சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, January 22, 2020

எதையும் தீர்மானிப்பது சிரத்தையே!


கவத் கீதையின் பதினேழாம் அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக யோகத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனன் சாஸ்திர விதிமுறைகளை மீறி சிரத்தையால் உந்தப்பட்டு வழிபாடு செய்பவர்களையும், யாகம், தானம், தவம் முதலியவற்றைச் செய்கின்றவர்களையும் எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்று கேட்கிறான்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு பதிலளிக்கிறார்.

எல்லோருடைய சிரத்தையும் அவரவருடைய உள்ளத்தின் நிலையை ஒட்டியே இருக்கும். மனிதன் சிரத்தையே உருவமாக இருப்பவன்.. ஆகையால் மனிதன் எந்தச் சிரத்தையோடு கூடியவனோ அந்தச் சிரத்தையின் தன்மையானவனாகவே இருப்பான்.

எதையும் எந்த அளவில், எந்த வகையில் சிரத்தையுடன் மனிதன் செய்கிறானோ அதுவே அவன் செயலை மட்டுமல்லாமல் அவனையும் தீர்மானிக்கும் காரணியாகி விடுகிறது என்கிறார் பகவான். இன்று பலரும் அலட்சியப்படுத்தும் உண்மை இது. எதையும் எந்திரத்தனமாகச் செய்கிறோம். உண்மையான ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் நாம் செயல்புரிவது மிகவும் குறைவாகி இருக்கிறது. புறத்தில் இருந்து வரும் கட்டாயத்திற்காக, எதிர்பார்ப்புக்காக கடனே என்று செய்யும் பழக்கமே எங்கும் வியாபித்திருக்கிறது.  செய்யா விட்டால் என்ன நினைத்துக் கொள்வார்கள், என்ன சொல்வார்கள் என்ற அச்சமும், செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயமுமே பலரையும் செயல்புரியத் தூண்டுகிறது. சிரத்தை இல்லாத செயல்களாலேயே சமூகம் எந்திரத்தனமாகவும், விளைவுகளைக் குறித்த பிரக்ஞை இல்லாத கீழ்த்தரமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

யாகம், தானம், தவம் என்ற மூன்றையுமே அர்ஜுனன் கேட்டிருப்பதால் யாகத்தைப் பற்றி பகவான் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்தக் காலத்தில் யாகம் செய்வது மிக அபூர்வம். அதனால் இக்காலத்திற்குப் பொருத்தமாக எடுத்துக் கொள்வதென்றால் வழிபாடு என்று எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

பலனைக் கோராமல், சாஸ்திரத்தில் சொல்லிய முறையில்யாகம் செய்வது என் கடமைஎன்று மனத்தை ஒரு நிலையில் நிறுத்திக் கொண்டு எந்த யாகமானது செய்யப்படுகிறதோ அது சாத்வீகம் எனப்படும்.

பலனைக் கோரியாவது, அல்லது ஆடம்பரத்திற்காகவாவது எந்த யாகம் செய்யப்படுகின்றதோ அதை ராஜஸமென்று அறிவாயாக.

சாஸ்திர முறையைப் பின்பற்றாததும், அன்ன தானமில்லாததும்,  மந்திரங்கள் அற்றதும், தட்சிணையில்லாததும், சிரத்தையில்லாததுமாகச் செய்யப்படும் யாகம் தாமஸம் எனப்படும்.

ஒரு செயலைக் கடமை என்று செய்வது வேறு, கடனே என்று செய்வது வேறு. மனதை ஒருநிலைப்படுத்தி, பல வேண்டுகோள்களை வைத்து வியாபாரம் பேசாமல், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இறைவனை வழிபடுவது சாத்வீகமானது. ஏன் பகவான் கடமை என்று சொல்கிறார். மனிதன் வழிபாடுகளால் தன் மாசுகளைக் களைந்து கொண்டு பரிசுத்தமாகிறான். இறை சிந்தனையும் வழிபாடும் அவன் தீய வழிகளில் போகாமல் தடுக்கின்றது.

உள்ளத்தில் அழுக்கிருந்தால் அல்லவா அது தவறான வாக்காகவும், செயலாகவும் வெளிப்பட்டு அவனையும் அவன் சம்பந்தப்பட்டவர்களையும் பாதிக்கிறது. அதைத் தவிர்க்க வேண்டுமானால் மனம் சுத்தமாக வேண்டும். மனம் சுத்தமாக இறைவனை விட்டால் வேறென்ன வழி? அந்தப் பரம்பொருளை வணங்குவதைத் தவிர வேறென்ன வழி? மனிதனின் மனத்தூய்மைக்கும் சமூக நன்மைக்கும் வழிவகுப்பதால் இறை வழிபாடு மனிதன் கடமையாகிறது.

பலனைக் கோரி, இறைவனிடம் “நான் உனக்கு இதைச் செய்கிறேன். எனக்கு நீ அதைச் செய்” என்று வியாபாரம் பேசி வழிபாடு செய்வது ராஜஸம். இதில் கோரிக்கை இல்லா விட்டால் வழிபாடு இல்லை. ராஜஸத்தின் இன்னொரு குணாதிசயம், ஆடம்பரம். அடுத்தவன் பார்க்க வேண்டும் என்று ஆடம்பரமாக வழிபாடு நடத்துவது இன்று அடிக்கடி நாம் காண முடிந்த காட்சி.

பெரும் செலவு செய்து பூஜைகள் செய்து மாலை மரியாதைகளை ஏற்றுக் கொண்டு எத்தனை பேர் நம்மைப் பார்க்கிறார்கள், வியக்கிறார்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் இந்த ராஜஸ வழிபாட்டில் இறைவனை விட அதிக முக்கியத்துவத்தை வழிபடுபவன் பெற முயலும் வேடிக்கையை நாம் நிறைய இடங்களில் பார்க்க முடியும். இங்கே சிரத்தை இருக்கிறது என்றாலும் சிரத்தையில் பக்தி இல்லை என்பதே குறைபாடு.

பெரிய வழிபாடுகளில் சாஸ்திரமும் பின்பற்றப்படாமல், செவிக்கும், கருத்துக்கும் இனிமையான மந்திரங்களும் சொல்லப்படாமல், நாலு பேர் வயிறும் நிறையாமல், ஏழைகளுக்கு தட்சிணையும் கிடைக்காமல், செய்பவருக்குச் சிரத்தையும் இல்லாமல் கடனே என்று ஏதோ ஒரு கட்டாயத்திற்காக வழிபாடு செய்வது தாமஸம். இந்தத் தாமஸ வழிபாட்டில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதே விசேஷ குணம்.

எப்போதுமே பெரிய பூஜைகளில், வழிபாடுகளில் அன்னதானம் விசேஷமானது. வயிறு நிறையும் வரை விரும்பிச் சாப்பிட்டு வயிறு நிறைந்தவுடன் மனதாரப் போதும் என்று சொல்வது உணவைத்தான். பணமோ, பொருளோ எத்தனை கொடுத்தாலும் மனிதன் திருப்தியடைவது கடினம். அதனால் மனிதனை முழுத்திருப்தி அடைய வைக்கும் அன்னதானம் வலியுறுத்தப்படுகிறது.

மந்திரங்கள் செவிக்கும், கருத்துக்கும் இனிமையானது. மனிதனை இறைவழி கவனத்தை திருப்ப வல்லது. அதுவும் இந்த தாமஸ வழிபாட்டில் இல்லை. அதே போல தட்சிணையும் இல்லாமல், சிரத்தையும் இல்லாமல் வழிபாடு என்ற பெயரில் எந்திரத்தனமான சடங்கை நடத்தி முடிப்பது தாமஸ வழிபாடு.

உங்கள் இறைவழிபாடு இதில் எந்த வகையைச் சேர்கிறது என்று யோசியுங்கள்.

(தொடரும்)
என்.கணேசன்  

  

1 comment:

  1. பகவான் அன்று கீதையில் கூறியது,‌‌‌‌‌‌அனைத்தும் இக்காலத்திலும் காண முடிகிறது...
    சிரத்தை பற்றி கூறியதும் அற்புதம்.

    ReplyDelete