அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
இன்று அமேசான் கிண்டிலில் என் புதிய நூல் ”உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்” வெளியாகியுள்ளது.
பலருக்கு நிறைய நல்ல நூல்கள் வாசிக்க
வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான நேரமும், பொறுமையும் இருப்பதில்லை. அதனாலேயே படிக்காமல்
இருந்து விடுகிறார்கள். ஆனாலும் படிக்காத அந்த மனக்குறை அவர்களுக்கு இருந்து கொண்டே
இருக்கிறது.
அப்படியே படிக்க ஆரம்பிக்கலாம் என்று
நினைத்தாலும் ஏராளமான நல்ல நூல்கள் இருக்கின்றன. எங்கிருந்து
ஆரம்பிப்பது, குறுகிய காலத்தில் அதிகமாகப் படித்துப் பயன்பெறுவது எப்படி
என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த நிலைமையையும், அதற்கான
தீர்வையும் ஒரு சமஸ்கிருத சுலோகம் அழகாகச் சொல்கிறது.
அனந்த சாஸ்திரம் பகுவேதிதவ்யம்
ஸ்வல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னா
யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்
ஹம்ஸோ யதா க்ஷீரம் இவாம்
மிஸ்ரம்.
இதன் பொருள் இது தான்: எத்தனையோ
சாஸ்திரங்கள் இருக்கின்றன. தெரிந்து கொள்ள வேண்டியவையோ அதிகம். நமக்கிருக்கும்
காலமோ மிகக் குறுகியது. அதை அறிந்து கொள்ள இடையூறுகளோ அதிகம். ஆகையால்
அன்னப்பறவை தண்ணீரில் கலந்த பாலை மாத்திரம் பருகுகிற மாதிரி நாமும் எது சாரமோ அதை மட்டும்
கிரகித்துக் கொள்ள வேண்டும்.
வாசகர்களே, உங்களுக்காக
அன்னப்பறவையின் வேலையை நான் இந்த நூலில் செய்திருக்கிறேன். பல நூல்களின்
சாராம்சத்தை, சாராம்ச வார்த்தைகளை, சிந்திக்க
வைக்கும் அருமையான கருத்துக்களைத் தொகுத்து இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். எந்த ஒரு
தனி சாராம்சமும், கருத்தும், விளக்கமும் சேர்ந்து
உங்களுக்குப் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
யோசிக்கவும், வழிகாட்டவும், உங்களை
மெல்ல மாற்றவும் முடிந்த இந்த ஒவ்வொரு கருத்தையும் ஒரு நாளில் ஒன்று எனப் படிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு
ஒவ்வொரு நாளும் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஆனால் ஐந்து
நிமிடங்களுக்குள் படித்து முடித்தாலும் அந்த நாள் முழுவதும் நேரம் கிடைக்கையில் எல்லாம்
படித்ததை அடிக்கடி சிந்தியுங்கள். மனதில் ஆழப்படுத்துங்கள். அந்த உண்மையை
உங்கள் மனதில் அசைபோடுங்கள். அது பலவிதங்களில் உங்களை நல்லவிதமாக மாற்றிக் கொள்ளவும், உயரவும்
உதவும்.
ஆதிசங்கரரிலிருந்து அடியேன் எழுதியது
வரை, இந்த நாட்டு ஞானிகள் சொன்னதிலிருந்து மேலை நாட்டு ஞானிகள்
சொன்னது வரை, திருக்குறளில் இருந்து உபநிடதம் சொன்னது வரை ஒரு மனிதனை சிந்திக்கவும், உயர்த்தவும், வெற்றி
பெறவும், அமைதியடையவும் வைக்கும்படியான பல நூல்களின் உபதேச சாரங்கள்
ஐந்தைந்து நிமிடத் துளிகளில் படித்து முடிக்கும்படியாக
இங்கே தந்திருக்கிறேன்.
இந்த நூலைப் படித்து முடிக்கையில் பல
நூல்களைப் படித்து முடித்த திருப்தியும், பயன்பாடும் தங்களுக்கு
இருக்கும் என்பது உறுதி!
நூல் வாங்கிப்படிக்க லிங்க் -
https://www.amazon.in/dp/B08526TV7Q
நூல் வாங்கிப்படிக்க லிங்க் -
https://www.amazon.in/dp/B08526TV7Q
அன்புடன்
என்.கணேசன்
நூலில் இருந்து சில 5 நிமிடப்பதிவுகள்:
நம் தேவைகளில்
அவசியமானவை எத்தனை?
”நமது உண்மையான
தேவைகள் எத்தனை குறைவாக இருக்கின்றன என்பதை அறியாததால் தான் உலகில் அரைவாசித் துன்பங்கள் ஏற்படுகின்றன என்று எனக்கு இப்போது
தெரிய வருகிறது. வெகு காலமாகத் தத்துவஞானிகள் கூறி வந்த இந்த உண்மையை நான்
இப்போது தான் உணர்கிறேன்.” என்று இரு துருவங்களையும் கண்டுபிடித்த எவலின் பயர்டு பனிக்கட்டிப்
பாலைவனத்தின் நடுவே தனியாக நின்ற போது தன் டைரியில் எழுதினார்.
மனிதன் தன் தேவைகளாக உணர்பவைகளில் முக்கால்வாசியும்
செயற்கையாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தேவைகளாகவே இருக்கின்றன. யாருக்கோ
காட்ட, யாருக்கோ நிரூபிக்க எத்தனையோ கூடுதல் தேவைகளை உணர்ந்து அவன்
தன் வாழ்வை பாரமாக்கிக் கொள்கிறான். எவலின் பயர்டு போல
இந்த உலகின் இரைச்சலைத் தாண்டி ஓரிடத்தில் நிற்கும் போது, யாருக்கும்
காட்டவும், நிரூபிக்கவும் தேவைகள் இல்லாத போது, அந்தத்
தனிமையில் உணர்ந்த உண்மையை நாம் மனதில் பதிய வைத்து நம் தேவைகளாக நினைப்பவற்றை ஆராய்ந்தால்
எத்தனையோ அனாவசியங்களையும் தேவைகளின் பட்டியலில் வைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பது புரிய வரும்.
டென்ஷன்
இல்லாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
டென்ஷன் என்பது சத்தத்தைப் போல! சத்தத்தை
உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் தட்ட வேண்டும். ‘டென்ஷன்
இல்லாமல் இருப்பது’ என்பது அமைதியைப் போல! நிசப்தத்தை
உங்களால் உண்டு பண்ண முடியாது! ஏனென்றால் அது ஏற்கெனவே இருக்கிறது! அதாவது
டென்ஷனை உருவாக்கத்தான் நீங்கள் தேவை. டென்ஷன் இல்லாத
நிலையை உருவாக்க உங்கள் முயற்சி எதுவும் தேவையில்லை.
- சுவாமி
சுகபோதானந்தா
டென்ஷன் நிகழ்வுகளில்
இருந்து உருவாவது போல் ஒரு பிரமை நம் அனைவருக்கும் தோன்றினாலும் அந்த நிகழ்வுகளை எப்படி
எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்து தான் டென்ஷன் உருவாகிறது. ஒரே நிகழ்வு
நடக்கையில் பாதிக்கப்படும் பலர் பல விதமாக நடந்து கொள்வதே இதற்கு உதாரணம். மனம் சொர்க்கத்தை
நரகமாக்கவும் வல்லது; நரகத்தைச் சொர்க்கமாகவும் வல்லது என்று ஆங்கிலக் கவிஞன் மில்டன்
கூறியது போல நாம் எடுத்துக் கொள்ளும் விதம் மிக முக்கியம். நாமாக ஏதேதோ
எண்ணிக் கற்பனை செய்து உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருப்போமானால் எதுவும் நம் வாழ்க்கையில்
டென்ஷனை உருவாக்காது.
கெடப்போவதற்கு அறிகுறி!
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (திருக்குறள்
116)
(ஒருவன்
மனம் நியாயமற்ற முறையில் தீமை செய்ய நினைக்குமாயின் அப்போழுதே கெட்டழியும் காலம் வந்து
விட்டது என்பதை அறிய வேண்டும்)
தீமைக்கான எண்ணம் வரும் போதே இது கெடுவதற்கான
அறிகுறி என்று எச்சரிக்கை அடைந்து உடனே திருத்திக் கொள்ள வேண்டும். எண்ணங்களில்
அலட்சியம் செய்தால் கண்டிப்பாக அது செயலாய் மாறி, தவறு செய்ய
வைத்துப் பின் வருந்தும் நிலைமையை ஏற்படுத்தி விடும். பல நேரங்களில்
தவறு செய்தாலும் புத்திசாலித்தனமாக அதனால் பாதிக்கப்படாமல் இருந்து விடலாம் என்று கூடத்
தோன்றலாம். அது ஆபத்தை வரவழைக்கும் முட்டாள்தனமாகவே இருக்க முடியும். எந்தத்
தவறும் தீமையை விளைவிக்காமல் போனதில்லை; தண்டிக்கப்படாமல்
இருந்ததில்லை. அதனால் எண்ண
அளவிலேயே மாற்றிக் கொண்டு நன்றாக இருங்கள்.!
கெடப்போவதற்கான அறிகுறிகள்.... டென்சன்...அவசிய தேவைகள்...மூன்றும் அருமை... இதை பற்றி பக்கம்...பக்கமாக எழுதலாம்...
ReplyDeleteஆனால், சுருக்கமாக கொடுத்த விதம் சிறப்பு...
இந்த நூலுக்கு நன்றி ஐயா 🙏🙏...
இதை வாங்கி பயன் அடையும் வாசகர்களில் நானும் ஒருவன்...