அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
இன்று அமேசான் கிண்டிலில் என் ஆன்மீகச் சிந்தனைகளின் தொகுப்பு “பிரசாதம்” வெளியாகியுள்ளது. லிங்க்.
https://www.amazon.in/dp/B08429C2L1
நூலின் முன்னுரை
ஆன்மீகம் மனிதனை இறைநிலையை உணரவும்
பிரதிபலிக்கவும் தூண்டுகிறது என்பதே அதன் நோக்கமும் அவசியமுமாக இருக்கிறது.
ஆன்மீகத்தின் மூலமாக இறைவனின் உள்ளம் குளிர வைக்கவும், அதன் மூலமாக அருள் பெறவும்
மனிதன் முயல்வது அவனது ஞானத்தின் குறைபாடாகவே கருத வேண்டும். ஏனென்றால் உலகத்தைப்
படைத்துக் காக்கும் இறைவன் தன் படைப்புகள் தன்னைத் தொழ வேண்டும் என்றும், கௌரவிக்க
வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் என்று நினைப்பதே இறைவனைத் தன் தரத்துக்கு
மனிதன் இழுக்கும் முயற்சியாகவே எண்ண வேண்டும்.
நம் முன்னோரின் கதைகளிலும், புனித நூல்களிலும் பேரறிவையும், ஞானத்தையும் கொண்ட
ஆழ்ந்த கருத்துகளும் இருக்கின்றன. அதே போல் அறிவுக்கு உகந்ததாய் இல்லாத
கற்பனைகளும், அஞ்ஞான இடைச்செருகல்களும் கூடவே இருக்கத் தான் செய்கின்றன. ஒரு
மனிதன் சொல்லும் சாதாரண வாக்கியமே கூட ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல ஆரம்பித்தால்
ஐம்பதாவது ஆள் சொல்லும் வாக்கியம் ஆரம்ப வாக்கியத்துக்குச் சற்றும்
சம்பந்தமில்லாததாகவே இருக்கும் வேடிக்கையை நம்மால் பார்க்க முடியும். அப்படி
இருக்கையில் இறை தூதர்களாலும், ஞானிகளாலும் சொல்லப்பட்ட கருத்துகள் எந்த அளவு அதே
புனிதத்துடன் சரியாக நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன என்பது கேள்விக்குறியே.
இறை வார்த்தைகளாகவும், ஞானிகள் வார்த்தைகளாகவும் இன்று ஆன்மீக மார்க்கத்தில்
சொல்லப்படுபவை எந்த அளவு சரியாக இருக்கும் என்பதை மனிதன் தன் அறிவாலும்,
பக்குவத்தாலுமே அறிய முடியும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளும், அறிவைப்
பயன்படுத்தாத பின்பற்றல்களும் ஆன்மீகத்தை மூட நம்பிக்கைகளாகவும், நாத்திகத்தை விட
மோசமானதாக ஆக்கி விட முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஆகவே உண்மையின் உரைகல் நம் அறிவாகவும், ஞானமாகவும், பக்குவமாகவுமே இருக்க
வேண்டும். அப்படி உண்மையாக இருப்பதையே ஒருவன் ஆன்மீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த ஆன்மீகமே ஒருவனை இறைநிலைக்கும், மானுட நன்மைக்குமாய் உயர்த்தும். அந்த
ஆன்மீகமே நாம் நாட வேண்டியதும். பின்பற்ற வேண்டியதுமான மார்க்கம்.
அந்த வகை ஆன்மீகத்தையும், ஞானத்தையும், வாழ்க்கை நெறியையும் அலசும் சில சிந்தனைகளைத்
தொகுத்து “பிரசாதம்” என்ற இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். இந்த ஆத்ம சிந்தனைகள்
உங்களுக்குள் ஒரு தேடலையும், தெளிவையும், மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தும்
என்பதற்கு உறுதி அளிக்கிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
வாழ்த்துக்கள் ஐயா. ஆன்மீகத்தில் இது போன்ற படைப்புகள் அதிகம் தர வேண்டும். முன்னுரையே கனகச்சிதம்.
ReplyDeleteமுன்னுரையே அற்புதமாக உள்ளது... இந்த நூலை விரைவில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது...
ReplyDelete