பாண்டியன் குழம்பினார். ‘நாம் உள்ளே பார்த்த காட்சி இவனுக்கு வெளியே தெரிகிறதோ?’ அவர் அமைதியாகக் கேட்டார். “எங்கே?”
“உங்க கார்ல”
பாண்டியனின் அமைதி காணாமல் போனது. அவர் பதற்றத்துடன் வேகமாக
வெளியே ஓடினார்.
பரசுராமன் மந்திரங்களை உச்சரித்தபடியே, இரண்டு
மண்டலங்களிலும் காவித்துணி
சுற்றிய பொம்மைகள் மீது எரியும் கற்பூரங்களை வைத்த போது தான் சுகுமாரனின் தோட்டத்தில்
அவர்களுக்கு காவித்துணியுடன் எரியும் சடலங்கள் தெரிய ஆரம்பித்தன. தன் ஞானதிருஷ்டியில்
பரசுராமன் அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்த கூர்க்கா
வீட்டுக்கு உள்ளே சென்று விட்ட வேளையில் தான் ஷ்ரவன் அனுப்பிய இளைஞன் பைக்கில் வந்து
பாண்டியனின் காரை நெருங்கினான். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு பையில் அவன்
எடுத்து வந்திருந்த பொம்மையை எடுத்தான். அந்தப் பொம்மையைச்
சுற்றியிருந்த துணி ஏற்கெனவே மண்ணெண்ணையால் நனைக்கப்பட்டு இருந்தது. சிகரெட்
லைட்டரால் வேகமாக அந்தத் துணிக்குத் தீமூட்டி பொம்மையை, கார் ஜன்னல்
வழியே முன் சீட்டில் போட்டு விட்டு வேகமாக பைக்கை முடுக்கி விட்டான்.
சுமார் இரண்டு நிமிடங்கள் கழிந்து தான் கூர்க்கா உள்ளேயிருந்து வெளியே வந்தான். வெளியே வந்தவன், பாண்டியனின் காரிலிருந்து புகை வருவதைப் பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்து தான், உடனே அதைத் தெரிவிக்க மறுபடியும் உள்ளே ஓடினான்.
பாண்டியனின் காரில் தீ என்று அவன் தெரிவித்த
மறுகணமே பாண்டியன் பதறியபடி ஓடி வந்தார். அவரைத் தொடர்ந்து
சுகுமாரனும் ஓடி வந்தார்.
பரசுராமன் அந்த நேரத்தில் அந்தந்த மண்டலத்தில்
வைத்திருந்த மிளகாய்களையும், குறுமிளகையும் எடுத்து அந்தந்த மண்டலத்தில் எரிந்து கொண்டிருந்த
பொம்மை மேல் போட்டார். ஆனால்
ஆச்சரியப்படும் விதமாக அங்கு மிக மெலிதாக மட்டும் புகை எழுந்தது. அப்படி எழுந்த புகையிலும்
எந்தக் காரமும் இல்லை. மாறாக அந்தக் காரத்தை அங்கு சுகுமாரனும்,
பாண்டியனும் உணர்ந்தார்கள்.
பாண்டியனும், சுகுமாரனும், அந்தக் காரம் காரிலிருந்து வரும் புகையில் வருவதாக நினைத்து இருமினார்கள்.
பாண்டியன் பதற்றத்துடனும், திகைப்புடனும் தன் காருக்குள்
ஏதோ எரிவதைப் பார்த்தார். உடனடியாக அவர் கூர்க்காவைப் பார்த்துக்
கத்தினார். “தண்ணீர் கொண்டு வா.”
தோட்டத்தில் தான் தண்ணீர்க் குழாயும், பக்கெட்டும் இருக்கின்றன
என்பதால் கூர்க்கா தோட்டத்திற்கு ஓடினான். அவன் குடிப்பதற்காக
வைத்திருந்த தண்ணீர் பாட்டில் அவன் அமரும் நாற்காலிக்கு அருகிலேயே கீழே வைக்கப்பட்டிருந்தது.
அதைக் கவனித்த பாண்டியன் இருமலுக்கு இடையே, ‘முட்டாள்’
என்று முணுமுணுத்தபடி வேகமாய் வந்து, அதை எடுத்துக்
கொண்டு போய், எரிந்து கொண்டிருக்கும் தீயில் கொட்டினார்.
தீ அணைந்தது என்றாலும் இருமல் குறையவில்லை.
தீ அணைந்த பின் எரிந்து கொண்டிருந்தது என்ன என்றறிய அதைக் கையில்
எடுத்தார். அது ஒரு பொம்மை போல் தெரிந்தது. தீ அணைந்து பொம்மை கரிக்கட்டையாக
ஆகி விட்டிருந்த போதும் அந்தப் பொம்மையில் இப்போதும் அனலின் வெப்பம் உச்சத்தில் தெரிய,
பாண்டியன் அதைத் தூக்கி எறிந்தார். அவர் காரின்
முன்சீட்டில் பெரிய கருகிய பள்ளம் தெரிந்தது. பாண்டியனுக்குக்
கோபம் தாங்கவில்லை. ஆனால் யார் மீது கோபித்துக் கொள்வது என்று
தெரியவில்லை. தண்ணீர் பக்கெட்டுடன் வேகமாக வந்த கூர்க்காவிடம்
எரிந்து விழ முயன்றார். ஆனால் இருமல் எதையும் சொல்ல விடவில்லை.
ஏற்கெனவே வயிற்றில் இருந்த எரிச்சல், இந்தக் காரப்புகையுடன்
சேர்ந்து வயிற்றின் உள்ளே அமிலம் இறங்கியது போல் அவருக்கும், சுகுமாரனுக்கும் எரிந்தது.
அங்கே இருவராலும் நிற்க முடியவில்லை.
பாண்டியன் கூர்க்காவிடம் ‘காரை நன்றாகப் பார்த்துக் கொள்’ என்று சைகையால் சொல்லி விட்டு சுகுமாரனின் வீட்டுக்குள் விரைந்தார்.
சுகுமாரனும் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று சலித்தவராய் அவரைப் பின் தொடர்ந்தார்.
டாமியும் அவர்களைப் பின் தொடர்ந்தது.
கூர்க்கா அவர்களைத் திகைப்புடன் பார்த்தபடி நின்றான். ‘மந்திரவாதி தோட்டத்தில்
எதோ எரிந்து கொண்டிருப்பதாய் சொல்கிறான். போய்ப் பார்த்தால் அங்கே
எதுவும் எரியவில்லை. மந்திரவாதியின் காரிலேயே தான் தீ எரிந்து
கொண்டிருக்கிறது. அது
மந்திரவாதிக்கே தெரியவில்லை. மந்திரவாதியையே திண்டாட வைப்பது
ஆவியா, பேயா என்று தெரியவில்லை. சரியாகச்
சொன்னால் அவனுக்கு அந்த இரண்டுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் இப்போதும் கூடத் தெரியாது.
அது எதுவானாலும் சரி, அது தன் வேலைகளை ஆரம்பித்திருக்கும்
இந்த வீட்டில் இனியும் பாதுகாப்பாய் வேலை செய்ய முடியுமா?’ அவனுக்கு
ஒன்றும் விளங்கவில்லை.
வீட்டுக்குள் சென்ற சுகுமாரனும், பாண்டியனும் தண்ணீர் குடித்து ஓரளவு வயிற்றின் எரிச்சலைக் குறைத்தார்கள்.
ஆனாலும் இருவரும் நிதானத்திற்கு வரச் சிறிது நேரமாகியது. சுகுமாரன் பாண்டியன் கண்களை மூடி அமைதியாக யோசிப்பதைப் பார்த்து தான் அமைதியானார்.
அவர் மட்டுமே இருந்திருந்தால், நேற்று போல் இன்றும் வீட்டை விட்டு ஓடியிருப்பார்.
“என்ன யோசிக்கிறீங்க?” என்று சுகுமாரன் பாண்டியனைக் கேட்டார்.
“உங்க இந்த
கூர்க்கா எவ்வளவு காலமாய் உங்க கிட்டே வேலை பார்க்கிறான்?”
பாண்டியன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்
என்று சுகுமாரனுக்கு விளங்கவில்லை. “அஞ்சு வர்ஷமாய்
வேலை பார்க்கறான். ஏன் கேட்கறீங்க?”
”ஆவி மட்டுமல்ல, உங்க கூர்க்கா
கூட சந்தேகத்தைக் கிளப்பறான்…”
”எப்படி?”
“நேத்தும்
காவித்துணி எரிஞ்சதை முதல்ல பார்த்தவன் அவன் தான். இன்னைக்கும்
காருக்குள்ளே எதோ எரியுதுன்னு பார்த்து சொன்னவன் அவன் தான். அவனே ஏன்
இந்தக் காரியத்தை செஞ்சிருக்கக்கூடாது?
செஞ்சுட்டு தன்னை யோக்கியன் மாதிரி ஏன் காட்டியிருந்திருக்கக்கூடாது? அவனுக்குச் செய்ய வாய்ப்பு அதிகம்
தானே?”
“அவன் அப்படி ஏன் செய்யணும்? அவனுக்கு இதுல என்ன லாபம்?”
சுகுமாரன் திகைப்புடன் கேட்டார்.
“அவனுக்கு ஏதாவது லாபம் இருந்தால்…? யாராவது அவனுக்குப்
பணம் தந்து இப்படிச் செய்யச் சொல்லியிருந்தால்? அப்படியும் இல்லாட்டி
யாராவது அப்படி செய்யறதைக் கண்டுக்காம இருக்க அவன் காசு வாங்கியிருக்கலாம்…”
சுகுமாரனுக்குத் தலைசுற்றியது. அவர் சொன்னார்.
“அப்படின்னா நமக்கு சைத்ரா தெரிஞ்சதையும், அவ பிணம்
எரியற மாதிரி தெரிஞ்சதையும் எப்படி எடுத்துக்கறது? அதுக்கும்
அவனுக்கும் சம்பந்தம் இருக்க வழியில்லையே? அதுமட்டுமில்ல.
எனக்கு அந்த காரப் புகையும் சுவாசிச்சு இப்ப வயிற்றுல புண்ணே ஆயிடுச்சு.
நீங்களும் இருமினீங்க. ஆனா அவன் கொஞ்சம் கூட இருமலை.
நடக்கறது எல்லாமே நமக்கு தான் எதிராயிருக்கு. ஆனால்
இது அத்தனையும் அவன் செஞ்சிருக்க முடியாதே…”
பாண்டியனுக்கு அவர் சொல்வதை மறுக்க முடியவில்லை. அவருக்கும் வயிறு புண்ணாகி
விட்டது போல் தான் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு ஆட்கள் யாரையாவது
இதற்கு காரணமாகச் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அப்படியானால் தான் எதாவது நடவடிக்கை எடுத்து இனிமேல் எதுவும் ஆகாமல் தற்காத்துக்
கொள்ள முடியும். திருப்பி எதாவது பதிலடி தர முடியும்.
அவர்களுக்கு எதிராக விளையாடுவது அமானுஷ்ய சக்திகளாக இருந்தால் என்ன செய்வது?
பதிலடி தர சக்தியற்றவராக இருப்பதை மட்டும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதையாவது
செய்தேயாக வேண்டும். இதில் உள்ள மனிதப் பின்னணியைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். மனிதப் பின்னணி இல்லாமல் இது நடக்கிறது என்பதை அவருடைய பகுத்தறிவு ஏற்றுக்
கொள்ள மறுத்தது.
பாண்டியன் கேட்டார்.
“ஏன் உங்க வீட்டுல நீங்க சிசிடிவி காமிரா வைக்கல?”
சுகுமாரன் சொன்னார்.
“எத்தனையோ முக்கியமான ஆள்க இங்கே ரகசியமாய் வர்றாங்க. அதெல்லாம் ரிகார்டாக வேண்டாம்னு தான் வெச்சுக்கல. மத்தபடி
காவலுக்கு பகல்லயும், ராத்திரியும் கூர்க்கா ரெண்டு
பேர் இருக்காங்க. டாமியும் காவலுக்கு இருக்கான்.
அப்படி இருக்கறதால சிசிடிவி காமிராக்கு அவசியம் இல்லைன்னு விட்டுட்டேன்…”
“பக்கத்து வீடுகள், எதிர் வீடுல?”
“வலது பக்கத்து வீட்டுல இருக்கு. இந்தப் பக்கத்து வீட்டுலயும்,
எதிர் வீட்டுலயும் கிடையாது. வலது பக்கத்து வீட்டுலயும் தெருவைப் பாக்கற
மாதிரி தான் காமிரா இருக்கு.
ஏன்னா, அவங்க காமிரா மூலமாவும் நம்ம வீட்டுக்கு
வர்ற ஆள்கள் தெரிய வேண்டாம்னு, அவங்க அதை வைக்கறப்பவே நான் கவனமாய் இருந்து தடுத்தேன்….”
என்.கணேசன்
It is written as sivakumar instead of sugumar in the beginning of conversation in their home after the incident
ReplyDeleteSukamaran only
Delete“என்ன யோசிக்கிறீங்க?” என்று சிவராமன் பாண்டியனைக் கேட்டார்.
Deleteஇந்த இடத்தில்
//சுகுமாரன் பாண்டியனைக் கேட்டார்.//
என்று இடம்பெற்றிருக்க வேண்டும்.ஐயா
ஒரு இடத்தில் தவறுதலாக சுகுமாரன் என்பதற்கு பதில் சிவராமன் என்று உள்ளது.
Deleteதவறு திருத்தப்பட்டு விட்டது.
Deleteபாண்டியன் இவ்வளவு நடந்தும் தைரியத்தை இழக்காமல் உள்ளார்.... 'என்ன நடக்கிறது?' என்று இப்போது புரியாவிட்டாலும்! சில நாட்களில் கண்டுபிடித்து விடுவார்... என நினைக்கிறேன்.....
ReplyDelete