சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 13, 2021

யாரோ ஒருவன்? 63


வேலாயுதம் கல்யாண் அந்த நேரத்தில் அவருடைய அறைக்கு வந்ததைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார். “என்னடா?”

கல்யாண் முதலில் அவருடைய அறைக்கதவைச் சாத்தி விட்டு மெல்லச் சொன்னான். “அந்தப் பாம்பாட்டி ஏற்கெனவே தெரிஞ்சவன் தான்

எப்படித் தெரியும்? எப்போலருந்து தெரியும்? உன்னைத் தெரிஞ்சு தான் அவன் இங்கே வந்திருக்கானா? அப்படின்னா நேரா வந்து உன்னைப் பார்க்க வேண்டியது தானே? ஏன் பக்கத்து வீட்டைப் பார்க்கறான். அது தான் உன் வீடுன்னு நினைச்சுகிட்டானா?” என்று வேலாயுதம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார்.   

கல்யாண் தாழ்ந்த குரலில் அந்தப் பாம்பாட்டியைச் சந்தித்தது எங்கு, எப்போது என்பதைத் தந்தைக்குச் சொல்ல ஆரம்பித்தான். அவர் எல்லாம் கேட்டுக் கொண்டபின் திகைப்புடன் மகனைப் பார்த்தார். “அவன் இப்ப ஏன் இங்கே வந்திருக்கான்?”

தெரியலை. பக்கத்து வீட்டுல பாம்பு இருக்கிறது தெரிஞ்சு அதைப் பிடிக்க முடியுமான்னு வந்திருக்கலாம்கிறது  என் யூகம். இப்ப பிரச்னை அவன் வந்திருக்கிற நேரம் சரியில்லைங்கறது தான். மாதவன் விபத்துல இறந்ததை விசாரிக்க நாளைக்கு உளவுத்துறை அதிகாரி எவனோ வர்றான். எனக்கும் சரத்துக்கும் நோட்டீஸ் வந்திருக்கு

வேலாயுதம் முகத்தில் பீதி தெரிய ஆரம்பித்தது. “என்னடா சொல்றே. இத்தனை வருஷம் கழிச்சு ஏன் விசாரிக்க வர்றாங்க?

தெரியல

நமக்கு மொட்டைக் கடுதாசி எழுதிப்போட்டவன் அவங்களுக்கும் எழுதிப் போட்டிருப்பானோ?”

இருக்கலாம். வந்து விசாரிக்கிற அந்த அதிகாரிக்குப் பதில் சொல்ல நானும், சரத்தும் தயாராய் தான் இருக்கோம். அதை விடுங்க. எனக்கென்னவோ அந்தக் குறிப்பிட்ட பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்தற மாதிரியே ஒவ்வொன்னா நடக்க ஆரம்பிக்கிறது சரியா படலை. முதல்ல அந்த மொட்டைக் கடுதாசி, அப்பறம் தீபக்குக்கு வந்த கனவு, அப்பறம் உளவுத்துறை நோட்டீஸ், இப்ப இவன்.... இருபத்தியிரண்டு வருஷம் கழிச்சு ஒவ்வொன்னா ஏன் நடக்குது? எல்லாத்தையும் எப்படித் தற்செயல்னு நினைக்கறது?”

 வேலாயுதம் அவனைக் கவலையுடன் பார்த்தார்.

கல்யாண் சொன்னான். “மத்த எதையும் கேள்வி கேட்டு ஆராய்ச்சி செஞ்சு தெரிஞ்சுக்க நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்தப் பாம்பாட்டி கிட்ட கேள்வி கேட்டு இவன் ஏன் இந்தப்பக்கம் வந்தான், ஏன் பக்கத்து வீட்டைப் பார்த்துகிட்டு ரொம்ப நேரமாய் உட்கார்ந்திருக்கான்னு அவனை விசாரிச்சா நாம தெரிஞ்சுக்க முடியும்  அதனால நீங்க நாசுக்கா நல்ல விதமா அவன் கிட்ட பேசிப் பாருங்களேன். முக்கியமா அவன் பக்கத்து வீட்டை ஏன் பார்க்கறான்னு தெரிஞ்சுக்கறது நல்லது. பாம்பு தான் காரணமா இல்லை அவனுக்குப் பக்கத்து வீட்டுக்காரனை ஏற்கெனவே தெரியுமா, இல்லை இந்த நாகரத்தினம் சம்பந்தமான காரணமாங்கறதை தெரிஞ்சுக்கறது நமக்கு உபகாரமாய் இருக்கும். அவன் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லைங்கறதால உங்களை அடையாளம் தெரிஞ்சுக்கிற பிரச்சனை இருக்காது. அவன் பார்க்கிற வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்ங்கற வகையிலேயே நீங்க விசாரியிங்களேன்...” சொல்லி விட்டு சில ஐநூறு ரூபாய்த் தாள்களை அவர் கையில் கல்யாண் திணித்தான்.

வேலாயுதத்திற்குச் சந்தேகம் வந்தது. “அவன் ரொம்ப நேரமாய் அங்கே உட்கார்ந்திருக்கறதுனால பக்கத்து வீட்டுக்காரனும் அவனைக் கவனிக்காம இருக்க வழியில்லை. அவன் பார்க்க பார்க்க நான் போய் அந்தப் பாம்பாட்டி கிட்ட பேசினா அது நல்லாயிருக்குமா?”

கல்யாணுக்கு அவர் சொல்வதும் சரியென்றே தோன்றியது. ”சரி நாம அவனைக் கண்காணிச்சுகிட்டே இருப்போம். என்ன பண்ணப் போறான்னு பார்க்கலாம். நாம அவனைக் கவனிச்ச மாதிரி பக்கத்து வீட்டுக்காரனும் அவனை கவனிச்சு எதாவது செய்யவும் வாய்ப்பிருக்கு. அப்படி ஏதாவது ஆகுதா இல்லை இவனே உட்கார்ந்து சலிச்சு இங்கேயிருந்து போறானான்னு பார்ப்போம். ஒருவேளை அவன் இங்கேயிருந்து கிளம்பி போனா, கொஞ்ச தூரம் போன பிறகு அவனை விசாரியுங்களேன். அப்படிச் செஞ்சா நாகராஜ் பார்க்க வழியில்லை.”

அவர் தலையசைத்தார். இருவரும் மறைவான இடத்தில் நின்று கொண்டு அவனைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து பாம்பாட்டி தெருவின் இரண்டு பக்கங்களும் பார்த்தான். மணி இரவு பத்தரையைத் தாண்டி இருந்ததால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு நீண்ட இடைவெளிகளில் வந்து போய்க் கொண்டிருந்தன. அவன் தன் துணிமூட்டையிலிருந்து மெல்ல ஒரு பாம்பை எடுத்தான்.

வேலாயுதமும், கல்யாணும் திகைத்தார்கள். இவன் என்ன செய்யப் போகிறான்?

பாம்பாட்டி அந்தப் பாம்பை எடுத்து தரையில் விட்டான். பின் மெல்லப் போய் ஒரு பெரிய மரத்தின் பின் மறைந்து கொண்டான்.

வேலாயுதம் திகைப்புடன் மகனிடம் தாழ்ந்த குரலில் கேட்டார். “என்னடா செய்யறான் இவன்?”

கல்யாண் உதடுகளில் விரல் வைத்து பேசாமல் இருங்கள் என்று சைகை செய்தான். பாம்பாட்டியின் பாம்பு வேகமாக தெருவைக் கடக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் ஸ்கூட்டரில் அந்தப் பக்கம் வந்த ஒருவன் உடனடியாக ப்ரேக் போட்டு ஸ்கூட்டரை நிறுத்தினான். திகைப்புடன் அந்தப் பாம்பை அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் தெருவைக் கடந்த அந்தப் பாம்பு நாகராஜின் வீட்டுப் பக்கம் போக ஆரம்பித்தது.  


அந்த ஆள் பரபரப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் பார்வையில் படாததைப் பார்த்து பின் அங்கு நிற்பது விவேகமல்ல என்று எண்ணியவனாய் அதிவேகத்துடன் அங்கிருந்து பறந்தான்.

பாம்பாட்டி மரத்தின் பின்னிருந்து சிறிது தள்ளி வந்து தன் பாம்பையே கவனித்தான். பாம்பு நாகராஜ் வீட்டின் கேட்டைக் கடந்து உள்ளே சென்றது.

நாகராஜ் வீட்டுக் கேட்டைத் தாண்டி அந்தப் பாம்பு உள்ளே போனதும் வேலாயுதம் திகைப்போடு தாழ்ந்த குரலில் மகனைக் கேட்டார். “என்னடா நடக்குது?”

கல்யாண் அதே தாழ்ந்த குரலில் எரிச்சலுடன் சொன்னான். “உங்க கூட தானே நானும் இருக்கேன். எனக்கென்ன தெரியும். பொறுங்கப்பா, என்ன நடக்குதுன்னு பார்ப்போம்


னார்தன் த்ரிவேதியின் மேனேஜர் காளிங்க சுவாமியின் ஆட்களைத் தொடர்பு கொள்ள கடந்த மூன்று மணி நேரமாக முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் செய்தியைக் கேட்டே காதுகள் புளித்துப் போனதாய் அவன் உணர்ந்தான்.

காளிங்க சுவாமியின் சீடர்களாய் இருக்கும் அந்த இருவரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி இருக்க முடிகிறது என்பது அந்த மேனேஜருக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்போதும் இருட்டில் வாழும் அந்த உப்பு சப்பில்லாத வாழ்க்கையை அவர்களால் எப்படி சகித்துக் கொள்ள முடிகிறதோ தெரியவில்லை. காளிங்க சுவாமியின் வருமானமும், சேர்த்து வைத்திருக்கும் சொத்தும் மிக உயர்ந்த அளவில் இருக்கும் என்பதால் அவர் சீடர்களுக்கும் தாராளமாய் தருவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அது போன்ற சூழலில் வாழ்வது மகா கொடுமை தான் என்று தோன்றியது.  

மேலும் ஒரு மணி நேரம் முயற்சி செய்து சலித்த பின் ஒரு சீடனின் செல்போன் அடித்தது. அவனிடம் மேனேஜர் பரபரப்புடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு சொன்னான். “ஐயா சுவாமி கிட்ட அவசரமா ஒன்னு கேட்கணும்னார்...”

அந்த சீடன் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான். “சுவாமி முக்கியமான நாக விரதப் பூஜையில் இருக்கார். இன்னும் அஞ்சு நாளைக்கு நாங்களே அவரை நெருங்க முடியாது. அடுத்த வாரம் போன் பண்ணுங்க”

ஒரு பழுத்த அரசியல்வாதியிடம் பல காலம் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் இது போன்ற முதல் மறுப்பிலேயே சரி என்று சொல்லி மேனேஜர் பின் வாங்கவில்லை. முதல் மறுப்பு கூடுதலாக எதாவது எதிர்பார்க்கும் யுக்தியாகவும் இருக்கும் என்று தோன்றியதால் மேனேஜர் சொன்னான். “ஐயா ரொம்ப அவசரமானதால தான் போன் பண்ணச் சொன்னார்... கொஞ்சம் சொல்லிப் பாருங்களேன்....”

“உங்க அவசரத்துக்கு நான் போய் பேசி சாக முடியாதுய்யா. ஒரு உக்ரமான பூஜை நடந்துகிட்டிருக்கு. மிக முக்கியமான காலம் இதுய்யா. புரிஞ்சுக்கோ” என்று எரிச்சலுடன் சொல்லி அந்தச் சீடன் இணைப்பைத் துண்டித்தான்.   

மேனேஜர் திகைப்புடன் தன் செல்போனை ஒரு கணம் பார்த்து விட்டு ஜனார்தன் த்ரிவேதியிடம் தகவலைத் தெரிவிக்க விரைந்தான்.


(தொடரும்)
என்.கணேசன்





2 comments:

  1. ஒருவேளை அந்த பாம்பாட்டிக்கும் காளிங்க சுவாமிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...?

    ReplyDelete
  2. Kalinga Swami and the snake charmer add the mystery. Super sir. I wonder how you are going to connect all these!

    ReplyDelete