சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 18, 2020

இல்லுமினாட்டி 54


ப்பானில் நடந்த அந்த அரசியல் நிகழ்வு அத்தனை முக்கியமானதல்ல என்ற போதிலும் அவருடைய நண்பர் அகிடோ அரிமாவைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் வாங் வே அதில் கலந்து கொண்டார்அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வாங் வே நண்பர் வீட்டுக்குச் சென்றார். அகிடோ அரிமா நண்பரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். குசல விசாரிப்புகள் கழிந்தவுடன் அகிடோ அரிமா தாழ்ந்த குரலில் நண்பரிடம் சொன்னார். “விஸ்வம் பற்றி தலைமையிலிருந்து ஏதாவது தகவல் அதிகாரபூர்வமாக வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஏன் ஒன்றுமே வரவில்லை.”

தலைமைக் குழுவுக்கே வரவில்லை. அதன் பிறகல்லவா மற்ற உறுப்பினர்களுக்கு வருவதுஎன்று எரிச்சலுடன் வாங் வே சொன்னார்.

அகிடோ அரிமா திகைத்தார். “ஏன்? என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?”

வாங் வே தற்போது உள்ள மூடு மந்திரமான நிலவரத்தைச் சொன்னார். அகிடோ அரிமா கேட்டார். “தலைமைக்குழு உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு பொதுவாகவாவது நிலவரம் கேட்கலாமல்லவா? ஜான் ஸ்மித் போய்க் கேட்டு விட்டு வந்தத் தகவல்கள் எல்லாம் தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொண்டாரல்லவா? அப்படி இருக்கையில் அதன் பின் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று நீங்கள் எல்லாம் கேட்கலாமே?”

நீ சொல்வது சரிதான். ஆனால் மற்ற தலைமைக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மௌனமாகத் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நான் மட்டும் கேட்டால் நன்றாக இருக்காது என்பதால் நானும் கேட்கவில்லை. ஆனால் விஸ்வத்தின் பழைய சரித்திரப்படி அவன் இல்லுமினாட்டியின் தலைவரையே கொல்லக்கூடும் என்றும் என்னேரமும் நான்கைந்து அடுக்கு முழுக்காவல் இருந்தால் ஒழிய அபூர்வ சக்தி பெற்ற விஸ்வத்திடமிருந்து தலைவரைக் காப்பாற்ற முடியாது என்றும் உளவுத்துறை நம்புகிறது....” அவர் தொடர்ந்து தலைவரைக் காப்பாற்ற அமானுஷ்யன் என்ற இந்தியனின் உதவியை இல்லுமினாட்டி நாடியிருக்கிறது என்று சொன்னார்.

ஆரகிள் சொன்னது இதற்குக்கூடப் பொருந்துகிறது பார்த்தீர்களா? இவனும் இமயத்தின் தெற்கில் தான் இருக்கிறான்.” என்று அகிடோ அரிமா வியக்க உடனே வாங் வே  எரிச்சலுடன் சொன்னார். “பிரச்சினையான விஸ்வமும் இந்தியாவில் இருந்து தான் வந்திருக்கிறான். அதை ஆரகிள் சொல்லவில்லை

இந்தியா என்றாலே இந்த சீன நண்பருக்குக் கோபம் வந்து விடுகிறது என்று எண்ணிப் புன்னகைத்த அகிடோ அரிமா கேட்டார். “அந்த அமானுஷ்யன் எப்போது வரப் போகிறான்?”

வாங் வே ஏளனமாகச் சொன்னார். “அவன் வருவது நிச்சயமாகவில்லை. ஆனால் இல்லுமினாட்டி போன்ற ஒரு உச்ச சக்தி இயக்கத்தின் நிலைமை எப்படி ஆகி விட்டது பார்த்தாயா? தலைவரின் பாதுகாப்புக்கு ஒரு தனிமனிதனின் உதவி தேவைப்பட்டு அதற்காக இந்தியா வரை போய் இல்லுமினாட்டி போக வேண்டியிருக்கிறது!”

அகிடோ அரிமா சொன்னார். “அதை நான் தவறாக நினைக்கவில்லை. விஸ்வம் மாதிரி அபூர்வசக்தி படைத்த ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் இயங்கி ஒரு ஆளைக் கொல்லவும் முடிந்தவன் என்றிருக்கும் போது அதற்கு இணையாக இயங்கிக் காப்பாற்ற முடிந்த ஆளின் தேவையை உணர்ந்து அந்த ஆளை அணுகுவது ஒரு அவமானப்பட வேண்டிய விஷயம் அல்லவே.. இப்போது நமக்கு ஒரு வித்தியாசமான கொடிய நோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குணப்படுத்த உலகில் ஒரே ஒரு டாக்டரால் தான் முடியும் என்றால் நாம் உடனே அந்த டாக்டரிடம் போக மாட்டோமா? அது தவறு ஒன்றும் இல்லையே. அது போலத்தானே இதுவும்...”

வாங் வேக்கு அந்த வாதத்திற்குப் பதில் சொல்ல முடியவில்லைநண்பர் மாறுபட்ட சிந்தனைகளையும் எந்த விதமான தயக்கமும் இன்றிச் சொல்லக் கூடியவர். அது சில சமயங்களில் கசப்பாக இருந்தாலும் சிந்திக்காத கோணங்களில் இருந்தும் எடுத்துச் சொல்ல ஒரு உண்மையான நண்பர் தேவையாக இருக்கிறது. வாங் வே வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தார். “நீ சொல்வதும் சரி தான். அதை விடு. மொத்தத்தில் நமக்கு நிறைய பிரச்சினைகள், மாற்றங்கள் காத்திருக்கின்றன. இதில் கவனமாகக் காய் நகர்த்தி ஜெயிப்பவர்கள் தலைமையில் தான் இல்லுமினாட்டியும் இந்த உலகமும் போய்ச் சேரும்

அவர் அதைச் சொன்ன போதே அவர் கண்கள் ஏதோ கனவு காண்பது போல் மின்னின. சில நாட்களாகவே நண்பர் ஆசைப்படுவதும், ரகசியமாகத் திட்டமிடுவதுமாக இருப்பதை அறிந்திருந்த அகிடோ அரிமா மெல்லச் சொன்னார். “நண்பரே, தலைவர், விஸ்வம் இருவருமே ஆபத்தானவர்கள். மிகுந்த எச்சரிக்கை தேவை!”


க்ரிஷ் அக்ஷயின் தயக்கத்தையோ, யோசிக்க அவகாசம் கேட்டதையோ சிறிதும் தவறாக நினைக்கவில்லைவேற்றுக்கிரகவாசி அவனைத் தொடர்பு கொண்ட போது அவனும் அக்ஷய் போலத் தான் நடந்து கொண்டது அவனுக்கு நினைவிருக்கிறது. வேற்றுக்கிரகவாசி சொன்னதை எல்லாம் கேட்ட போது முதலில் குடும்பத்தினரும், ஹரிணியும் தான் அவனுக்கு நினைவுக்கு வந்தார்கள். அவனுக்கு ஏதாவது ஆனால் அவர்கள் தாங்க மாட்டார்கள் என்ற எண்ணம் தான் முதலில் மேலோங்கி நின்றது. அதையும் மீறி அவனை மனம் மாற வைத்த சக்தி அக்ஷயையும் மாற்றி விடும் என்று நம்பினான்.
                           
எப்படி நம்புகிறாய்?” என்று எர்னெஸ்டோ கேட்டதற்கு அவன்நிகோலா டெஸ்லாஎன்று சொன்னான். அந்த விஞ்ஞானி சொன்ன ஏதோ சித்தாந்தப்படி நம்புவதாக அவன் சொல்கிறான் என்று மட்டும் அவருக்குப் புரிந்ததுஅந்தச் சித்தாந்தம் என்ன, அதை வைத்து எப்படி நீ நம்புகிறாய் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் முயற்சிக்கவில்லை. அதற்கான நேரமோ, பொறுமையோ அவருக்கில்லை. ஆனால் சாதாரண நடைமுறை அறிவுக்கு முரணாக  எல்லாம் நடந்து கொண்டும் கூட அந்த அறிவுஜீவி பல அற்புதமான நிகழ்வுகளைச் சாதித்துக் காட்டியிருக்கிறான் என்று நினைவுபடுத்திக் கொண்ட அவர்என்ன நடக்கிறது என்று பார்ப்போம்என்று விட்டுவிட்டார்.

ஆனால் க்ரிஷ் அவனை மாற்றிய சக்தியையும் நிகோலா டெஸ்லாவையும் நம்பி சும்மா இருந்து விடவில்லை. மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் எல்லாம் செய்து தியான நிலையில் இருந்து கொண்டு அக்ஷயின் மாற்றத்திற்குத் தூண்ட பிரபஞ்ச சக்தியை வேண்டிக் கொண்டிருந்தான். அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று அவன் மனமார நம்பினான். நல்லவர்கள் தங்களால் முடிந்த நல்லதைச் செய்யாமல் இருக்க முடியாது, அதற்கு அவர்கள் மனசாட்சி அனுமதிக்காது என்று க்ரிஷ் நம்பினான். அக்ஷய் மிக நல்லவன். அதனால் தான் அவன் நிழலுலக தாதா ஒருவரின் வளர்ப்பு மகனாக வளர்ந்த போதும் தந்தையின் தொழிலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் உயிரையே பணயம் வைத்து தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி இருக்கிறான். எந்தச் சூழலிலும் அவன் பொறுப்பற்றவன் ஆகவோ, உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பது போலவோ இருந்து விடவில்லை. தன் உயிரைப் பணயம் வைத்து புத்தரின் மறுபிறவியைக் காப்பாற்றி இருக்கிறான். தீமைக்கு எதிர்ப்பும், நன்மைக்கு ஆதரவும் அவன் இரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அப்படிப்பட்டவன் விஸ்வத்தின் கை ஓங்க விட மாட்டான். கண்டிப்பாக உதவுவான்.... இந்தத் திடமான நம்பிக்கையுடன் க்ரிஷ் தன் பங்கு பிரார்த்தனையும், பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இந்த அலைவரிசைகள் கண்டிப்பாக அக்ஷயைச் சிந்திக்க வைக்கும். நல்ல முடிவை எடுக்கத் தூண்டும் என்று அவன் திடமாக நம்பினான்.

உதய் தம்பியிடம் சிந்து பற்றிச் சொல்ல வேண்டும் என்று ஆர்வமாக வீட்டுக்கு வந்தவுடன் தம்பி அறைக்குள் எட்டிப் பார்த்த போது க்ரிஷ்  ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.   அவனை இப்போது தொந்தரவு செய்தால் சண்டைக்கு வருவான் என்ற பயத்தில் உதய் சத்தமில்லாமல் தம்பி அறைக்கதவை மூடி விட்டுத் தனதறைக்குப் போனான். ‘அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் சரி தான். அந்தப் பெண் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைத் தெரிந்து கொள்ளாமல்அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. அவளைப் பார்த்த பிறகு நான் நானாக இல்லைஎன்பதை எல்லாம் இப்போதே ஏன் க்ரிஷிடம் சொல்ல வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் மனதில் வேறு யாராவது இருந்தால் அல்லது அவளுக்குஅந்த அபிப்பிராயமேவராமல் போனால்?... எதற்கும் சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் மனத்தையும் தெரிந்து கொண்டு க்ரிஷிடம் சொன்னால் போதும்என்று உதய்க்குத் தோன்றியது. அதனால் சிந்து பற்றி க்ரிஷிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்று அவன் தள்ளிப் போட்டான்.


(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. சிந்து பற்றி உதய்.... கிரிஷிடம் சொல்லும் சூழ்நிலையை விஸ்வம் உதய்க்கு கொடுக்க மாட்டான் போலேயே??

    ReplyDelete
  2. Super sir. Uday's mistake creates tension in our minds. What will happen next?

    ReplyDelete
  3. அக்ஷயை மாற்றும் அந்த அற்புத நிகழ்வு என்ன? அது எப்படி இருக்கப் போகிறது...?? என்பதை அறிய ஆவல் அதிகமாகியுள்ளது...

    உதய்..கிரிஷிடம் சொல்ல வந்த போது சிறிய தாமதம் அவன் சிந்தனையை மாற்றியமைத்து விட்டது... இந்த நிகழ்வு யதார்த்தம்👌👌

    ReplyDelete