சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 6, 2020

சத்ரபதி 132


ஜீஜாபாயின் கோபத்தைக் கண்டு சிவாஜி வாய்விட்டுச் சிரித்தான். அவள் கூடுதல் கோபத்துடன் சொன்னாள். “சிவாஜி இது விளையாட்டு விஷயம் அல்ல. மண்ணும், நீரும், கூழாங்கற்களும், குதிரைச் சாணமும் ஒரு போதும் பிரசாதமாகவோ, ஆசிர்வாதமாகவோ ஆகாது. இது எனக்குப் பிடிக்கவில்லை.”

சிவாஜி பொறுமையாகத் தாயை அமர வைத்து விளக்கினான். “தாயே இந்த மண்ணைத் தந்திருப்பது மேலும் பல நிலப்பகுதியை நான் ஆக்கிரமித்து ஆள்வேன் என்ற ஆசியைக் குறிக்கிறது. நீரைத் தந்திருப்பது நிலத்தில் மட்டுமல்லாமல் நீரிலும் என் ஆதிக்கம் விரிவாகவே தொடரும் என்ற ஆசியைக் குறிக்கிறது. இந்தக் கூழாங்கற்களை அவர் தந்திருப்பது கற்களால் வலிமையாக கட்டப்பட்டு இருக்கும் கோட்டைகளையும் நான் இனிப் பெறுவேன் என்ற ஆசியைக் குறிக்கிறது. குதிரைச்சாணம் குதிரைப்படையை நான் மேலும் விரிவாக்கிக் கொள்வேன் என்ற ஆசியைக் குறிக்கிறது. இது பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்களே?”

ஜீஜாபாய் வெட்கத்துடன் சொன்னாள். “உன் அளவு ஆழ்ந்து சிந்தித்துப் புரிந்து கொள்ள எனக்குத் தெரியவில்லை மகனே… அதனால் தான் அவசரப்பட்டு கோபமடைந்து விட்டேன்”


சிவாஜி சிங்கக்கோட்டையின் முகப்பில் தானாஜி மலுசரேக்கு ஒரு சிலையும், மண்டபமும் எழுப்பினான்.
அந்தச் சிலை முன் மானசீகமாக அவன் தன் நண்பனுக்கு வாக்குக் கொடுத்தான். “நம் கனவை வாழ வைக்க நீயும், பாஜி பசல்கரும், எண்ணற்ற வீரர்களும் உயிரைக் கொடுத்திருக்கிறீர்கள் நண்பா. அது கண்டிப்பாக வீண் போகாது. நானும் உயிரைக் கொடுத்தாவது அந்தக் கனவைக் காப்பேன். நமக்குப் பின்னும் நம் கனவு வாழும். அப்படி நம் கனவை வாழ வைக்க எத்தனை ஆழத்திற்கு அஸ்திவாரம் போட வேண்டுமோ அத்தனை ஆழத்திற்கு அஸ்திவாரம் போட்டே தீருவேன்…..”

அன்று மாலையே அவன் முக்கியஸ்தர்கள் அனைவரையும் கூட்டிச் சொன்னான். “இனி ஒவ்வொரு கோட்டையாக நம் கோட்டைகள் அனைத்தையும் திரும்பப் பெறுவோம். முகலாயர்களுக்குப் பாடம் கற்பிப்போம்.  அடுத்து நாம் கைப்பற்ற வேண்டியது வலிமை மிக்க புரந்தர் கோட்டையும், மாஹுலிக் கோட்டையும்….”

சூர்யாஜி மலுசரேயும், யேசாஜி கங்கும்  உடனே எழுந்து நின்றார்கள். சூர்யாஜி சொன்னான். “அரசே புரந்தர் கோட்டையை மீட்கும் பொறுப்பினை என்னிடம் தாருங்கள்….”

சூர்யாஜி மலுசரே அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவன் தான். தீரமும், திறமையும் வாய்ந்தவன் தான். ஆனாலும் சிவாஜி சற்றுத் தயங்கினான். சில நாட்களுக்கு முன் தான் தானாஜியை அந்தக் குடும்பம் இழந்திருக்கிறது. போரில் எதுவும் நிச்சயமில்லை. இன்னொரு இழப்பு நேர்ந்தால் அந்தக் குடும்பம் தாங்காது என்பது மட்டுமல்ல சிவாஜியும் தாங்க மாட்டான்…..

சூர்யாஜி மலுசரேயால் சிவாஜியின் எண்ணங்களைப் படிக்க முடிந்தது. அவன் உறுதியாகவும், வேண்டுதலோடும் சொன்னான். “அரசே. சிங்கக் கோட்டையில் உதய்பான் வலிமை வாய்ந்த சக்தியாக இருந்தான். ஆனால் அந்த அளவு புரந்தர் கோட்டையின் தலைமை வலிமை வாய்ந்தது அல்ல. கோட்டை மட்டுமே வலிமை வாய்ந்தது. அதைச் சமாளிக்க என் வீரமும், என் திறமையும் போதும் என்று நம்புகிறேன் மன்னா. அண்ணன் சென்ற பின்னும் அவன் சென்ற லட்சியப்பாதையில் நானும் சென்று கொண்டிருக்கிறேன் என்று அவனுக்கு நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தரும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்….”

அவனையே சற்று நேரம் கூர்ந்து பார்த்து விட்டுச் சிவாஜி சம்மதித்தான். “நல்லது சூர்யாஜி. புரந்தர் கோட்டையைக் கைப்பற்றிக் கொடுக்கும் பொறுப்பை உனக்குத் தருகிறேன். அடுத்தது மாஹூலிக் கோட்டை….”

யேசாஜி கங்குடன், சிவாஜியின் மந்திரியும் மாவீரனுமான மோரோபந்த் பிங்க்ளே எழுந்து நின்றான். இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். ”மன்னா அந்தப் பொறுப்பை எனக்குத் தாருங்கள்…..”

யேசாஜி கங்கைப் புறக்கணித்த சிவாஜி அந்தப் பொறுப்பை மோரோபந்த் பிங்க்ளேக்குத் தந்தான்.

மீதமுள்ள சில கோட்டைகளின் பெயரைச் சிவாஜி சொல்ல ஒவ்வொன்றுக்கும் யேசாஜி கங்க் உட்பட பல தளபதிகள் எழுந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் யேசாஜி கங்க் தவிர மற்றவர்களுக்கே சிவாஜி வாய்ப்பு கொடுத்தான்.

யேசாஜி கங்க் முறைக்க சிவாஜி அமைதியாகச் சொன்னான். “எல்லாரும் தங்கள் திட்டங்களை விரிவாக யேசாஜி கங்கிடம் தெரிவித்து அவன் ஒப்புதல் பெற்ற பின்பே தாக்குதல்களைத் தொடங்க வேண்டும்….”

எல்லோரும் கலைந்த பின் யேசாஜி கங்க் கோபத்துடன் சிவாஜியைக் கேட்டான். “ஏன் சிவாஜி நானும் இறந்து விடுவேன் என்று பயப்படுகிறாயா?”

சிவாஜி சொன்னான். “சுவாமி இராமதாசர் சொன்னது போல மரணம் வரவேண்டிய காலத்தில் எந்த வழியிலும் வரலாம் என்பதை நான் அறிவேன் யேசாஜி. அதைத் தடுக்க யாராலும் முடியாது என்பதையும் அறிவேன். உனக்கு இத்தனை திட்டங்களையும் பரிசீலிக்கும் பொறுப்பை நான் முன்பே நிச்சயித்து விட்டதால் தான் உன்னைக் களத்தில் நான் இறக்கவில்லை….”

யேசாஜி கங்க் நண்பனைக் கூர்ந்து பார்த்தான். சிவாஜியின் முகத்தை வைத்து அவன் மனதில் வைத்திருக்கும் வித்தையை அவனுடன் பிள்ளைப் பிராயத்திலிருந்து பழகியிருந்தும் அவனாலும் அறிய முடியவில்லை.

சூர்யாஜி மலுசரே புரந்தர் கோட்டையை ஒரு நள்ளிரவில் படையுடன் திடீரென்று உள்ளே புகுந்து திறமையாகப் போரிட்டுக் கைப்பற்றினான். அங்கும் ஹர ஹர மகாதேவ் என்ற முழக்கம் வானைப் பிளந்தது. வெற்றி எளிதில் கிடைத்தது. ஆனால் மோரோபந்த் பிங்க்ளேக்கு மாஹூலிக் கோட்டையைக் கைப்பற்ற இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. சிங்கக் கோட்டையும் புரந்தர் கோட்டையும் சிவாஜியால் கைப்பற்றப்பட்டவுடனேயே உஷாரான முகலாயர்கள் மாஹூலிக் கோட்டையின் பாதுகாப்பை அதிகரித்திருந்தது தான் அதன் காரணமாய் இருந்தது. ஆனாலும் அடுத்தடுத்து ஐந்து கோட்டைகளை சிவாஜியின் படை வெற்றி கொண்டது.


ந்தச் செய்திகளை வரிசையாகக் கேள்விப்பட்ட ஔரங்கசீப் கடைசியாகச் செய்தி கொண்டு வந்த வீரனிடம் கேட்டான். “நம் வீரர்கள் நேரா நேரத்தில் சாப்பிடுகிறார்கள் அல்லவா? அதிலெந்தக் குறையும் இல்லையே?”

அந்த வீரன் தலை குனிந்து நின்றான். அவனை அனுப்பி விட்டு ஔரங்கசீப் தன் மந்திரியிடம் கேட்டான். “முவாசிம் என்ன சொல்கிறான்?”

மந்திரி தயக்கத்துடன் சொன்னார். “அவர் சிவாஜியைச் சமாளிக்கக் கூடுதல் படை வேண்டும் என்று கேட்டிருக்கிறார் அல்லவா சக்கரவர்த்தி. அதற்குப் பின் அவர் எதுவும் கேட்கவுமில்லை. சொல்லவுமில்லை”

ஔரங்கசீப் கடுங்கோபம் அடைந்தான். “வீரம் என்பது தானாக வர வேண்டும் மந்திரியாரே. யாருக்கும் சொல்லிக் கொடுத்து அது வருவதில்லை. இவர்களுடைய செயலற்ற தன்மையைப் பார்த்தால் பேசாமல் நானே சிவாஜிக்கு எதிராக தக்காணத்துக்குப் படை எடுத்துப் போய் விடலாம் போல் தோன்றுகிறது….”

சக்கரவர்த்தி அப்படிச் சொன்னாலும், அரியணை பறிபோகுமோ என்ற பயத்தில் தலைநகரை விட்டுக் கண்டிப்பாகச் செல்ல மாட்டார் என்பதை அறிந்திருந்த மந்திரி மௌனமாகவே நின்றார். அமைதியாய் ஒழுங்காய் இருந்த சிவாஜியை உசுப்பி எழுப்பி ஆத்திரப்படுத்தியதால் தானே இத்தனை பிரச்சினைகள் என்று நினைத்தாலும் அதை வாய் விட்டு அவர் சொல்ல முடியுமா என்ன?

ஔரங்கசீப்புக்கு சிவாஜியை உடனடியாகக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பது இப்போது மிக முக்கியமாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது. நீண்ட ஆலோசனைக்குப்  பின் அவன் சிறந்த படைத்தளபதிகளான முகபத்கான் மற்றும் தௌத்கான் இருவர் தலைமையிலும் படைகளைத் தக்காணத்துக்கு அனுப்பி உத்தரவிட்டான்.

பின் ஔரங்கசீப் மகன் முவாசிம்முக்கு ஒரு கடிதம் எழுதினான். “மகனே. வெற்றியாளர்கள் சாதனைகளைத் தேடுகிறார்கள். தோல்வியாளர்கள் காரணங்களைத் தேடுகிறார்கள். தேடுவதை இருவருமே தங்கள் வாழ்க்கையில் காண்கிறார்கள் என்பதே இனிப்பும் கசப்புமான உண்மை. நான் நீ கேட்டபடி கூடுதல் படைகளை அனுப்பி உள்ளேன். இதற்கு முன்பே தில்லர்கானையும் அனுப்பி இருந்தேன். படைகளையும், படைத்தலைவர்களையும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு சிவாஜியை வெல்லப்பார். வெல்ல முடியாவிட்டாலும் அவன் மேற்கொண்டு நமக்கு எதிராக எந்த வெற்றியையும் அடைய நீ அனுமதிக்காதே….”

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. Blessings of Ramdas, sentiments of Sivaji and letter of Aurangazeb- all are superb.

    ReplyDelete
  2. சிவாஜிக்கு வழங்கிய ஆசியின் விளக்கம் அருமை....

    ReplyDelete
  3. Aurangzeb s statements to his son is awesome.

    ReplyDelete