திடுக்கிட்ட கூர்க்கா அசடு வழிந்தபடி சொன்னான். “டாமி குரைக்க ஆரம்பிச்சுட்டான். அதான் ஏன்னு பார்த்தேன்”
“டாமி அதோட
வேலையைச் சரியா செய்யுது. நீ உன் வேலையைச் சரியாய் செய். உன் கவனம்
வெளிப்பக்கம் இருக்கட்டும்.”
மந்திரவாதி முதலாளி மாதிரி அவனுக்குக்
கட்டளை இடுவது கூர்க்காவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர்
தோற்றமும், தோரணையும் அவனைச் சற்று பயமுறுத்தியதால் அவன் ஒன்றும் சொல்லாமல்
தலையாட்டினான்.
பாண்டியனின் கார் வந்து நிற்கும் சத்தம்
கேட்டு, சுகுமாரன் தைரியமாக வெளியே வந்தார். இப்போதும்
தோட்டத்தில் நின்று சைத்ரா சிரித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. பாண்டியன்
கண்ணுக்கும் அவள் தெரிந்தால் நன்றாய் இருக்கும். இல்லாவிட்டால்
இப்போதும் அவர் நம்ப மாட்டார்...
உள்ளே நுழைந்த பாண்டியன் பார்வை, நாய் குரைத்துக்
கொண்டிருக்கும் பகுதிக்குத் தான் முதலில் சென்றது. அவர் சைத்ராவைப்
பார்த்து திகைத்தார். சைத்ரா வெள்ளைச் சேலை உடுத்தியிருந்தாள். அவரைப் பார்த்து வாய்விட்டுச்
சிரித்தாள். ஆனால் சத்தம் தான் கேட்கவில்லை. பாண்டியனுக்குத் தன் கண்களை நம்ப
முடியவில்லை. கண்களை
கசக்கி மூடி மறுபடியும் திறந்து பார்த்தார்.
சைத்ரா கேலியாகச் சிரிப்பது போல் இருந்தது.
ஆனால் அவருடைய அறிவு இன்னமும் ஆவியை நம்ப மறுத்தது. இது காட்சிப் பிழை போல்
தோன்றியது. சுடுகாட்டில் பல இரவுகள் காத்திருந்தும் காணக்கிடைக்காத
ஆவி இப்போது எப்படித் தெரிகிறது என்று அவர் மனம் தடுமாறியது. இன்ஸ்பெக்டர் செல்வம் தனக்கு வந்தக் கடிதத்தைப் படித்துச் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘தெய்வம் மட்டுமல்ல, ஆவியும் நின்று கொல்லும்’
என்று அவர் சொன்னதாக நினைவு. சுத்த பைத்தியக்காரத்தனம். இல்லாத
ஒன்று எப்படி காத்திருந்து கொல்ல முடியும்?
சுகுமாரன் ஓடி வந்து அவர் அருகில் நின்று கொண்டார். “உங்க கண்ணுக்கும் தெரியுதா?”
பாண்டியன் தலையசைத்தார். சுகுமாரனுக்குத் திருப்தியாக இருந்தது.
அவர் சொன்னார். “டாமிக்கும் தெரியுது. அதான் அவன் குரைக்கிறான். ஆனா கூர்க்காவுக்குத் தெரியறதில்லை.”
பாண்டியன் சொன்னார்.
“மஞ்சக்கலர் சேலைன்னு சொன்னீங்க. எனக்கு வெள்ளைக்
கலர் சேலைல அல்ல தெரியிது”
“நேத்து தான் மஞ்சக்கலர் சேலை. இன்னைக்கு எனக்கும் வெள்ளைக்கலர்
சேலைல தான் தெரியுது” என்றா சுகுமாரன்.
’ஆவியும் கலர் கலராய் தினம் ஒரு சேலை உடுத்துதே’ என்று
பாண்டியன் கிண்டலாக எண்ணிக் கொண்டார்.
ஆவியையும்,
அனைவரும் ஆவியின் செயல்களாய்ச் சொல்வதையும் அவரால் இப்போதும் நம்ப முடியவில்லை.
இந்த சைத்ரா ஆவியே ப்ரிண்ட் அவுட் எடுத்து மொட்டைக் கடிதத்தை தபால் மூலம்
அனுப்புகிறது. கடைக்குச் சென்று காவித்துணி எடுத்து எரிக்கிறது.
இதை எல்லாம் மனிதர்கள் உதவி இல்லாமல் ஆவி எப்படிச் செய்யும்?
இன்ஸ்பெக்டர் செல்வம் அந்த மொட்டைக் கடிதத்தை எழுதியது, யோகாலயத்திலிருந்து முன்பு ஒரு மொட்டைக்கடிதம் எழுதி சைத்ராவின் தந்தைக்கு
அனுப்பிய நபர் என்று சந்தேகப்பட்டார் என்பதை பாண்டியனால் யூகிக்க முடிந்தது.
ஆனால் அது உண்மையல்ல. முன்பு அந்தக் கடிதம் எழுதியிருக்கலாம்
என்று சந்தேகப்பட்டு மனதில் குறித்து வைத்திருக்கும் நபர்களைத் தொடர்ந்து பாண்டியன்
கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனால் அந்த நபர்கள்
அனுப்பவில்லை என்பது அவர் நிச்சயமாய் அறிந்த உண்மை. ஆனால் அதையெல்லாம்
அந்த இன்ஸ்பெக்டருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை…
பாண்டியன் ஆவியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே மெல்ல முணுமுணுத்தார். “இதுல எதோ சதி இருக்கற மாதிரி
தெரியுது.”
சுகுமாரனுக்கு பாண்டியன் கண்கொட்டாமல் ஆவியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. பேச்சில் மட்டுமல்ல, இந்த ஆள் உண்மையிலயே தைரியசாலி தான்.
பரசுராமனும் தொலைக்காட்சியில் பார்ப்பது
போல், தன் சக்தியால்
அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பாண்டியனின் தைரியம் ஆச்சரியமாய்
தான் இருந்தது. பாண்டியனின் இதயம் வேகமாக அடித்துக்
கொண்டிருந்தாலும் அவர் செயலிழந்து போகாமல், ஓடியும் போகாமல்,
தாக்குப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அவர் துணிச்சலை எடுத்துக்காட்டியது.
அவர் மனதின் எண்ண ஓட்டத்தையும் பரசுராமனால் அறிய முடிந்தது.
’சதி என்பதற்கு இவனைப் போன்ற கயவர்களின் அகராதியில் அர்த்தமே வேறாக இருக்கிறதே!’
என்று அவர் எண்ணினார்.
பாண்டியன் அந்த ஆவியின் கால்கள் தரையில் படுகிறதா என்று பார்த்தார். பாதங்கள் தெரிந்தாலும் தரையைத்
தொட்டு தான் நிற்கின்றனவா என்பது அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அவர் மெல்லக் குனிந்து தரையில் இருக்கும் சிறு கற்கள் இரண்டை எடுத்தார்.
பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரன் திகிலுடன் சில அடிகள் பின்னுக்கு
நகர்ந்தார். ‘இந்த முட்டாள் என்ன செய்யப் போகிறான்? ஏன் கல்களை எடுக்கிறான்?’
பாண்டியன் அந்தக் கற்களை அந்த ஆவித் தோற்றத்தின் மீது ஒவ்வொன்றாக
வீசினார். அந்தக்
கற்கள் சைத்ராவின் உருவத்தை ஊடுருவிச் சென்று போய் கீழே விழுந்தன.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பரசுராமன் உடனடியாக ஒரு மந்திரப்
பிரயோகம் செய்து சைத்ராவின் புகைப்படத்தைக் கூர்ந்து பார்த்தார். அடுத்த கணம் சைத்ராவின்
உருவம் பாண்டியனின் மீது பாய்ந்தது.
அதைச் சற்றும் எதிர்பார்த்திராத பாண்டியன் மின்னல் வேகத்தில்
அங்கிருந்து பின்னுக்கு நகர்ந்தார்.
ஆவி இப்போது எதிரே நின்றிருந்தது. சுகுமாரனுக்கு
பாண்டியன் மீது கடுங்கோபம் வந்தது. ‘ஏழாங்கிளாஸ் வரைக்கும் தான்
படிச்சிருந்ததாய் சொன்ன இவனுக்கு அதற்குப் பிறகு மூளை வளரலையா? சின்னப் பையன் மாதிரி ஆவி மேல் கல்லெடுத்து எறியறான். இங்கு இனி நிற்பது ஆபத்து’ என்று எண்ணியபடி வீட்டுக்குள்
ஓட, பாண்டியனும் அவரைப் பின் தொடர்ந்து ஓடினார். உள்ளே போனவுடன் பாண்டியன் விரைவாகக்
கதவையும் சாத்தித் தாளிட்டுக் கொண்டார். இருவரும் மூச்சு வாங்கியபடி
சோபாவில் சரிந்து உட்கார்ந்து கொண்டார்கள்.
தோட்டத்தில் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கூர்க்காவுக்கு
நடப்பதெல்லாம் தமாஷாகவும்,
வேடிக்கையாகவும் இருந்தது. அவனுக்கு எந்த உருவமும்
தெரியாவிட்டாலும் உள்ளே இருவர் பார்க்கும் இடமும், நாய் பார்த்துக்
குரைக்கும் இடமும் ஒன்றாய் இருப்பதால் அங்கு அவர்கள் கண்ணுக்கு மட்டும் எதோ தெரிகிறது
என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. ’மந்திரவாதி எதாவது மந்திரங்கள்
சொல்லியோ, பூஜை செய்தோ பேயை ஓட்டுவான் என்று எதிர்பார்த்தால்
கல்லெடுத்து எறியும் லெவலில் தான் இருக்கிறானே’ என்று எண்ணிக்
கொண்டான்.
அவன் கவனம் உள்ளே நடப்பதிலேயே இருந்ததால், தெருவில் தூரத்தில் ஒரு
இளைஞன் பைக்கை ஒரு மரத்தின் பின் மறைவாக வைத்திருந்து, அவனையே
இரகசியமாய் கண்காணிப்பது தெரிந்திருக்கவில்லை.
டாமி இப்போதும் தொடர்ந்து குரைத்துக் கொண்டு தான் இருந்தது. தொடர்ந்து
அதைக் கேட்டுக் கொண்டே இருந்ததில், ஏற்கெனவே இருந்த
வயிற்றெரிச்சல், காதில் ரீங்காரம் போன்ற உடல் பிரச்சினைகளுடன் தலைவலியும்
பாண்டியனிடம் சேர்ந்து கொண்டது.
சுகுமாரன் அவரிடம் கேட்டார். “என்ன யோசிக்கிறீங்க?”
பாண்டியன் சொன்னார். “ஓடி வராம
அங்கேயே இருந்திருந்தால் அந்த ஆவி என்ன செஞ்சிருக்கும்னு யோசிச்சேன்”
சுகுமாரன் திகைப்புடன் பாண்டியனைப்
பார்த்து விட்டுச் சொன்னார். “என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம். நீங்க கல்லெடுத்து
வீசியிருக்கக்கூடாது. அதனால தான் அது பாய்ஞ்சிருக்கு. நேத்து
அது இப்படி பாயலை”
பாண்டியன் சொன்னார். “ஆள் மேல
கல்லெறிஞ்சா காயமாகும். ஆவி மேல கல் எறிஞ்சா என்ன ஆகும்னு பார்க்கத் தோணுச்சு.”
சுகுமாரன் வாயடைத்துப் போனார். ’ஆவி இவன்
மேல் பாய்ஞ்ச பிறகும் இவனுக்கு குசும்பு குறையல. ஆளுக கிட்ட
மட்டுமில்லாம ஆவி கிட்டயும் இவன் வில்லங்கமாய் தான் நடந்துக்கறான். பிரச்சினையைத்
தீர்த்து வைப்பான்னு கூப்பிட்டா, பிரச்சினையை கூடுதலாய் உருவாக்கற மாதிரி நடந்துக்கறானே, இவனைக்
கூப்பிட்டதே தப்போ?’
(தொடரும்)
என்.கணேசன்
பேயை மீது கல் போட்டு சோதனை செய்யும் பாண்டியனுக்கு குசும்பு அதிகம் தான்🤣🤣🤣🤣
ReplyDeleteபாண்டியனின் சேட்டை ஒருபக்கம்.... சுகுமாரனின் பயம் ஒரு பக்கம்....