சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 11, 2020

இல்லுமினாட்டி 53



ந்து நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டவளிடம் உதய் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தான். அந்த ஒரு மணி நேரமும் எப்படிப் பறந்ததென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவளைப் பற்றி முழுவதுமாக விசாரித்துத் தெரிந்து கொண்டான். அவள் பிறந்து வளர்ந்தது, படித்தது, பட்டம் பெற்றது எல்லாம் மும்பையில் என்று சொன்னாள். அவள் சிறியவளாக இருக்கையிலேயே அவளுடைய தாய் இறந்து விட்டாளென்று சொன்னாள். சொன்ன போது அவள் கண்களில் ஈரம் தெரிந்தது. தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்றும் சித்தியோடு தனக்கு ஒத்துப் போகவில்லை என்றும் சொன்னாள். படித்து முடித்த பின் வீட்டில் இருக்க முடியாமல் வெளியே வந்து விட்டதாகச் சொன்னாள். மும்பையில் சின்னச் சின்ன வேலைகளில் இருந்ததாகவும் இப்போது இந்தப் பத்திரிக்கையில் வேலை கிடைத்துச் சென்னை வந்திருப்பதாகவும் சொன்னாள். அவனுடைய பேட்டி தான் அவள் அந்தப் பத்திரிக்கையில் தனியாகச் செய்யப் போகிற முதல் வேலை என்று சொன்னாள். அவனை நேரில் பார்க்க முடிந்து பேசிக் கொண்டிருப்பதே பாக்கியம் என்று அவள் நினைப்பது போல் காட்டிக் கொண்டாள். அவன் கண்கொட்டாமல் பார்த்த போது சிறு வெட்கத்துடன் மெல்ல நெளிந்தாள். அவள் அழகு, பேச்சு, வெட்கம் எல்லாமே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.    

பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் சிந்துவும் அவனிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள். அவன் இந்த அளவு எளிமையாகவும், பந்தா இல்லாமலும் பழகுவான் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று சொன்னாள்.

உதய் புன்னகையுடன் சொன்னான். “என்னைப் பார்த்தே இப்படிச் சொல்கிறாயே. என் தம்பியைப் பார்த்துப் பேசினால் என்ன சொல்வாய் என்று தெரியவில்லை. என் தம்பி ஒரு ஜீனியஸ் தெரியுமா? அவன் அறிவில் கால் பாகம் இருந்திருந்தாலும் எனக்கு தலைக்கனம் கண்டிப்பாக வந்திருக்கும். ஆனால் அவனிடம் துளி கூடக் கர்வமும் கிடையாது.. அவன் ரொம்ப நல்லவன் தெரியுமா?” உதய்க்குத் தம்பியைப் பற்றிச் சொல்லும் போதே பெருமிதம் பொங்கியது.

சிந்து கன்னத்தில் குழி விழப் புன்னகைத்தபடி கேட்டாள். “அப்படியானால் நீங்கள்?”

உதய் சிரித்துக் கொண்டே சொன்னான். “நான் நல்லவன் தான் ஆனால் அவன் அளவுக்கு நான் நல்லவன் இல்லை

விஸ்வமே ஜாக்கிரதையாக இருக்கச் சொன்ன ஆள் அவன் தம்பி என்பதை சிந்து நினைவுபடுத்திக் கொண்டாள். பொதுவாக நல்லவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதில்லை என்பது அவள் அனுபவம். ஆனால் விஸ்வம் காரணமில்லாமல் எதையும் சொல்ல மாட்டான்....

முதல் சந்திப்பிலேயே இன்னும் அதிக நேரம் அங்கே தங்குவது உசிதம் அல்ல என்று நினைத்தவளாய் அவள் எழுந்து நின்றாள். “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என்னையும் சரிசமமான ஒருத்தியாய் நினைத்துப் பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை....”
உதய்க்கு அவளைப் போக விட மனமிருக்கவில்லை. எதாவது சொல்லி இனியும் உட்கார வைத்து அவள் அவனைக் கவுரவக்குறைவாய் நினைக்க வைத்து விட வேண்டாம் என்று நினைத்துசந்தித்ததில் மகிழ்ச்சி. எதற்கும் உன் போன் நம்பரை என் உதவியாளரிடம் கொடுத்து விட்டுப் போஎன்று சொல்லிக் கை நீட்டினான்

அவளும் கை நீட்ட அவன் அவள் கையைக் குலுக்கினான். அவள் கையின்  ஸ்பரிஷம் அவனை என்னவோ செய்தது. சில வினாடிகள் கூடுதலாகப் பிடித்து பின்பு தான் விட்டான். அவள் சின்னதாய் வெட்கப்பட்டு மறுபடி நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

இந்த முதல் சந்திப்பு கச்சிதமாகச் சென்றதாய் அவளுக்குத் தோன்றியது.  அவள் வலையில் விழுந்து விட்ட இவனைக் கையாள்வது இனி சுலபம் என்று  நினைத்துக் கொண்டு திருப்தியுடன் வெளியே வந்தாள்.


றுநாள் மதிய உணவுவேளையின் போது மறுபடியும் காணாமல் போய் திரும்பி வந்த ராஜேஷ் சாப்பாட்டு அறையில் எதுவும் மனோகரிடம் சொல்லவில்லை. சிறையறைக்கு வந்த பின் சொன்னான். “அவர்கள் என்னையும் தப்பித்துப் போகச் சொல்கிறார்கள். நாம் இரண்டு பேரும் சேர்ந்து தப்பித்தால் தான் அது யதார்த்தமாய்த் தெரியும் என்று நினைக்கிறார்கள். நீ மட்டும் தப்பிக்க ஏற்பாடு செய்தால் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும் என்று நினைக்கிறார்கள்.”

மனோகர் ஒன்றும் சொல்லவில்லை. இவன் தப்பிப்பதற்கும் பணம் கேட்கிறார்களோ என்ற சந்தேகம் வந்தது. இவனும் சேர்ந்து தப்பிப்பதில் இன்னொரு பிரச்னையையும் மனோகர் கண்டான். இவன் நம்மோடு ஒட்டிக் கொண்டால் ஆபத்து, பின் இவனை எப்படி உதறுவது?...

ராஜேஷ் சொன்னான். “நீங்களாய் தானே என்னை தப்பிக்கச் சொல்கிறீர்கள். அதனால் நான் ஒன்றும் பணம் தர மாட்டேன் என்று சொல்லி விட்டேன். கடைசியில் ஒத்துக் கொண்டார்கள்

மனோகர் தலையசைத்து விட்டுக் கேட்டான். “எப்போது எப்படி நாம் தப்பிக்கப் போகிறோம்...”

அதைத்திட்டம் போட்டு நாளைக்குச் சொல்கிறேன் என்று சொன்னார்கள். ஆனால் என்ன காரணம் வைத்தும் நீ திரும்பவும் ஒரு முறை மாட்டிக் கொள்ளாமல் கவனமாய் இருக்கச் சொல்கிறார்கள். அதே மாதிரி நானும் நீயும் சேர்ந்து வெளியில் இருப்பது ஆபத்து என்கிறார்கள். அதனால் நீயும் நானும் வெளியே போன பின் பிரிந்து விட வேண்டியிருக்கும்...”

மனோகருக்கும் அது தான் தேவையிருந்தது. மனம் சிறிது நிம்மதியடைந்தது.  அன்று தான் நிம்மதியாகத் தூங்கினான்.


ர்னீலியஸ் மறுநாளும் தன்னை யாராவது கண்காணிக்கிறார்களா பின் தொடர்கிறார்களா என்று பார்த்தார். யாரும் அவரைக் கண்காணிக்கவில்லை. பின்தொடரவுமில்லை. இன்னொரு முறை வங்கிக்குப் போய் அங்கு லாக்கரில் இருக்கும் அந்த ரகசிய ஆவணத்தை எடுத்துக் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது. முயற்சி செய்வதில் தப்பில்லை.... அப்படிக் கண்காணிக்கப்படுவது போல் தோன்றினால் அங்கேயே அந்த ஆவணத்தைப் படித்து தெரிந்து கொண்டு மறுபடியும் லாக்கருக்குள் வைத்து விட்டு வருவது பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டார்

தெரிந்த பின்னும் இல்லுமினாட்டி தலைமைக்கு எப்படித் தெரிவிப்பது என்ற தலைவலி இருக்கிறதுநேரடியாகச் சொல்ல முடியாது. இத்தனை நாள் மறைத்து வைத்தது ஏன் என்று அவர்களுக்கு விளக்கம் தர வேண்டியிருக்கும். அதை அவர்கள் ஏற்பார்களா என்று தெரியாது. இல்லுமினாட்டி விதிமுறைகளில் முக்கியமான ஆவணங்களைத் திருடுவதோ, மறைத்து வைத்திருப்பதோ மரண தண்டனை வாங்கித் தரக்கூடியது. ஆனாலும் விஸ்வத்தை ஜெயிக்க விடுவதில் அவருக்கு உடன்பாடில்லை. இந்த வயதில் மரணம் அவருக்குத் தண்டனை அல்ல பெரிய விடுதலை தான். மூன்று தலைமுறையாய் நன்மைகளின் பக்கமே இருந்து அந்த வழியிலேயே வாழ்ந்து விட்டு இப்போது அவர் பொறுப்பில்லாமலும் அலட்சியமாயும் நடந்து கொண்டால் அவருடைய தந்தையும் தாத்தாவும் மன்னிக்க மாட்டார்கள். அதனால் அந்த ரகசிய ஆவணத்தைக் கொண்டுவர முடியாவிட்டாலும் அங்கேயே படித்து விட்டாவது வர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு கர்னீலியஸ் வந்தார்..

உடனே காரில் அவர் கிளம்பினார். யாராவது பின் தொடர்கிறார்களா அல்லது கண்காணிக்கிறார்களா என்பதை அவர் கவனித்துக் கொண்டே வந்தார். எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. கார் வங்கியை நோக்கி விரைந்தது. ஆனால் கார் அந்த சிக்னலுக்கு வந்து நிற்க நேர்ந்த போது அவருக்கு மறுபடியும் கண்காணிக்கப்படும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. இந்த முறை அதையும் மீறி முன்னேறினார். என்ன ஆகிறது பார்ப்போம் என்ற பிடிவாத உணர்வு வந்தது. சில அடிகள் சென்றிருப்பார். அவர் கார் திடீரென்று ஆஃப் ஆகி நின்று விட்டது. காரை மறுபடியும் கிளப்ப முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் வெற்றி தரவில்லை. அந்தக் குளிர்காலத்திலும் அவருக்கு வியர்த்தது.    

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Super sir. Thrilling in all three situations.

    ReplyDelete
  2. உதய் காதல் வலையில் விழுந்து விடுவானா? அல்லது.... இருவருக்கும் காதல் பற்றிக் கொள்ளுமா??

    கர்னீலியஸ் இந்த முறையாவது ரகசியத்தை உடைப்பாரா??

    ReplyDelete
  3. கிருஷ்க்கு சிந்துவை பற்றி தெரிய வரும் போது உதய்யை எச்சரிப்பானா??

    ReplyDelete