சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 30, 2020

இல்லுமினாட்டி 60



னோகர் பெங்களூரில் ஒரு பெரிய பங்களாவில் இருந்தான். அவன் தோற்றம் நிறையவே மாறியிருந்தது. சிறையிலிருந்த போதிருந்த தோற்றத்திற்கும் இப்போதைய தோற்றத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று சொல்லும்படியாக எல்லாவற்றையும் மாற்றியிருந்தான். அவன் அதிகம் பங்களாவை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்தான். என்ன வேண்டும் என்றாலும் போனில் பேசியே தருவித்தான். தினமும் அவனைப் பற்றி என்ன செய்தி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வருகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்து வந்தான். அவன் தப்பித்ததற்கு மறுநாள் காவலர் இருவர் சஸ்பெண்ட் என்று செய்தி வந்திருந்தது. அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. பத்து லட்சம் ரூபாய் நன்றாக வேலை செய்கிறது என்றே அவன் நினைத்துக் கொண்டான்.

அவனுக்கு மூன்று தனி .டிக்கள் இருந்தன. அந்த மூன்றிலும் ஒன்றுக்கு ஒன்று எந்தச் சம்பந்தமும் இல்லாதவாறு அவன் பார்த்துக் கொண்டிருந்தான். சிறைப்படும் போது அவனிடம் இருந்த ஐ.டி, செல்போன் எண், விலாசம், அக்கௌண்ட் எல்லாம் போலீசாரால் எப்போதும் அலசப்படலாம் என்பதால் அவன் தப்பித்த பின் அந்த ஐ.டி சம்பந்தமான எல்லாவற்றையுமே பயன்படுத்துவதைத் தவிர்த்தான். அவன் தப்பித்தவுடன் இரவு உணவகத்திற்கு வந்து அவனை அழைத்துச் சென்ற நபர் அவன் தோற்றத்தை மாற்றி இங்கே வரை வந்து விட்டு விட்டுப் போனவன் அவனைப் பின் தொடர்பு கொள்ளவில்லை. இந்த வீட்டிலிருந்தும் என்னேரமும் கிளம்பிச் செல்ல அவன் தயார்நிலையில் இருந்தான். அங்கிருந்து அவன் கிளம்பினால் அடுத்தபடியாக மைசூரில் அவனுக்கு ஒரு பங்களா ஒளிந்து கொள்ள உதவுவதாக இருந்தது. விஸ்வத்தின் தொடர்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் அவன் இருந்தான். அவன் சிறையில் இருந்து தப்பித்து வந்தது விஸ்வத்தை மகிழ்ச்சியடைய வைக்கும் என்று அவன் எதிர்பார்த்தான். முன்பு போலவே மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க அவன் தயாராக இருப்பது விஸ்வத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவனுக்கு ஆசையாக இருந்தது.

அவனுடைய பங்களாவிற்கு எதிரில் இருந்த ஒரு வர்க்ஷாப்பில் அவனுடைய ரகசியக் காவலன் ஒருவன் வேலை செய்து வந்தான். அவன் வர்க்ஷாப்பில் வேலை செய்வது போல வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவனுடைய உண்மையான வேலை எதிர்ப்பங்களாவை யார் கண்காணிக்கிறார்கள் என்று கவனிப்பதாக இருந்தது. இரண்டு நிமிடத்திற்கு மேல் அந்தப் பங்களாவை யார் பார்த்தாலும் உடனடியாக மனோகருக்குப் போன் செய்து சொல்ல வேண்டும் என்று அவனுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. மனோகர் அந்தப் பங்களாவில் குடிபுகுந்த பிறகு அப்படிப் பார்த்தது ஒரே ஒருவன் தான். அவனும் போலீஸ் அல்ல, ஒரு சில்லரைத் திருடன் என்பதை அவனைத் தொடர்ந்து சென்ற மனோகர் ஆட்கள் கண்டுபிடித்தார்கள். பின் மனோகர் நிம்மதி அடைந்தான். விஸ்வத்தை ஒரே ஒரு முறை மீண்டும் தொடர்பு கொள்ள முடிந்தால் போதும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் நிறைவேறாததால் அந்த ஏமாற்றத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் அவனுக்கு இப்போது இல்லை. ஏன் இந்த முறை விஸ்வம் அவனைத் தொடர்பு கொள்ள இந்த அளவு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறான் என்ற கேள்வி திரும்பத் திரும்ப அவன் மனதில் எழுந்து கொண்டே இருந்தது. ஹரிணியைக் கடத்திய போது அவனிடம் பேசிக் கொண்டிருந்த விஸ்வத்தின் போன் எண்ணில் பின் அவன் எப்போதும் தொடர்பு கொண்டதில்லை. அவன் சிக்கிய பின் அந்த அலைபேசியில் இருந்து போன, வந்த எண்களெல்லாம் கண்டிப்பாக செந்தில்நாதன் கோஷ்டிக்குக் கிடைத்திருக்கும் என்பதால் அந்த எண்ணை மறுபடி பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தது. விஸ்வம் எப்போதோ அந்த அலைபேசி எண்ணைப் பயன்படுத்துவதை நிறுத்தியுமிருப்பான். விஸ்வத்தின் வேறு அலைபேசி எண் எதுவும் மனோகருக்குத் தரப்பட்டிருக்கவில்லை. இனி விஸ்வமாக அவன் சக்தியை உபயோகித்து அவனைத் தொடர்பு கொள்ளும் வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும். மனோகர் காத்திருக்கிறான்.
  


ல்லுமினாட்டியின் உளவுத் துறை ஆட்கள் அந்தச் சர்ச்சை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த போது பாதாள அறையில் விஸ்வமும், ஜிப்ஸியும் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு சிலைகள் போல அமர்ந்திருந்தார்கள். உளவுத் துறை ஆட்களில் ஒருவன் சர்ச் மேடைப் பகுதியில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த போது மின்னல் வேகத்தில் இயங்க விஸ்வம் தயாராக இருந்ததை ஜிப்ஸி கவனித்தான். நல்ல வேளையாக உளவுத் துறை ஆட்கள் அந்த பாதாள அறையைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் போய்க் கால் மணி நேரம் கழித்து ஜிப்ஸியும், விஸ்வமும் வெளியே வந்தார்கள்.

ஜிப்ஸி சொன்னான். “இனி நமக்கு இங்கே பிரச்னைகள் எதுவும் இருக்காது. அவர்கள் வந்து பார்த்து விட்டுப் போன இடம் என்பதால் மறுபடி வரும் வாய்ப்புகள் குறைவு”

விஸ்வம் தலையசைத்தான். இந்தச் சின்னச் சின்ன ஆசுவாசங்களால் சந்தோஷப்படும் மனநிலையில் அவன் இல்லை. அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஜிப்ஸி கேட்டான். “என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?”

“என் பழைய உடலோ, அது போன்ற உடலின் பாதி வலிமையான உடலோ எனக்குக் கிடைத்திருந்தால் கூட இப்போதே ஏதாவது செய்யக்கூடிய நிலைமைக்கு வந்திருப்பேன். இந்தப் போதையில் நலிந்த உடலை வலிமைப்படுத்துவது சுலபமாக இல்லை”

ஜிப்ஸி சொன்னான். “உன் உடலில் இருந்து உயிர் பிரிந்து போன அந்த ஓரிரு வினாடிகளுக்குள் உனக்குக் கூடு விட்டு கூடு பாய இன்னொரு உடல் கிடைக்க வேண்டும். அந்த உடலிலும் அப்போது தான் உயிர் போயிருந்திருக்க வேண்டும். அந்த ஓரிரு வினாடிகளுக்குள் அப்படி ஒரு உடல் கிடைக்கா விட்டால் பின் உன் முயற்சி எதுவும் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்காது. அந்த நேரத்தில் உனக்குக் கிடைத்த ஒரே உடல் இந்த உடல் தான். என்ன செய்வது?”

விஸ்வம் சொன்னான். “உண்மை. தான். இந்த உடலில் நான் எத்தனை முயன்றாலும் பழைய சக்திகளை முழுவதுமாகப் பெறும் வாய்ப்பு குறைவு. எத்தனை சதவீதம் திரும்பப் பெறுவேன் என்பது உன் கணிப்பு”

”இந்தச் சில நாட்களிலேயே உன்னுடைய முயற்சிகளால் நீ நிறையவே முன்னேறி இருக்கிறாய். போதையால் ஏறத்தாழ எல்லாமே சிதைந்து போயிருந்த உடம்பில் நீ கொண்டு வந்திருக்கும் கட்டுப்பாடு சாதாரணமானது அல்ல. இதே வேகத்தில் எல்லாம் போனால் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முக்கால் வாசி சக்திகளையாவது நீ கண்டிப்பாய் திரும்பப் பெறலாம் என்று நான் நினைக்கிறேன்”

நூறு சதவீதத்திற்குக் குறைவான எந்தச் சாதனையிலும் திருப்தி அடைய முடியாத விஸ்வம் மனதில் ஒருவிதக் கசப்பு நிறைந்து போனது. அவன் சொன்னான். “சேமிக்கும் சக்திகளை இழப்பதும் இப்போது வேகமாகவே இருக்கிறது. நான் சில சக்திகளை எந்த அளவுக்கு உபயோகப்படுத்த முடிகிறது என்று சில பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன முயற்சிகள் கூட வேகமாக என் சக்திகளை ண்டு போக வைத்து விடுகின்றன”

ஜிப்ஸி அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையை மட்டும் புரிதலோடு அசைத்தான். விஸ்வம் கேட்டான். “க்ரிஷைக் கவனித்துக் கொள்ள நான் செய்திருக்கும் ஏற்பாடு ஒரு பிரம்மாஸ்திரமாய் இருக்கப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இல்லுமினாட்டியில் இப்போது நிலைமை என்ன?”

ஜிப்ஸி சொன்னான். “அவர்கள் நீ பழைய வலிமையைப் பெற எல்லா முயற்சிகளையும் செய்வாய் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்து வலிமை பெற்று விட்டால் நீ செய்யக்கூடிய முதல் காரியம் இல்லுமினாட்டி தலைவரைக் கொல்வதாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பாதுகாவலனை இந்தியாவில் இருந்து வரவழைக்கப் போகிறார்கள். அவன் உண்மையான பெயர் அக்‌ஷய். அவனுடைய பட்டப் பெயர் அமானுஷ்யன்”

விஸ்வம் ஜிப்ஸியைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டான். “அவன் எனக்கு இணையானவனா?”     

(தொடரும்)
என்.கணேசன்

9 comments:

  1. சுவாரசியம்! மற்ற பகுதிகளையும் படிக்கிறேன்.

    ReplyDelete
  2. Super. Every phase has picked up the thrilling tempo. Very interesting.

    ReplyDelete
  3. மனோகர் தப்பித்த செய்தியை கேட்டு விஸ்வம் சந்தோஷ பட மாட்டான் மாறாக சந்தேகம் தான் படுவான்...உஷாராகி விடுவான்....

    அதற்குள் கிரிஷ் அல்லது இல்லுமினாட்டி விஸ்வத்தை நெருங்கிவிடும்...

    ReplyDelete
  4. விஸ்வத்திற்கு இணை அக்ஷய் இல்லை.
    அக்ஷய் அதற்கு எல்லாம் அப்பாற்பட்டவன்.

    ReplyDelete
  5. Sir. Is Illuminati book available at madurai?

    ReplyDelete
    Replies
    1. Please contact publisher at 9600123146 to know the details.

      Delete
  6. Sir. I got the book at madurai. Very nice, feel good novel. Hats off u sir. I believe that if my children ( who r in school going ) read your books, they r good human being in future.

    ReplyDelete