சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 19, 2021

யாரோ ஒருவன்? 28


ருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படும் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்காத க்யான் சந்த் பலவீனமாகச் சொன்னான். “தெரியலையே சார்

நரேந்திரன் க்யான் சந்தையே கூர்ந்து பார்த்தான். படுகாயமடைந்ததாகச் சொல்லப்படும் இவன் உடலில் பழைய காயங்களின் தழும்புகள் எதுவும் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி இல்லை. ஒரு டாக்சியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு அது வெடித்து ஒரு ஆள் முழுவதுமாகக் கருகிவிட்டதாகச் சொல்லப்படுகிற அதே நேரத்தில் அந்த டாக்சியின் டிரைவர் வெளியே தெரிகிற மாதிரி தழும்புகளோ பாதிப்புகளோ இல்லாமல் நல்ல ஆரோக்கியமாகவே இருப்பது நம்ப முடியாத முரண்பாடாகத் தோன்றியது.

நரேந்திரன் கேட்டான். “இன்சூரன்ஸ் கம்பெனியில் டாக்சிக்கு எவ்வளவு கிடைத்தது

பன்னிரண்டாயிரத்து முன்னூறு ரூபாய் தந்தார்கள் சார். அந்தக் காலத்துக்கே அது ரொம்பக் கம்மியான தொகை தான். என்ன செய்யறது சார். கேட்டால் என்னென்னவோ கணக்கு சொன்னார்கள்...”

அதற்குப் பிறகு என்ன செய்தீர்கள்?”

பழையபடி அவன் முகத்தில் திருட்டுத்தனம் தெரிந்து மறைக்கப்பட்டது. “ரொம்ப கஷ்டப்பட்டேன் சார்.  கடைசில என் மனைவி வீட்டுல இருந்து உதவி செஞ்சாங்க. வேற ஒரு புது கார் வாங்கி தொழிலை மறுபடியும் தொடர ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்போ சில வருஷங்களுக்கு முன்னால் தான் நான் இந்த டிராவல்ஸ் ஆரம்பிச்சேன்...”

உங்களுக்கு அஜீம் அகமதைத் தெரியுமா?”

க்யான் சந்த் மூன்று வினாடிகள் மூச்சு விட மறந்தான். பின் மெல்லச் சமாளித்துக் கேட்டான். “எந்த அஜீம் அகமதைக் கேட்கறீங்க சார்?”

உங்களுக்கு எத்தனை அஜீம் அகமதைத் தெரியும்?”

க்யான் சந்த் திருட்டு முழி முழித்து விட்டுச் சொன்னான். “எனக்கு யாரையும் தெரியாது சார்

நரேந்திரன் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே சொன்னான். “வெடிகுண்டு தயாரிக்கிறதில் திறமை வாய்ந்த தீவிரவாதி ஒருத்தன் உங்கள் டாக்சியில் வெடிகுண்டு வெடித்த சமயத்தில் மணாலியில் தங்கியிருந்தான். அவனைப் பற்றி தான் கேட்டேன்.”

அந்த ஆளைத் தெரியாது சார்வேகமாகப் பதில் வந்தது. முகத்தில் கிலி தெரிந்தது. அதுவே அஜீம் அகமதை க்யான் சந்த் நன்றாக அறிவான் என்பதை அறிவித்தது.
அந்தச் சமயத்தில் இங்கே எந்தப் போலீஸ் அதிகாரி இந்த வழக்கை விசாரித்தார் ஞாபகம் இருக்கிறதா?”

ஆரம்பத்தில் ஞாபகம் இல்லை என்று சொல்ல நினைத்த க்யான் சந்த் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு  “மதன் லால்னு ஒரு அதிகாரி இருந்தார். அவர் தான் இதை விசாரிச்சார்என்றான். மதன் லால் அரசியல் செல்வாக்கு உள்ளவன். அவனுக்கு மேலிடத்தில் பலரையும் தெரியும். யாருக்கும் துளியளவும் பயப்படாதவன்.என்னை விட்டு விட்டு இந்த ஆள் அவனைக் கேள்வி கேட்கட்டும். அவன் அரசியல் செல்வாக்கைத் தெரிந்து கொண்டு இந்த ஆள் இந்த விசாரணையே கைவிட்டு விடக்கூடும். இந்த ஆளாக அப்படி விடா விட்டால் இந்த ஆளை எப்படி இந்தத் தேவையில்லாத விசாரணையில் இருந்து விலக வைப்பது என்பதை மதன் லால் பார்த்துக் கொள்வான். இன்னொரு தடவை இந்த ஆள் என் பார்வையில் படாமல் இருந்தால் சரி’.

இப்ப அந்த மதன்லால் எங்கே இருக்கிறார்னு தெரியுமா?” என்று நரேந்திரன் கேட்டான். சிம்லாவில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியுமா என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

தெரியலையே சார்என்றான் க்யான் சந்த்.

தெரியவில்லை என்பது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்என்று நினைத்தபடி நரேந்திரன் எழுந்தான். “அந்த வழக்கு சம்பந்தமாக எதாவது தகவல் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் எனக்குப் போன் செய்து சொல்லுங்கள்என்று சொன்னபடி தன்னுடைய விசிட்டிங் கார்டை நரேந்திரன் நீட்ட க்யான் சந்த் தலையசைத்தபடி வாங்கிக் கொண்டான்.       


வேலாயுதம் பக்கத்து வீட்டைக் கண்காணிப்பதையும், அந்த வீட்டில் குடியிருக்கும் நாகராஜ் கண்ணில் தட்டுப்படுவதையுமே இப்போதும் தன் முழு நேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் நடந்த அந்த இரவு நேரப் பூஜையும் பச்சையும் நீலமுமாய் மின்னிய வர்ண ஜாலமும் அவர் ஆர்வத்தை உச்சத்திற்குக் கொண்டு போயிருந்தது.

சில நேரங்களில் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டை ஆராய்வது, தனது அறை விளக்கை அணைத்து விட்டு தனதறையில் இருட்டில் நின்று கொண்டு பக்கத்து வீட்டு அறையை ஆராய்வது என்று ஆராய்ச்சியில் இறங்கி இருந்த அவர் மீது பக்கத்து வீட்டு நாகராஜின் கடைக்கண் பார்வை இன்னும் விழாதது அவருக்கு வருத்தமாகத் தான் இருந்தது. நாகராஜ் மிகப் பெரிய பணக்காரனாக இருக்கலாம். ஒரு நாள் அரை மணி நேரத்துக்கு ஐந்து லட்சம் சம்பாதிப்பவனாக இருக்கலாம். ஆனால் அவர்களும் ஏழைகள் அல்ல. அவன் அளவுக்கு வருமானம் இல்லா விட்டாலும் கோடிக் கணக்கான சொத்துகளுக்கு அதிபதிகள் தான். அதனால் அவன் அவர்களிடம் நட்பு பாராட்டாத மனத்தாங்கல் அவருக்கு அதிகமாகவே இருந்தது.

இப்போது மாடியிலிருந்து அவர் பார்க்கையில் பக்கத்து வீட்டில் சுதர்ஷன் வெளியே வராந்தாவில்  கால் மேல் கால் வைத்து உட்கார்ந்து கொண்டு யாரிடமோ அதிகார தோரணையில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் அதிருப்தியுடன் முகம் சுளித்தார். வேலைக்கார நாய்கள் எஜமானர்களை விட அதிகமாய் பந்தா காண்பிப்பது அவருக்கு ரசிக்க முடியாத விஷயமாக இருந்தது. அவர் முதலாளியாக இருந்திருந்தால் அவனுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டிச் சரியான இடத்தில் வைத்திருப்பார்….

தாத்தா, இதெல்லாம் மேனர்ஸே இல்லை. எதுக்கு நீங்க பக்கத்து வீட்டை அப்படிப் பார்க்கிறீங்க?” என்று பேத்தி தர்ஷினியின் குரல் கேட்டு வேலாயுதம் திரும்பினார். அவளும் அவள் தாய் மேகலாவும் இன்று அதிகாலையில் தான் ஊரிலிருந்து வந்து சேர்ந்திருந்தார்கள்.

பேத்தியைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. அவளிடம் ரகசியமாய்ச் சொன்னார். “பக்கத்து வீட்டில் ஒருத்தன் புதுசாய் குடிவந்திருக்கான். ராத்திரி ஆச்சுன்னா அவன் வீட்டுல இருந்து பாம்பு சீறுகிற மாதிரி சத்தம் வருது. அவனைப் பார்க்க பகல் நேரத்துல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வி..பி வர்றாங்க. அரை மணி நேரத்துக்கு மேல யாரும் இருக்கறதில்லை. அந்த அரை மணி நேரத்துக்கு அஞ்சு லட்சம் ரூபாய் தரணுமாம். அந்த ஆளுக்கு ஏதோ விசேஷ சக்தி இருக்கறதாய் பேசிக்கறாங்க....”

அவர் மற்ற விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்தார்.  ஆனால் அவர் சொன்ன விஷயங்களே அவள் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் போதுமானதாய் இருந்தன.  “அந்த ஆள் என்ன, சாமியார் மாதிரியா?” என்று கேட்டபடி அவளும் அந்த ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

முதலாளி மாதிரி உட்கார்ந்திருக்கானே அவன் வேலைக்காரன் தான். உண்மையில் முதலாளி உள்ளே இருக்கான். அவன் சாமியாரெல்லாம் இல்லை. திடகாத்திரமாய் இருப்பான். பார்க்க சாதாரண ஆள் மாதிரி தான் தெரிவான். பெயர் நாகராஜாம்...”

அந்த நேரமாகப் பார்த்து நாகராஜ் வெளியே வந்து சுதர்ஷனிடம் என்னவோ பேசிக் கொண்டு நின்றான். வேலாயுதம் சொன்ன மாதிரியே அவன் திடகாத்திரமாய் தெரிந்தான். ஆனால் சாமியார்த்தனம் எதுவும் அவனிடம் தெரியவில்லை.  அவள் தாத்தாவிடம் வேடிக்கையாகக் கேட்டாள். “பெயர் நாகராஜ்ங்கறதால அவரே பாம்பு மாதிரி சீறும் சத்தத்தை எழுப்பறாரோ?”

யாருக்குத் தெரியும்?” என்ற வேலாயுதம் பாம்பையே அந்த வீட்டில் பார்த்த உண்மையைப் பேத்தியிடம் சொல்வதைத் தவிர்த்தார். “ஆனால் தினம் ராத்திரி அந்தச் சத்தம் அங்கேயிருந்து கேட்குது. அதனால தான் ஆர்வமாய் பார்க்கிறேன்.” என்றார்.

அந்த நேரமாகப் பார்த்து தர்ஷினிக்கு தீபக்கின் அலைபேசி அழைப்பு வந்தது. “தீபக் உனக்கு சுவாரசியமான ஒரு விஷயம் எங்க பக்கத்து வீட்டில் நடந்துகிட்டிருக்கு....” என்று தாழ்ந்த குரலில் அவள் சொன்னாள்.

வேலாயுதத்திற்கு அவள் அந்த விஷயத்தை தீபக்கிடம் சொன்னது பிடிக்கவில்லை. ஆனால் அவர் தடுப்பதற்கு முன் அவள் முழுமையாகச் சொல்லியும் விட்டாள். “பக்கத்து வீட்டுக்கு ஒரு ஆள் புதுசா குடி வந்திருக்கார்அவர் வந்ததுக்கப்பறம் அவர் வீட்டுல இருந்து தினம் ராத்திரி பாம்பு சீறுகிற சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்காம்...”

  
(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. I think Madanlal and Gyanchand are culprits. Gyanchand is hiding something. The snake issue is confusing. Like Velayudham I am also eager to know what is happening in that house.

    ReplyDelete
  2. தீபக்கு ஏற்கனவே கனவு வேற வந்தது... இதுல இதுவும் தெரிஞ்சிடுச்சி.... இரண்டும் பேரும் இந்த விசயத்த வேற எங்கேயோ கொண்டுட்டு போயிடுவாங்கனு...‌ நினைக்கிறேன்...

    ReplyDelete