சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 1, 2021

இல்லுமினாட்டி 96


சாலமன் மறுபடியும் ஒரு முறை பழைய இல்லுமினாட்டி கோயில்களுக்குப் போக ஆரம்பித்தார். இன்று நூலகம், அரங்கு, பழங்காலப் பொருள்களின் நினைவகம் என்று புதுவடிவம் பெற்றிருந்த அந்தக் கோயில்களில் இன்னொரு தளம் இருப்பதற்கு அறிகுறியே தெரியவில்லை. அவர் மேலும் அதிக நாட்கள் ஜெர்மனியில் இருக்க முடியாதபடி இம்மானுவல் மறுபடியும் மூன்று நாட்களில் ஜெர்மனி வருகிறான். க்ரிஷும் அன்று தான் ஜெர்மனி வரப்போகிறான் என்ற செய்தியும் அவருக்குக் கிடைத்தது. ஏதோ முக்கிய ஆலோசனைகள் நடக்கப் போகின்றன என்பது புரிந்தது. அதனால் தான் எல்லோரும் இல்லுமினாட்டியின் தலைவர் இருக்குமிடத்தில் கூடுகிறார்கள்.

அவசியத் தேவை இருந்தால் ஒழிய உளவுத்துறையின் தலைவரும், உபதலைவரும் அதிகம் சேர்ந்து ஒரே இடத்தில் இருப்பதில்லை. அதனால் உளவுத்துறையின் தலைவர் வந்த பிறகு உபதலைவரான சாலமன் வலுவான காரணம் ஏதுமில்லாமல் அங்கே இருக்க முடியாது. மற்ற இடங்களிலும் நிறைய வேலைகள் இருக்கின்றன... அதனால் விஸ்வம் இருக்கக்கூடும் என்று சொல்லப்படும் பழைய இருதள இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி உடனடியாகத் தெரிந்து கொண்டு வாங் வேக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

இந்த நெருக்கடியை உணர்ந்தவராக அடுத்த இல்லுமினாட்டி பழைய கோயிலுக்கு நுழைந்தார். அது இப்போது நூலகமாக மாறியிருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் நூல்கள் அங்கே இருந்தன. அவற்றில் சுமார் ஐநாறு நூல்கள் இல்லுமினாட்டி அறிஞர்கள் எழுதிய நூல்களாக இருந்தன. மற்றவை மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்கள். பல துறைகள் சம்பந்தப்பட்ட அந்த நூல்கள் இல்லுமினாட்டி அறிஞர்கள் பல காலமாக சிபாரிசு செய்த நூல்களாக இருந்தன. இப்போதெல்லாம் அந்த நூல்களைப் படிக்கும் ஆட்கள் மிகவும் குறைவு என்றாலும் ஒரு பாரம்பரியமான அமைப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டுமேயென்பதற்காக அந்த நூலகம் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

சாலமன் நுழைந்த போது நூலகத்தில் ஒருவரும் இருக்கவில்லை. நூலகர் அவரைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டார். ஏனென்றால் விடுமுறை நாட்களிலாவது ஓரிருவர் அந்த நூலகத்திற்கு வருவார்கள். மற்ற நாட்களில் அவர் நாள் முழுவதும் தனியாகவே அமர்ந்திருப்பார். “வாருங்கள்... வாருங்கள்.... ஏதாவது புத்தகங்கள் வேண்டுமா?”

சாலமன் கேட்டார். “பழங்கால இல்லுமினாட்டி கோயில்கள் சம்பந்தமான நூல்கள் ஏதாவது இருக்கிறதா?”

இருக்கிறதே. இரண்டு புத்தகங்கள் முழுவதுமாக இல்லுமினாட்டி கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தான். நாலைந்து புத்தகங்களில் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றனஎன்று சொன்னதுடன் அலமாரிகளில் தேடி அவர் எடுத்தும் கொடுத்தார்.

சாலமன் சொன்னார். “என் நண்பர் ஒருவரின் மகன் இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவிருக்கிறான். அவன் நெட்டில் நிறைய புத்தகங்கள் கட்டுரைகள் எல்லாம் படித்தும் அவனுக்கு வேண்டிய எல்லாத் தகவல்களும் கிடைக்கவில்லையாம். அதனால் என்னைக் கேட்டான்...”

அந்த நூலகர் சொன்னார். “இந்த ஏழு புத்தகங்களில் ஐந்து புத்தகங்கள் மிகப் பழையவை. இதெல்லாம் நெட்டில் கிடைக்காது

அந்த நூலகருக்கு நன்றி தெரிவித்து விட்டுப் பிறகு பத்து நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு சாலமன் புத்தகங்களோடு கிளம்பினார்.  அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகம் மிகப் பழமையானதாக இருந்தது. அது எழுதப்பட்டிருக்கும் காலத்திற்கேற்ப கடினமான பழங்கால ஆங்கில நடையிலும் எழுதப்பட்டிருந்தது. அதனால் அதை வேகமாகப் படிக்க முடியவில்லை. சாலமன் கடைசியாக அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று எண்ணி எடுத்து வைத்து விட்டார்.

மற்றவற்றில் ஒரு புத்தகம் முழுமையாகவே இல்லுமினாட்டி கோயில்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. நிறைய இல்லுமினாட்டி கோயில்கள் பற்றி அதில் எழுந்தப்பட்டிருந்தது. அந்தக் கோயில்களில் ஜெர்மனி கோயில்களைத் தேர்ந்தெடுத்து சாலமன் படித்தார். கோயில் கட்டப்பட்ட காலம், எந்த விதமான கட்டிடக்கலை அந்தக் கோயில் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எந்த விதமான வழிபாடுகள் அங்கே நடத்தப்பட்டன, காலப்போக்கில் எப்படி எல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதெல்லாம் விரிவாக எழுதப்பட்டிருந்தன. அதில் இரண்டு தளமுள்ள கோயில்கள் பற்றிய பேச்சே இல்லை.

மற்ற நூல்களில் எல்லாம் சில அத்தியாயங்கள் மட்டும் இல்லுமினாட்டி கோயில்கள் சம்பந்தப்பட்டவை. அந்த அத்தியாயங்களிலும் ஜெர்மனி கோயில்களாகத் தேடிப் பார்த்துப் படித்தார். எந்த உபயோகமான தகவலும் அதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை.

மிஞ்சியிருப்பது அந்தக் கடினமான புத்தகம் தான். கர்னீலியஸ் மாதிரி ஆட்கள் அருகில் இருந்திருந்தால் அதைப்படிப்பது சுலபமாக இருந்திருக்கும். சாலமன் ஒருவித சலிப்போடு அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அந்தப் புத்தகத்தில் நிறைய சுவாரசியமான தகவல்கள் தரப்பட்டு இருந்தன. ஆனால் பெரிய பிரச்சினை என்னவென்றால் பிரதேச வாரியாகக் கோயில்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்கவில்லை. எல்லாம் கலந்து தான் எழுதப்பட்டிருந்தன.

கால வாரியாகவும் எழுதப்படாமல், பிரதேச வாரியாகவும் எழுதப்படாமல் எல்லாம் கலந்து எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தில் ஜெர்மனி கோயில்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வழியே இல்லை. ஆனால் அந்த எழுத்தாளர் ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னாலிருக்கும் சுவாரசியமான தகவல்களைச் சொன்ன விதம் பார்க்கையில் சாலமன் தேடும் தகவலும் அந்தப் புத்தகத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. அதனால் கஷ்டமானாலும் நிதானமாக அந்தப் புத்தகத்தை சாலமன் படித்தார்.

அவர் சில பக்கங்களைக் கஷ்டப்பட்டுக் கடந்தார். ஜெர்மனியில் உள்ள ஒரு ஃப்ரீமேசன் கோயிலைப் பற்றிய தகவல்கள் வந்த போது கதே என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றிய குறிப்பு வந்தது.

“அந்தக் கோயிலுக்கு அந்த எழுத்தாளர் வந்திருந்த போது தெய்வீகமான அலைகளை அவர் உணர்ந்தார். ஃப்ரீமேசன்களில் ஒருவரான அவர் அறிவுஜீவி மட்டுமல்ல பல துறைகளில் வல்லவர், அந்தக் கோயிலில் ஒருநாள் அவர் நீண்ட நேரம் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். பின் கண்களைத் திறந்த அவர் Masonic Lodge என்ற கவிதையை மளமளவென்று எழுத ஆரம்பித்தார். அந்தக் கவிதை
The Masons's ways are A Type of Existence
And his persistence Is as the days are
Of men in this world.
 என்ற வரிகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....”

சாலமன் பரபரப்படைந்தார். ஜெர்மனி, கவிதை எழுதியது எல்லாம் பொருந்தி வருவதால் அந்த இடம் இதுவாகத்தானிருக்க வேண்டும்.

இதயம் படபடக்க அவர் அதைத் தொடர்ந்து படித்தார். ”... அவரைப் போலவே வேறு சிலரும் கூட அந்த இடத்தில் தெய்வீக அலைகளை உணர்ந்ததால் அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்த போது அவர்களுடைய விசேஷ வழிபாடு செய்யும்படியாக ஒரு பாதாள அறையையும் சேர்த்துக் கட்டினார்கள். சாதாரண மக்கள் மேல் தளம் மட்டுமே அறிவார்கள். அவர்கள் வழிபாடு செய்து விட்டு அங்கிருந்தே திரும்பச் செல்வார்கள். ஆனால் சில உயர்நிலை மனிதர்கள் நள்ளிரவில் பாதாள அறையில் சில ரகசிய தீட்சைகள் பெறும் வழிபாடுகளைச் செய்து வந்தார்கள். அந்தப் பாதாள அறையில் கதேயின் Masonic Lodge கவிதை அவர் நினைவாக அங்கே சுவரில் எழுதப்பட்டுமிருக்கிறது…”

பரபரப்பு குறையாமல் சாலமன் அந்தப் புத்தகம் வெளியான  ஆண்டைப் பார்த்தார். 1907ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.  அந்த இடம், குறிப்புகள் எல்லாம் பார்க்கும் போது இப்போது வழிபாடுகள் நடக்காமல் மூடியுள்ள ஒரு சர்ச் என்பது தெரிந்தது.  அதன் பின் உள்ள சரித்திரத்தை சாலமன் வேகமாகத் தேடிக் கண்டுபிடித்தார். அந்த சர்ச் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு நெருக்கமான ஜெர்மன் எவாஞ்சலிகல் சர்ச் ஆதிக்கத்தில் சில காலம், பிறகு ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் சில காலம், பின் ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் வசம் சில காலம் இருந்தது. யாரானாலும் சில காலம் மட்டுமே தான் அங்கே வழிபாடு நடத்த முடிந்தது. பிறகு யாரும் தொடர்ந்து இங்கே வழிபாட்டை நடத்த விடாதபடி ஏதாவது பிரச்னைகள், விபத்துகள் எல்லாம் நடந்து கொண்டே இருந்தன. கடைசியில் யேசு கிறிஸ்து சிலையும் உடைந்து போனதால் ஏதோ அபசகுனமாக நினைத்து அப்பகுதியில் இருந்த கிறிஸ்தவர்களும் ங்கே போவதை நிறுத்தி விட்டார்கள்.

ரகசிய தீட்சைகள் அங்கே நிறுத்தப்பட்டு இரு தளம் இருப்பதையே கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து விட்ட காலகட்டத்தில் தான் அந்த சர்ச் ஜெர்மன் எவாஞ்சலிகள் சர்ச் ஆதிக்கத்திற்கு வந்துள்ளது. பின் வந்தவர்களும் அதை அறியவில்லை.

விஸ்வத்துக்கு ஒளிந்திருக்க இதை விடப் பொருத்தமான இடம் கிடைத்திருக்க முடியாது என்று எண்ணியவராக சாலமன் வாங் வேக்குப் போன் செய்தார்.

(தொடரும்)
என்.கணேசன்






3 comments:

  1. Solomon found out Viswam's hiding place. Will he and Wang wei join Viswam against Krish and Illuminati head? Eager to know. Amanushyan is also there. Plot is becoming very very interesting.

    ReplyDelete
  2. Super Filtration... Tension raises!

    ReplyDelete
  3. இம்மானுவலும் இதே ரகசியத்தை கிரிஷ் உடன் இணைந்து கண்டுபிடிப்பான் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete