சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 18, 2024

சாணக்கியன் 118

 

டிக்கட்டுகளில் இறங்கிச் செல்ல முடிந்த அளவு தோண்டி முடித்த பின் முதலில் சாரங்கராவ் தீப்பந்தத்துடன் இறங்கினான். உள்ளே பன்னிரண்டு மரப்பெட்டிகள் இருந்தன. பெட்டிகள் துணியால் மூடி கயிற்றால் கட்டப்பட்டிருந்தன.

 

சாரங்கராவ் அவர்களையும் அழைத்தான். “நீங்களும் வாருங்கள். இங்கேயும் நமக்கு வேலைகள் இருக்கின்றன

 

ஜீவசித்தியும், விஜயனும் படிகளில் இறங்கிச் சென்றார்கள். சாரங்கராவ் தன் இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியால் ஒரு மரப்பெட்டியின் கயிறை அறுத்தான். அவன் அந்தப் பெட்டியைச் சுற்றி வைத்திருந்த துணியை அகற்றி மரப்பெட்டியின் மேல்மூடியைத் திறந்த போது தீப்பந்த ஒளியில் பொற்காசுகள் மின்னின. 

 

விஜயன் பிரமிப்புடன் சொன்னான். “நான் இத்தனை பொற்காசுகளைச் சேர்ந்தாற் போல் பார்ப்பது இப்போது தான்.”

 

ஜீவசித்தியும், சாரங்கராவும் கூட அத்தனை பொற்காசுகளை இதுவரை தங்கள் கண்களால் பார்த்திருக்கவில்லை. மூவரும் ஒவ்வொரு கைப்பிடி பொற்காசுகளை எடுத்து தீப்பந்த ஒளியில் ஜொலிக்கும் வியப்பு குறையாமல் பார்த்தார்கள். பின் அந்தப் பெட்டியிலேயே அந்தப் பொற்காசுகளைப் போட்டு விட்டு மற்ற பெட்டிகளில் என்ன இருக்கின்றதென்று பார்த்தார்கள்.

 

பன்னிரண்டு மரப்பெட்டிகளில் ஐந்தில் தங்கக் காசுகளும், ஐந்தில் வெள்ளிக் காசுகளும், இரண்டில் ஆபரணங்களும் இருந்தன.

 

விஜயன் பிரமிப்புடன் சொன்னான். “தனநந்தன் தன் பெயருக்கேற்றபடி தாராளமாகவே சேர்த்து வைத்திருக்கிறான். இங்கேயே இத்தனை என்றால் அவன் கஜானாவில் எத்தனை இருக்கும்?”

 

சாரங்கராவ் சொன்னான். “அங்கும் அதிகமாகவே இருக்கும். எல்லாம் அநியாய வரிகள் விதித்து மக்களை வருத்தி அவன் சேர்த்திருக்கும் செல்வம். இவை அத்தனையிலும் மக்கள் கண்ணீரும் சேர்ந்தே இருக்கும்”

 

ஜீவசித்தி ஒன்றும் சொல்லவில்லை. அவன் உள்ளத்தில் ஆயிரம் குமுறல்கள் பொங்கி எழுந்தன. அந்தச் செல்வம் அவன் தந்தை போன்றோர் பலரின் உயிரையும் அல்லவா எடுத்திருக்கின்றது?

 

சாரங்கராவ் ஜீவசித்தியிடம் சொன்னான். “உங்களுடைய உதவியில்லாமல் இந்தப் புதையலை நாங்கள் அடைவது சாத்தியப்பட்டிருக்காது. அதனால் இதைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் உங்கள் விருப்பம் எவ்வளவோ அந்த அளவு தங்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி ஆச்சாரியர் சொல்லியிருக்கிறார் நண்பரே. நீங்கள் எடுத்தது போக மீதியை நாங்கள் கொண்டு போகிறோம்.”

 

ஜீவசித்தி சொன்னான். “இந்த சபிக்கப்பட்ட செல்வத்தில் என் தந்தையின் சாம்பலை நான் பார்க்கிறேன் நண்பா. இது ஆச்சாரியர் என்னிடம் சொன்னது போல மேலான நன்மைக்குப் பயன்படட்டும். எனக்கு அதுவே போதும்.”

 

சாரங்கராவ் ஜீவசித்தியின் பெருந்தன்மையால் மனம் நெகிழ்ந்தவனாக மிகுந்த மரியாதையுடனும் சொன்னான். “செல்வம் எப்பேர்ப்பட்டவரையும் சபலப்படுத்த வல்லது என்பார்கள். மிக உயர்வானவர்களாலேயே அது கிடைக்கும் போதும் மறுக்க முடியும். மகதம் தனநந்தனைப் போன்றவர்களை உருவாக்கி பொலிவிழந்த போதும் தங்களைப் போன்றோரைப் பெற்றெடுத்துப் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே”

 

ஜீவசித்தி சற்றே தலை தாழ்த்தி சொன்னான். “மகதம் ஆச்சாரியரைப் போன்ற மகத்தான மனிதரைப் பெற்றெடுத்து ஏற்கெனவே புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறது நண்பா. ஸ்ரீராமனுக்குப் பாலம் கட்ட அணில் செய்த சிறிய சேவை போல் நான் செய்திருக்கும் இந்த வேலையை உயர்த்திச் சொல்ல எதுவுமில்லை..... நாம் வேகமாக இவற்றைக் கொண்டு சென்று நம் பெட்டிகளில் நிரப்பி பெட்டிகளை இங்கேயே போட்டு விட வேண்டும். நமக்கு நேரம் அதிகம் இல்லை. விடியலுக்கு முன் நம் வேலையை முடித்துவிட வேண்டும்.”

 

அவன் சொன்னபடியே அவர்கள் வேகமாக இயங்கினார்கள். நால்வரும் மரப்பெட்டிகளை கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். நிலவொளியில் அப்படிக் கொண்டு செல்கின்ற போது ஒவ்வொரு கணமும் அவர்களுக்குப் பதற்றமாகவே இருந்தது. திடீரென்று யாராவது வந்து விடுவார்களோ என்ற பயத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு பெட்டியும் கனமாக இருந்ததால் ஒவ்வொருவரும் ஒரு பெட்டிக்கு மேல் சுமக்க முடியவில்லை. நால்வரும் மூன்று முறை வந்து கொண்டு போய் கூடாரத்தில் வைக்க வேண்டி இருந்தது.

 

கூடாரத்தில் இந்த மரப் பெட்டிகளிலிருந்து அவர்களது வணிகப் பெட்டிகளுக்கு பொற்காசுகளையும், வெள்ளிக்காசுகளையும், ஆபரணங்களையும் மாற்றினார்கள்.  அவர்களது பெட்டிகளில் அவற்றை முக்கால் பாகத்திற்கு மட்டுமே நிரப்பினார்கள். பின் மேற்பகுதியில் அவர்கள் கொண்டு வந்த வணிகப் பொருள்களை நிரப்பி வைக்கும் வேலையில் விஜயனும், அந்த வீரனும் ஈடுபட, ஜீவசித்தியும், சாரங்கராவும் காலி மரப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு யாகசாலைக்கு விரைந்தார்கள்.

 

அங்கே அந்த மரப்பெட்டிகளை கொண்டு வந்து அந்த பாதாள அறையில் போட்டு, தோண்டியதால் ஏற்பட்ட மண் குவியலையும் அதற்குள்ளேயே தள்ளி, யாகசாலையை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாதபடி பழைய தோற்றத்திலேயே இருக்கும்படி செய்வது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் சாரங்கராவ் மிகவும் நுட்பமாக அந்த வேலையைச் செய்தான். கடைசியில் வெளியிலிருந்து தெரியும் பெரிய யாக குண்டத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தை பழையபடி ஜோடிக்க அவனுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் லாவகமாக அதைச் செய்து முடித்து ஜீவசித்தியிடம் சொன்னான். “வெளியே இருந்து பாருங்கள் நண்பரே. ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் சொல்லுங்கள்”

 

ஜீவசித்தி சென்று வெளியேயிருந்து பார்க்கையில் எல்லாம் பழைய தோற்றத்தில் கச்சிதமாகவே இருந்தது. ”அபாரம் நண்பரே. பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்து பார்க்கிற வரை தெரியாது.”

 

அவர்கள் யாகசாலையைப் பூட்டி கொண்டு வெளியேறிய போது விடியலுக்குச் சிறிது நேரமே இருந்தது. ஜீவசித்தி சாரங்கராவிடம் சொன்னான். ”நான் விடிவதற்கு முன் வீடு போய் சேர்வது நல்லதென்று நினைக்கிறேன். விடைபெறுகிறேன் நண்பரே”

 

சாரங்கராவ் ஜீவசித்தியை நட்புடன் தழுவி விட்டு நெகிழ்ச்சியுடன் சொன்னான். “எங்களுக்கு மகத்தான உதவி செய்திருக்கிறீர்கள் நண்பரே. நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்து விட முடியா விட்டாலும் இப்போதைக்கு அதைத்தவிர எனக்குச் சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை”

 

ஜீவசித்தி சொன்னான். “ஒரு விதத்தில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நண்பா. என் தந்தையின் மரணத்திற்குக் காரணமாக இருந்த இந்த செல்வம் இங்கிருந்து போவது தான் நான் தனநந்தனுக்குத் தர முடிந்த தண்டனை. என்றாவது ஒரு நாள் அவன் இங்கு வந்து பார்க்கும் போது உடன் வந்திருந்து அவன் முகத்தைப் பார்க்கும் வாய்ப்புக்காக இனி நான் ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன். புதையல் பறி போன துக்கத்தில் அவன் துடிப்பதைப் பார்க்கும் போது என் தந்தையின் ஆத்மா சாந்தியடைந்த நம்பிக்கையும் சந்தோஷமும் நான் பெறுவேன். ஆச்சாரியர் சொன்னது போல் இந்தச் செல்வம் தனநந்தனின் வீழ்ச்சிக்கும் அவர் சொல்லும் பாரத ஒருங்கிணைப்புக்கும் பயன்படுமானால் அந்தப் பணியில் ஒரு சிறு அங்கமாக இருந்திருக்கிறோம் என்று நான் ஆத்மதிருப்தி அடைவேன். நீங்களும் பத்திரமாகச் செல்லுங்கள். எச்சரிக்கையுடனேயே இருங்கள். சென்று சேர்ந்த பின் எனக்குத் தகவல் அனுப்புங்கள். இனி நாம் மறுபடி எப்போது சந்திப்போம் நண்பா?”

 

“தெரியவில்லை நண்பரே. ஆனால் அதற்கு அதிக காலம் வேண்டி வராது என்று நினைக்கிறேன்.”

 

தலையசைத்து விட்டு குதிரையின் மீதேறிய ஜீவசித்தி உடனடியாக வீட்டின் பக்கம் செல்லாமல் நதியை நோக்கியே செல்ல சாரங்கராவ் அது ஏன் என்று புரியாமல் ஆச்சரியத்துடன் பார்த்தான். நதி விளிம்பில் நின்று கொண்டு ஜீவசித்தி யாகசாலையின் கள்ளச் சாவியைக் கையில் எடுத்து வேகமாக தூரத்திற்கு வீசினான். நீண்ட தூரம் சென்று அந்த சாவி நீரில் விழுந்து கங்கையின் ஆழத்திற்குச் சென்றது.

 

ஜீவசித்தி திரும்பி வேகமாக வீடு நோக்கிச் செல்ல சாரங்கராவ் தங்கள் கூடாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 

’இனி பாடலிபுத்திரத்தை விட்டு இந்தச் செல்வத்தோடு தப்பிக்கும் மிக முக்கியமான வேலை இருக்கிறது.’ என்று எண்ணியபடியே கூடாரத்தை அவன் அடைந்த போது விஜயனும், அந்த வீரனும் தங்கள் வேலையை அப்போது தான் முடித்திருந்தார்கள்.

 

விஜயன் சொன்னான். “சிறிது நேரமாவது தூங்குவோம். இனி நமக்கு நீண்ட பயணம் காத்திருக்கிறது”

 

மூவரும் உறங்க முயற்சித்தார்கள். ஆனால் தனநந்தனின் அளவற்ற செல்வத்தை அருகில் வைத்துக் கொண்டு அவர்களால் உறங்க முடியவில்லை. அதிக செல்வமும், ஆழ்ந்த உறக்கமும் சேர்ந்திருப்பது அரிதல்லவா?

 

(தொடரும்)

என்.கணேசன்





2 comments:

  1. நானே புதையல் எடுத்தமாதிரி திக் திக்னு இருக்கு

    ReplyDelete
  2. ஜீவசித்தி நல்லவர் என தெரிந்திருந்தும்... புதையலை எடுத்த பின் "உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று ஆச்சாரியர் சொல்லியனுப்பிய விதம்.... ஆச்சாரியரின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

    ReplyDelete