வாங் வே விஸ்வத்தின் வேண்டுகோள் மின்னஞ்சலில் வந்ததும் பரபரப்பானார்.
கிழவர் அதைப் பார்த்து விட்டு அவருக்குப் போன்
செய்து பேசுவார் என்று எதிர்பார்த்தார். ஏனென்றால்
இது போன்ற கோரிக்கைகளுக்குப் பதில் அனுப்பும் வேலையை கிழவர் என்றுமே செய்ததில்லை. நேரில்
பேசினால் அல்லது கேட்டால் அதற்குப் பதில் எதுவும் சொல்வார் அல்லது உத்தரவு போடுவாரே
ஒழிய எழுத்து மூலம் செய்வதற்கு அவருக்கு உதவியாளரோ,
இல்லை வாங் வேயைப் போன்ற ஆளோ வேண்டும். தலைமைக்குழு மின்னஞ்சலுக்கு வந்திருப்பதால்
உபதலைவர் அல்லது வாங் வேயிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். வாங் வேயின்
அவசரம் தலைமைக்குழு உறுப்பினர்களில் மற்றவர்களுக்கு இல்லை என்பதால் அவர்களாக எதுவும்
கேட்கப் போவதில்லை. வாங் வேக்கு இரண்டு நாளில் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் தலைமைச்
செயற்குழு கூட்டத்தில் நேரடியாகக் கேட்டுக் கொள்ளும் பொறுமை இல்லை. அதே சமயத்தில் போன்
செய்து அவராகக் கேட்கும் தைரியமும் இருக்கவில்லை. இதற்கு முன்
விஸ்வம் கடிதம் போட்ட போதும் போன் பண்ணி என்ன செய்யலாம் என்று கேட்டவரும் அவர் தான்.
இப்போதும் கேட்டால் கிழவருக்குக் கண்டிப்பாகச் சந்தேகம் வலுக்கும். சாலமனின் முடிவு
தெரிந்த வாங் வே ஆபத்தின் எல்லைக் கோட்டைத் தாண்ட மனமில்லாமல் இருந்தார். எர்னெஸ்டோ
நாளை கிளம்புகிறார். அதனால் நாளை அவர் எதுவும் சொல்ல வாய்ப்பில்லை. இன்று மனிதர் எதாவது
சொல்லலாம். அவருக்கு வேண்டுமளவு நேரம் இருக்கிறது. இதற்குப் பதில் சொல்வதை விட பிதோவனின்
இசை முக்கியம் என்று அவர் நினைத்தாலும் நினைக்கலாம். அவர் நினைத்தது போல பிதோவனின்
இசை தான் கிழவருக்கு முக்கியமாகியிருக்க வேண்டும். அவர் வாங் வேயை அழைக்கவில்லை…
விஸ்வம் அந்தப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரில்
எம்பி எர்னெஸ்டோவின் பங்களாவை எட்டிப் பார்த்தான். பங்களாவின் உள்ளே ஹாலில் மெல்லிய
விளக்கொன்று மட்டும் எரிந்து கொண்டிருந்தது. மற்ற அறைகள் எல்லாம் இருள் மண்டிக் கிடந்தன.
பங்களாவின் வெளியே நாலா பக்கமும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பங்களாவின் முன்
கேட்டில் இரண்டு காவலர்கள் இருப்பார்கள் என்றும், தெருவில் இரண்டு
காவலர்கள் இருப்பார்கள் என்றும்
பங்களாவின் உள்ளே ஒரு சமையல்காரனும்,
இன்னொரு வேலைக்காரனும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் இருப்பார்கள் என்றும் சாலமன் சொல்லியிருந்தார்.
ஆனால் நாளை மறுநாள் எர்னெஸ்டோ வந்து சேர்வதால் நாளை இரவே பாதுகாப்பு ஆட்கள் பலர் இங்கே
வந்து விடுவார்கள். எர்னெஸ்டோவுடன் இருக்கும் ஆட்கள், இங்கு சேரப்போகும் ஆட்கள் என்று
பாதுகாப்பு பலமடங்காகி விடும். கிழவருக்கு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளே சிறைப்படுத்துவது
போலத் தோன்றுவதில் தவறில்லை என்று விஸ்வத்துக்குத் தோன்றியது.
இன்னேரம்
சமையல்காரனும், வேலைக்காரனும் உறங்கியிருப்பார்கள். பாதுகாப்பு அதிகாரி எப்போதும் விழித்திருப்பார்.
தலைவர் இல்லாத போது உள்ளே ஒரு பாதுகாப்பு அதிகாரி அவசியமில்லை என்ற போதும் அப்படி ஒரு
உயரதிகாரியை ஏன் வீணாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது அந்த ஆள் தான்
விஸ்வத்துக்குப் பிரச்னை. அவன் அவர் அறியாமல் உள்ளே போய் வர வேண்டும்….
சாலமனிடம்
விஸ்வம் கேட்டிருக்கிறான். “அந்த அதிகாரி உள்ளே தூங்கவும் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு
என்ன தான் இரவு வேளையில் செய்வார்?”
“கொடுமை
தான். வீட்டைச் சுற்றியிருக்கும் கண்காணிப்பு கேமிராக்கள் காண்பிப்பதை கம்ப்யூட்டர்
ஸ்கிரீனில் பார்ப்பது தான் அவர் வேலை. தலைவர் அங்கே தங்கியிருக்கும் போது அவருடன் இன்னொரு
அதிகாரியும் இருப்பார். அவர்கள் இருவர் பார்வையும் அதிலேயே தைத்தபடியிருக்கும். தலைவர்
இல்லாத போது அந்தப் பாதுகாப்பு அதிகாரி சிறிது நேரம் அந்தக் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப்
பார்ப்பார். சிறிது நேரம் மொபைல் பார்ப்பார், உள்ளே நடப்பார், வெளியே வந்து
சிறிது நேரம் நிற்பார், பழையபடி உள்ளே போவார்….” என்று சிரித்தபடி சாலமன் சொல்லியிருந்தார்.
அப்படி
அந்தப் பாதுகாப்பு அதிகாரி வெளியே வருவதற்காக விஸ்வம் முகமூடி அணிந்து கொண்டு காத்திருந்தான். ஆனால் எம்பிய
நிலையிலேயே அந்த காம்பவுண்ட் சுவரில் இருப்பது சிறிது நேரத்திற்குப் பின் வலிக்க ஆரம்பித்தது.
உள்ளே குதித்துக் காத்திருக்கலாம் என்றாலோ பின்பக்கம் இருக்கும் கண்காணிப்பு காமிரா அந்த அதிகாரிக்குக் காட்டிக்
கொடுத்து விடும். அதனால் கீழே இறங்கி அந்தப் பின் பங்களா காம்பவுண்ட் சுவரிலேயே சாய்ந்து
நின்ற விஸ்வத்தின் காதுகள் மட்டும் எர்னெஸ்டோ பங்களாவிலிருந்து வரும் ஓசைகளின் மீது
கவனமாக இருந்தன. நேரம் மெல்ல ஊர்ந்தது. விஸ்வம் பொறுமையிழக்காமல் காத்திருந்தான்.
எர்னெஸ்டோவின்
பங்களா காவலாளிகள் இருவரும் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. இருவரும் பழைய இராணுவ
வீரர்கள் என்று பேச்சில் தெரிந்தது. ஈராக்கில் நடந்த போரில் அமெரிக்காவின் சார்பாகப்
போரிட்டிருந்த அவர்கள் அந்தச் சமயத்து நிகழ்வுகளை நினைவுகூர்ந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று பங்களாவின் கதவு திறக்கப்படும்
சத்தம் கேட்டது. விஸ்வம் மறுபடி காம்பவுண்ட் சுவரில் எம்பிப் பார்த்தான். அந்தப் பாதுகாப்பு
அதிகாரி வெளியே வந்து வராந்தாவில் நின்று சோம்பல் முறித்தார். முன் கேட் காவலாளிகள்
அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்கள். அவர் அவர்கள் பேச்சை உள்ளிருந்தே கேட்டிருந்தார்
போலிருந்தது. அவர் அவர்கள் அருகில் சென்று ”அங்கேயிருந்த போது சதாம் உசைனை நேரில் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
விஸ்வம்
மறைவாகச் சுவர் ஏறிச் சத்தமில்லாமல் குதித்தான். குதித்தவன் அசையாமல் சுவரோடு ஒட்டி
நின்று கவனித்தான். அவர்கள் பேச்சு தடைப்படவில்லை. அதனால் அவர்கள் காதில் அவன் குதித்த
சத்தம் விழவில்லை என்பது உறுதியானது. சுவர்
ஓரம் போய் நின்று மெல்ல எட்டிப் பார்த்தான். மூவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காவலாளிகள் ஈராக்கில் பொதுமக்களின் ஏழ்மையையும் சதாம் உசைனின் மாளிகைகளின் செல்வச்
செழிப்பும் பற்றி விவரமாகச் சொல்ல அந்த அதிகாரி கேட்டுக் கொண்டிருந்தார். விஸ்வம் தான்
இருக்கும் இடத்திற்கும் பங்களாவின் வாசலுக்கும் உள்ள தூரத்தையும், அதை அடையத் தேவையான
குறைந்தபட்ச நேரத்தையும் மனதளவில் கணக்குப் போட்டான். இருபது வினாடிகளாவது வேண்டும்.
மனதைக்
குவித்து உடலுக்குக் கட்டளையிட்டான். “இருபது வினாடிகளில் வாசலை அடைய வேண்டும்.” அவன்
கட்டளையைக் கேட்டு உடலின் ஒவ்வொரு செல்லும் தயாராவது போல் கற்பனை செய்து கொண்டான்.
அவனால் முடியும். ஏனென்றால் சில நாட்களாகவே
சர்ச்சுக்குள் ஓடி அவன் பயிற்சி எடுத்திருக்கிறான். இப்போது இருக்கும் ஒரே பிரச்சினை
ஓடும் போது அவர்கள் மூவர் கண்ணிலும் பட்டு
விடக்கூடாது என்பது தான். அவர்கள் மூவரிடமும் துப்பாக்கி இருக்கிறது.
பார்த்து விட்டால் துப்பாக்கி ரவைகளால் அவன் உடம்பைச் சல்லடையாக்கி விடுவார்கள்.
இப்போது
பாதுகாப்பு அதிகாரியின் முதுகு தான் விஸ்வத்திற்குத் தெரிகிறது. அவர் திரும்பினால்
ஒழிய அவனைப் பார்க்க முடியாது. அவர் உடல் ஒரு காவலாளியை முழுவதுமாக மறைத்திருந்தது.
அதனால் அந்தக் காவலாளியும் ஓடி வரும் விஸ்வத்தைப்
பார்க்க முடியாது. ஆனால் பக்கவாட்டில் நின்றபடி அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் காவலாளி
கண்டிப்பாக விஸ்வத்தைப் பார்த்து விட முடியும். விஸ்வம் பொறுமையாகக் காத்திருந்தான்.
நல்ல வேளையாகத் தெருக்காவலில் இருந்த காவலாளி
ஏதோ கேட்டபடி பங்களா வெளி கேட்டை நெருங்க பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்த காவலாளி
அந்தப் பக்கம் திரும்பினான். இது தான் சமயம் என்று விஸ்வம் வாசலை நோக்கி ஓடினான். அவன்
அணிந்திருந்த ரப்பர் ஷூ சத்தம் செய்யவில்லை. சத்தம் வராதபடி ஓடி விஸ்வம் பல முறை பயிற்சியும்
எடுத்திருக்கிறான். இருபத்தி
ஒன்றாவது வினாடியில் விஸ்வம் பங்களாவுக்குள் நுழைந்திருந்தான். அது வரை அந்தக் காவலாளி
திரும்பாமல் இருந்தது அவனைக் காத்தது.
விஸ்வத்துக்கு
உள்ளே உள்ள அறைகள் மனதளவில் அத்துப்படியாகி இருந்தன. வரவேற்பறை
தாண்டி மெல்ல ஹாலுக்கு வந்தான். ஹாலின் மெல்லிய விளக்கு ஒளியில்
அவன் அதிகம் நிற்காமல் அதைத் தாண்டி அவன் திட்டமிட்டிருந்த ஒரு மூலை அறையை நோக்கி ஓடினான்.
அறைக்கதவைச் சத்தமில்லாமல் திறந்து சத்தமில்லாமல் மூடினான். உள்ளே இருள் நிறைந்திருந்தது.
ஆனால் இருட்டு என்றுமே விஸ்வத்துக்கு பழைய உடலிலும் சரி, இந்த உடலிலும் சரி ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. ஐந்தே வினாடிகளில்
அவன் கண்கள் அந்த இருட்டிற்குப் பழகியிருந்தன. வெளிச்சத்தில் பார்ப்பது போல் அவனால்
எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
In a very tense situation you wrote thodarum. What is Viswam upto? OK OK. you'll say "wait till next Thursday or buy the novel." It is worth having this super novel. I agree.
ReplyDeleteUnbelievable worst than tamil nadu police security
ReplyDeleteவிஸ்வம் இதுவரை எந்தவொரு பெரிய சக்தியையும் இந்த உடலில் வெளிபடுத்தவில்லை.... தலைவர் வந்த பிறகு தான் தெரியும் விஸ்வத்தின் சக்தி அளவு....
ReplyDelete