அக்ஷய் பயணம் செய்த விமானம் ம்யூனிக்கை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் குடும்பத்தினரிடம் இருந்து விடைபெறுவது இந்த முறையும் சுலபமாக இருக்கவில்லை. ஏன் திரும்பத் திரும்ப சம்பந்தமில்லாத பிரச்னைகளுக்குள் புகுந்து கொள்கிறீர்கள் என்ற கேள்வியைத் தான் அவனுடைய மூத்தமகனும், அண்ணனும் கேட்டார்கள். இந்த முறை தனக்கு அபாயத்திற்கான வாய்ப்பு இல்லை என்றும் ஒருவருக்குப் பாதுகாவலராக இருந்தால் போதும் என்றும் சொல்லி விட்டுக் கிளம்பியிருக்கிறான். ஆனால் அதிலும் எத்தனையோ அபாயம் இருக்கிறது என்று அறிந்திருந்த அவர்கள் அவன் ஒன்றைத் தீர்மானித்த பிறகு அவனை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்டு இது போன்ற காரியத்திற்குப் போவது இதுவே கடைசி என்ற சத்தியத்தை வாங்கிக் கொண்டு தான் அனுப்பி வைத்தார்கள். இல்லுமினாட்டி அவன் குடும்பத்திற்கு முழுப் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்திருந்தது. அவன் குடும்பம் இருக்கும் தெருவில் கூட அதன் காவலர்கள் அறியாமல் அன்னியர்கள் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது என்ற ஏற்பாடு செய்திருப்பதைப் பார்த்துத் திருப்தி அடைந்த பின் தான் அக்ஷய் அங்கிருந்து கிளம்பியிருக்கிறான்... ஆனால் கடைசி வரை இல்லுமினாட்டி என்ற பெயரை அந்தக் காவலர்களும் உச்சரிக்கவில்லை. அவனுக்கு டிக்கெட் அனுப்பியது முதல் மற்ற பயண ஏற்பாடுகள் பேசியது வரை செய்த இம்மானுவலும் அந்த ஒரு வார்த்தையைச் சொல்லவில்லை.
விமானம் ம்யூனிக் விமானநிலையத்தில் தரையிறங்கப் போவதாய் அறிவிப்பு கேட்டவுடன் அக்ஷய் சோம்பல் முறித்தான். இந்த விமானப் பயணத்தில் அவனுக்கு உட்கார்ந்தே அலுத்து விட்டது. விமானத்தில் உடன் பயணம் செய்த பயணிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர் யாராவது இருக்கிறார்களா, விமான ஊழியர்களில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்று ஆரம்பத்தில் இருந்தே கூர்ந்து கவனித்திருந்தான். யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை...
அவன் விமானத்தில் இருந்து இறங்கி பார்வையாளர்கள் இருக்கும் ஹாலுக்கு நடந்து வந்த போது பலர் அலைபேசியில் அவர்கள் வரவேற்க வந்த நபர்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் அந்த ஜனக்கூட்டத்திற்கு நடுவில் அவனை மையமாக வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு குட்டை மனிதனை அவன் கவனித்தான். ஆரம்பத்தில் அவன் உயர்த்திப் பிடித்திருந்த கைகளும், அலைபேசியும் தான் தெரிந்தன. பின் தான் முன்னால் நின்றிருந்த ஒரு இளைஞனைத் தாண்டி சிறிது எதிரில் வந்தான். அக்ஷயை அவன் இரண்டு படங்கள் எடுத்தான்.
அக்ஷயின் விழிகள் கூர்மையாயின. பதட்டமில்லாமல், அதிர்ச்சியில்லாமல் அந்த ஆளை அவன் கூர்ந்து பார்க்கையில் அந்த ஆளும் அவனைப் பார்த்தான். அவன் சற்று முன் தாண்டி வந்திருந்த இளைஞன் இப்போது அவனுக்கு முன்னால் வர அந்தக் குட்டை மனிதன் வசதியாக மறைந்தான். சற்று குனிந்தபடியே அவன் மற்ற பார்வையாளர்கள் நடுவில் நகர்ந்திருக்க வேண்டும் என்று அக்ஷய் நினைத்தான். சிறிது நேரத்தில் அவசர அவசரமாக வெளியே இருந்து ஒரு உயரமான ஆள் வருவதை அக்ஷய் கவனித்தான். உள்ளே நுழைந்த கணம் முதல் அவன் கண்கள் அக்ஷய் மீதே பதிந்திருந்த விதத்தை வைத்து இவன் தான் சில நாட்களாகப் போனில் தொடர்பு கொண்டிருந்த இல்லுமினாட்டி ஆசாமி என்பதை அக்ஷய் அனுமானித்தான்.
இம்மானுவல் அவனைப் புன்னகையுடன் வரவேற்றுச் சொன்னான். “வாருங்கள். நான் இம்மானுவல். மன்னிக்கவும். சில நிமிடங்கள் தாமதமாகி விட்டது. பிரயாணம் சௌகரியமாக இருந்ததல்லவா?”
அக்ஷய் புன்னகைத்தான். “சௌகரியமாக இருந்தது. நீங்கள் தாமதமானாலும் உங்கள் எதிர்தரப்பு ஆள் உங்களுக்கு முன்னால் வந்துக் காத்திருந்து என்னைப் புகைப்படம் எடுத்து விட்டுப் போய் விட்டான்”
இம்மானுவல் ஒரு கணம் அப்படியே உறைந்தான். பின் பரபரப்புடன் கேட்டான். “யாரவன்? எப்போது எடுத்தான்?”
அக்ஷய் சொன்னான். “குட்டையாய் ஒரு மனிதன். நான் அந்தத் தூண் அருகே வந்த போது என்னைப் புகைப்படம் எடுத்தான். அப்போது மணி 10.22.”
இம்மானுவல் திகைத்தபடி கடிகாரத்தைப் பார்த்தான். மணி 10.30. எதிர்பாராத விதமாகத் திடீரென்று புகைப்படம் எடுக்கப்பட்ட போதும் அசராமல் அமைதியாய் இருந்து கொண்டு, புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரம் இரண்டையும் துல்லியமாகச் சொல்லும் அமானுஷ்யனை அவனுக்கு முதல் சந்திப்பிலேயே மிகவும் பிடித்து விட்டது.
இம்மானுவல் பார்வையாலேயே அவன் பின்னால் நின்றிருந்த இரண்டு காவலர்களுக்குக் கட்டளையிட்டான். அடுத்த சில நிமிடங்களில் பல காவலர்கள் வேகமாக விமானநிலையத்தின் உள்ளே, வெளியே செல்லும் வழிகளை ஆக்கிரமித்தார்கள். அவர்கள் அக்ஷய் விவரித்த குட்டை மனிதனை உள்ளேயும், வெளியே போய்க் கொண்டிருப்பவர்களிடையேயும் தேடினார்கள். அந்தக் குட்டை மனிதன் அகப்படவில்லை. அவன் மாயமாக மறைந்திருந்தான்.
இம்மானுவல் அடுத்தபடியாக அக்ஷய் குட்டை மனிதனைக் கண்டதாகச் சொன்ன இடத்தை கண்காணித்து வந்த சிசிடிவி கேமிராப் பதிவுகளைப் பார்க்க ஆணையிட்டான். அந்த சிசிடிவி கேமிரா 10.15 முதல் பழுதாகி இருந்தது. அதைச் சற்று முன் தான் கண்டுபிடித்திருந்தார்கள். எப்படித் திடீர் என்று பழுதாகியது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை அந்தக் கேமிராவை அவர்கள் சரி செய்த போது நேரம் 10.42.
இம்மானுவல் சந்தேகத்துடன் டேனியலின் புகைப்படத்தை அக்ஷய்க்குக் காண்பித்தான். “உயரத்தை விடு. நீ பார்த்த ஆள் கிட்டத்தட்ட இவனை மாதிரி இருந்தானா?”
அக்ஷய் சொன்னான். “இந்த ஆளுக்கும் நான் பார்த்த ஆளுக்கும் சம்பந்தமே இல்லை.”
அந்த ஒரு பழுதான கேமிராவைத் தவிர மற்ற கேமிராக்களில் பிரச்சினை எதுவும் இல்லாததால் கடந்த இரண்டு மணி நேரமாக எல்லா வாசல்கள் வழியாகவும் உள்ளே வந்தவர்கள், வெளியே சென்றவர்களையும் கண்காணித்து சந்தேகப்படும்படியான
குட்டையான மனிதர் இருக்கும் பதிவை எல்லாம் சில குழுக்கள் சேகரித்துக் கடைசியில் அதையெல்லாம் அக்ஷய்க்குக் காண்பித்தார்கள். அனைத்தையும் அக்ஷய் சலிப்பில்லாமல் கவனமாய்ப் பார்த்தான். குட்டை மனிதன் ஒரேயொரு கேமிராப் பதிவில் சிக்கினான்.
அவன் ஒரு வாசல்
வழியாக வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தான். அவன் தலை குனிந்து தன் கையில் இருந்த அலைபேசியில் எதையோ
பார்த்தபடி உள்ளே வந்து கொண்டிருந்ததால் அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்
அது தான் தன்னைப் புகைப்படம் எடுத்த குட்டை மனிதன் என்பதை அக்ஷய் உறுதியாகச் சொன்னான். அவன் உள்ளே நுழைந்த நேரத்தை இம்மானுவல்
குறித்துக் கொண்டான். 10.02.
அடுத்தபடியாக
விமான நிலையத்தின் உள்ளே கேமிராப்பதிவுகளில் அவன் பதிவாகி இருந்ததை எல்லாம் பார்க்க
ஆரம்பித்தார்கள். அவன் உள்ளே நுழைந்த நேரம், வாசல் இரண்டும் தெரிந்த பின் வரவேற்பு ஹாலில் அவனைக் கவனிப்பது அவர்களுக்குக் கஷ்டமாயில்லை. அவன் தலை குனிந்து தன் அலைபேசியைப்
பார்த்துக் கொண்டே ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவன் தலை நிமிர்ந்து எந்தக் கேமிராவையும் பார்க்கவில்லை. அதனால் அவன் முகம் எதிலும் தெளிவாய்த்
தெரியவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் கேமிராவுக்கு எதிர் திசையைப் பார்த்தபடி தன் அலைபேசியை உயர்த்தி
எதோ செய்தான். பார்ப்பவர்களுக்கு அவன் எதோ புகைப்படம் எடுப்பது போல் இருந்தது. அதற்குத் தகுந்தாற் போல் எதோ ஒரு வெளிச்சமும்
அவன் அலைபேசியில் இருந்து வந்தது. அவன் மறுபடி அலைபேசியை மடியருகே பிடித்துக் கொண்டு அதில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் அக்ஷய் வந்த விமானத்திலிருந்து இறங்கி
ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க ஒரு கூட்டம் எழுந்து முன்னுக்கு வந்தது. அதன் இடையில் அவனும் இருந்தான். அதன் பின் அந்தப் பழுதடைந்த கேமிராப்
பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்பதை இம்மானுவல் அனுமானித்தான். அதற்குப்பின் அவன் எந்தக் கேமிராவிலும்
பதிவாகவில்லை.
ஏதோ ஒரு நெருடலும், யோசனையும் உந்த இம்மானுவல் அந்தக் குட்டை
மனிதன் முதலில் இரு கைகளையும் உயர்த்தி எதோ படம் பிடித்தது போல் செய்த நேரத்தைப் பார்த்தான். அந்த நேரம் 10.15. அதே நேரத்தில் தான் இந்தப் பக்கத்துக் கேமிரா பழுதாகியது. ஒருவேளை குட்டை மனிதன் படம் பிடித்ததல்லவோ
அது? ஏதோ அலைவீச்சைச் செலுத்தி இந்தக் கேமிராவைப்
பழுதடையச் செய்த வேலை தானோ அது?
இம்மானுவலுக்குச்
சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.
(தொடரும்)
Akshay's entry and his coolness superb. First time Gypsy is seen and that too by Akshay. Super episode.
ReplyDeleteஇவ்வார பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது. குட்டை மனிதனைக் கண்டு பிடிக்க கூர்மையான அலசல். அருமை
ReplyDeleteமிகத்தாமதமாகக் களத்திற்கு அக்ஷய் வந்தாலும், வந்து இறங்கியதில் இருந்தே சூடு பிடிக்கத் துவங்கி விட்டது. பலத்த எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு வாரமும் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅந்தக் காலத்தில் (1970-களில்) வாரப் பத்திரிக்கைகளில் தொடர்கதை படிக்கக் காத்திருந்த அதே உணர்வு.
வாழ்த்துகள், திரு. கணேசன்.
இலுமினாட்டியிடம் குட்டை மனிதனின் புகைப்படம் சிக்கி விட்டது... அதே நேரத்தில் அக்ஷயின் புகைப்படமும் விஸ்வத்திடம் சிக்கிவிட்டது... பரபரப்பு ஆரம்பம்💥💥💥
ReplyDeleteSir, the number is switched off.
ReplyDeleteNumber is same. Please try again.
Delete