இம்மானுவல் மூளை துரிதமாக வேலை செய்தது. அந்தக் குட்டை
மனிதன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பழுதடைந்த கேமிரா ஒரு நேர் கோட்டில் தான் இருந்தது
என்பதால் நினைத்தபடி தான் இருக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்த பின் அந்தக் குட்டை மனிதன் யாராக இருக்கும் என்று இம்மானுவல்
யோசிக்க ஆரம்பித்தான். புகைப்படம் எடுத்தது விஸ்வம் இல்லையென்றால் கண்டிப்பாக அந்தக் குட்டை மனிதன் விஸ்வத்தின் கூட்டாளியாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் வேறு யாராவது புதிய ஆட்களை அவர்கள் கண்டிப்பாக இதில் பயன்படுத்தியிருக்கும் வாய்ப்பு குறைவு. இது நாள் வரை அந்தக் கூட்டாளியை விஸ்வத்தைத் தவிர யாரும் பார்த்தது கிடையாது என்கிற நிலை இருந்தது. அந்தக் குட்டை மனிதன் தான் விஸ்வத்தின் கூட்டாளி என்றால் இப்போது அவனை அக்ஷய் பார்த்திருக்கிறான். இந்தக் கேமிராப் பதிவுகளில் முகம் தெளிவாகத் தெரியா விட்டால் கூடப் பரவாயில்லை. அந்த ஆளின் தோற்றம் கிடைத்து விட்டது போலத்தான்.
இம்மானுவல் அக்ஷயைக் கேட்டான். ”இப்போது வெளியே அவன் போன பதிவும் ஏதாவது ஒரு கேமிராவில் ஆகியிருக்கும். அவன் அதிலும் தலை நிமிர்த்தி இருப்பான் என்று தோன்றவில்லை. அறைக்குப் போக உங்களுக்கு அவசரமில்லா விட்டால் நீங்கள் விவரிக்க விவரிக்க குட்டை மனிதனைப் படம் வரைய நான் ஏற்பாடு செய்யட்டுமா? ஏனென்றால் அவன் மிக முக்கியமான மனிதன். எதிரியின் கூட்டாளி. அவனைப் பற்றி இது வரைக்கும் எந்தத் தெளிவான தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை....”
அக்ஷய் அறைக்குப் போக அவசரமில்லை என்றான். பத்து நிமிடத்தில் வரைபவன் வந்தான். அக்ஷய் சொல்லச் சொல்ல அவன் வரைய ஆரம்பித்தான். அந்தச் சில வினாடிகளில் அக்ஷய் அந்தக் குட்டை மனிதனின் நிறைய விஷயங்களை மனதில் குறித்து வைத்திருந்தான். அவனுடைய நினைவுத் திறன் வரைபவனையும், இம்மானுவலையும் வியக்க வைத்தது. இருபது நிமிடங்களில் அந்தக் குட்டை மனிதனின் தத்ரூபமான ஓவியம் வரையப்பட்டது.
அக்ஷய் திருப்தியுடன் சொன்னான். “இது தான் நான் பார்த்த ஆள்”:
இந்த நேரத்திற்குள் குட்டை மனிதன் வெளியே போனது ஏதாவது கேமிராவில் பதிவாகியிருக்கிறதா என்று பார்த்து விட்டிருந்தார்கள். அவன் வெளியே போனது எதிலும் பதிவாகியிருக்கவில்லை. மூன்று பதிவுகளில் கும்பலாக உயரமானவர்கள் நிறைய பேர் வெளியே போயிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் அந்தக் குட்டை மனிதன் சத்தமில்லாமல் வெளியே போயிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள்.
அப்படியிருக்கா
விட்டால் அவன் இன்னும் விமான நிலையத்திற்கு உள்ளேயே எங்காவது ஒளிந்திருக்க வாய்ப்பிருக்கிறது
என்ற சந்தேகமும் இம்மானுவலுக்கு வந்து விமான நிலையத்திற்குள் மூலை முடுக்கெல்லாம் சோதித்துப்
பார்க்கவும் ஏற்பாடு செய்தான். அந்தச் சோதனையிலும் குட்டை மனிதன் அகப்படவில்லை.
குட்டை மனிதனை யாரெல்லாம்
கவனித்திருக்கிறார்கள் என்று விசாரித்த போது பலரும் அலைபேசியில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்த
அவனைப் பார்த்த நினைவு மங்கலாக இருப்பதைத் தெரிவித்தார்கள். மற்றபடி குறிப்பாகக் கூர்ந்து
பார்க்க அவர்களுக்குக் காரணம் எதுவும் இருக்கவில்லை. உண்மையில் அக்ஷயைத் தவிர வேறு இரண்டு பேர் தான் அந்த ஆளைச் சற்று அதிகமாகக் கவனித்திருந்தார்கள் என்பது அங்கே தீவிரமாக விசாரித்த போது தெரிய வந்தது. அந்த இருவரில் ஒருவன் ஒரு இளைஞன். அவனைத் தள்ளி விட்டுத் தான் புகைப்படம் எடுக்க குட்டை மனிதன் முன்னுக்கு வந்திருந்தான். அதனால் தான் கவனித்திருந்தான்.
கவனித்திருந்த இன்னொருவர் ஒரு முதியவர். குட்டை மனிதன்
புகைப்படம் எடுத்து விட்டு குனிந்து கொண்டே அவர் முன்பக்கம் நகர்ந்த போது அவர் அவனைக் கவனித்திருந்தார். மற்றவர்கள் யாரும் அவனைப் பார்க்கவில்லை. பார்த்த அந்த இருவரும் கூட, குட்டை மனிதன் புகைப்படம் எடுக்கும் முன்னும், பின்னுமான ஓரிரு நிமிடங்களில் அவனைக் கவனித்தவர்கள் தான். அந்த ஓரிரு நிமிடங்களுக்குள் அவனைப் பார்த்திருந்த அவர்களுக்கு அவன் எப்படி அவர்கள் அருகே வந்தான் என்பதைக் கவனித்த நினைவில்லை என்றார்கள். பிறகு
அவன் போனதையும் அவர்கள் பார்க்கவில்லை என்றார்கள். அதற்குப் பிறகுத் தொடர்ந்து அவன் எப்படி எந்தக் கேமிராவிலும் அகப்படவில்லை என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்தக் களேபரத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த அக்ஷயைப் பார்க்கையில் இம்மானுவலுக்குப் பொறாமையாக இருந்தது. பெயருக்கேற்றபடி அமானுஷ்யன் தான்...
இம்மானுவல் திடீரென்று அவனிடம் கேட்டான். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “என்னாலும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை”
அதைச் சொல்கையில் அவனுக்கு எந்தச் சங்கடமும் இருக்கவில்லை என்று இம்மானுவல் கவனித்தான். எல்லோரும் மிகப் பெருமையாக நினைக்கும் ஒருவனுக்குத் தெரியவில்லை, முடியவில்லை என்ற வார்த்தைகளைச் சொல்வது சுலபமாக இருக்க வழியில்லை. அது பெரும்பாலான மனிதர்களுக்குக் கௌரவக் குறைவாகத் தோன்றலாம். ஆனால் அக்ஷய் அந்தப் பெரும்பாலானோர் கூட்டத்தில் சேரவில்லை.
இம்மானுவல் கேட்டான். “அவன் ஏன் உங்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும்? அதற்கு எதாவது வலுவான காரணம் இருக்குமோ?”
“விஸ்வம் அவனிடம் என்னைப் புகைப்படம் எடுத்துத் தருமாறு கேட்டிருக்கலாம்?”
“உங்கள் புகைப்படத்தை வைத்து விஸ்வம் என்ன செய்ய முடியும்?”
“எவ்வளவோ செய்யலாம். என் புகைப்படத்தை வைத்து என்னைப் பற்றி அவன் நிறைய தெரிந்து கொள்ளலாம். அவன் அபூர்வ சக்திகளை வைத்து என்னுடைய பலம் பலவீனங்களை அவனால் உணர முடியும்”
இம்மானுவல் திகைத்தான். இதைச் சொல்லும் போதும் அக்ஷயிடம் எந்தத் தயக்கமும், சங்கடமும் இல்லை. இம்மானுவலுக்கு அந்தத் தகவலில் சங்கடம் இருந்தது. “அது சிக்கல் அல்லவா?”
அக்ஷய் புன்னகையுடன் கேட்டான். “யாருக்கு?”
இம்மானுவல் ஒரு கணம் திகைத்துப் பின் சிரித்து விட்டான். அமானுஷ்யனை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. சிரிப்பினூடே சொன்னான். “நமக்குத் தான்”
அக்ஷய் புன்னகையுடன் சொன்னான். “நம் பலமும், பலவீனமும் எதிரிக்குத் தெரிவதில் சிக்கல் இல்லை. அவை நமக்கே தெரியாமல் இருப்பதில் தான் சிக்கல் இருக்கிறது.”
அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த தீர்க்கமான உண்மையை இம்மானுவல் ரசித்தான். முதன் முதலில் அவனைக் கண்ட கணம் முதல் இந்தக் கணம் வரை அக்ஷயிடம் ஒரு பதட்டமோ, பரபரப்போ இல்லை. எதுவும் என் கை மீறிப் போய் விடவில்லை, எல்லாம் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று பறைசாற்றுவது போல் அமைதி அவனிடம் இயல்பாகவே குடி கொண்டிருந்தது.
எர்னெஸ்டோவின் பங்களாவிற்கு அவனை அழைத்துப் போகையில் இம்மானுவல் சம்பிரதாயமாகச் சொல்ல நினைத்திருந்த வேண்டுகோளைச் சொன்னான். “நாங்கள் எங்கள் வட்டத்தை மீறீ வெளியிலிருந்து ஒருவரைத் தருவிப்பது இது தான் முதல் முறை. ரகசியத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் இயக்கம் எங்களுடையது. எங்களுடன் இருக்கும் காலங்களில் நீங்கள் எத்தனையோ பார்க்கவும், கேட்கவும் நேரிடலாம். ஆனால் அதை எதையும் நீங்கள் எக்காலத்திலும் யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது என்று நாங்கள் உங்களை வேண்டிக் கொள்கிறோம். உங்கள் இயல்பிலிருந்தும், உங்கள் கடந்த காலத்திலிருந்தும் அந்த நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்ற போதும் வாய்விட்டுச் சொல்லி உங்கள் சம்மதத்தைப் பெற விரும்புகிறோம்”
அக்ஷய் மறுபேச்சு எதுவும் பேசாமல் எந்த ரகசியத்தையும் அவன் எக்காலத்திலும் யாரிடமும் வெளிப்படுத்தப்போவதில்லை என்ற வாக்கை அளித்தான். இம்மானுவலிடம் நிஜமாகவே நிம்மதி தெரிந்தது.
எர்னெஸ்டோவிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. “எங்கிருக்கிறாய்? அவன் வந்து விட்டானா?”
இம்மானுவல் புன்னகைத்தான். எர்னெஸ்டோவுக்கு அமானுஷயனைக் காண்பதில் ஆர்வம் தாங்கவில்லை. அவசரப்படுகிறார். அவருக்கு உடனே தகவல் அனுப்பினான். “நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்து விடுவோம்”
இம்மானுவல் அடுத்ததாக அந்தக் குட்டை மனிதனின் ஓவியத்தை ஒவ்வொரு உளவுத் துறையினருக்கும் அனுப்பி அந்த ஆளைப் பற்றி ஏதாவது விவரம் பெற முடிகிறதா என்று பார்க்கக் கட்டளையிட்டான். அதே போல் விஸ்வம் கடைசியாக இல்லுமினாட்டியில் பேச வந்த போது தங்கிய ஓட்டல், அருகில் இருந்த ஓட்டல்கள் ஆகியவற்றிற்கு அந்த ஓவியத்தை அனுப்பி அந்த ஆளை அந்தக் காலக்கட்டத்தில் அங்கே யாராவது பார்த்து இருக்கிறார்களா என்று விசாரிக்க ஏற்பாடு செய்தான். அதே போல் ம்யூனிக் மருத்துவமனைக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்பி வைத்தான். ஆனால் யார் மூலமாகவும் எந்தத் தகவலும் உபயோகமானதாய்க் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
Akshay is uncomparable. Ultimate. Sema entry.
ReplyDelete1960 - 70 களில் வாரப் பத்திரிகைகளில் கதை படிக்கக் காத்திருந்த நிலை இப்போது திரும்பி இருக்கிறது. இந்த வாரம் அகஷய் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகம் தீர்ந்து விட்டது. இனிமேல் கதையில் இன்னும் விறுவிறுப்பு ஏறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. மிக நன்றாக எழுதுகிறீர்கள் திரு கணேசன். மிக்க நன்றி.
ReplyDeleteஉண்மை தான் சார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக படித்துக் கொண்டு வருகிறேன்...
Deleteபிரச்சனையான சமயங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் அக்ஷய் இடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்... சூப்பர் சார்...
ReplyDeleteHow do i buy this book? One week gap is really disconnecting the storyline and making it less enjoyable. I stay in UAE
ReplyDeleteYou may contact
Deleteabibooksonline@gmail.com
cell no 9840974053
Thank you sir. I sent an email and awaiting. Thank you for writing such wonderful stories that are realistic, inspirational and motivating to become spiritual & good humanbeing.
ReplyDeleteநம் பலமும், பலவீனமும் எதிரிக்குத் தெரிவதில் சிக்கல் இல்லை. அவை நமக்கே தெரியாமல் இருப்பதில் தான் சிக்கல் இருக்கிறது.”
ReplyDeleteVira varigal
ReplyDelete