சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 2, 2021

இல்லுமினாட்டி 131




வாங் வே எர்னெஸ்டோவின் கட்டளையின் பேரில் கர்னீலியஸின் நல்லடக்கத்தில் உள்மனதில் மகிழ்ச்சியுடனும், வெளிப்பார்வைக்கு கம்பீரமான சோகத்துடனும் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்தவர்கள் கர்னீலியஸின் மரணம் சுகமரணம் என்று சொன்னார்கள். உறக்கத்திலேயே மரணத்தைத் தழுவுவது எல்லோருக்கும் கிடைக்க முடிந்த பாக்கியம் அல்ல என்றார்கள். வாங் வேயும் ஆமோதித்துத் தலையாட்டினார்.

கர்னீலியஸின் வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்மணியிடம் அவர் வீட்டின் ஒரு சாவி இருந்தது. அவள் கதவைத் திறந்து கொண்டு வந்து அவர் அறையை எட்டிப் பார்த்த போது தான் அவர் இறந்திருந்ததைக் கண்டுபிடித்தாள். பின் டாக்டருக்கும்,  உறவினர்களுக்கும் போன் செய்தாள். அந்தச் செய்தியும், டாக்டர் அவர் மாரடைப்பால் காலமானார் என்று சொன்னார் என்ற செய்தியும் வாங் வேயின் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தன. எவ்வளவு சாமர்த்தியமாய் விஸ்வம் கொன்று அதை இயற்கை மரணமாக வேறு மாற்றி இருக்கிறான்? இப்படித்தான் எர்னெஸ்டோவையும் ஏதாவது செய்வானோ? ஆனால் கர்னீலியஸைப் போல் அல்லாமல் எர்னெஸ்டோவைச் சுற்றி பெரிய பாதுகாப்புப் பட்டாளமும், அமானுஷ்யனும் இருக்கிறார்களே எப்படி விஸ்வம் சமாளிப்பான்? எப்போது தன் திட்டத்தை நிறைவேற்றுவான்?

இத்தனையையும் மீறி இந்த வழியிலேயே அவன் எர்னெஸ்டோவையும் கொல்ல முடிந்தால்  யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அந்தக் கிழவரும் உறக்கத்திலேயே போய் விட்டார் என்று இப்படியே பேசிக் கொள்வார்கள். இந்த விதக் கொலையில்  அவனும் மாட்டுவது, அவன் திரும்பக் கொல்லப்படுவது எல்லாம் நடக்காது. அவருடைய அந்த இரகசிய ஆசை நிறைவேற வழியில்லை. ஆனாலும் பரவாயில்லை. விஸ்வம் தலைவனாகட்டும், அவனுக்குக் கீழ் இல்லுமினாட்டியின் உபதலைவர் ஆவதும் ஒரு அதிர்ஷ்டமே என்று அவர் எண்ணிக் கொண்டார்.   

கர்னீலியஸின் நல்லடக்கம் முடிந்து ஓட்டலுக்குத் திரும்பிய அவர் தன் இரகசிய அலைபேசியில் விஸ்வத்தைத் தொடர்பு கொண்டார். “வணக்கம். நான் இப்போது தான் கர்னீலியஸின் அடக்கம் முடிந்து திரும்பினேன். வாழ்த்துக்கள்...”

விஸ்வம் இது போன்ற சில்லறை வெற்றிகளில் மகிழ்ந்து பெருமையடையும் ரகம் அல்ல. அவன் கேட்டான். “வேறு என்ன தகவல்?”

வாங் வே சொன்னார். “வியாழக்கிழமை பொதுக்கூட்டத்திற்கு முன்னால் தலைமைச் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி விடலாம் என்கிறார் கிழவர். அதில் பேச ஏதாவதிருந்தால் குறித்துக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்.  அது ஒரு அருமையான சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் அதில் பேசலாம் என்று இருக்கிறேன்...”

“சாகப் போகிற அந்த ஆளிடம் பேச என்ன இருக்கிறது? பேசுவதில் தான் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது?”

“அவர் இருக்கையிலேயே முறைப்படி நீங்கள் அவரைத் தொடர்பு கொண்டு இருக்கிறீர்கள் என்று நம் உறுப்பினர்களுக்கு சொல்ல அது பயன்படுமல்லவா?”

“முறைப்படி நான் அவருக்கு முன்பே கடிதம் எழுதியிருக்கிறேனே?”

“ஆனால் அவர் பதில் அனுப்ப நீங்கள் விலாசம் எதுவும் அனுப்பவில்லையே. சென்ற முறையே உங்கள் கடிதம் பார்த்தவுடன் அவரிடம் என்ன முடிவெடுக்கலாம் என்று வலியப் போய்க் கேட்ட போது அதைத் தான் அவர் காரணமாய்ச் சொன்னார்”

“விலாசம் அனுப்பினால் அடுத்த அரை மணி நேரத்தில் என்னைக் கொல்ல ஆட்களை அனுப்பி விடுவாரே”

“விலாசம் அனுப்ப வேண்டாம். மெயிலில் அனுப்புங்கள். அதை வைத்து அவர் உங்கள் இருப்பிடம் கண்டுபிடிக்க முடியாது. உங்கள் வேண்டுகோளுக்கு அவர் பதில் ஏதாவது சொல்லித் தானாக வேண்டும். அதுவும் அவருடைய பர்சனல் ஐ.டிக்கு அனுப்ப வேண்டாம். வந்ததாகவே காட்டிக் கொள்ளாமலும் இருக்க முடிந்த கிழவர் அவர். அதனால் எங்கள் தலைமைச்செயற்குழு மெயில் ஐ.டிக்கு அனுப்புங்கள். அது அவர், உபதலைவர், மற்ற மூன்று தலைமைக்குழு உறுப்பினர்கள் என்று எங்கள் ஐந்து பேருக்கும் வரும். எனக்கும் வந்த மெயில் என்பதால் அவரிடம் அதை நான் பேச முடியும். அப்படிப் பேசினால் அவர் என்னைச் சந்தேகக்கண்ணோடு பார்க்க வழியில்லை... முடிவெடுக்காமல் அவர் இறந்தாலும், விதிமுறைகளின்படி பிறகு அந்த விஷயத்தை நம்மால் எடுத்துச் செல்ல முடியும்”

விஸ்வம் ஆலோசித்தான். வாங் வேயின் இந்த ஆலோசனை அவனுக்குச் சரியாகவே தோன்றியது. “சரி. உங்கள் தலைமைக்குழு மெயில் ஐ.டியை எனக்கு அனுப்புங்கள்” என்றான்.  

வாங் வே உடனே அதை அனுப்பி வைத்தார்.


சிந்துவின் தாய் மிருதுளா உதய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்ததைத் தொலைக்காட்சி செய்தியில் பார்த்துப் பதறிப் போனாள். உடனே போன் செய்து சிந்துவிடம் அவள் பேசினாள். சிந்துவுக்கு அவளிடம் உண்மையைச் சொல்லி ஆசுவாசப்படுத்த முடியவில்லை. டாக்டர்கள் உதயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதாக மட்டும் சொன்னாள். மிருதுளா சென்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன போது இப்போது வேண்டாம், சொல்கிற போது வந்தால் போதும் என்று சிந்து தடுத்தாள். அவள் தினமும் இரண்டு முறையாவது மகளிடம் போன் செய்து விசாரித்தாள்.

நம்பிக்கைக்குரிய இரண்டு டாக்டர்கள், இரண்டு நர்ஸ்கள் தவிர வேறு யாருக்கும் உண்மை நிலவரம் தெரியாமல் மருத்துவமனை பார்த்துக் கொண்டது. தனி தீவிரசிகிச்சைப் பிரிவில் உதய் தொலைக்காட்சி பார்த்தும், புத்தகங்கள் படித்தும் பொழுதைப் போக்கினான்.    இடையே அவர்கள் ஒவ்வொருவரும் மிக ரகசியமாகச் சென்று சிறிது நேரம் இருந்து அவனிடம் பேசி விட்டு வருவார்கள்.

அப்படி சிந்து போன போது அவனிடம் தன் தாய் உயிரோடிருப்பதாகவும், அவளைப் பற்றிய உண்மை தெரிய வந்திருப்பதாகவும் சொல்லி நடந்திருப்பதை எல்லாம் அவனிடம் சொன்னாள். (க்ரிஷ் அந்த உண்மை எப்படியானாலும் தெரிய வேண்டிய உண்மை, சந்தர்ப்பம் வரும் போது மறைக்காமல் சொல்லி விடு என்று அறிவுறுத்தி இருந்தான்.) எல்லாம் கேட்ட உதய் இப்படியும் ஒரு தகப்பன் இருப்பானா என்று திகைத்தான். மிருதுளா அந்த ஆளை ஓங்கி அறைந்ததைக் கேட்டு அவன் சந்தோஷப்பட்டான். “நீயும் ரெண்டு அறை அவனை அறைஞ்சிருக்கணும்” என்றான்.

அந்த உண்மையை அவள் பிறகு பத்மாவதியிடமும், ஹரிணியிடமும் கூடச் சொன்னாள்.  அவர்களும் நடந்திருக்கும் கொடுமையை எண்ணி திகைப்படைந்தார்கள். பத்மாவதி சொன்னாள். “காலம் கடந்தாவது தெரிய வந்ததே நல்லது. பாவம் உங்கம்மா. அவங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்? நானும் அவங்க கிட்டே பேசலாமா?”

சிந்து ஹரிணியைப் பார்த்தாள். ஹரிணி மாமியாரிடம் சொன்னாள். “பேசறது பெரிசில்ல. அவங்க உதய்க்கு இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தப்பட்டாங்கன்னா நீங்க இதெல்லாம் நாடகம்னு ஆறுதல் சொல்லிடக்கூடாது... அதே மாதிரி இதெல்லாம் முடிகிற வரைக்கும் அவங்களை இங்கே வரச் சொல்லக்கூடாது”

பத்மாவதி சொன்னாள். “நீ சொன்னதும் சரி தான். நீ சொல்லியிருக்கலைன்னா நான் அப்படிச் சொல்லக்கூடியவள் தான். உதய் என்னைத் திட்டறதுல தப்பே இல்லை. என்ன பண்றது, அப்படியே வளர்ந்துட்டேன். ஆனா நீ ஞாபகப்படுத்திட்டதால நான் கவனமாய் பேசுவேன்....”

சொன்னவள் சிந்துவை விட அதிகமாய் மிருதுளாவிடம் பேசினாள். பேச்சிலேயே இருவரும் மிக நெருங்கி விட்டார்கள். மிருதுளாவுக்கு பத்மாவதியை மிகவும் பிடித்து விட்டது. பிறகு மகளிடம் பேசும் போது அவள் சொன்னாள். “உன் மாமியார் தங்கமானவங்க சிந்து. நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான். உதயும் பிழைச்சுக்குவான் கவலைப்படாதே.”

உண்மையிலேயே சிந்து தன்னை அதிர்ஷ்டசாலியாகவே உணர்ந்தாள். இந்த இரண்டு நாட்களிலேயே அவள் பத்மாவதியிடமும், ஹரிணியிடமும் மிகவும் நெருங்கி இருந்தாள். தன் பழைய வரலாறை மட்டும் அவர்களிடம் அவள் சொல்லவில்லையே தவிர மற்ற எல்லா எண்ணங்களையும் அவள் அவர்களுடன் பகிர்ந்து கொண்டாள். உதயைச் சந்திக்கும் சிறிது நேரம் கூட ஆவல் மிகுந்ததாய், ஆனந்தமாய் இருந்தது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று தினமும் காத்திருக்கும் உண்மையான காதலியாக அவள் மாறியிருந்தாள். முதல் தடவையாக இது தடைப்படாத வரை வாழ்க்கை சொர்க்கம் தானென்று  அவளுக்குத் தோன்றியது. ஆனால் உள் மனதில் இது தடைப்படாமல் இருக்க வழியில்லை என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. உடனடியாக இல்லா விட்டாலும் சில நாட்கள் கழித்தாவது விஸ்வம் அவள் மனதை ஊடுருவிப் பார்க்கத் தான் போகிறான். நடந்தது எல்லாம் அறிந்து கொள்ளத் தான் போகிறான். அப்போது அவள் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்து விடும் என்ற கலக்கம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. அதை க்ரிஷ் கூடத் தடுக்க முடியும் என்று அவள் நம்பவில்லை. அது வரை சந்தோஷமாயிருந்து விட்டுச் சாவோம் என்கிற தயார் மனநிலை அவளிடம் உருவாகியிருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Super update. Eagerly waiting for Washington events.

    ReplyDelete
  2. Waiting for the thrilling moments in Washington.

    ReplyDelete
  3. வாஷிங்டன் நிகழ்வை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...

    ReplyDelete