அடுத்ததாக முக்குணங்களால்
கர்மா, கர்த்தா, புத்தி ஆகிய மூன்றையும் ஸ்ரீகிருஷ்ணர் தனித்தனியாகப் பிரித்து விவரிக்கின்றார்.
விதிக்கப்பட்ட எந்தக்
கர்மமானது பலனை எதிர்பார்க்காதவனால் பற்றில்லாமலும், விருப்பு
வெறுப்பில்லாமலும் செய்யப்படுமோ அது சாத்வீக கர்மம் எனப்படும்.
பலனை விரும்புகிறவனாலோ
அல்லது தானே கர்த்தா என்று கர்வம் கொண்டவனாலோ, வெகு சிரமப்பட்டு
செய்யப்படும் கர்மம் ராஜஸ கர்மம் ஆகும்.
கர்ம பலனையும், பொருட்செலவையும், பிறருக்குத்
தரும் சிரமத்தையும், தன் சக்தியையும் பாராமல் மோகத்தால் மட்டும் செய்யப்படும்
கர்மம் தாமஸ கர்மம் எனப்படும்.
பற்றுதலை நீக்கியவனும், அகங்காரமற்றவனும், தைரியம்
உற்சாகம் கூடியவனும், தன் காரியம் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும்
எவ்வித மாறுதலையும் அடையாமலிருப்பவனுமான கர்த்தா சாத்வீகன் எனப்படுகிறான்.
ஆசை கொண்டவனும், கர்ம பலனில்
பற்றுள்ளவனும், பணத்தாசை பிடித்தவனும், பிறரை இம்சை
செய்யும் சுபாவமுள்ளவனும், அசுத்தமானவனும், சந்தோஷம் துக்கம் இவைகளுடன் கூடியவனுமான
கர்த்தா ராஜஸன் எனப்படுகிறான்.
மன அமைதியில்லாதவன், விவேகமற்றவன், முரடன், மோசக்காரன், துஷ்டன், சோம்பேறி, துக்கமுள்ளவன், காலதாமதமாகச்
செய்பவன் என்ற வகையைச் சேர்ந்த கர்த்தா தாமஸன் எனப்படுவான்.
எந்தப் புத்தியானது
செயலில் ஈடுபடுதல், ஈடுபடாமை, செய்யத்
தக்கது, செய்யத் தகாதது, பயம், பயமின்மை, பந்தம், மோட்சம்
என்பவைகளை அறியுமோ அது சாத்வீக புத்தியாகும்.
எந்தப் புத்தி தர்மம்-அதர்மம், செய்யத்
தக்கது, செய்யத் தகாதது என்பவைகளை உள்ளபடி அல்லாமல் அறியுமோ அது ராஜஸ
புத்தி எனப்படும்.
எந்தப் புத்தியானது
அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு, அதர்மத்தைத் தர்மமென்றும், அதே போல்
எல்லா வஸ்துக்களையும் உண்மைக்கு மாறாக இருப்பதாகவும் அறியுமோ அது தாமஸ புத்தி எனப்படும்.
முக்குணங்களின்
தன்மையை ஏற்கெனவே விவரித்திருந்தாலும் அந்தக் குணங்களின் பிரிவாக முக்கியமானவற்றை எல்லாம்
பிரித்து விவரிப்பது அனைத்தைக் குறித்தும் நாம் தெள்ளத் தெளிவாக உணர வேண்டும் என்பதற்கே.
தெளிவாக உணர்ந்தவன் அறிவுடையவனாக இருந்தால் எது உயர்வோ அதையே ஏற்றுக் கொண்டு அந்த இயல்பிலேயே
வாழ்வான். புரிதலில் தெளிவின்மை அறிவாளியையும் குழப்பித் தவறான வழிகளில் நடத்திச் சென்று
விடும். அதனால் தான் இத்தனை விளக்கங்களும்.
சுதர்மம், கடமை
என்பதற்காகவே செய்யப்படும் கர்மம் சாத்வீகம். பலனை விரும்பியோ, நான் என்ற கர்வத்தாலோ
செய்யும் கர்மம் ராஜஸம். எதைப் பற்றியும் யோசிக்காமல் விளைவுகளைப் பற்றிக் கவலையும்
படாமல் மனதின் தூண்டுதலால் மட்டும் செய்யும் கர்மம் தாமஸம்.
பற்றையும் அகங்காரத்தையும்
விலக்கி, தைரியமாகவும், உற்சாகமாகவும் செய்ய வேண்டிய வேலையைச் செய்து அதன் விளைவுகளால்
பாதிக்கப்படாமல் இருப்பவன் சாத்வீக கர்த்தா.
ஆசையால் உந்தப்பட்டு,
செல்வத்தின் மீதும் பேராசை கொண்டு, ஒரு பலனை அடைந்தே தீரும் முடிவோடு செயல்பட்டு, அதனால்
அடுத்தவர்களுக்கு ஏராளமான துன்பங்களை ஏற்படுத்தி, விளைவுகளால் சுக துக்கங்களை மாறி
மாறிய அனுபவித்தபடி இயங்குவன் ராஜஸ கர்த்தா.
மன அமைதியும், அறிவும்
இல்லாமல், எந்தவொரு செயலையும் தக்க சமயத்தில் செய்யாமல் தள்ளிப் போட்டு அல்லது செய்யாமலேயே
சோம்பலுடன் இருந்து விடும் துஷ்டனும், ஏமாற்றுக்காரனுமாக இருப்பவன் தாமஸ கர்த்தா.
இதே விதத்தில் அனைவருக்கும்
புரியும் வண்ணம் எளிமையாக புத்தியையும் பகவான் விளக்கியுள்ளார்.
துளசிதாசர் கூறுவார்:
“இந்த உலகில் நல்லதையும், தீயதையும் கலந்தே கடவுள் படைத்திருக்கிறார். நீரும் பாலும்
கலந்திருப்பதில் பாலை மட்டும் குடித்து நீரை விட்டுவிடும் அன்னப்பட்சி போல் நல்லவர்
நல்லதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தீயதை நிராகரித்து விடுவர்”
அந்த அன்னப்பட்சி
போலவே ஒரு சாத்வீகி இந்த உலகில் நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து நல்லதல்லாவதற்றை ஒதுக்கி
விடுகிறான். அவன் நல்லதல்லாதவற்றை வெறுப்பதோ, விமர்சிப்பதோ இல்லை. அவை அவனுடையதல்ல
என்பதால் அதைப் பற்றிப் பேசுவதும் விமர்சிப்பதும் வியர்த்தமே என்று அவன் நினைக்கிறான்.
பலன்
கருதாத செயல்களால் அவன் என்றும் தூயவனாகவே இருக்கிறான். அவன் தன்மையும், செயலும், அறிவும்
தூய்மையாகவே இருக்கின்றன. பலர் பலன் கருதாத செயல் என்பதை எந்திரத்தனமாகச் செய்வதாக
எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி அலட்சியத்துடன், கருத்தில்லாமல் எந்திரத்தனமாகச் செய்யும்
செயல் சாத்வீகமாகாது. அலட்சியமும், எந்திரத்தனமும், பொறுப்பற்ற தன்மையும் தாமஸத்தின்
குணங்களாகும். அதி தீவிரமாய்ச் செய்வதும், பலனுக்காகப் போராடுவதும், என்ன விலையானாலும்
கொடுக்கத் தயாராவதும், அமைதியிழந்து செயல்புரிவதும் ராஜஸத்தின் குணங்களாகும். செய்ய
வேண்டியதை மட்டும் செய்து, செய்யக்கூடாதவைகளை முற்றிலும் விலக்கி, செய்த செயல்களின்
பலன்களையும் இறைவனுக்கே விட்டு விலகி நின்று அவன் என்றும் தன் மன அமைதியைத் தக்க வைத்துக்
கொள்கிறான்.
எல்லாவற்றிலும்
சாத்வீகத்தையே பற்றிக் கொண்டால் நாமும் தூய்மையாகி, நாம் சார்ந்திருப்பதையும் தூய்மையாக்கி
எடுத்துக்காட்டாக ஒருவன் வாழ்ந்து விட முடியும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள். நம்மையும்,
நம் புத்தியையும், நம் செயலையும் இந்த வழிகளில் பகுத்தறிந்து வேண்டியபடி மாற்றிக் கொள்வோமா?
என்.கணேசன்
Excellent and well said !
ReplyDeleteஅற்புதமான விளக்கம்......நன்றி ஐயா
ReplyDelete