சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 8, 2021

இல்லுமினாட்டி 97


சாலமன் அழைத்த போது வாங் வே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரிடம் உள்ள அந்த ரகசிய அலைபேசியில் இருந்து ஒரே ஒரு அலைபேசிக்கு மட்டுமே அழைப்பு போகும். அதே போல அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பை மட்டுமே அந்த அலைபேசி ஏற்கவும் செய்யும். அவரிடமிருக்கும் மற்ற அலைபேசிகள் எல்லாம் அவர் உறங்கப் போகும் முன் மௌனமாக்கப்பட்ட பின்னரே அவர் உறங்கப் போவார். அதனால் அலைபேசி அகால நேரத்திலும் அலறுகிறது என்றால் அழைப்பது சாலமனாகத் தான் இருக்க வேண்டும். ஏதோ முக்கியமான விஷயமாக மனிதர் அழைக்கிறார் என்று புரிந்தவராக எழுந்த வாங் வே அலைபேசியை எடுத்துப் பேசினார். “ஹலோ”

“சார் விஸ்வம் எங்கே ஒளிந்திருக்கிறான் என்பது தெரிந்து விட்டது.”

ஒரு கணம் வாங் வே பேச்சிழந்தார். பின் பரபரப்புடன் கேட்டார். “எந்த இடம்? அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”

சாலமன் விவரித்துச் சொன்னார். வாங் வே அவரைப் பாராட்டி விட்டுக் கேட்டார். “நீங்கள் அந்த சர்ச்சின் பக்கம் முதலில் போயிருக்கவில்லையா?”

“எங்கள் ஆட்கள் போயிருக்கிறார்கள். அந்த சர்ச்சில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். பாதாள அறை ஒன்று அதில் இருக்கும் என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு வராததால் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்க்கவில்லை...”

“நல்லது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசித்துச் சொல்கிறேன்.  வேறெதாவது தகவல் இருக்கிறதா?”

“க்ரிஷ் மூன்று நாளில் வருகிறான். இம்மானுவலும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு அந்த சமயத்திலேயே வருகிறான். ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகிறார்கள்”

வாங் வேக்குக் கோபம் வந்தது. தலைமைக்குழு என்று ஒன்று இருப்பது கிழவருக்கு மறந்தே போய்விட்டது போலிருக்கிறது. எதையும் தலைமைக்குழுவுடன் கலந்தாலோசிப்பதே இல்லை. அதைத் தட்டிக் கேட்கவும் மற்ற தலைமைக்குழு உறுப்பினர்கள் தயாராக இல்லை. வாங் வேக்கு எர்னெஸ்டோ மீதிருந்த கோபம் க்ரிஷ் மீதும் தாவியது. என்னவோ அறிவுஜீவியாம், இல்லுமினாட்டியைக் காப்பாற்ற வந்தவனாம்... எல்லாரையும் சாமியாராக்கி விடும் தத்துவங்களைக் கொண்டு வந்து இல்லுமினாட்டியில் திணிக்கப் பார்க்கிறான்... அவனுக்கு விஸ்வம் எவ்வளவோ பரவாயில்லை. அனுமதித்தால் அவன் இல்லுமினாட்டியில் புதிய சரித்திரம் எழுதக் கூடியவன் அவன் தான். அவன் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையுடன் அதிரடியாய் மறு உடல் எடுத்து வந்திருக்கிறான். இந்தச் சாதனையை யார் தான் செய்து விட முடியும். அப்படிப்பட்டவனை கிழவர் அழிக்கப் பார்க்கிறார்.

வாங் வே இல்லுமினாட்டி தன் தலைமைக்குக் கீழ் வர வேண்டும் என்று நீண்ட காலமாக ரகசியமாய் ஆசைப்படுபவர். இப்போதும் அதற்காக ஏதாவது சின்ன வழி கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்க மாட்டார். ஆனால் அது முடியாத பட்சத்தில் அவர் இல்லுமினாட்டி தலைமைக்கு விஸ்வத்தைத் தான் ஆதரிப்பார். அவன் தலைமையில் அவருக்கு உபதலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவன் தலைவனாவதற்கு அவர் உதவி செய்தால் அவரை அவன் உபதலைவராக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போதிருப்பது போல் ஒரு வெற்று தலைமைக்குழு உறுப்பினராக நீடிப்பதை விட உபதலைவராவது கூட எத்தனையோ மேல்... அதற்காகத் தான் விஸ்வம் எங்கிருக்கிறான் என்பது இல்லுமினாட்டியின் தலைமைக்குத் தெரிவதற்கு முன் அவருக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார்.

இப்போது விஸ்வம் எங்கிருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. அவன் இருக்குமிடம் வெளியே தெரிந்து விட்டது என்பது அவனுக்குத் தெரிந்தால் அவன் அந்த இடத்தையும் விட்டு வேறிடத்திற்கு விரைவாகத் தப்பி விடும் அபாயம் இருக்கிறது.  அதனால் இனி மிகவும் கவனமாகத் தான் அவனைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவனைப் பொருத்த வரை இல்லுமினாட்டி முழுவதுமே அவன் எதிரி என்றே இப்போது நினைத்திருப்பான். அவனிடம் இல்லுமினாட்டியில் அவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்பதை எப்படியாவது தெரிவித்து விட வேண்டும். அவனிடம் கூட்டு சேர்ந்து பிறகு மற்றவற்றை யோசிக்கலாம்.

ஆழ்ந்து ஆலோசித்து விட்டு வாங் வே ஒரு கடிதம் எழுதினார்.

“அன்பு நண்பனே.    

நீ கடைசியாகச் சேர்ந்த இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் .நீ இருக்கும் இடம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்பதையும், அதை நம் இயக்கத்திற்கு நான் தெரிவிக்கவில்லை, தெரிவிக்கவும் போவதில்லை என்று உனக்கு உறுதி அளித்து விட்டு கடிதத்தைத் தொடர்கிறேன்.
உன்னை ஒரு கதாநாயகனாகவும், நம் இயக்கத்தின் தலைமைக்கு மிகப் பொருத்தமானவனாகவும் தான் நான் பார்க்கிறேன். இப்போதைய தலைமை தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளில் உடன்பாடில்லாதவன் நான். என்னைப் போல் பலரும் நம் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவெடுக்க அவர்களின் நம்பிக்கைக்குகந்த உன்னைப் போல் ஒரு தலைவன் வேண்டும்.

மிக நெருக்கடியான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். உன் எதிரி இன்னும் சில நாட்களில் இங்கு வருகிறான். ஏதோ ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. நிலைமை மிகவும் மோசமாவதற்கு முன் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற எதாவது நாம் செய்தாக வேண்டும். என்னால் முடியும் உதவிகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன். தலைமை தாங்க நீ வந்தால் போதும்.

என் நோக்கத்திலும், இந்தக் கடிதத்திலும் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. அடுத்தவர் மனதில் உள்ளதை அறிய முடிந்தவன் நீ என்பதால் நான் சொல்வது உண்மை என்று நீ உணர்வாய் என்று நம்புகிறேன். உன் பதிலை நீ யோசித்து, பதில் எழுதி, சரியாக 24 மணி நேரம் கழித்து நீ இந்தக் கடிதம் கண்ட இடத்திலேயே வைத்து விட்டால், சரியாக 15 நிமிடம் கழித்து என் பிரதிநிதி அதை அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பான்.

சாதகமான நம்பிக்கையூட்டும் பதிலை எதிர்பார்க்கிறேன்.

உன் நண்பன்.”

எழுதி முடித்து விட்டு கடிதத்தை இரண்டு முறை வாங் வே படித்துப் பார்த்தார். அவர் பெயரோ, அவன் பெயரோ, அவன் எதிரி பெயரோ, இல்லுமினாட்டி பெயரோ இல்லாத அந்தக் கடிதம், சொல்வதை அவனுக்கு முழுவதும் புரிகிற மாதிரியும், சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எதுவும் புரியாத மாதிரியும், இருந்தது. திருப்தியுடன் அதை சாமுவலின் ரகசிய மெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டு வாங் வே அவருக்குப் போன் செய்தார்.



சிந்து எங்கே போவதென்று யோசித்தாள். சுற்றுலாத் தலங்களுக்குப் போகும் மனநிலையில் அவள் இல்லை. போனால் எதையும் ரசிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவளை அனுப்பாமல் வெளிநாட்டுக்குப் போவதில்லை என்ற முடிவோடு க்ரிஷ் இருந்தான். அவள் மறுத்தால் அவளை அப்புறப்படுத்தவும் அவன் தயங்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாய்ச் சொல்லி இருந்தான். அதை அவள் வெற்றுப் பயமுறுத்தலாக நினைக்கவில்லை. அவன் நல்லவன் என்றாலும் ஏமாளியோ முட்டாளோ அல்ல. அவன் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் அவன் செய்வான்...

எங்கே போவது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையில் அவளுக்கு க்ரிஷிடம் இருந்து ஒரு வாட்சப் மெசேஜ் வந்து சேர்ந்தது.

மிருதுளா, சமூக சேவகி, அலைபேசி எண்..........., டெல்லியில் விலாசம் ........ கணவர் பெயர் கைலாஷ், சுப்ரீம் கோர்ட் வக்கீல். மகன் பெயர் மிதுன், பொறியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

சிந்துவின் இதயத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் ஆவேசமாக அலைமோதின. மிருதுளா அவளுடைய ஓடிப்போன தாயின் பெயர். அவளுடைய அலைபேசி எண், விலாசம், இப்போதைய கணவர், மகன் பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் க்ரிஷ் அனுப்பியிருந்தான்.

பெற்ற குழந்தை நலனை யோசிக்காமல் பழைய காதலனோடு ஓடிப்போனவள் இப்போது சமூக சேவகியாம். எண்ணும் போதே மனம் கொதித்தது. க்ரிஷுக்கு முன்பே இந்தத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. அப்படி இருந்தும் அப்போதே வெளிப்படுத்தி விடாமல் இப்போது அனுப்பியிருப்பதன் காரணம் என்ன என்று சிந்து யோசித்தாள்.

மனதில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி வை என்று க்ரிஷ் சொல்கிறானோ? மிருதுளாவைப் பார்த்துப் பேச வேண்டியதும், கேட்க வேண்டியதும் நிறைய இருக்கிறது...  க்ரிஷ் அறிவுரை சொன்னது போல் பழைய பாரத்தை இறக்கி வைக்காமல் அவளால் புதிய வாழ்க்கையை வாழ முடியாது. யாருமே சுமக்க முடிந்த கனங்களுக்கு ஒரு எல்லை உண்டு... சிந்து டெல்லிக்குச் செல்வது என்று முடிவு செய்து விட்டாள்.

முக்கிய வேலையாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்றும் உதய்க்குத் தெரிவித்த போது அவன் வருத்தப்பட்டான். ஏதேதோ சொல்லிச் சமாளித்து விட்டு சிந்து டெல்லி கிளம்பினாள்.

(தொடரும்)
என்.கணேசன்  

3 comments:

  1. sema interesting on both places.

    ReplyDelete
  2. In every group there is a black sheep!
    Girish started directing Sindhu in the right path :)

    ReplyDelete
  3. சாலமன் அந்த கடிதத்தை எப்படி கொண்டு சேர்க்கப் போகிறார்?

    சிந்து தன் தாயை எவ்வாறு எதிர் கொள்வாள்??
    என்பதை அறிய ஆவலாக உள்ளேன்....

    ReplyDelete