சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 9, 2019

சத்ரபதி 102


யர்பதவிகளுக்குத் தகுதி வாய்ந்த ஆட்களைத் தேர்ந்தெடுத்து இருத்துவது எல்லாக் காலங்களிலும் ஆட்சியாளர்களுக்குச் சவாலாகவே இருந்திருக்கிறது. இருக்கின்ற தகுதியான ஆட்களை மிக முக்கியமாகக் கருதும் உயர்பதவிகளில் இருத்தி விட்டு, மற்ற உயர்பதவிகளில், கிடைக்கின்ற ஆட்களை இருத்த வேண்டிய நிலைமைக்கு அவர்கள் ஆளாகிறார்கள். இந்த இரண்டாம் ரகத்தில் நியமனமானவன் தான் சூரத் நகரின் கவர்னரான இனயதுல்லா கான். சூரத் நகரில் செல்வம் ஏராளமாக இருந்த போதிலும் நகர கஜானாவில் பெரும் செல்வம் அதிக காலம் தங்கியதில்லை. அவ்வப்போது தலைநகருக்கு அனுப்பப்பட்டு விடும். மற்ற செல்வந்தர்கள் தங்கள் செல்வத்துக்குப் பாதுகாவலர்களைத் தாங்களே வைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அந்த நகரத்திற்குப் பெரியதாக ஒரு படையோ, பாதுகாப்போ தேவை என்னும் அவசியத்தை முகலாயப் பேரரசு உணர்ந்திருக்கவில்லை. அதனால் சிறிய அளவிலான கொள்ளைக்காரர் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவு படை சூரத்தில் இருந்ததே ஒழிய பெரும்படையைச் சமாளிக்கும் பலத்துடன் அந்தப் படை இருக்கவில்லை.

சிவாஜியின் படை எல்லையில் வந்த முகாமிட்ட செய்தி கிடைத்தவுடன் தானே நேரில் சென்று சிவாஜியைச் சந்திக்கும் எண்ணம் இல்லாத இனயதுல்லா கான் சிவாஜியின் உத்தேசம் என்ன என்று அறிந்து வர ஒரு கடைநிலை அதிகாரியை அனுப்பி வைத்தான். தொழிற்சாலைகள் வைத்திருக்கும் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் தங்களிடம் ஏராளமான செல்வமும் இருப்பதால் சிவாஜியின் நடவடிக்கைகளைக் கண்காணித்துச் சொல்லும்படி ஒவ்வொரு ஆளை அனுப்பி வைத்தார்கள்.

இனயதுல்லா கானின் அதிகாரியையும், உளவு பார்க்க வந்த இரு வீரர்களையும் உடனடியாகக் கைது செய்து சிறைப்படுத்திய சிவாஜி சூரத் நகரின் தலைமையிடமும், முக்கியஸ்தர்களிடம் செல்வத்தின் அளவு அறிவு இல்லை என்பதை உணர்ந்து புன்னகைத்தான். பின் இனயதுல்லா கானுக்கும், சூரத் நகரின் முதல் மூன்று செல்வந்தர்களுக்கும் தன் வீரன் ஒருவன் மூலம் செய்தி அனுப்பினான்.

“என்னுடைய பூமியின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் முகலாயர்களின் அராஜகத்தை எதிர்த்துப் பாடம் கற்பிக்க முகலாய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான சூரத்தின் செல்வத்தை நான் கொள்ளை அடித்துக் கொண்டு போக வந்திருக்கிறேன். எனக்கு தனிப்பட்ட எந்த மனிதர் மீதும் கோபம் இல்லை. சூரத் மக்கள் யாருக்கும் எந்த இடையூறையும் நான் ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் நான் தேடி வந்த செல்வத்தை நீங்களாகவே வசூலித்து என்னிடம் தந்தால் உங்கள் நகரத்திற்குள் நுழையவும் செய்யாமல், வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அந்தச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு என் படையுடன் நான் திரும்பிச் சென்று விடுவேன். அதற்கு நீங்கள் மறுத்தால் என் படையுடன் நகருக்குள் நுழைந்து நானாகவே செல்வத்தைக் கவர்ந்து செல்ல வேண்டி வரும். அது நீங்களாகத் தருகின்ற செல்வத்தின் பல மடங்காக இருக்கும் என்பதில் தங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை.”

பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றிராத இனயதுல்லா கானும், மூன்று செல்வந்தர்களும் சிவாஜி அனுப்பிய செய்தியை அலட்சியம் செய்தார்கள்.  இனயதுல்லா கான் நிலைமையை எடுத்துக்கூறி கூடுதல் படை அனுப்புமாறு மடல் எழுதி தக்காண கவர்னர் முவாசிம்முக்கு உடனடியாக ஆளனுப்பி வைத்து விட்டு கூடுதல் படை வரும் வரை காலம் தாழ்த்த எண்ணினான்.  அந்தச் செல்வந்தர்களும் கூட அந்தக் கூடுதல் படை வரும் வரை சிவாஜிக்குப் பதில் எதுவும் அனுப்பாமலிருக்க முடிவு செய்தார்கள். தங்கள் செல்வத்திற்குப் பாதுகாப்பு வீரர்களை அதிகரித்தார்கள்.

ஆனால் மற்றவர்களில் பெரும்பாலோர் சிவாஜி குறித்து ஏராளமாகக் கேட்டிருந்தவர்களானதால் இனயதுல்லா கானையோ, இந்தப் பெருஞ்செல்வந்தர்களையோ நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்தார்கள். கூடுதல் முகலாயப்படைவரும் வரை காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து கணிசமானோர் குடும்பத்துடனும், தங்கள் செல்வத்துடனும் படகுகளில் கோதாவரியின் மறு கரையை அடைந்து தப்பிக்க ஆரம்பித்தார்கள்.

அந்தச் செய்தியும் சிவாஜியை வந்தடைந்தது. சிவாஜி தன் ஒற்றனைக் கேட்டான். “தப்பித்துச் செல்பவர்களில் பெருஞ்செல்வந்தர்கள் யாராவது இருக்கிறார்களா?”

”இல்லை மன்னா. அந்தப் பெருஞ்செல்வந்தர்களின் செல்வம் படகுகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போக முடிந்த அளவு செல்வமல்ல….”

இனயதுல்லா கானைப் போன்ற முட்டாள் இன்னேரம் என்ன செய்திருப்பான் என்பதை சிவாஜியால் நன்றாகவே யூகிக்க முடிந்தது. இனயதுல்லா கான் கூடுதல் படையை எதிர்பார்க்கிறான். தகவல் கிடைத்து பெரும் படை என்னதான் விரைந்து வந்தாலும் அது ஐந்து நாட்களுக்கு முன் இங்கே வந்து சேர முடியாது. சிவாஜி எந்தச் சூழ்நிலையிலும் சாதாரணக் குடிமக்கள் கஷ்டப்படுவதையும், அவர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்குவதையும் விரும்பாதவன். ஆனால் முட்டாள்களால் ஆளப்படுகின்ற மக்கள் கஷ்டப்படுவது தவிர்க்க முடியாதது. பெருமூச்சு விட்ட சிவாஜி படையுடன் சூரத்தின் உள்ளே நுழைந்து பலவந்தமாகச் செல்வத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான்.

மூன்றே நாட்களில் செல்வத்துடன் இந்த இடத்தை விட்டுச் செல்வது தான் புத்திசாலித்தனம் என்று கணக்கிட்டு சூரத் நகருக்குள் தன் படையின் ஒரு பகுதியுடன் உள்ளே நுழைந்தான்.


க்களைக் காப்பாற்ற வேண்டிய இனயதுல்லா கான் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது அதை விட முக்கியம் என்று நினைத்ததால் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டு வெளியே என்ன நடக்கிறது என்ற தகவல்களை மட்டும் ரகசிய ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது பெற்றுக் கொண்டிருந்தான்.

ஒற்றர்கள் கொண்டு வந்த தகவல்கள் எல்லாம் அவன் காதில் நாராசமாக ஒலித்தன.

“பிரபு சிவாஜியின் படையினர் அடிமட்ட, நடுத்தர நிதி வைத்திருப்போரை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை. அவர்களது செல்வத்தைப் பறிக்கவும் இல்லை. பல குழுக்களாகப் பிரிந்து அந்தப் படையினர் குறி வைத்திருப்பதெல்லாம் செல்வந்தர்களையே. அந்தச் செல்வந்தர்களின் மாளிகைக்குள் நுழைந்திருக்கும் அவர்கள், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்கள் உட்பட அனைத்தையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்… சில ரகசியத் தகவல்களையும் அவர்கள் முன்கூட்டியே பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் விசாரிக்கும் விதத்திலேயே அறிய முடிகிறது….”

”எந்தவொரு மாளிகையிலிருந்தும் சிவாஜியின் படையினர் விரைவாக வெளியே வரவில்லை பிரபு. முழுவதுமாக எடுத்துக் கொள்ளாமல் வெளியே வருவதாக அவர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.”

“தடுப்பவர்களும், செல்வத்தை மறைக்கப் பார்ப்பவர்களுமே சித்திரவதைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தை ஒப்படைக்கத் தயாராக இருப்பவர்கள் துன்புறுத்தப்படவில்லை…”

“டச்சுக்காரர்களின் தொழிற்சாலையும், ஆங்கிலேயர்களின் தொழிற்சாலையும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. டச்சுக்காரர்கள் சீக்கிரமே தோற்று வழி விட்டு விட்டார்கள். ஆங்கிலேயர்கள் ஓரளவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் பிரபு. ஆனால் அது எத்தனை காலத்திற்கு முடியும் என்று தான் தெரியவில்லை…”

“எல்லாச் செல்வந்தர்களின் மாளிகைகளும் சிவாஜியின் படையினரால் சூழப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் ஒரே ஒரு செல்வந்தரின் மாளிகை மட்டும் சிவாஜியின் படையினரால் ஆக்கிரமிக்கப்படவில்லை பிரபு”

இனயதுல்லா கான் வியப்புடன் கேட்டான். “யாருடைய மாளிகை”

“காலஞ்சென்ற மோகன் தாஸ் பரேக்கின் மாளிகை பிரபு”

இனயதுல்லா கானுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. காரணம் மோகன் தாஸ் பரேக் டச்சுக்காரர்களின் வியாபாரத் தரகராய் இருந்தவர். சில காலம் முன்பு காலமான அவர் ஈட்டிய செல்வத்திற்கு அளவேயில்லை. இப்போது அவர் குடும்பத்தினர் அந்தச் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்கள். அங்கு சிவாஜி நுழைந்திருந்தால் ஏராளமான செல்வத்தை எடுத்திருக்க முடியும். ஏன் அங்கு மட்டும் அவன் செல்லவில்லை என்ற கேள்வி அவன் மனதில் தங்கியது……

தே கேள்வியை சிவாஜியின் படைத்தலைவன் சிவாஜியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

சிவாஜி மென்மையாகச் சொன்னான். “வாழ்ந்த காலத்தில் ஈட்டிய செல்வத்தில் பெரும்பங்கை மோகன் தாஸ் பரேக் தர்ம காரியங்களுக்குச் செலவழித்திருக்கிறார். எத்தனையோ ஏழைகள் அவரால் பலன் அடைந்திருக்கிறார்கள் என்றும் பலர் கூறிக் கேட்டிருக்கிறேன். நிறைய தர்மம் நடந்து அந்தக் குடும்பத்தினருக்கு மிஞ்சிய செல்வத்தை நாம் அபகரிக்கச் செல்லக்கூடாது.  இறைவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.”


னயதுல்லா கான் கோழையே ஆனாலும் வெளிக்காட்ட முடியாத கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். எதிர்பார்த்த படை வரும் வரை சிவாஜி தங்கியிருப்பானா என்ற நிச்சயமில்லாத நிலையில் சிவாஜி இந்த நகரச் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்துப் போவதை அவனால் சகிக்க முடியவில்லை. சிவாஜியைக் கொல்ல தூதன் என்ற பெயரில் ஒரு திறமையான ஆள் அனுப்பினால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. அப்படி ஒரு ஆளை அவன் அறிவான்.




(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. You make him alive by your words sir. Superb writing.

    ReplyDelete
  2. சிவாஜி கொள்ளை அடித்தாலும்,அதில் தர்மத்தை பின்பற்றுவது அருமை....
    அடுத்த வாரம் இன்னும் சுவாரசியமாக இருக்கப் போகிறது...

    ReplyDelete
  3. கல்கியின் காதறாக்கள்ளன் போல

    ReplyDelete
  4. "சிவாஜியைக் கொல்ல தூதன் என்ற பெயரில் ஒரு திறமையான ஆள்..." அடுத்த அத்தியாயத்தில் ரணகளம்தான்

    ReplyDelete