செயிஷ்டகான் வங்காளத்துக்குச் சென்ற பிறகு ராஜா ஜஸ்வந்த்சிங்
தானும் சிங்கக் கோட்டைக்குப் படையெடுத்துச் சென்றான். சிவாஜியுடன் கூட்டு சேர்ந்து
விட்டதாக செயிஷ்டகான் குற்றஞ்சாட்டியது பொய் என்று அவனுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டியிருந்தது.
ஆனால் முகலாயப் படை ஒரு தடவை சிங்கக் கோட்டைக்குச் சென்று பட்ட பாட்டை மறக்கவில்லை.
எதிரி சிவாஜி மாயாவி என்றும் மந்திரக்காரன் என்றும் அவர்களில் பலர் பயம் அடைந்திருந்தார்கள்.
அதற்கு செயிஷ்டகானை பூனாவுக்கு வந்து சிவாஜி தாக்கிய விதம் மட்டுமல்லாமல் சிவாஜியின்
மற்ற கொரில்லாத் தாக்குதல்கள் குறித்து உலாவிக் கொண்டிருந்த தகவல்களும் காரணமாக இருந்தன.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வந்த முகலாயப் படைவீரர்கள் அவர்களுக்குப்
பழக்கமில்லாத, சௌகரியப்படாத சகாயாத்ரி மலைப்பகுதியில் இருக்கிற சிங்கக் கோட்டைக்குச்
சென்று சிவாஜியை வெல்ல முடியவில்லை. பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு பீரங்கித்
தாக்குதல் நடத்தி மறுபடியும் சிவாஜியின் படை அவர்களைத் துரத்தியடித்தது.
சிவாஜியை
நானும் தான் எதிர்த்தேன் என்று காட்டிய பிறகு சிவாஜி ராஜ்கட் கோட்டை, சிங்கக் கோட்டைகளில்
இருக்கும் வரை அவனை வெல்வது இயலாத காரியம் என்று புதிய கவர்னரான முவாசிம்மிடம் தெரிவித்து
விட்டு ஔரங்காபாத் சென்று விட்டான். ஔரங்கசீப்பின் மகனான முவாசிம் சிவாஜி சிங்கக்கோட்டையில்
இருக்கும் போது மட்டுமல்ல, அவனாக வந்து தாக்காத வரை அவன் வழிக்குப் போவது அனாவசியமான
தலைவலி என்று இருந்தான். அவனும் சிவாஜியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான்….
போர்கள்
வெற்றியிலேயே முடிந்தாலும் நிறைய பொருள் இழப்பையும், படை இழப்பையும் ஏற்படுத்தி விட்டே
ஓய்கின்றன. அந்தப் பொருள் இழப்பு இந்த முறை மிக அதிகமாகவே இருந்ததால் அதை ஈடுகட்ட வருமானத்தைப்
பெருமளவில் அதிகரிக்க வேண்டிய நிலைமையில் சிவாஜி இருந்தான். வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில்
அரசர்கள் மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பார்கள். ஆனால் தாதாஜி கொண்டதேவின் மாணவனுக்கு
அதில் விருப்பம் இருக்கவில்லை. முகலாயர்களிடமிருந்து வரும் தாக்குதல் நின்று விட்டதால்
எதிரிகள் குறித்து ஆலோசிக்கும் நிலையிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்த சிவாஜி நிதி
நிலைமை குறித்து யோசித்து விட்டு ஒற்றர் தலைவனை
அழைத்து வரச் சொன்னான்.
அக்காலத்தில்
எதிரிகளின் நடவடிக்கைகள், வரவிருக்கும் ஆபத்துக்கள், எச்சரிக்கைகள் குறித்த செய்திகள்
தருவது ஒற்றர்களின் தலையாய பணிகளாக இருந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள முடிந்த புதிய
சூழ்நிலைகள் குறித்த ஆலோசனைகளும் அறிவு கூர்மை மிக்க ஒற்றர்கள் மூலம் கிடைப்பதுண்டு.
சிவாஜியின் ஒற்றர் தலைவனும் அத்தகைய அறிவு கூர்மை படைத்தவன். சிவாஜி அழைத்ததும் வந்து
சேர்ந்த அவன் சிவாஜியை வணங்கி நின்றான்.
சிவாஜி
தற்போதைய நிதி நிலைமையைத் தெரிவித்து விட்டு வரிகள் மூலமாக அல்லாமல் நிதி பெறுவதற்கான
சூழல் எங்காவது நிலவுகிறதா என்று ஒற்றர் தலைவனிடம் கேட்டான்.
ஒற்றர்
தலைவன் சொன்னான். “அருகாமையில் இல்லை மன்னா. ஆனால் தொலைவில் இருக்கிறது”
“தொலைவில்
என்றால் நம்மால் போக முடிந்த தொலைவா? இல்லை அதையும் விட அதிகமா?”
“பயணிக்க
முடிந்த தொலைவு தான் மன்னா. துறைமுக நகரமான சூரத்தைப் பற்றி தான் சொல்கிறேன். பல வெளிநாட்டு
வர்த்தகர்களும், உள்நாட்டு வர்த்தகர்களும் வசிக்கிறார்கள். அந்த வர்த்தகர்கள் எல்லாருமே
செல்வந்தர்கள். முகலாயர் வசமுள்ள அந்த நகரத்தின் கவர்னர் இனயதுல்லா கான் அதிக அறிவோ,
துணிச்சலோ இல்லாதவன். அந்த வர்த்தகர்களிடம் உள்ள செல்வம் அதிகமென்றாலும் நகர கஜானாவின்
செல்வம் அதிகமில்லை என்பதால் அங்கே நகரத்தைப் பாதுகாக்க பெரிய முகலாயப்படை எதுவுமில்லை.”
சிவாஜி
சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “ஒருவேளை நாம் படையோடு அங்கே சென்றால் வழியில்
நமக்குப் பாதகமான சூழல்கள் ஏதேனும் நிலவுகின்றதா?”
ஒற்றர்
தலைவன் தெளிவாகச் சொன்னான். “முகலாயர்கள் மிக முக்கியம் என்று பாதுகாக்கும் பகுதிகளை
நீங்கள் நெருங்கி விடாமல் பயணிக்கும் வரை மற்ற
பகுதிகளைக் கடக்க எங்கும் தடையிருக்காது. உங்களைச் சிறைப்படுத்துவதில் முகலாயச் சக்கரவர்த்தியிடம்
இருக்கும் தீவிரம் தக்காணத்தின் கவர்னரான அவரது மகனிடம் இல்லை. அவன் தன்னிடம் இருக்கும்
பகுதிகளை இழந்து விடாமல் இருப்பதையே முக்கியமாக நினைக்கிறான். ஆனால் நீங்கள் பயணிப்பது
சூரத்தைத் தாக்க என்பது தெரிய வருமானால் அவன் வழிமறித்துப் போராட முடிவு செய்யக்கூடும்.
சூரத்தின் பாதுகாவலுக்குக் கூடுதல் படையை அவன் அனுப்பி வைப்பது உறுதி. எனவே ரகசியம்
காப்பது முக்கியம்”
சொன்னதோடு
நிற்காமல் ஒற்றர் தலைவன் கருநீலப் பட்டுத்துணியில் வெண்மாவுக்கட்டியால் சூரத் செல்ல
உகந்த பாதையின் வரைபடத்தை வரைந்தும் காட்டினான். சிவாஜி ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின் சூரத்
செல்வது என்று முடிவெடுத்தான்.
சிவாஜி
நாசிக் அருகே உள்ள புனிதத் தலங்கள் சிலவற்றிற்குச் செல்லப் போவதாகவும், அப்படியே அவன்
ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வர உத்தேசித்துள்ளதாகவும் தகவல் கசிய விடப்பட்டது.
சிவாஜி ஒரு பெரும்படையுடன் கிளம்பினான். சிவாஜியும் அவனுக்கு மிக வேண்டப்பட்ட நம்பிக்கையானவர்களும்
மட்டுமே உண்மை இலக்கினை அறிந்திருந்தார்கள்.
ஒற்றர்
தலைவன் யூகித்திருந்தது போல வழியில் சிவாஜிக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை. முகலாயர்கள்
வலிய வந்து அவன் வழியில் குறுக்கிடவில்லை. சிவாஜியும் பிரச்னைக்குரிய பகுதிகளை ஊடுருவாமல்
படையை நடத்திச் சென்றான்.
நாசிக்
பகுதி அருகே படையை நிறுத்திய சிவாஜி தன் ஒற்றர் தலைவன் சொன்ன தகவல்களைத் தன் வழியில்
உறுதிப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். அவன் தனக்கு மிக நெருக்கமான சிலருக்கு மட்டும்
தெரிவித்து விட்டு ஒரு சிறு வணிகனாக மாறுவேடத்தில் சூரத்திற்குக் கிளம்பிய போது அவனுடைய
படைத்தலைவன் ஒருவன் கவலை தொனிக்கக் கேட்டான். “மன்னா நீங்கள் தனியாகப் போய்த் தான்
ஆக வேண்டுமா?”
சிவாஜி
புன்னகையுடன் கேட்டான். “நான் தனியாகப் போகிறேன் என்று யார் சொன்னது?”
படைத்தலைவன்
குழப்பத்துடன் கேட்டான். “வேறு யார் வருகிறார்கள் உங்களுடன்?”
சிவாஜி
இமைக்காமல் சொன்னான். “இறைவன்”
சூரத்
நோக்கிக் குதிரையில் சென்ற சிவாஜி உண்மையிலேயே சிறு வணிகனாக நடை, உடை, பாவனையில் மாறி
விட்டிருந்தான்.
சூரத்
துறைமுக நகரில் பாரதத்தினர் மட்டுமல்லாமல் ஆங்கிலேயர்களும், போர்ச்சுகீசியர்களும்,
டச்சுக்காரர்களும் கூட அதிகமிருந்தார்கள். அந்த நகரில் ஆங்கிலேயர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும்
தொழிற்சாலைகள் இருந்தன. பெரும்பாலான முகலாயர்களும், தக்காணப்பீடபூமியின் முகமதியர்களும்
இந்தத் துறைமுகம் வழியாகத்தான் ஹஜ் யாத்திரை சென்று வந்தார்கள். வெளிநாடுகளுக்கிடையேயான
வர்த்தகமும் இந்தத் துறைமுகம் வழியாகத்தான் அப்பகுதியில் அதிகம் நடந்தது. அதனால் அந்த
நகரில் செல்வம் மண்டிக்கிடந்தது.
சூரத்
நகரைச் சென்றடைந்த சிவாஜி அந்த நகரம் குறித்து ஒற்றர் தலைவன் சொன்னது அனைத்தும் சரியே
என்பதை உணர்ந்தான். அங்கே சிறு வர்த்தகங்கள் மேற்கொண்டான். அங்குள்ள பெருஞ்செல்வந்தர்களின்
மாளிகைகளை மனதில் குறித்துக் கொண்டான். வியாபாரப் பேச்சோடு அங்குள்ள செல்வங்கள் குறித்தும்
வணிகர்களுடன் பேசித் தெரிந்து கொண்டான். உணவு விடுதிகளிலும், தங்கும் விடுதிகளிலும்
சக மனிதர்களிடம் பேச்சுக் கொடுத்தும் நிறைய தெரிந்து கொண்டான். மூன்று நாட்கள் அங்கு
தங்கி சிறிய வர்த்தகங்களை மேற்கொண்டு நிறைய மனிதர்களுடன் பேசி, அமைதியாக அங்குள்ள நிலவரங்களைக்
கூர்ந்து கவனித்து தனக்கு வேண்டிய அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்டு சிவாஜி திரும்பினான்.
தெற்கில் இருந்து வந்த அந்த வணிகன் உண்மையில் வணிகன் அல்ல, ஒரு அரசன், அதிலும் பலரும்
கண்டு நடுங்கும் சிவாஜி என்ற உண்மை கற்பனையிலும் தோன்றாதபடி, எவருக்கும் எந்தச் சந்தேகமும்
வந்துவிடாதபடி அவன் நடந்து கொண்டிருந்தான்.
அப்படி
சிவாஜி நாசிக் திரும்பிய மறுநாளே சிவாஜியின் படை நாசிக்கிலிருந்து கிளம்பியது. நாசிக்கையும்
தாண்டி வந்த சிவாஜியின் படை சூரத் நகரின் எல்லை வரை வந்து முகாமிட்ட போது சூரத்தின்
மக்கள் பலர் அச்சம் அடைந்தார்கள். காரணம் சிவாஜியின் பெருமை வடக்கில் மாயாவி ஆகவும்,
மாவீரனாகவும், மின்னல் வேகத்தில் வந்து தாக்கக் கூடியவனாகவும் பரவியிருந்தது.
பீஜாப்பூரின்
சக்தி வாய்ந்த அப்சல்கானைத் தனியாக வீழ்த்தியவன், முகலாயச் சக்கரவர்த்தியின் மாமன்
செயிஷ்டகானின் விரல்களை வெட்டித் துரத்தியவன் என்ற வகையில் அவன் அவர்கள் கேள்விப்பட்ட
தகவல்களுக்குப் பொருத்தமாகவே தெரிந்தான். எல்லா உண்மைகளும் பரவ ஆரம்பிக்கையில் பொய்யும்,
கற்பனையும் கலந்தபடியே பரவுவதால் சிவாஜியைப் பற்றிய தகவல்களும் அப்படியே பரவி ஒரு பிரம்மாண்ட
பயங்கரத்தை சூரத்வாசிகள் மனதில் உருவாக்கி இருந்தன. அவன் இவ்வளவு தொலைவு வரை வந்து
எல்லையில் முகாமிட்டிருப்பது எதற்கு என்பதை அவர்களில் பலர் எளிதில் ஊகித்தார்கள்.
அவர்கள்
மூலமாகவும், எல்லைக்காவலர்கள் மூலமாகவும் சிவாஜி எல்லையில் வந்திருக்கும் தகவல் நகர
கவர்னர் இனயத்துல்லா கானை எட்டியது.
(தொடரும்).
என்.கணேசன்
I admire Shivaji. He is the greatest king of our country.
ReplyDeleteஇந்த முறை சிவாஜி கொள்ளையடிப்பானா...?
ReplyDeleteஇல்லை... இனையதுல்லாவே வழிய வந்து வேண்டியதை தந்து விடுவானா???
சிவாஜி, சூரத்தை கிட்டத்தட்ட விழுங்கி விட்டான்
ReplyDelete