சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 6, 2020

சத்ரபதி 106

ராஜா ஜெய்சிங் அவருடைய திட்டங்களின் படியே ஓரளவு அனைத்தும் நடைபெறுகிறது என்றாலும் நினைத்த வேகத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார். ஷாஜஹான் காலத்தில் இருந்து அவர் பல போர்க்களங்கள் கண்டிருக்கிறார். பல வலிமையான எதிரிகளைச் சமாளித்திருக்கிறார். ஆனால் சிவாஜியைப் போன்ற ஒரு எதிரியை அவர் இது வரை கண்டதில்லை. அவனுடைய எதிரிகளும், அவன் மீது பொறாமை கொண்டவர்களும் இப்போது அவருடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் அவனை அழிக்க அவரை விட அதிகத் தீவிரத்துடன் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் அவன் நண்பர்களும், அவன் வீரர்களும், அவன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளின் மக்களும் அதே அளவு அதிகத் தீவிரத்துடன் அவன் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும் அவர் கண்டார். இந்த அளவு ஒரு அன்பையும், பக்தியையும் அவர் வேறெங்கும் கண்டதில்லை.

தில்லர்கான் அவர் பலகாலமாகப் பார்த்து வரும் மாவீரன். போர்க்களத்தில் சிங்கம் அவன். எதிரிகளுக்கு எமன் அவன். அப்படிப்பட்டவனே புரந்தர் கோட்டையைப் பிடிக்கத் திணறிக் கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்து வரும் செய்திகள் சிவாஜியின் வீரர்கள் சரணடைவதை விட மரணமடைவது மேல் என்று உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. போரின் போது அவர்களின் தாக்குதலில் அவிழ்ந்த தலைப்பாகையை புரந்தர் கோட்டையை வெல்லாமல் திரும்பவும் அணியப் போவதில்லை என்று தில்லர்கான் சபதம் எடுத்திருந்தான். தலைப்பாகை இல்லாமல் அவன் போர் புரிந்து வருவது இது வரை நிகழாத ஒரு அதிசயம் தான். ஒரு நாள் புரந்தர் கோட்டையை அவன் வெல்வான் என்பதில் சந்தேகம் இல்லை தான். ஆனால் அந்த முயற்சியில் இது வரை ஆகியிருந்த நாட்களே மிக அதிகம். இனி எத்தனை நாட்கள் ஆகும் என்பது யாருக்கும் நிச்சயமில்லை.

சிங்கக் கோட்டையை வென்று வர ராஜா ஜெய்சிங் திறமை வாய்ந்த தன் தளபதியை அனுப்பியிருந்தார். கோட்டையை ஆக்கிரமித்திருக்கும் அவன் கோட்டைக்குள் இருந்து திடீர் திடீர் என்று வரும் தாக்குதல்களில் நிலைகுலைந்து போயிருக்கிறான். ஒரு நாள் அதிகாலை சிவாஜியே சில வீரர்களுடன் குதிரையில் வந்து முகலாயச் சேனைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பிப் போயிருப்பதாய் செய்தி அனுப்பி இருக்கிறான். சிங்கக் கோட்டையையும் ஒரு நாள் அவர்கள் வெல்வது நிச்சயம் தான். ஆனால் அந்த ஒரு நாள் எப்போது வரும் என்பதும் யாருக்கும் நிச்சயமில்லை.

சிவாஜிக்கு எதிராக பல பேரை அவர்களுடன் சேர்த்தாகி விட்டது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு குழுவாக தீவிரமாக அவர்கள் அனைவரும் போர் முனைப்பில் தான் இருக்கிறார்கள். அதிலும் வெற்றி நிச்சயம். ஆனால் எப்போது என்பது தான் நிச்சயம் இல்லை. அந்த அளவில் இருக்கிறது சிவாஜியும் அவன் ஆட்களும் காட்டும் தீவிரம்.

இப்படி நிலைமை இருக்கையில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகலாயச் சக்கரவர்த்தி நிலவரம் கேட்டு ஆளனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒரே பதிலைச் சொல்லி அனுப்பி அவருக்கும் சலித்து விட்டது. ஒரே பதிலைக் கேட்டுக் கேட்டு முகலாயச் சக்கரவர்த்தியும் பொறுமையிழந்து கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் சீக்கிரமாய் முடிவு காண்பது எப்படி என்று ராஜா ஜெய்சிங் சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் அவரது  காவலன் சிவாஜியின் அமைச்சர் ரகுநாத் பந்த் அவரைக் காண வந்திருப்பதாக அறிவித்தான்.

சமாதான உடன்படிக்கைக்கு எத்தனையோ ஆட்களை சிவாஜியிடம் அனுப்பியும் அதற்குச் சம்மதிக்காத சிவாஜி இப்போது முதல் முறையாகத் தன் அமைச்சரையே அனுப்பி இருப்பது ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்ற அவரை உள்ளே அனுப்புமாறு ராஜா ஜெய்சிங் காவலனிடம் கூறினார்.

ரகுநாத் பந்த் உள்ளே வந்ததும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அவரை அமரச் செய்த ராஜா ஜெய்சிங் வந்த காரணம் என்ன என்பதைக் கால தாமதமில்லாமல் கேட்டார்.

சிவாஜியின் அமைச்சரான ரகுநாத் பந்த் மிகச் சிறந்த பேச்சாளர். விஷய ஞானம் நிறைய உள்ளவர். ஆட்களை எடை போடுவதில் சாமர்த்தியசாலி. அவருக்கு ராஜா ஜெய்சிங்கிடம் உபசார வார்த்தைகளோ, சுற்றி வளைத்த பேச்சுக்களோ பயன் அளிக்காது என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. பல அலங்கார வார்த்தைகளைத் தயார் செய்து வந்திருந்த ரகுநாத் பந்த் அவற்றை எல்லாம் தள்ளி வைத்து, ராஜா ஜெய்சிங்குக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “எங்கள் மன்னர் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறார் ராஜா. நீங்களும் உண்மையாகவே அதை விரும்புகிறீர்கள் என்ற உத்திரவாதம் தந்தால் இங்கு வந்து தங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்” என்று சுருக்கமாகச் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு மனதினுள் மகிழ்ந்த போதிலும் ராஜா ஜெய்சிங் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியான குரலில் உறுதியாகப் பேசினார். “மகிழ்ச்சி அமைச்சர் அவர்களே. அமைதியே இரு பக்கத்திற்கும் நன்மை அளிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பேச்சு வார்த்தை என்ற பெயரில் சாகசங்களோ, காலங்கடத்துவதோ நிகழ்த்த உங்கள் தரப்பு உத்தேசித்திருந்தால் தயவு செய்து என் நேரத்தை வீணடிக்க வேண்டாம். போர்க்களத்தில் பேரழிவுக்குப் பின் தான் அமைதி நிலைநாட்ட வேண்டும் என்றிருந்தால் அப்படியே அது நடக்கட்டும். அமைதியும் சமாதானமும் தான் உங்கள் உண்மையான உத்தேசம் என்றால் மட்டுமே உங்கள் மன்னர் என்னைச் சந்திக்க வந்தால் போதும்.”

பேச்சு வார்த்தை என்ற பெயரில் சாகசம், காலங்கடத்துவது என்ற ராஜா ஜெய்சிங் குறிப்பிட்டது சிவாஜி சிதி ஜோஹரிடம் காட்டிய தந்திரத்தை அறிந்திருப்பதாகத் தெரிவிக்கும் சூசகமாகவே ரகுநாத் பந்த் கண்டார். ஆனால் அவரும் அதைப் புரிந்து கொண்டதாகவோ, முன்பு அப்படி நடந்திருப்பதாகவோ காட்டிக் கொள்ளவில்லை. அவரும் ராஜா ஜெய்சிங் பேசிய அதே தொனியில் சொன்னார். “பேச்சு வார்த்தை நடத்த வருகையில் தங்கள் பக்கத்திலிருந்து எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற உத்திரவாதத்தை நீங்கள் தந்தால் எங்கள் மன்னர் விரைவில் வந்து தங்களைச் சந்திக்க நினைக்கிறார்”

ராஜா ஜெய்சிங் சற்று முன் தான் பிரார்த்தனையை முடித்து துளசியை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு வந்திருந்தார். முன்னால் வைத்திருந்த அந்தத் துளசியை எடுத்துக் கொண்டு அவர் மிக உறுதியாகச் சொன்னார். “நான் புனிதமாக நினைக்கின்ற இந்தத் துளசியின் மீது ஆணையாகச் சொல்கின்றேன். தங்கள் மன்னர் எங்களைத் தாக்கும் உத்தேசம் இல்லாமல் இங்கு வருவாரேயானால் அவருடைய உடலுக்கு மட்டுமல்ல அவருடைய சிறு ரோமத்திற்கும் எந்த ஆபத்தும் வராது என்று உறுதியளிக்கிறேன்”

வார்த்தைகள் உதட்டளவில் இருந்து வராமல் உள்ளத்திலிருந்து வந்ததை உணர்ந்த ரகுநாத் பந்த் ராஜா ஜெய்சிங்கை நோக்கி இரு கைகளையும் கூப்பி விட்டு எழுந்தார்.

சிவாஜியிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்து விட்டு ரகுநாத் பந்த் சொன்னார். ”மன்னா. சொல் ஒன்று செயல் வேறு என்று நடக்கும் மனிதராய் அவர் தெரியவில்லை. அதே நேரத்தில் அப்படிச் சொல் ஒன்று செயல் வேறாய் மற்றவர்கள் நடந்து கொள்வதை அனுமதிப்பவராகவும் தெரியவில்லை. அவர் ஒரு நோக்கத்துடன் வந்திருக்கிறார். அந்த நோக்கத்தில் இருந்து இம்மியும் அசைந்து கொடுப்பவராகத் தெரியவில்லை. அதனால் பேச்சில் அவரை நாம் மாற்றுவதோ, திசை திருப்புவதோ முடியும் என்று தோன்றவில்லை”

சிவாஜி பெருமூச்சு விட்டான். அவனுக்கு அன்னை பவானி இதே செய்தியை முன்பே உணர்த்தியிருக்கிறாள்.

அன்னை பவானி அறிவுறுத்தியது போல் பணிந்து போவதற்கு மனதை அவன் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்றாலும், எந்த அளவு பணிய வேண்டியிருக்கும் என்பதும், எந்த அளவு அவனால் முடியும் என்பதும் தீர்மானமாகத் தெரியவில்லை.

“பேச்சு வார்த்தைக்கு எப்போது செல்லலாம் அமைச்சரே?” என்று கேட்ட போது அவனுக்குக் கசந்தது. ஆனால் வாழ்க்கையில் இனிமை மட்டுமே வேண்டும் என்று ஆசைப்படுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது அல்லவா? கசப்பும் வந்து தானே தீரும். அதைச் சகித்துத் தானேயாக வேண்டும். அந்தக் கசப்பும் நீங்கி மறுபடி காணும் போதல்லவா அந்த இனிமையின் மகத்துவம் புரிகிறது…..


இந்தச் சிந்தனை ஓட்டத்தில் அமைதி கண்டான் சிவாஜி.

(தொடரும்)
என்.கணேசன்


2 comments:

  1. Interesting. Eager to know how Sivaji handles his bad times.

    ReplyDelete
  2. தொடர் முடியும் போது இடம்பெற்ற கருத்து அற்புதம்....
    சிவாஜிக்கு வந்த கசப்பான பகுதி வேகமாக கடந்து விடுமா? இல்லை பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு தான் செல்லுமா??? என்று தெரியவில்லையே....

    ReplyDelete