நல்ல விஷயங்களே கூட எல்லா விதங்களிலும் நன்மையைத் தருவனவாக
இருப்பதில்லை என்பதை விளக்க அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் எடுத்துக் கொண்ட விஷயங்கள் தைரியமும்,
சுகமும். இரண்டுமே நமக்கு வேண்டிய, பிடித்த விஷயங்களாகவே இருக்கின்றன என்றாலும் முக்குணங்களின்
கண்ணாடிகளில் பார்க்கும் போது அவற்றின் மறுபக்கமும் தெரிகின்றது.
பகவான் கூறுகிறார்:
யோகத்தினால் அசையாமல்
இருக்கும் எந்தத் தைரியத்தைக் கொண்டு மனம், பிராணன், புலன்கள்
இவைகளின் செயல்களை மனிதன் அடக்கி ஆள்கிறானோ அது சாத்வீக தைரியமாகும்.
அர்ஜுனா! பலனில்
பற்று வைத்தமையால் எந்தத் தைரியத்தைக் கொண்டு அறம், பொருள், இன்பங்களை
அடைவதிலேயே மனிதன் குறியாக இருக்கிறானோ அது ராஜஸ தைரியமாகும்.
பார்த்தனே! துர்ப்புத்தியுள்ளவன்
எந்தத் தைரியத்தினால் தூக்கத்தையும், பயத்தையும், துக்கத்தையும், கஷ்டத்தையும், கர்வத்தையும்
விடுவதில்லையோ அது தாமஸ தைரியமாகும்.
எது முதலில் விஷம்
போலிருந்து முடிவில் அமிர்தத்திற்குச் சமமாகுமோ அது சாத்வீக சுகமெனப்படும். அது தன்
புத்தி தெளிவினால் ஏற்படக்கூடியது.
விஷயங்களும், புலன்களும்
சேர்வதால் முதலில் எது அமிர்தம் போலிருக்குமோ, ஆனால், பிறகு முடிவில்
விஷம் போலாகுமோ அது ராஜஸ சுகமெனப்படும்.
எது முதலிலும், முடிவிலும்
தன்னை மயக்கமுறச் செய்யுமோ, தூக்கம், சோம்பல், மறதி இவைகளால்
உண்டாகுமோ அந்தச் சுகம் தாமஸ சுகம் எனப்படும்.
யோகநிலையினால் புலன்களை
அடக்கி ஆண்டு, பலனில் பற்று வைக்காமல் செயல்படும் தைரியம் சாத்வீகம். பலனில் பற்று
வைத்து ஆசைப்பட்ட விளைவுகளுக்காக உழைக்கும் தைரியம் ராஜஸம். துர்ப்புத்தி, தூக்கம்,
கர்வம், பயம், சோம்பல் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் தைரியம் தாமஸம்.
ஆக தைரியமே சில
தீமைகளுக்குக் காரணமாகி விடுகிறது. எதையும் எந்த மனிதன் செய்கிறான் என்பதற்குத் தகுந்தபடி
அதன் தன்மையும் மாறிவிடுகிறது என்பதற்கு இந்த விளக்கமே நல்ல உதாரணம். விடாமுயற்சி நல்ல
விஷயம் தான். ஆனால் எதை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
தீமைகளையும், முட்டாள்தனங்களையும், பிரச்னைகளையும் விடாமல் தைரியமாகப் பிடித்துக் கொண்டிருப்பது
உண்மை அறிவல்ல.
அடுத்தது சுகங்கள்.
நல்ல விஷயங்கள் ஆரம்பத்தில் துன்பமாக இருந்து முடிவில் இன்பமாக மாறிவிடுகின்றன. தீயவை
ஆரம்பத்தில் இன்பமாக இருந்து முடிவில் முடிவற்ற துன்பமாக அமைந்து விடுகின்றன.
நல்ல பழக்கங்களை
உருவாக்கிக் கொள்ளும் போது ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனாலும் அதை விடாமல்
முயற்சிக்கிறவன் முடிவில் அளவில்லாத பலன்களை அடைகிறான். உதாரணத்திற்கு உடற்பயிற்சி
மற்றும் தியானம் இரண்டையும் எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் இரண்டும் கஷ்டங்கள் தான்.
உடலும் வளையாது. மனமும் பிடிகொடுக்காது முரண்டு பிடிக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில்
கண்டிப்பாக அதில் ஈடுபட்டே தீர்வேன் என்று உறுதியுடன் முயல்பவன் போகப் போக உடலும் மனமும்
விருப்பப்பட்டபடி இசைவதைக் காண்பான். முடிவில் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பலனாகப்
பெறுகிறான்.
போதைப் பழக்கத்தை
உதாரணமாக எடுத்துக் கொள்வோம். போதை வஸ்துக்கள் ஆரம்பத்தில் சுகமாகத் தானிருக்கும்.
அதை உட்கொள்ளும் போது இன்பமாகவும், சொர்க்கத்தில் மிதப்பது போலவும் தான் இருக்கும்.
போகப் போக அது எத்தனை கிடைத்தாலும் போதாமல் போகும். முடிவில் துன்பத்தையும் அழிவையும்
தான் அது ஏற்படுத்தும். இது ராஜஸத்திற்கு ஒரு நல்ல உதாரணம்.
சோம்பலை எடுத்துக்
கொள்வோம். செய்ய வேண்டிய வேலையையும் செய்யாமல் தூங்கிக் கிடப்பதும், சோம்பிக் கிடப்பதும்
சுகம் போலத் தோன்றினாலும் அது கஷ்டமான வேலையைத் தவிர்க்கும் மயக்கம் தானே ஒழிய உண்மையில்
அது எந்தச் சுகத்தையும் தருவதில்லை. போகப்
போக அவை துன்பங்களை அதிகரித்துக் கொண்டு தான் போகும். தாழ்ந்தே இருக்கும் நிலை தான்
நீளும். ஆரம்பத்திலும் மயக்கம், முடிவிலும் அந்த மயக்கத்தோடு கூடிய பெருந்துன்பம் என்கிற
நிலையை ஏற்படுத்தும் தாமஸத்திற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
இமிடேஷன் ஆஃப் க்ரைஸ்டில்
தாமஸ் கெம்பிஸ் சொல்லும் வாக்கியம் மிகப்பிரபலம். “சிற்றின்பங்கள் யாவும் முதலில் ஆனந்தமாக
இருக்கும். ஆனால் இறுதியில் மானக்கேட்டிலும் மரணத்திலும் தான் வந்து முடியும்” அதனால்
தான் தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும், ஒளியை இருள் என்றும், இனிப்பைக்
கசப்பென்றும் கூறுவோரின் கதி அதோகதி தான் என்று பைபிளும் கூறுகிறது.
அதன் பின் நான்கு
வர்ணத்தவருக்கும் இயல்பாக உண்டான கர்மங்களை விளக்கிவிட்டு பகவான்
கூறுகிறார்:
தம் தம் கர்மத்தில்
சிரத்தை கொள்ளும் மனிதன் சித்தியை அடைகிறான். தன் கர்மத்தில்
ஈடுபடுகிறவன் எவ்வாறு சித்தியடைகிறான் என்பதைச் சொல்கிறேன் கேள்.
எந்தப் பரம்பொருளிலிருந்து
சகல உயிர்களும் உண்டாயினவோ, எந்தப் பரம்பொருள்
இந்த உலகமனைத்தும் பரவியிருக்கிறதோ அந்தப் பரம்பொருளைத் தன் இயல்பான கடமைகளினால் வழிபட்டு, மனிதன்
பரம சித்தியடைகிறான்
தனது சுதர்மக் கடமையில்
சிரத்தையுடன் ஈடுபடும் மனிதன் தான் பிறந்த நோக்கத்தை நிறைவு செய்து விடுவதால் சித்தியை
அடைகிறான். அவன் கடமையே அவனுடைய வழிபாடாகி விடுகிறது. இறைவன் எதற்கு அவனைப் படைத்தானோ
அந்த வேலையைச் சிரத்தையுடன் செய்து அவன் வாழ்க்கையையே அவன் வழிபாடாக்கிக் கொள்கிறான்.
அவனுடைய கர்ம யோகச் செயல்களால் எண்ணற்ற உயிர்கள் எத்தனையோ வகைகளில் பலன் அடையக்கூடும்.
அந்த உயிர்களிலும், உலகனைத்தும் வியாபித்திருக்கும் பரம்பொருள் அதனாலேயே மனம் குளிர்ந்து
திருப்தியடையும் என்பதால் அந்த வழியிலேயே அந்தக் கர்மயோகி பரம சித்தியடைகிறான்.
- என்.கணேசன்
- என்.கணேசன்
மிக்க நன்றி ஐயா....
ReplyDelete