சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 5, 2024

சாணக்கியன் 125

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் சொன்னார். “நாம் காந்தாரத்தையும், கேகயத்தையும் இழக்காமல், ஏற்கெனவே வென்ற இந்தப் பகுதிகளையும், சமீபத்தில் பெற்றிருக்கும் இந்தப் பெருஞ் செல்வத்தையும் தக்க வைத்துக் கொண்டு மகதத்தை வெல்ல வேண்டுமானால், நாம் அதற்கு வெளியுதவியை நாட வேண்டியிருக்கிறது

 

சந்திரகுப்தன் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். சாணக்கியர் சொன்னார். “நான் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்ததில் இப்போதைக்கு  இமயமலைப்பகுதியில் உள்ள தேசங்கள் அனைத்தும் சேர்ந்து நமக்கு உதவினால் போதுமான வலிமையைச் சேர்த்திருப்போம் என்று தோன்றுகிறது.”

 

சிறிது யோசித்து விட்டு சந்திரகுப்தன் சொன்னான். “குலு, காஷ்மீரம், நேபாளம், ஹிமவாதகூடம்

 

சாணக்கியர் தலையசைத்தார். “அவற்றில் ஹிமவாதகூடம் அதிக வலிமை வாய்ந்தது. அதை ஆளும் மன்னன் பர்வதராஜன். அவனை பவ்ரவ்ராஜ் என்றும் அழைக்கிறார்கள். அவன் மறைந்த கேகயராஜன் புருஷோத்தமனுக்கு உறவினனும் கூட. இருவரும் ஒரே குலம். புருஷோத்தமனைப் போலவே பர்வதராஜனும் தன் மகனுக்கு மலைகேது என்றே பெயர் வைத்திருக்கிறான். வலிமையானவன் என்ற போதிலும் நமக்கு நாளை பிரச்சினை ஆகக்கூடியவனும் பர்வதராஜன் தான்.”

 

சந்திரகுப்தன் குழப்பத்துடன் கேட்டான். “ஏனப்படிச் சொல்கிறீர்கள் ஆச்சாரியரே? பர்வதராஜன் எந்த வகையில் பிரச்சினை ஆகக்கூடியவன்?’

 

சாணக்கியர் புன்னகைத்தார். “சந்திரகுப்தா! சில மனிதர்கள் இயல்பிலேயே பிரச்சினையானவர்கள். குறுக்கு புத்தியுள்ள அவர்கள் தங்களிடம் வருகிறவர்கள் எல்லாரிடமிருந்தும் அதிகபட்சமாக பலனடைந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் தாங்கள் மற்றவர்களுக்குச் செய்வது மிகக்குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நேர்மையும், பெருந்தன்மையும் அவர்களிடம் என்றுமே எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் தங்கள் பேச்சில் மட்டும் வெல்லமாக இருப்பார்கள். அதையே பெரிதாக எடுத்துக் கொண்டு எல்லோரும் தங்களுக்கு எல்லாம் செய்து விட வேண்டும் என்றும் அந்தப் பேச்சினாலேயே எல்லாம் சாதித்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.  பர்வதராஜன் அந்த வகை. அதனாலேயே உறவினனாக இருந்தாலும் புருஷோத்தமன் அவனை எட்டவே வைத்திருந்தார். இந்திரதத் அவனைப் பற்றி கதை கதையாய் என்னிடம் சொல்லியிருக்கிறான்.”

 

சந்திரகுப்தன் கேட்டான். “மற்ற தேசங்களின் மன்னர்கள்?”

 

பர்வதராஜனளவுக்கு மோசமல்ல. ஆனால் பர்வதராஜனை விட்டு விட்டு அவர்களை மட்டும் இணைத்துக் கொண்டால் நம் பலம் போதாது

 

அப்படியானால் என்ன செய்வது ஆச்சாரியரே?”

 

மகத்தான இலக்குக்குப் போக வேண்டிய பாதை எப்போதுமே ராஜபாதையாக இருப்பதில்லை சந்திரகுப்தா. கரடுமுரடான பாதையாகவே அது பெரும்பாலும் இருக்கும். வழியில் தடங்கல்களும் அதிகம் இருக்கும். அதனால் தான் அந்த வழியில் பயணித்து அந்த மகத்தான இலக்கை அடைய எல்லோருமே தயாராக இருப்பதில்லை. பாதையின் கடினமும், இடையிலிருக்கும்  தடங்கல்களும் பார்த்தே பெரும்பாலானவர்கள் முயற்சி செய்ய முனையாமல் ஒதுங்கி விடுவார்கள். ஆனால் அதை நாம் செய்யக்கூடாது. நம் இலக்குக்கு பர்வதராஜன் பயன்படுவான் என்றால் நாம் அவனைப் பயன்படுத்தியே தீர வேண்டும்.  காரியம் ஆகப் பயன்படும் ஆயுதம் ஆபத்தானது என்றாலும் காரியவாதி அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாதல்லவா?”

 

சந்திரகுப்தன் புன்னகைத்தான். ”ஆம் ஆச்சாரியரே. பிரச்சினையைத் தவிர்த்து யாரும் சாதித்து விட முடியாது.”

 

சாணக்கியரும் புன்னகைத்தார். “அதனால் உதவி கேட்க முதலில் பிரச்சினையிடமே போகலாமா?”

 

அன்றே அவர்கள் இருவரும் ஹிமவாதகூடத்திற்குக் கிளம்பினார்கள்.

 

ஜீவசித்தி அது வரை சின்ஹரனைப் பார்த்ததில்லை. அதிகம் சாரங்கராவும், விஜயனும் தான் ஆச்சாரியரிடமிருந்து தகவல் தரவும், அவனிடமிருந்து அவருக்குத் தகவல் கொண்டு போகவும் வருவார்கள். அதனால் சின்ஹரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது உண்மையை அறிந்து கொள்ளவும், அவனைச் சோதித்துப் பார்க்கவும் எச்சரிக்கையுடன் ஜீவசித்தி கேட்டான். “வழக்கமாக வருபவர்கள் வரவில்லையா?”

 

இல்லை. இனி சில காலம் அவர்கள் இங்கு வராமலிருப்பது தான் நல்லது என்று ஆச்சாரியர் அபிப்பிராயப்படுகிறார். நிதி போனதை அறிந்து தனநந்தன் தீவிர விசாரணையில் இறங்கினால் அந்த யாகசாலைக்கருகே கங்கைக் கரையில் அடிக்கடி கூடாரம் போட்டுத் தங்கிய வணிகர்கள் மேல் சந்தேகம் வராமல் போகாது என்று நினைக்கிறார்

 

ஜீவசித்திக்கு சின்ஹரன் மேலிருந்த சந்தேகம் முழுவதுமாக நீங்கியது. ஜீவசித்தி நட்பின் குரலில் கேட்டான். “இனி நாம் செய்ய வேண்டியது என்ன நண்பரே

 

சின்ஹரன் சொன்னான். “பத்ரசாலையும் இரண்டாவது இளவரசன் சுதானுவையும் நாம் விரும்பும் விதங்களில் நகர்த்த வேண்டும்”

 

ஏற்கெனவே சாரங்கராவ் மூலம் இளவரசர்கள் சுகேஷ், சுதானு மற்றும் பத்ரசால் பற்றி நிறைய தகவல்களை ஜீவசித்தி அனுப்பியிருந்தான். அவர்களில் சுகேஷைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவு என சாணக்கியர் அவனை ஒதுக்கி விட்டிருந்தார். மற்ற இருவரை மட்டும் அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.

 

பத்ரசால் மகதத்தின் சக்தி வாய்ந்த சேனாதிபதி. தனநந்தன் ராக்ஷசருக்கு அடுத்தபடியாக ஓரளவு முக்கியமாக நினைப்பது பத்ரசாலை மட்டுமே. பத்ரசால் மாவீரன். மது, மாது இரண்டிலும் ஈடுபாடு கொண்டவன் என்றாலும் அவன் மிக அதிக ஈடுபாடு கொண்டவனாக இருப்பது  சூது விளையாட்டுகளில் தான். பொழுது போக்கு நேரங்களில் அதிகமாக அவன் இருப்பது சூது விளையாட்டு விடுதியில் தான். போர்களில் வெல்வதற்கு இணையாக அவன் மகிழ்வது அவன் சூதில் வென்று நிறைய செல்வத்தை அடையும் போது தான். ஆனால் அப்படி அவன் வெல்வது மிகவும் குறைவான நாட்களில் தான். பெரும்பாலான நாட்களில் அவன் இழப்பது தான் அதிகம். அதனால் அவன் அடிக்கடி கடன் தொல்லையில் சிக்கிக் கொள்வான்.

 

சின்ஹரன் ஜீவசித்தியிடம் கேட்டான். “பத்ரசாலைக் குறித்த சமீபத்திய தகவல்கள் என்ன நண்பரே?”

 

ஜீவசித்தி சொன்னான். ”அவன் சமீபத்தில் சூது விளையாட்டில் அதிகமாக இழந்திருக்கிறான். இங்கே சூது விளையாட்டு விடுதிக்கும் தனநந்தன் அதிக வரி விதிக்கிறான். வசூலிலும் கால தாமதம் ஏற்படுவதை தனநந்தன் அனுமதிப்பதில்லை. அதனால் பத்ரசால் தொடர்ந்து கடன் சொல்லி வருவதை அந்த விடுதியாளர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இரண்டு நாட்களுக்கு முன்பு இனி பொறுப்பதற்கில்லை என்று சொல்லி விட்டார். பழைய பாக்கியைத் தரா விட்டால் இனி ஆட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். ஆனால் அந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருந்த பத்ரசாலுக்கு அங்கே விளையாடப் போகாமல் இருக்க முடியவில்லை. தன் முத்துமாலை  ஒன்றை விடுதியாளரிடம் விற்று இப்போதைக்கு நிலைமையைச் சமாளித்திருக்கிறான் பத்ரசால். இது எத்தனை நாட்களுக்குப் போதுமோ தெரியவில்லை

 

இளவரசன் சுதானு தன் அண்ணனை விடத் தனக்கே அறிவும் வீரமும் அதிகமாக இருப்பதாக நம்புபவன். அவனோடு ஒப்பிடுகையில் மூத்த இளவரசன் சுகேஷ் சாதுவும் கூட. தந்தைக்குப் பின்பு மகத அரியணையில் அமரத் தனக்கே தகுதி இருப்பதால் தன்னையே பட்டத்து இளவரசனாக அறிவிக்க வேண்டும் என்று தனநந்தனிடம் வலியுறுத்தச் சொல்லி சில மாதங்களாகத் தாய் தாரிணியிடம் அவன் சொல்லி வருகிறான்.  இதுவும் ஏற்கெனவே ஜீவசித்தி சாரங்கராவ் மூலமாக சாணக்கியருக்கு அனுப்பிய செய்தி.

 

ஜீவசித்தி கேட்டான். “சுதானு விஷயத்தில் தற்போதைய நிலவரம் என்ன?”

 

”அவன் தன் தாயிடம் இரண்டு நாட்களுக்கு முன் கூட அரசனாகத் தகுதியுள்ள அவனையே பட்டத்து இளவரசனாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அவன் தாயும் “சமயம் பார்த்து அவரிடம் சொல்கிறேன். ஆனால் நீ அதுவரை அவரோடு அனாவசியமாய் வாக்குவாதம் செய்யாமல் இரு.” என்று அறிவுரை கூறியிருக்கிறாள். அதற்கு அவன் “ஒரு இளவரசனைப் போல் செலவு செய்ய என்னை அனுமதித்தால் நான் ஏன் அவரிடம் வாக்குவாதம் செய்கிறேன்?” என்று கோபத்தோடு கேட்டிருக்கிறான். அவன் தாய் ஒன்பது சனிக்கிழமைகளில் அதிகாலை மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்று ஜோதிடர் சொன்னதைச் சொல்லி அப்படியே இருவரும் செய்து விட்டு அரசரிடம் பேசுவதாகச் சொல்லி இருக்கிறாள்.

 

இந்தத் தகவல்கள் தங்களுக்குச் சாதகமாக இருப்பதை எண்ணி மகிழ்ந்த சின்ஹரன் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை ஜீவசித்தியிடம் கேட்டான். “நண்பரே. மகத இளவரசன், மகத சேனாதிபதி என்றால் அவர்கள் செல்வச் செழிப்பில் இருக்க வேண்டுமே. அப்படியிருந்தும் சுதானு நிதிக்குத் தந்தையிடம் வாக்குவாதம் செய்யும் நிலையிலும், பத்ரசால் கடனிலும் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றதே?”

 

தனநந்தனிடமிருக்கும் செல்வத்தை வைத்து அவனுடைய குடும்பத்தினருக்குக் கிடைப்பதையும், சேனாதிபதிக்குக் கிடைப்பதையும் நீங்கள் கணக்கிட முடியாது நண்பரே. உண்மையில் அவன் கீழ்மட்ட ஊழியர்களுக்குத் தருவதைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாகவே தன் அமைச்சர்கள், சேனாதிபதி, படைத்தலைவர்கள் ஆகியோருக்கும், அதைவிட அதிகமாய் தன் குடும்பத்தினருக்கும் தருகிறான் என்றாலும் அதிக தேவையை உருவாக்கி வைத்திருப்பவர்களுக்கு அது போதாது. மூத்த இளவரசன் சுகேஷும், அமைச்சர்களும், ராஜகுருவும் தங்கள் வருமானத்தில் வசதியாகவே வாழ்கிறார்கள். ஆனால் ஆடம்பரப் பிரியனான சுதானுவுக்கும், சூதாட்டத்தில் நிறைய இழக்கும் பத்ரசாலுக்கும் கிடைப்பது போதவில்லை.”

 

நல்லது நண்பரே. நான் இருவரையும் விரைவில் சந்திக்கிறேன்.”

 

(தொடரும்)

என்.கணேசன்  





1 comment:

  1. புதிய புதிய திருப்பங்களுடன் செல்கிறது...அருமை

    ReplyDelete