சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 12, 2019

இல்லுமினாட்டி 27


இல்லுமினாட்டி 27

வாங் வேயால் பொறுத்திருக்க முடியவில்லை. எர்னெஸ்டோக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் என்ன. அவர் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார் என்பதை எல்லாம் உடனடியாகத் தெரிந்து கொள்ளா விட்டால் தலையே வெடித்து விடும் போல அவருக்கிருந்தது. எர்னெஸ்டோவின் உதவியாளரிடம் பேசி இரண்டு நாட்களாகி விட்டன. அங்குள்ள நிலவரத்தை அறிய வேண்டி மறுபடியும் அந்த உதவியாளருக்கு வாங் வே போன் செய்தார்.

தலைவர் இப்போதும் பிசியாகத் தான் இருக்கிறாரா?...”

“...ம்... இன்றிலிருந்து தான் பார்வையாளர்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். அதனால் தான் பிசி......”

இன்றைக்கு அவரைச் சந்திக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று வாங் வே கேட்டார். ஒரு நாளில் அதிகபட்சமாய் 15 அப்பாயின்மெண்ட்கள் தான் எர்னெஸ்டோ தருவார். பத்துக்கு மேல் இன்று அனுமதித்திருந்தால் தலைவர் இயல்பு நிலைக்கு வந்து விட்டார் என்று அர்த்தம். மிகவும் குறைவாகத் தான் அவர் பார்ப்பதாய் இருந்தால் இல்லுமினாட்டி கொடுத்திருக்கும் உளவுத் துறை ரிப்போர்ட்டில் இன்னும் தீவிரமாகக் கிழவர் ஈடுபட்டிருக்கிறார் என்று அர்த்தம்... அந்தக் குறைவான அப்பாயின்மெண்ட்களில் இப்போதைய நிலவரம் சம்பந்தமான மிக முக்கியமான ஆட்கள் இருக்கவும் கூடும்...

பதினைந்து அப்பாயின்மெண்ட்கள் இருக்கின்றன. இப்போது இரண்டாம் அப்பாயின்மெண்ட் தான் போய்க் கொண்டிருக்கிறது... பிஷப் ஃப்ரான்சிஸ் தான் தலைவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவசரமாகப் பேச வேண்டுமானால் அவர் வெளியே வந்தவுடன் தலைவருக்கு இணைப்பு தருகிறேன்.”

பெர்லினில் இருக்கும் பிஷப் ஃபிரான்சிஸ் இல்லுமினாட்டிக்கு மிகவும் நெருக்கமானவர். அவரை வாங் வேயும் நன்றாகவே அறிவார். “அப்படி அவசரமாய் பேச வேண்டியதில்லை. தலைவருக்குத் தகவலை மெயிலிலேயே அனுப்பி வைக்கிறேன். அவர் ஓய்வாக இருக்கையில் பார்க்கட்டும்...” என்று சொல்லி வாங் வே பேச்சை முடித்துக் கொண்டார்.

வாங் வே ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தார். மறுபடியும் எல்லோரையும் சந்திக்கிற அளவுக்கு கிழவர் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தாலும் அவரை இரண்டு நாள் பாதித்த முக்கியத் தகவல்கள் எதையும் இப்போதும் தலைமைக்குழு உறுப்பினர்களுடன் கூட அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஃப்ராங்க்பர்ட் மருத்துவமனையில் டேனியல் என்ற போதை மனிதன் செத்துப் பிழைத்ததையும் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களில் இருந்த ஆச்சரியமான தகவல்களையும், ஜான் ஸ்மித் திபெத் போய் அறிந்து வந்ததையும் பகிர்ந்ததோடு சரி, அவரிடமிருந்து வேறெந்தத் தகவலும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். டேனியல் உடலில் இருக்கலாம் என்று எல்லோரும் சந்தேகிக்கும் விஸ்வம் இன்னும் இல்லுமினாட்டிக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் என்ன செய்வார்கள் என்ற நிச்சயமுமில்லை. அந்த விஸ்வமே அடுத்ததாக என்ன செய்வான் என்றும் தெரியவில்லை. தலைமைக்குழுவைக் கிழவர் கூட்டினால் இல்லுமினாட்டி தரப்பு முடிவாவது என்ன என்பது ஓரளவு தெரியும். அவர் அதையும் செய்யாமல் இழுத்தடிப்பதன் உத்தேசம் வாங் வேக்குப் பிடிபடவில்லை...

திடீரென்று உள்ளுணர்வு உந்த வாங் வே பிஷப் ஃப்ரான்சிஸின் பெர்லின் அலுவலகத்திற்குப் போன் செய்தார். பிஷப் ப்ரான்சிஸின் செகரட்டரி தான் போனில் பேசினார். “...பிஷப் இப்போது சர்ச்சில் பிரார்த்தனையில் இருக்கிறார். முடித்து வர இன்னும் ஒன்றரை மணி நேரமாவது ஆகும்....”

வாங் வே மேற்கொண்டு பேசாமல் இணைப்பைத் துண்டித்தார். பிஷப் ஃப்ரான்சிஸ் பெர்னிலேயே இருக்கிறார் என்றால் அந்தப் பெயரில் எர்னெஸ்டோவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பது யார் என்ற கேள்வி அவர் மனதைக் குடைய ஆரம்பித்தது. அந்த ஆள் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ரகசியமாகப் பேச வேண்டியதன் அவசியம் என்னவாக இருக்கும் என்ற அடுத்த கேள்வியும் அந்தக் குடைச்சலில் சேர்ந்து கொண்டது.


ர்னென்ஸ்டோவிடம் பிஷப் ஃப்ரான்சிஸ் வேடத்தில் பேசிக் கொண்டிருந்தது இல்லுமினாட்டியின் உளவுத் துறைத் தலைவனான இம்மானுவல் தான்.

இம்மானுவலுக்கு வயது நாற்பத்தைந்து இருக்கும். வெளியுலகுக்கு அவன் முந்தைய  கால்பந்து விளையாட்டு வீரன். குங்க்ஃபூவில் தேர்ச்சி பெற்றவன். இப்போது கால்பந்து விளையாட்டுகள் குறித்த கட்டுரைகளைப் பல பத்திரிக்கைகளில் எழுதி வருவதால் வெளியுலகுக்கு அவன் கட்டுரையாளன் மட்டுமே. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அவன், இல்லுமினாட்டியைப் பொருத்தவரை ஒரு சாதாரண உறுப்பினர். அதிகம் பேசாத, எதிலும் துடிப்புடன் கலந்து கொள்ளும் இயல்பில்லாத கடைமட்ட உறுப்பினர். அவன் அறிவுக்கூர்மையின் அளவையும், இல்லுமினாட்டி உளவுத் துறைத் தலைவன் அவன் என்பதையும் எர்னெஸ்டோவும், உபதலைவரும் மட்டுமே அறிவார்கள்.

எந்த ஒரு விஷயத்தையும், சூழலையும் ஆழமாகவும் துல்லியமாகவும் அலச முடிந்த அவனிடம் எர்னெஸ்டோ கேட்டார். ”விஸ்வத்தின் கூட்டாளிகள் பற்றி கண்டுபிடிக்க முடிந்ததா?”

இம்மானுவல் எந்த விதமான தயக்கமோ சங்கடமோ இல்லாமல் சொன்னான். “இல்லை

எர்னெஸ்டோ இம்மானுவலைக் கூர்ந்து பார்த்துக் கேட்டார். “ஏன்? அவன் கூட்டாளிகளில் ஒருவனாவது ஆஸ்பத்திரிக்குள் நுழைந்திருக்கிறான் என்பது உறுதி. அப்படி உள்ளே நுழைந்து அந்த இசையை ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறான் என்று உங்கள் ரிப்போர்ட்டே சொல்கிறது. அப்படி இருந்தும் உங்களால் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த அந்த ஒருவனைக்கூட ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?”

இம்மானுவல் அமைதியாக விவரித்தான். “அந்த ஆஸ்பத்திரியின் காமிராக்கள் பதிவு பண்ணின எல்லாத்தையும் நுணுக்கமாவே அலசி விட்டோம். சந்தேகப்படுகிற மாதிரி எதுவுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. புதிய ஆளுங்க சிலர் வந்திருந்தது கூட அவங்க நுழைந்ததிலிருந்து வெளியே போன நிமிஷம் வரைக்கும் ஏதோ ஒரு காமிரால அவங்க நடமாட்டத்தோட  ரிக்கார்டிங் இருந்தது. ஒருவேளை முதல்லயே ரிக்கார்ட் பண்ணியிருந்த கிதார் இசையை ஆஸ்பத்திரில வேலை பார்க்கிற ஆள் யாராவது மூலமா ஒலிக்க விட்டிருக்கலாமோன்னு கூட ஒரு சந்தேகம் வந்துச்சு. ஆனா நம்ம மீட்டிங்ல நடந்த சம்பவத்தைக் கோர்வையா யோசிச்சப்ப அதுக்கும் வாய்ப்பில்லைன்னு புரிஞ்சுது....”

எர்னெஸ்டோ கேட்டார். “ஏன் வாய்ப்பில்லை?”

நம்ம இல்லுமினாட்டி மீட்டிங் ஹால்ல திடீர்னு தான் விஸ்வம் இறந்திருக்கான். அவன் இறந்தது நம் ஆள்களுக்கே தெரியாமல் மீட்டிங் தொடர்ந்து நடந்திருக்கு. அவன் இறந்த அந்த சமயத்தில் தான் இந்த கிதார் இசை ஆஸ்பத்திரியில் ஒலிச்சிருக்கு. முதல்லயே ரிக்கார்டிங் பண்ணி ஒரு ஆள் அந்த நேரத்துல ஆஸ்பத்திரில அந்த நேரத்துல ஒலிக்க வச்சிருக்கணும்னா விஸ்வம் இந்த நேரத்துல சாவான்னு முன்பே தெரிஞ்சிருந்தா தான் அது முடியும். அதனால தான் அதுக்கு வாய்ப்பில்லைன்னு சொன்னேன்...”

இம்மானுவல் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த எர்னெஸ்டோ திகைப்புடன் கேட்டார். “நமக்கே விஸ்வம் இறந்தது தெரியாத போது அவன் கூட்டாளிகளுக்கு எப்படித் தெரிய வந்திருக்கும்?”

இம்மானுவல் சொன்னான். “அது தான் மில்லியன் டாலர் கேள்வி. என் அனுமானம் சரியாக இருக்குமானால் விஸ்வத்தின் கூட்டாளி ஒரே ஆளாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பு குறைவு. அந்த ஒரு ஆளும் விஸ்வத்தையும் விடச் சக்திகள் அதிகம் இருக்கிறவனாகத் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கிற ஒருவனுக்குத் தான் மிக மிக ரகசியமாக நடந்த அந்தக் கூட்டத்தில் விஸ்வம் இறந்து போனது உடனடியாகத் தெரிந்திருக்கிறது....”

நம் ரகசியமான கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிவதற்கு முன்னே வெளியில் இருக்கும் ஒருவனுக்குத் தெரிகிறது என்பதே நமக்குக் கேவலம் அல்லவா?” எர்னெஸ்டோ கேட்ட போது இம்மானுவல் அதற்குப் பதில் சொல்வது தேவையில்லை என்பது போல் மௌனமாக இருந்தான்.

ஆனால் எர்னெஸ்டோ அவனை விடுவதாக இல்லை. அவர் புன்னகையுடன் கேட்டார். “ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறாய்?”

அவனும் மெல்லப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “நடந்திருப்பது எதுவும் இயல்பானதல்ல. அமானுஷ்யமானது. இல்லுமினாட்டிக்கு இது எல்லாம் பழக்கமானதல்ல. விஸ்வத்தின் மூலமாகத் தான் இந்த அமானுஷ்ய சக்திகள் எல்லாம் நமக்கு அறிமுகம் ஆகியிருக்கின்றன. இதிலும் என்ன எல்லாம் இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு எல்லாம் புதுமையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. ஓருசிலர் மட்டுமே பேசக்கூடிய மொழி நமக்குத் தெரியவில்லை என்பது எப்படிக் கேவலம் இல்லையோ அப்படித் தான் இதுவும் கேவலம் இல்லை என்று நினைக்கிறேன்.”

அவனுடைய பதிலை அவர் ரசித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சொன்னார். “அந்த சக்திகள் விஷயத்தில் நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் அந்த ஆளையே கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை நான் நமக்குக் கேவலமாகத் தான் நினைக்கிறேன். விஸ்வத்துக்கு ஒரு கூட்டாளி இருந்திருக்கிறான் என்பது மட்டுமல்ல அவன் ம்யூனிக் வரைக்கும் அவனைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறான். ஆனாலும் அப்படி ஒருவன் இருப்பதையோ, இங்கே வந்ததையோ, அவன் யார் என்பதையோ நாம் கண்டுபிடிக்கவில்லை என்பதை வேறு விதமாக எடுத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. அது மட்டுமல்ல இது வரை அந்தக் கூட்டாளியும் விஸ்வமும் எங்கே இருக்கிறார்கள் என்று நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை....”

இப்படி ஒரு கேள்வி அவரால் கேட்கப்படும் என்று இம்மானுவல் எதிர்பார்த்தே இருந்தான். அவன் அமைதியாக தன்னுடைய ப்ரீஃப்கேஸில் இருந்து ஒரு தடிமனான ஃபைலை வெளியே எடுத்தான்.

(தொடரும்)
  
என்.கணேசன் 

12 comments:

  1. Every week suspense is increasing. What is in the file?

    ReplyDelete
  2. சஸ்பென்ஸ் தாங்கலை. அடுத்த மாதம் புத்தகம் எப்போது வெளி வரும்? சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி முதல் வாரம் வெளிவரும்.சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

      Delete
  3. 'உளவுத்துறை தலைவன் ஏன் இவ்வளவு ரகசியமாக சந்திக்க வேண்டும்?' என்று இப்போது தான் புரிகிறது.... எர்னெஸ்டோ ஜீனியஸ் தான்....

    ReplyDelete
  4. I know the full novel will release on January, will it release in Amazon kindle ?

    ReplyDelete
  5. Sir, can I get the novel through online?

    ReplyDelete
  6. Wowwwww vera level...if எர்னெஸ்டோ is brilliant then he should find why wangway called many times and the call went to Berlin

    ReplyDelete
  7. எர்னஸ்டோ must smell the wangvay...

    ReplyDelete
  8. கிதார் வாசிப்வன் இலுமினாட்டியின் சக்தி தெரிந்தே வைத்துள்ளான்

    ReplyDelete
  9. அந்த ஃபைல் அமானுஷ்யனின் ஃபைல்தானே...?

    ReplyDelete