பிறப்பு இறப்பு என்ற முடிவில்லாத சக்கரவட்டத்திலிருந்து
விடுபட்டு முக்தியடையும் வழிகளை விளக்கிக் கொண்டு வந்த ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகக் கூறுகிறார்.
பரமாத்மாவைச் சில மனிதர்கள் தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால் தியானத்தின்
மூலமாக இதயத்தில் பார்க்கிறார்கள். மற்றும் சிலர், ஞானயோகத்தின் மூலமாகவும், வேறு சிலர்
கர்மயோகத்தின் மூலமாகவும் கண்டடைகிறார்கள்.
மற்றும் சிலர் இதையெல்லாம் அறியாமல், அறிந்த பிறரிடமிருந்து கேட்டு, அதற்கேற்ப
உபாசனை செய்கிறார்கள். அப்படிக் கேட்பதையே உயர்ந்ததாகக் கொண்டவர்களும் பிறவிப் பெருங்கடலைத்
கடக்கிறார்கள்.
பரமாத்மாவை உணர்வதற்கு தியானம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகிய
வழிகள் உதவி புரியும் என்று சொன்னதோடு நிற்காமல் இவை எவையுமே அறியாதவர்களும் அறிந்தவர்களிடமிருந்து
கேட்டு அந்த வழியிலேயே உயர்ந்த முறையில் உபாசனை செய்தால் அவர்களும் பிறவிப் பெருங்கடலைக்
கடந்து விடலாம் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
இது மிகவும் நுட்பமான பொருள் பொதிந்த சுலோகமாகும். தியானம்
அறிந்தவன். ஞானம் அறிந்தவன், கர்மயோகம் அறிந்தவன் எல்லாம் அறிந்த காரணத்தினாலேயே பரம்பொருளை
அடைந்து பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுவதில்லை. அறிந்ததை உள்ளூர உணர்ந்து, அதை அப்படியே
பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே எல்லாம் பயன் அளிக்கின்றன. அறிவால் அறிந்து அதை உணர்வுக்கும்,
உள் மனதிற்கும், வாழ்க்கைக்கும் கொண்டு வராதவன் அறிவுஜீவியாகவே இருந்தாலும் முட்டாளாகவே
கருதப்படுவான்.
இதைத் திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.
ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா
பேதையின் பேதையார் இல்.
உயர்நூல்களைப் படித்துப் புரிந்து கொண்டும், அவற்றை அடுத்தவர்களுக்கு
உபதேசம் செய்தும் அந்த உயர்வழிகளின்படி நடக்கத் தவறுபவனைப் போன்ற முட்டாள் உலகத்தில்
வேறில்லை என்பது வள்ளுவர் கூற்று. அதனால் அறிவது முக்கியம் அல்ல. அறிந்தது வாழ்க்கை
முறையாக மாற வேண்டும். அதன் பின் தான் மனிதன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.
இதையே தான் ஸ்ரீகிருஷ்ணரும் சூட்சுமமாகச் சொல்கிறார். தியான
முறைகள் அறிந்திருப்பது பெரிதல்ல. தியானம் செய்து இறைவனை நுண்ணிய புத்தியால் இதயத்தில்
பார்க்க முடிவது தான் வெற்றி. ஞானம் பற்றியும், கர்மாவைப் பற்றியும் அறிந்திருப்பது
பெரிய விஷயமல்ல. அவை வாழ்க்கையின் பகுதிகளாகும் போது தான் ஞான யோகமும், கர்ம யோகமுமாகின்றன.
அதன் பின் தான் பரமாத்மாவை அறிவது சாத்தியம். பிறப்பு இறப்பு சங்கிலித் தொடரிலிருந்து
தப்பிப்பது சாத்தியம்.
தியானமும், ஞானமும், கர்மாவைக் குறித்த விளக்கங்களும் ஒருவனுடைய
அறிவுக்கு எட்டவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவன் கடைத்தேற வழியுண்டா என்றால் உண்டு
என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அறிந்த சான்றோர்களிடம்
கேட்டு அவர்கள் கூறிய படியே உயர்வழியில் நடந்து உபாசனை செய்தால் அவர்களும் பிறவிப்
பெருங்கடலிலிருந்து விடுபட முடியும் என்கிறார் அவர்.
அதாவது, எந்த உயர்வழியையும் ஏன் எதற்கு என்று அறியாவிட்டாலும்
எப்படி என்பதை அறிந்தவர்களிடம் கேட்டு அப்படியே சிரத்தையாகப் பின்பற்றுபவன் அறிந்து
பின்பற்றி வாழ்பவர்களைப் போலவே பயன் அடைகிறான் என்கிறது பகவத் கீதை. மொத்தத்தில் அறிவதை
விட அதிக முக்கியத்துவமும், மகத்துவமும். பின்பற்றுவதற்கே தரப்படுகிறது. இதை ஆன்மீகத்தில்
நாட்டமுள்ள ஒவ்வொருவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
இன்னொரு எளிய உதாரணத்தையும் இங்கு கூறலாம். ஒரு அற்புதமான
இடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே நடந்தும் செல்லலாம், காரிலும் செல்லலாம்,
பஸ்ஸிலும் செல்லலாம், ரயிலிலும் செல்லலாம், விமானத்திலும் செல்லலாம் என்று வைத்துக்
கொள்வோம். வழிகளை மிக நன்றாக அறிந்தவர்களும், இந்த வாகன வசதிகளையும் நுட்பமாய் தெரிந்தவர்களும்,
அதற்காகச் செலவு செய்யும் வசதியும் படைத்தவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்
அறிந்தும் அங்கே செல்லாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இன்னொருவர் இருக்கிறார். அவர் எதையும் அறியாத தற்குறி. ஆனால்
அவருக்கு அங்கே போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதனால் அறிந்த பலரிடம் போகும்
வழி, வாகன வசதிகள் பற்றி அறிந்து கொண்டு கஷ்டப்பட்டு அங்கே போய் விட்டும் வருகிறார்
என்று வைத்துக் கொள்வோம். அந்த அறியாத மனிதரே அல்லவா அறிந்தவர்களைக் காட்டிலும் சாதனையாளர்.
அவரே அல்லவா இலக்கை எட்டி இருக்கிறார். பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பலர் உதவிகளைக்
கேட்டுப் பெற்று இருக்கலாம். ஆனால் அந்த இலக்கைப் பொறுத்தவரை அறிந்தவர்களை விட அவரே
சிறந்தவர், வெற்றியாளர் என்று அல்லவா நாம் கருத வேண்டும்!
பதிமூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
பரதசிரேஷ்டனே! எத்தனை வகை தாவர, விலங்கு வகைகள் உண்டாகின்றனவோ அவை அனைத்தும்
க்ஷேத்திரம், க்ஷேத்ரத்தக்ஞன் இவ்விரண்டின் சேர்க்கையாலேயே உண்டானதென்று அறிவாயாக.
எல்லா உயிர்களிலும் சமமாக நிற்பவனும், அழியும் பொருள்களில் அழியாமல் இருப்பவனுமான
பரமேஸ்வரனைக் காண்பவனே உள்ளதை உள்ளபடி அறிந்தவனாவான்.
எல்லா உயிர்களிலும் சமமாக ஈஸ்வரன் அமர்ந்திருப்பதைக் கண்டவன், தனக்குத் தானே
தீங்கிழைக்க மாட்டான். அதனால் அவன் உயர்ந்த கதியை அடைகிறான்.
இவ்வாறு க்ஷேத்திரம் க்ஷேத்திரக்ஞனுக்கு இடையே வேறுபாட்டையும், பிரகிருதி,
பிரகிருதியின் செயல்களில் இருந்து விடுபடுவதையும் அவர்கள் ஞானக்கண்ணால் தத்துவரீதியாக
அறிகிறார்களோ அந்த மகாத்மாக்கள் பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்.
க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் பற்றி முதலிலேயே விளக்கங்கள்
பார்த்தோம். எல்லாம் ஜடப்பொருளுடன், உயிர்ப்பொருளின் சேர்க்கையே என்றும் எல்லா உயிர்களிடமும்
அந்தர்யாமியாக பரமேஸ்வரன் உறைந்து கொண்டிருக்கிறான் என்றும் புரிந்த பின் யாரும் தோற்றங்களுக்கு
அதிகம் மதிப்பும், முக்கியத்துவமும் தர மாட்டார்கள். அப்படி முக்கியத்துவம் தருபவர்கள்
மேலே சொன்ன உண்மையினை உள்ளூர உணர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ள சாதாரண அறிவுள்ள மனிதர்கள்
துணிய மாட்டார்கள். ஆனால் தன்னில் இருக்கும் பரம்பொருளே எல்லா உயிர்களிலும் சரிசமமாக
இருக்கிறான் என்ற ஞானம் பெற்ற உயர்ந்த மனிதர்களோ அடுத்தவர்களுக்கும் தீங்கிழைக்கத்
துணிய மாட்டார்கள். அது தான் ஞானத்தின் அடையாளம்
என்கிறது பகவத் கீதை.
மறுபடியும் இவ்வாறாக, இதுவரை இந்த அத்தியாயத்தில் சொன்ன உண்மைகளை
ஸ்ரீகிருஷ்ணர் தொகுத்துச் சொல்லியிருப்பதுடன் 13வது அத்தியாயமான க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞ
விபாக யோகம் நிறைவு பெறுகிறது.
பாதை நீளும்….
(தொடரும்)
என்.கணேசன்
அறிவது முக்கியமல்ல... அறிந்ததை பின்பற்றுவது தான் முக்கியம்...அருமையான கருத்து...
ReplyDeleteஅதறக்கு கொடுத்த உதாரணமும் சூப்பர் சார்...
க்ஷேத்திரம்..க்ஷேத்திரக்ஞன் பற்றிய இறுதி குறிப்பும் அருமை