் மௌனமானார்.

 

பாண்டியனின் கூர்மையான பார்வை சுற்றும் முற்றும் அலசியது. சந்தேகப்படும்படியான ஆட்கள் யாரும் அவர் பார்வைக்குச் சிக்கவில்லை. தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரனும், அவனைத் தாண்டி சென்று கொண்டிருந்த துறவிகளும், பிரம்மானந்தா வருவதற்கு முன்பே அந்த இடத்தில் இருந்தவர்கள் தான். ஆனாலும் அவரால் திருப்தி அடைய முடியவில்லை. ’இங்கிருக்கும் கருப்பு ஆடு மறைந்திருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். அந்தக் கருப்பு ஆடு அதிரடியாய் செயல்படாமல் அமைதி காத்தாலும், அது கண்காணித்துக் கொண்டிருக்கலாம்என்று அவருடைய உள்ளுணர்வு சொன்னது. இப்போது நடக்கும் அனர்த்தங்களின் பின்னணியில் அந்தக் கருப்பு ஆடு இருக்க வாய்ப்பில்லை. நடப்பதை எல்லாம் கருப்பு ஆடுக்குத் தெரிவதிலும் அவருக்கு விருப்பமில்லை.         

 

பாண்டியன் சந்தேகப்பட்ட கருப்பு ஆடு அவர் சந்தேகப்பட்டபடியே மறைந்திருந்து ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. என்ன நடக்கிறது என்பது அதற்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் எதிர்பார்த்திராத ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டது, அல்லது நடந்து கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனை டாக்டர் இரண்டு நாட்களுக்கு முன்னால் அதிகாலையில் யோகாலயத்துக்கு வந்து பாண்டியனைச் சந்தித்தது, அவரோடு சென்ற பாண்டியன் அடுத்த நாள் இரவு முழுவதும் அபூர்வமாய் வெளியே தங்கியது, மதியம் வந்து சேர வேண்டிய பிரம்மானந்தா காலையிலேயே இன்று வந்து சேர்ந்தது, அந்த டாக்டர் இப்போதும் பரிதாபத் தோற்றத்தில் வந்து சேர்ந்திருப்பது எல்லாமே அவர்களுக்கு ஒரு புதிய பிரச்சினை வந்து சேர்ந்திருப்பதையே அடையாளம் காட்டின. சைத்ராவின் கொலைக்குப் பின் கூட அசராமல் இருந்தவர்கள் இப்போது பதற்றம் அடைய ஆரம்பித்திருப்பது, புதிய பிரச்சினையை அவர்களால் திறம்பட கையாள முடியவில்லை என்பதையே சுட்டிக்காட்டியது.

 

சைத்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட பின் முழுவதுமாக இழந்திருந்த நம்பிக்கை இப்போது மறுபடியும் மெல்லத் துளிர் விட்டது. ஆனாலும் முழு நம்பிக்கை ஏற்பட்டு விடவில்லை.  காரணம் இவர்கள் எந்த வலையிலும் இது வரை சிக்காத திமிங்கலங்கள். எந்த வலையிலிருந்தும் கிழித்துக் கொண்டு வெளியே வர வல்லமை படைத்த இந்தத் திமிலங்களுக்கு ஏதோ சிக்கல் என்றால் அது இறைவனே ஏற்படுத்தியதாய் இருக்க வேண்டும். அந்தச் சிக்கல் மேலும் பெரிதாகி விட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கத் தோன்றியது. 

 

சீக்கிரத்தில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, கொல்லப்படாமல் இருந்தால், இந்த நரகத்திலிருந்து தப்பிக்க, சிறிய வாய்ப்பு இப்போது பிறந்திருப்பதாய் அந்தக் கருப்பு ஆட்டின் மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்றும் உருவானது. ஆனால் பாண்டியன் அங்குமிங்கும் கூர்ந்து பார்ப்பதைக் கவனித்து அந்தக் கருப்பு ஆடு எச்சரிக்கையுடன் ஜன்னலிலிருந்து மெல்லப் பின்வாங்கியது.   எத்தனை தான் மறைவிலிருந்து பார்த்தாலும், பாண்டியனின் எக்ஸ் ரே கண்களில் சிறிது பட்டு விட்டாலும், அது பேராபத்தின் ஆரம்பமாகி விடும்... இன்னொரு தவறு செய்தால், பின் பிழைக்க வழியில்லை...


(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. 'அந்த கேரள மந்திரவாதி செய்யும் பூஜையின் விளைவு ... அவர்களுடைய பாதிப்பை மேலும் அதிகமாக்கி விடும்' என தோன்றுகிறது....

    ReplyDelete