ராஜேஷ் என்ற அந்த சக கைதி வந்ததிலிருந்து மனோகரின் மனக்கலக்கம் குறைந்திருந்தது. அவனுடைய பிரச்சினைகள் குறையவில்லை. விடிவுகாலம் அவன் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. செந்தில்நாதன் அதற்குப்பின் அவனைப் பார்க்கவோ, பேசவோ வரவில்லை. அவர் அவன் கணக்கில் எந்த வழக்குகளை எல்லாம் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாரோ, அவனுக்குத் தெரியவில்லை. விஸ்வத்தின் சக்தி இன்னும் அவனை எட்டவில்லை. அவன் இருக்கிறானா இல்லை இறந்து விட்டானா என்றும் தெரியவில்லை. ஆனாலும் கூட அவன் மனக்கலக்கம் குறைந்திருக்கிறது என்றால் காரணம் ராஜேஷின் கலகலப்பான பேச்சினால் விழித்திருக்கும் நேரங்களில் அவன் கவலைகளை மறந்திருந்தது தான். ராஜேஷ் தன்னுடைய சிறிய பெரிய குற்றங்களைச் சுவாரசியமாக அவனிடம் சொன்னான். எப்படியெல்லாம் போலீஸை ஏமாற்றி இருக்கிறான் என்பதை விவரித்துப் பெருமையாகச் சொன்னான். அவ்வப்போது மாட்டிக் கொண்டது எப்படி என்பதையும் அவன் மறைக்கவில்லை. மாட்டிக் கொண்டாலும் குறைவான தண்டனையைப் பெறுவது எப்படி, சீக்கிரமே சிறையிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்றெல்லாம் கூட மனோகருக்கு அவன் விளக்கினான். இப்படி மாட்டிக் கொள்வதிலும், தப்பிப்பதிலும், வெளியேறுவதிலும் இவ்வளவு சூட்சுமங்களா என்று மனோகரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
ராஜேஷ் அத்தனை விளக்கமாகத் தன் குற்றங்களைச் சொன்னாலும் மனோகர் தான் ஜெயிலுக்கு வந்த விதத்தை அவனிடம் விளக்கமாகச் சொல்லி விடவில்லை. முதலமைச்சர் குடும்பத்துக்கு எதிரானவன் தன் முதலாளி என்றும், அந்தப் பகை காரணமாக முதலாளி செய்ய வைத்த ஒரு செயலில் பிடிபட்டு விட்டதாக மட்டும் சுருக்கமாகச் சொன்னான்.
“உன் முதலாளி உன்னை ஜாமீன்ல எடுக்க வரலயா?” ராஜேஷ் கேட்டான்.
“அவர் என்ன ஆனார்னே தெரியலை. அவர் கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லை.”
ராஜேஷ் சொன்னான். “காரியம் ஆகணும்னா நம்ம கிட்ட முதலாளிக தாராளமா இருப்பாங்க. மாட்டிகிட்டா, நம்மளால அவங்களுக்குப் பிரச்சன தான்னா அப்பறம் அவங்களப் பிடிக்க முடியாது. இது தான் உலகம்”
மனோகர் சொன்னான். “இவர் அப்படிப்பட்டவர் இல்லை ராஜ்…”
‘இந்தக் கலிகாலத்தில் இப்படியும் ஒரு வெகுளியா?’ என்பது போல் ராஜேஷ் அவனைப் பார்த்தாலும் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. குடைந்தும் கேட்கவில்லை.
தொடர்ந்து வளவளவென்று பேசும் ராஜேஷ் சில சமயங்களில் திடீரென்று மௌனமாக இருப்பதும் உண்டு. அப்போது அவன் என்ன யோசிப்பானோ தெரியாது. அந்தச் சமயங்களில் அவன் மனோகரை வெறித்துப் பார்ப்பான் ஆரம்பத்தில் மனோகர் அவனிடம் கேட்டிருக்கிறான். “ஏன் அப்படிப் பார்க்கிறாய்?”
“ஒன்றுமில்லை” என்று சொல்லி ராஜேஷ் பார்வையைத் திருப்பிக் கொண்டு சுவரையோ, இரும்புக்கம்பிக் கதவையோ வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விடுவான். அவனுக்கும் கவலைப்படவோ, யோசிக்கவோ ஏதாவது இருக்கும் போல என்று மனோகர் எண்ணிக் கொள்வான்.
இரவு உறங்கும் நேரங்களில் மனோகர் எண்ணமெல்லாம் அதிகமாக விஸ்வத்தைப் பற்றியே இருக்கும். விஸ்வத்தின் சக்தி அலைகள் தொடர்ந்து அவனை எட்டவேயில்லை. ஒரு வேளை இறந்து போயிருப்பானா என்ற சந்தேகம் அவனுக்கு மறுபடியும் வரும். மனதில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் வடிந்து போகும். ஆனாலும் ஏதோ ஒன்று அவனை நம்பிக்கை கொள்ளச் செய்யும்…
அப்படி ஒரு நாள் இரவு உறக்கம் வராமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கையில் தான் மனோகருக்கு விஸ்வத்தின் சக்தி அலைகள் மிக மிக மெலிதாக வந்து போனது போல் இருந்தது. சில வினாடிகள் தான் என்றாலும், உணர்ந்தது மிக மிக மெலிதாகத் தான் என்றாலும் அவன் உணர்ந்ததை அவனால் மறுக்க முடியவில்லை. இதயத்துடிப்புகள் ஓட்டமெடுக்க, உடம்பெல்லாம் வியர்க்க மனோகர் சடாரென்று எழுந்து உட்கார்ந்தான்.
வாஷிங்டனில் அந்த வயதான இல்லுமினாட்டி உறுப்பினர் கர்னீலியஸ் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். தனக்கும் பிரச்சினை வராமல், இல்லுமினாட்டிக்கும் பிரச்சினை வராத ஒரு வழியை அவர் யோசித்து வைத்திருந்தார். அதை நிறைவேற்ற அவர் காலை ஒன்பது மணிக்கு காரில் வெளியே கிளம்பினார். வெளியே வந்த போது அவருடைய அனுபவமுள்ள கூர்மையான கண்கள் சுற்று வட்டாரத்தை ஆராய்ந்தன. எதுவும் வித்தியாசமாகவோ, சந்தேகப்படுகிற மாதிரியோ இல்லை. திருப்தி அடைந்தவராக பயணத்தை ஆரம்பித்தார்.
இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்குப் பலத்த பாதுகாப்பு உண்டு. அவர்கள் வெளியே செல்லும் போது தேவைக்கேற்ற மாதிரி அந்தப் பாதுகாப்பு வீர்ர்களும் கூடவே செல்வார்கள். அது இரண்டு விதங்களில் இல்லுமினாட்டிக்குப் பயன்பட்டது. முதலாவது அவர்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பு. இரண்டாவது அந்த உறுப்பினர்களின் வெளி நடவடிக்கைகள், யாரை எல்லாம் சென்று சந்திக்கிறார்கள் என்ற தகவல்கள் எல்லாம் அந்தப் பாதுகாப்பு வீர்ர்கள் மூலமாக இல்லுமினாட்டியின் தலைமையின் கவனத்திற்கு அவ்வப்போதே போய்ச் சேரும். மிகவும் சூட்டிப்பாகவும், அதிகாரபூர்வமாகவும் செயல்படும் இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும், ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டி இருக்கும் உறுப்பினர்களுக்கும் மற்றவர்களை விட அதிகப் பாதுகாப்பு இருக்கும்.
கர்னீலியஸ் ஆரம்பத்திலிருந்தே அதிகார வர்க்கத்தில் இருந்ததில்லை. பழங்கால இல்லுமினாட்டி ஏடுகள், சின்னங்கள், கோயில்கள் ஆகியவை குறித்த ஆழ்ந்த ஞானம் உள்ள அவர் யாருக்கும் எதிரியோ, எதிரியாக முடிந்தவரோ அல்ல. இல்லுமினாட்டியின் அறிஞர் என்ற அளவிலேயே உறுப்பினராக இருக்கும் அவர் ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு தேவை இல்லை என்று இல்லுமினாட்டிக்குத் தெரிவித்தவர். ஆனாலும் ஆரம்பத்தில் அவருக்கு சிறிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்பட்டது. ஆனால் நூலகங்கள், புத்தகங்கள், வரலாற்றுச் சின்னங்கள் குறித்த ஆராய்ச்சிகள் என்று சதாசர்வகாலம் இருந்த அவருக்குப் பிற்காலத்தில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் எப்போது தேவைப்பட்டாலும் அவர் பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்னீலியஸுக்கு பாதுகாப்பு தேவைப்படவில்லை. இல்லுமினாட்டி உறுப்பினராக ஆரம்பத்தில் அவர் கற்றுக் கொண்ட முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும், கவனமாக இருப்பதையும் கைவிடாமல் இருந்த அவருக்கு இன்று வரை பயம் ஏற்பட்டதில்லை.
ஆனால் இன்று அவருக்கு மடியில் கனம் இருப்பதால் ஒரு இனம் புரியாத பயம் சிறிதளவு ஏற்பட்டிருந்தது.
அது அர்த்தமில்லாதது என்பதை அவர் அறிவார். அப்படி ஒரு ஆவணம் இருப்பதே யாருக்கும் தெரியாது. அதனால் அது அவரிடம் இருக்கக்கூடும் என்று யாரும் சந்தேகப்படும் வாய்ப்பு கடுகளவும் இல்லை. அவரே அந்த இரகசிய ஆவணத்தைப் படித்துக் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தது. கூடு விட்டுக் கூடு பாயும் அந்த விசித்திரத் தகவல் தவிர அவருக்கே கூடுதலாக நினைவில்லை. ஏன் அவர் அந்த ஆவணத்தைப் பற்றியே விஸ்வம் இல்லுமினாட்டியில் சேரும் வரை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன் வங்கி லாக்கரில் உள்ளே வைத்துப் பூட்டியதோடு சரி, பின் அதை அவர் மறந்தே விட்டிருந்தார்.
விஸ்வம் இல்லுமினாட்டியில் சேர்வதற்கு முன் அவனுக்கு இளமையில் இருந்தே வரும் கனவைப் பற்றிச் சொன்னதாகத் தகவல் வந்த போது, அவன் கனவில் வந்தது சிகாகோவின் இல்லுமினாட்டிக் கோயிலும், கோயில் அடித்தளத்தில் இருந்த ரகசிய ஓலைச்சுவடியும் தான் என்று பேசப்படவும் ஆரம்பித்த போது எல்லோருக்கும் இல்லுமினாட்டி இரகசியக் காப்பகத்தில்
வைக்கப்பட்டிருந்த அந்த ஓலைச்சுவடி நினைவுக்கு வந்தது என்றால் கர்னீலியஸுக்குக் கூடுதலாக
அவருடைய வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஆவணமும் அப்போது நினைவுக்கு வந்தது.
ஆனால் விஸ்வம் இறந்தும்
இன்னொரு உடலில் உயிர் பெற்று வந்திருக்கக்கூடும் என்ற செய்தி கிடைத்த போது அவர் அதிர்ந்து
போனார். காரணம் இந்த நம்ப முடியாத செய்தி, நடக்கவே முடியாது என்று அவர் நம்பி இருந்த
செய்தி அந்த இரகசிய ஆவணத்தில் பதிவாகி இருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு முறை
படித்திருந்த அந்த ஆவணத்தில் அவருக்குச் சரியாக முழுமையாக நினைவிருக்கும் இந்தச் செய்தி
உண்மை ஆகிறது என்றால் அதற்குப் பின்னால் உள்ள அவருக்குச் சரியாக நினைவில்லாத தகவல்களும்
உண்மையாகவே இருக்கக் கூடும். அவை என்ன என்று தெரிந்து கொள்வதும், தெரியப்படுத்த வேண்டியவர்களுக்குத்
தெரியப்படுத்துவதும் மிக முக்கியம்..
அவருடைய கார் வங்கியை
நோக்கி விரைய ஆரம்பித்தது.
(தொடரும்)
There is no shortage for tension and twists in this novel. Enjoying.
ReplyDeleteஅப்ப மனோகர் செந்தில்நாதனிடம் உண்மையை சொல்ல மாட்டான் போலிருக்கிறதே....!!!
ReplyDeleteகர்னீலியஸ் அந்த ஆவணத்தில் என்ன பார்ப்பார்...? அறிய ஆவலாக உள்ளதே...!!!
பிடித்த தின்பண்டம் கையில் கிடைத்தும் அதை உடனே சாப்பிடாமல் கையில் வைத்து ரசிக்கும் குழந்தையின் மனநிலையில் நான்.. புத்தகம் கையில் கிடைத்தும் அதை உடனே படித்து சுவாரஸ்யத்தை இழக்க விரும்பாமல் வாரந் தோறும் வியாழக் கிழமைக்காக காத்திருக்கிறேன்..
ReplyDeleteஇன்னும் ஒரு paragraph கூட கொடுத்தால் தான் என்னவாம்?? 🤔🤔
ReplyDeleteSame thinking ma
Delete