சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 13, 2020

இல்லுமினாட்டி 36


மானுஷ்யன் என்ற பெயரை வாங் வே முன்பே கேள்விப்பட்டிருக்கிறார். அவர் முக்கியமான எதையும் லேசில் மறக்கிறவர் அல்ல என்பதால் அந்தப் பெயர் குறித்த விவரங்களை நினைவுபடுத்திக் கொள்ள முயன்றார். ஆனால் அவரால் சட்டென்று நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் யோசனையுடன் சொன்னார். “அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாய் ஞாபகம். ஆனால் எங்கே எப்போது என்று தெரியவில்லை.”

சாலமன் புன்னகையுடன் சொன்னார். “புத்தரின் மறுபிறவியாக மைத்ரேயன் என்றொரு குழந்தை திபெத்தில் பிறந்திருப்பதாக பேச்சு அடிபட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்...”

வாங் வேக்கு இப்போது நினைவு வந்தது. புத்தரின் மறுபிறவிக் குழந்தை இருப்பதை உலகம் நம்பினால் அந்தக் குழந்தை மைத்ரேயனை வைத்து தலாய் லாமா திபெத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தலாம், உலக அளவில் அதற்கு ஆதரவு பெருகலாம் என்று எண்ணி சீனாவிலிருந்து அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்துத் தீர்த்துக் கட்ட சில ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மைத்ரேயனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் சில அப்பாவிக் குழந்தைகளும் கொல்லப்பட்டாலும் உண்மையான மைத்ரேயன் என்று தலாய் லாமா நம்பிய குழந்தையைத் திபெத்திலிருந்து அமானுஷ்யன் என்றப் பட்டப்பெயருடையவன் தான் காப்பாற்றிக் கொண்டு போனதைக் கேள்விப்பட்டிருக்கிறார். இப்போது சீன உளவுத்துறையின் தலைவனாக இருக்கும் லீ க்யாங் அப்போது சீன உளவுத்துறையின் உபதலைவனாக இருந்தான். அறிவிலும், திறமையிலும் இணையில்லாதவனாகக் கருதப்பட்ட லீ க்யாங் அந்தச் சமயத்தில் பல தீவிர முயற்சிகள் எடுத்தும் கூட அவனிடம் சிக்காமல் மைத்ரேயனை திபெத்திலிருந்து அழைத்துச் சென்றவன் என்பதாலேயே சில ஆண்டுகளுக்கு முன் சீன அதிகார வட்டத்தில் அமானுஷ்யன் பரபரப்புடன் பேசப்பட்டான். அதனாலேயே அவருக்கு அந்த வினோதப் பெயர் நினைவிருக்கிறது.

வாங் வே சொன்னார். “லீ க்யாங்கையே ஏமாற்றி திபெத்திற்குள் நுழைந்து அவனை ஏமாற்றி அந்தக் குழந்தையுடன் திபெத்திலிருந்து தப்பித்தும் போனவன் அந்த அமானுஷ்யன் அல்லவா?”

சாலமனின் புன்னகை விரிந்தது. ”ஆமாம். சீன உளவுத் துறையின் சரித்திரத்திலேயே சர்வ வல்லமை உள்ள லீ க்யாங் தோற்றுப் போனது அந்த அமானுஷ்யன் ஒருவனிடம் தான்...”  

வாங் வேக்கு லீ க்யாங்கை அவ்வளவாகப் பிடிக்காது. அவன் திமிர் பிடித்தவன் என்பதும், அவரைப் போன்றவர்களின் அதிகாரத்தைப் பொருட்படுத்த மறுப்பவன் என்பதுமே அவனை அவருக்குப் பிடிக்காமல் போகக் காரணமாக இருந்தது. அவன் இரண்டாண்டுகளுக்கு முன் சீன உளவுத்துறையின் தலைவனாக ஆக்கப்பட்ட போது அவர் அதைத் தடுக்கக்கூட முயன்றிருக்கிறார். ’அவன் மரியாதை தெரியாதவன்’ என்று சூசகமாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரண்ட குரலில் அப்போது சொன்னார். “உண்மை. ஆனால் அந்த அறிவு, திறமை, தேசபக்தி எல்லாம் மரியாதை தெரிந்த மற்ற ஆட்களிடம் இல்லையே”

அந்த அறிவு திறமை தேசபக்திக்கு எதிராகச் சொல்ல வாங் வேயிடம் எதுவும் இருக்கவில்லை என்பதால் அவர் சின்ன மனக்கசப்போடு பேசாமல் இருந்து விட்டார்.  இப்போது அந்த அறிவு, திறமைக்கும் மிஞ்சி ஜெயித்த ஒருவன் இல்லுமினாட்டியின் தலைவரின் உயிரைக் காப்பாற்ற கொண்டு வரப்படுவது அவருக்கு இரட்டிப்புக் கசப்பாக இருந்தது.  

“ஏன் இல்லுமினாட்டியாலும் உங்களாலும் கூட அவரைக் காப்பாற்ற முடியாது என்று இம்மானுவல் நினைக்கிறானா என்ன?” வாங் வே முகம் சுளித்தபடி கேட்டார்.

“விஸ்வத்தின் சக்திகள், அவனுடைய பழைய சரித்திரம் எல்லாம் தான் அவனைப் பயமுறுத்துகிறது. இந்தியாவில் பலத்த காவல் இருக்கையிலேயே ஒரு மாநில முதலமைச்சரை விஸ்வம் கொன்று அதை மாரடைப்பு என்று நம்ப வைத்தவன். அவனிடமிருந்து அவரைக் காப்பாற்ற அதைவிடப் பலமடங்கு கடுமையான பாதுகாப்பு கொடுத்தே ஆக வேண்டும். எங்களால் தலைவருக்கு அப்படிப் பாதுகாப்பு தந்து அவரைக் காவல் காக்க  முடியும். ஆனால் நெருக்கமான பலத்த காவல் அவருக்கு எப்போதும் பிடித்தமானதல்ல எல்லா நேரங்களிலும் அந்தப் பாதுகாப்போடு இருக்கத் தலைவர் சம்மதிக்க மாட்டார்.....”

சாலமன் சொன்னது உண்மை. எர்னெஸ்டோ தன் பங்களாவில் கூட வெளியே இருக்கும் பலத்த காவலுக்கு ஆட்சேபணை சொல்பவர் அல்ல. ஆனால் வீட்டிற்குள் அப்படிக் காவலர்கள் இருப்பதை அவர் ரசிப்பவர் அல்ல. அதே போல் பயண சமயங்களிலும் மிக நெருக்கமாகக் காவலர்கள் நிற்பதை அவர் எப்போதும் அனுமதித்ததில்லை.

வாங் வே சந்தேகத்துடன் கேட்டார். “விஸ்வத்தின் சக்திகளுக்கு அந்த அமானுஷ்யன் இணையாவானா?” அவர் அறிந்த வரை விஸ்வத்தின் சக்திகளுக்கு யாருமே இணையானவர்கள் அல்ல.

சாலமன் சொன்னார். “அவனுடைய ஃபைலைப் படித்துப் பார்த்த போது எனக்கு அந்தச் சந்தேகம் வரவில்லை. அவன் காற்றைப் போல நகர முடிந்தவன் என்று சொல்கிறார்கள். ஒரு கண நேரத்தில் இங்கிருப்பவன் அடுத்த கணம் பல அடிகள் தள்ளி இருப்பான் என்றும், அவன் இங்கிருந்து அங்கே போவதை யாரும் கவனிக்கக்கூட முடியாத வேகத்தில் நகர்வான் என்று சொல்கிறார்கள். தலீபான் தீவிரவாதிகள் அவனைச் சைத்தான் என்று கூடச் சொல்வதுண்டாம்... அவனும் தன் வித்தைகளை இமயமலையிலும், திபெத்திலும் தான் கற்றுக் கொண்டவன் என்று சொல்கிறார்கள்... அவன் பயங்கரமான வர்மக் கலை ஏதோ கற்றவனாம். அவன் கையசைப்பது மட்டும் தான் தெரியும், எதிரி நரம்பு சுளுக்கி அசைய முடியாமல் துடிக்க வேண்டி வரும் என்கிறார்கள்.  அவன் வர்மக்கலையால் போடும் நரம்புச் சுளுக்கு முடிச்சுகளை அவிழ்க்க முடிந்த ஆட்கள் அவனைத் தவிர வேறு  இல்லை என்கிறார்கள். ஆஸ்பத்திரிக்குப் போனாலும் அதைச் சரி செய்ய முடியாதாம். அப்படி எத்தனையோ பேர் கோமாவிலேயே இருந்து இறந்தும் போயிருக்கிறார்களாம்.”

வாங் வே திகைப்போடு சாலமனைப் பார்த்தார்.  ”அந்தப் ஃபைல் நகலைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?”

சாலமன் தயக்கத்தோடு சொன்னார். “இல்லை. இம்மானுவல் அந்தப் ஃபைலை எனக்குப் படிக்கக் கொடுத்து பக்கத்திலேயே இருந்தான். அவனுக்குப் பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் சுலபமாக அவர்களுக்குத் தெரியாதபடி காமிராவில் ரகசியமாகப் பதிவு செய்து கொண்டு வந்திருப்பேன். ஆனால் இம்மானுவலை ஏமாற்றுவது சுலபமல்ல. ஒரு தடவை அவனுக்குச் சந்தேகம் வந்து விட்டால் பின் நமக்கு எப்போதுமே ஆபத்து தான்...”

வாங் வே அதை உணர்ந்தே இருந்தார். அவர் சிறிது யோசித்து விட்டுக் கேட்டார். “கிழவர் இல்லுமினாட்டிக்கு வெளியே இருந்து ஒரு பாதுகாவலன் வரச் சம்மதித்து விட்டாரா?”

சாலமன் சொன்னார். “அப்படித்தான் தோன்றுகிறது. அந்த ஃபைலை இம்மானுவல் அவருக்கும் அனுப்பியிருக்கிறான் என்றே நினைக்கிறேன். முக்கியமாக அந்த ஃபைலைப் படித்த பின் அவருக்கு அமானுஷ்யனைப் பார்க்க ஆர்வம் கூடியிருக்கிறது போல் தோன்றுகிறது....”

வாங் வேக்கு நடப்பது எதுவும் பிடிக்கவில்லை. இல்லுமினாட்டி உறுப்பினர் அல்லாத ஒருவன் இல்லுமினாட்டிக் கூட்டத்திற்கு வந்து பேசியதையே அவரால் ஜீரணம் செய்ய முடிந்திருக்கவில்லை. எர்னென்ஸ்டோ க்ரிஷை அழைப்பதற்கு முன் செயற்குழு உறுப்பினர்களை அழைத்துப் பேசிய போது “இது வரை நாம் இல்லுமினாட்டி அல்லாத ஒருவனை நம் சபைக்கு வரவழைத்துப் பேசவிட்டுக் கேட்டதில்லை” என்று சுட்டிக் காட்டியவர் அவர் ஒருவர் தான். அப்போது எர்னெஸ்டோ அதைப் பொருட்படுத்தாமல் “அவசியம் வரும் போது அபூர்வமானதையும் சிலசமயம் செய்ய வேண்டியிருக்கிறது” என்று சொல்லி க்ரிஷை வரவழைத்தார். இப்போது இல்லுமினாட்டியைச் சாராத இன்னொருவனும் உள்ளே வர இருக்கிறான். இல்லுமினாட்டிக்கு அழிவு இது போன்ற செயல்களின் மூலமாகத் தான் வரும் போல் அவர் மனதுக்குப் பட்டது. ’எல்லாம் விஸ்வத்திடமிருந்து ஆரம்பித்தது. ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த இயக்கத்தில் முதலில் அவன் நுழைந்தான். பின் க்ரிஷ்... இப்போது இந்த அமானுஷ்யன்...’

வாங் வே எரிச்சலோடு கேட்டார். “அந்த அமானுஷ்யன் எப்போது வருகிறானாம்?”

சாலமன் சொன்னார். “தெரியவில்லை. இல்லுமினாட்டி  அழைத்தாலும் அவன் வரச் சம்மதிப்பானா என்று இம்மானுவலே சந்தேகப்படுகிறான்... அமானுஷ்யனை எப்படி வரவழைப்பது என்பதை அவன் தலைவரிடமே தீர்மானிக்க  விட்டிருப்பதாகத் தெரிகிறது...”   


ர்னீலியஸின் கார் வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தவுடன் அவரை யாரோ கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு சுத்தமாக விலகி விட்டது. திரும்பவும் போகலாமா என்று அவர் ஒரு கணம் நினைத்தார். ஆனால் வங்கி நோக்கிச் செல்லும் போது மீண்டும் அந்தக் கண்காணிப்பு தொடரும் என்று உள்ளுணர்வு அவரை எச்சரித்தது. ஒரு வேளை அவர் வங்கி லாக்கரிலிருந்து அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு வந்தால் அந்த ஆவணம் அவரிடமிருந்து பறி போய் விடலாம் என்று கூடத் தோன்றியது. அதிலிருக்கும் தகவலை அறிய ’அந்த யாரோ’வும் ஆவலாக இருப்பது போல் தோன்றியது அது பிரமையாகவும் இருக்கலாம் என்றாலும் இப்போதைக்குத் தன் எச்சரிக்கையைத் தளர விடுவது கர்னீலியஸுக்கு உசிதமாகத் தோன்றவில்லை. இனி ஒரு நாள் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். 

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Suspense in all angles. Waiting for Next Thursday.

    ReplyDelete
  2. Very interesting.
    Waiting for akshay.

    ReplyDelete
  3. அமானுஷ்யனை என்ன சொல்லி வரவழைப்பார்கள்...?இந்த தொடர் அடுத்து எந்த திசை நோக்கி நகரும் என்றே தெரியவில்லையே...!

    ReplyDelete
  4. உங்களின் விதி எழுதும் விரல்கள் படித்துவிட்டேன் ஆனால் இல்லுமினாட்டி அமானுஷ்யன் புத்தம் சரணம் கச்சாமி பரமன் ரகசியம் இரு வேறு உலகம் ஏற்படுத்திய பிரமிப்பு ஏற்படவில்லை...உங்களிடம் பிரமாண்டமான தாக்கங்கள் ஏற்படுத்தும் நாவல்களை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  5. தாங்களின் நீ நான் தாமிரபரணி மனிதரில் எத்தனை நிறங்கள் நல்ல நாவல்கள் தான் இருந்தாலும் இருவேறு உலகம் போன்ற நாவல்கள் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete