பல கூடைகளில்
பழங்களும் பரிசுப் பொருள்களும் கொண்டு வந்து தன்னைச் சந்தித்த பாஜி கோர்படேயை ஷாஹாஜி
சந்தேகிக்கவில்லை. புதிதாக ஒரு மேல்நிலையை எட்டியவர்கள் முன்பே மேல் நிலையில் இருந்த
மனிதர்களை மரியாதை கொடுத்துச் சந்திப்பதும் அவர்கள் நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புவதும்
அக்காலத்திலும் இயல்பாகவே இருந்தது. பக்கத்தில் உள்ள முதோல் பிரதேசத்துப் புதிய தலைவன்
அந்த எண்ணத்திலேயே தன்னைச் சந்திக்க வந்திருப்பதாய் எண்ணி அவனை அவர் வரவேற்றார்.
பாஜி
கோர்படே அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து அன்பின் வடிவமாக எழுந்து நின்று ”இந்த அடியவனை
ஆசிர்வதிக்க வேண்டும் தலைவரே” என்று பணிவாகக் கேட்டுக் கொண்டான். அவனுக்கு ஆசி வழங்கி
அமர வைத்து உபசரித்த ஷாஹாஜி நலம் விசாரித்தார்.
“தங்களைப்
போன்ற பெரியோரின் ஆசியால் நலத்திற்குக் குறைவில்லை தலைவரே. சமீபத்தில் தான் என் மாளிகையைப்
புதுப்பித்தேன். சில ஹோமங்களும் செய்து முடித்தேன். தங்களை அந்தச் சமயத்திலேயே அழைக்க
எண்ணியிருந்தேன். ஆனால் பணிச்சுமைகளால் தங்களை அப்போது அழைக்க முடியவில்லை. தாங்கள்
அருள்கூர்ந்து என் வீட்டிற்கு வந்து கௌரவிக்கும்படி கேட்டுக் கொள்ளவே இங்கே வந்துள்ளேன்….” பேசும் போது இருக்கையில் முழுமையாகச் சாய்ந்து கொள்வது
கூட பெரியவர்கள் முன் கௌரவக்குறைவு என்று எண்ணியவன் போலக் காட்டிக் கொண்ட பாஜி கோர்படே
அவர் பார்வைக்குப் பணிவின் உதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டான்.
ஷாஹாஜி
சொன்னார். “பீஜாப்பூர் செல்லும் சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக உன்னுடைய இல்லத்தில் தங்கி
இளைப்பாறிச் செல்கிறேன் பாஜி கோர்படே.”
“ஐயா
அப்படி வழித்தடத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என் இல்லத்திற்கு வந்து செல்லலாம்.
அது எனக்கு மகிழ்ச்சியே. நான் என் இல்லத்தில் நாளை மறுநாள் ஒரு சிறு விருந்தைத் தங்களுக்காக
ஏற்பாடு செய்திருக்கிறேன். முதலில் அதற்கு வந்து செல்லும்படி அன்புடன் தங்களைக் கேட்டுக்
கொள்கிறேன்….”
ஷாஹாஜி
என்ன சொல்வதென்று யோசித்தார். அந்த நேரத்தில் முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொண்டு
பாஜி கோர்படே சொன்னான். “ஐயா அரசர்களுடனும், அவர்களுக்கு இணையானவர்களுடனும் பழகும்
உங்களுக்கு என்னைப் போன்ற எளியவன் இல்லத்திற்கு வரத் தயக்கமாக இருக்கலாம். மிக உயர்ந்த
நிலையில் இருக்கும் தங்களை அழைக்கவும் எனக்கு அருகதை உள்ளதா என்ற கேள்வி என் உள்ளத்திலும்
இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அன்பின் காரணமாக வந்திருக்கும் இந்த அடியவனின் அழைப்பை
அலட்சியப்படுத்தி நிராகரித்து விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்…..”
மிக
உருக்கமாக அவன் கேட்டுக் கொண்ட போது ஷாஹாஜிக்கு மறுக்க முடியவில்லை. அவர் சொன்னார்.
“நான் என்னை உயர்ந்தவனாகவும், மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் என்றைக்கும் நினைத்ததில்லை.
எல்லாமே விதி ஏற்படுத்தித் தருபவை. நான் எல்லா நிலைகளிலும் சிறிது காலமாகவாவது இருந்திருக்கிறேன்.
அதனால் நான் வர யோசிக்கவில்லை. ஆனால் நாளை மறுநாளே வர வேண்டுமா என்று தான் யோசித்தேன்.
நீ இவ்வளவு தூரம் கேட்டுக் கொண்டதால் அந்தத் தயக்கத்தையும் விட்டேன். நீ கேட்டுக் கொண்டபடியே
வருகிறேன். திருப்தி தானே….”
தன்
இல்லத்திற்கு வரவழைக்க எண்ணிய திட்டம் பலித்ததில் பாஜி கோர்படேயின் முகத்தில் நிம்மதியும்
ஆனந்தமும் தெரிந்தது. அந்த ஆனந்தத்தைக் கண்ட ஷாஹாஜி அதன் பின்னணி தெரியாததால் நெகிழ்ந்து
போனார். பாஜி கோர்படே கைகளைக் கூப்பி குரல் தழுதழுக்கச் சொன்னான். “வருவதாகச் சொல்லி
என்னைப் பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி தலைவரே.”
அதன்
பின்னும் சிறிது நேரம் அங்கு இருந்து நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகள் கேட்டு, சிறிது
நேரம் அளவளாவிக் கொண்டிருந்த பாஜி கோர்படே கிளம்புவதற்கு முன் அவருக்குப் பிடித்தமான
உணவுகள் குறித்துக் கேட்டான்.
’இதென்ன
அன்புத் தொல்லை’ என்று எண்ணிய ஷாஹாஜி தனக்குப் பிடிக்காத உணவுகள் இல்லை என்பதால் எந்த
வகை உணவானாலும் தனக்குப் பிரச்னையில்லை என்றார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பாஜி கோர்படே
வற்புறுத்தி அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளின் பட்டியல் அறிந்து விட்டே விடை பெற்றான்.
பாஜி
கோர்படே மீது ஷாஹாஜிக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. பீஜாப்பூர் சுல்தான் அழைத்திருந்தாலும்,
சுல்தானுக்கு நெருங்கிய யாராவது அழைத்திருந்தாலும், அல்லது வேறு யாராவது பீஜாப்பூரில்
இருந்து அழைத்திருந்தாலும் ஷாஹாஜி தற்போதைய நிலவரம் காரணமாக உஷாராகியிருப்பார். ஆனால்
எந்த விதத்திலும் அவருக்கு இணையில்லாத ஒருவன், அடுத்த பகுதியின் தலைவன் தன்னைச் சிறைப்படுத்தக்கூடும்
என்ற சிந்தனை அவருக்கு ஏற்படக் காரணம் எதுவும் இருக்கவில்லை. அப்படிச் சிறிய சந்தேகம்
எதுவும் ஏற்பட்டுவிட முடியாதபடியே பாஜி கோர்படே நடந்து கொண்டான்.
குறிப்பிட்ட
தினத்தில் சில பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஷாஹாஜி
முதோல் பகுதியில் உள்ள பாஜி கோர்படேயின் மாளிகையை அடைந்தார். மாளிகையின் வெளியே இருந்த
காவலர்கள் ஷாஹாஜியிடம் அவரது வாளை வெளியிலேயே விட்டு விட்டு உள்ளே செல்லச் சொன்னார்கள்.
மேலும் அவரது பணியாளர்களை வெளியிலேயே நிற்கச் சொன்னார்கள்.
ஷாஹாஜியின்
முகம் கோபத்தில் சிவந்தது. அவர் வாளில் கை வைத்த போது பாஜி கோர்படே ஓடி வந்தான். “வாருங்கள்
தலைவரே. ஏன் இங்கேயே நின்று விட்டீர்கள்?’
பாஜி
கோர்படே அந்த நேரத்தில் அங்கு வராமல் இருந்திருந்தால் அவன் காவலர்கள் சிலர் மரணத்தை
நிச்சயமாகத் தழுவியிருப்பார்கள் என்று அவன் புரிந்து கொண்டான். அவர் காலைத் தொட்டு
அங்கேயே வணங்கினான்.
அவனை
ஆசிர்வதித்த ஷாஹாஜி சினம் குறையாதவராகச் சொன்னார். “வாளைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே
செல்லச் சொல்கிறார்கள். என் ஆட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.”
பாஜி
கோர்படே தன் காவலர்களைக் கோபித்துக் கொண்டான். “மூடர்களே. பொதுவாக மற்றவர்களை நடத்துவது
போலவா தலைவரை நடத்துவது. அவர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? விலகி நில்லுங்கள்….”
பாஜி
கோர்படேயின் காவலர்கள் தலைகுனிந்து விலகி நின்றார்கள். “தராதரம் தெரியாத இந்த மூடர்களை
மன்னியுங்கள் தலைவரே. வாருங்கள் தலைவரே…. உங்கள் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்….
இந்த எளியவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்ததற்கு நன்றி…. வாருங்கள்…”
பாஜி
கோர்படேயின் பணிவான வார்த்தைகளால் ஷாஹாஜியின் கோபம் முழுவதுமாக மறைந்தது. பொதுவாக அனைவரிடத்திலும்
காண்பிக்கச் சொன்ன வழிமுறைகளைக் காவலர்கள் பின்பற்றி இருக்கிறார்கள். அவ்வளவு தான்.
இது எல்லா இடங்களிலும் நடப்பது தான் என்று சமாதானம் அடைந்த அவர் பாஜி கோர்படேயின் மாளிகையினுள்
தன் ஆட்களுடன் நுழைந்தார்.
உள்ளே
பாஜி கோர்படேயின் மனைவியும், இரு பிள்ளைகளும் கைகூப்பி அவரை வரவேற்று காலில் விழுந்து
வணங்கினார்கள். வெளியே காலைத் தொட்டு மட்டுமே வணங்கியிருந்த பாஜி கோர்படே குடும்பத்தினர்
வணங்குகையில் தானும் அவர்களைப் போலவே தரையில் விழுந்து அவரை வணங்கினான். ஏதாவது சிறிய
சந்தேகம் வெளியே ஏற்பட்டு அவரிடம் தங்கியிருந்தாலும் இந்த வணக்கத்தில் முழுவதுமாக நீங்கியிருக்கும்
என்று பாஜி கோர்படே சரியாகவே கணக்குப் போட்டான்.
அமர்ந்து
சிறிது நேரம் அளவளாவிய பின் விருந்துக்கு முன் பாஜி கோர்படே புதுப்பித்திருந்த தன்
மாளிகையின் ஒவ்வொரு பகுதியாக ஷாஹாஜிக்கு காட்டினான். ஷாஹாஜி எத்தனையோ பெரிய பெரிய மாளிகைகளையும்,
அரண்மனைகளையும் பார்த்தவர். இந்தச் சிறிய மாளிகையில் சிலாகிக்க அவருக்குப் பெரிதாக
இருக்கவில்லை என்றாலும் அவரவருக்கு அவரவர் வீடுகள் பெரிய அரண்மனைகள் தான் என்று உள்ளுக்குள்
எண்ணியவராக பாஜி கோர்படேயின் பின்னால் சென்று அந்த மாளிகையைப் பார்வையிட்டார். சில
அடிகள் தள்ளி அவருடைய ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.
மாளிகையின்
கடைக்கோடி அறைக்கு முன் வந்த போது அறைக்கு வெளியே தண்ணீர் கொட்டியிருந்தது. அதைப் பார்த்து
முகம் சுளித்த பாஜி கோர்படே “பணியாளர்களுக்கு எத்தனையோ முறை தெரிவித்தாகி விட்டது.
ஆனாலும் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள்” என்று சலித்துக் கொண்டு “நீங்கள் இந்த அறைக்குள்
சென்று பாருங்கள் தலைவரே” என்று சொல்லி வெளியிலேயே நின்று கொண்டு கத்தினான். “யாரங்கே.
விரைந்து வாருங்கள்”
ஷாஹாஜி
அறைக்குள் நுழைந்தார். அறைக்கு வெளியே பாஜி கோர்படே நின்றிருந்தான். ஷாஹாஜியின் ஆட்கள்
தண்ணீரையும், பாஜி கோர்படேயையும் தாண்டி பணியாளர்கள் வந்து தரையைத் துடைப்பதற்காகக்
காத்து நின்றிருந்தார்கள். ஆனால் ஷாஹாஜிக்கும், ஷாஹாஜியின் ஆட்களுக்கும் “யாரங்கே விரைந்து
வாருங்கள்” என்பது சமிக்ஞை என்று தெரிந்திருக்கவில்லை.
அந்த
வாசகத்தைக் கேட்டவுடன் சிறிதும் எதிர்பாராத விதமாய் அறைக்குள் ஒளிந்திருந்த பாஜி கோர்படேயின்
வீரர்கள் ஷாஹாஜி மேல் பாய பாஜி கோர்படே மின்னல் வேகத்தில் அறைக்கதவை மூடி வெளியே தாளிட்டான்.
அதே நேரத்தில் வெளியே இருந்த ஷாஹாஜியின் ஆட்கள் மீதும் மறைந்திருந்த வீரர்கள் பாய்ந்தார்கள்.
இரண்டே
நிமிடங்களில் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் செயலற்று சிறைப்பிடிக்கப்பட்டார்கள். பாஜி
கோர்படேயின் திட்டம் நிறைவேறி விட்டது.
(தொடரும்)
என்.கணேசன்
(தீபாவளி போனசாக நாளை (6.11.2018) மாலை இருவேறு உலகத்தின் அடுத்த அத்தியாயம் அப்டேட் ஆகும்.)
(தீபாவளி போனசாக நாளை (6.11.2018) மாலை இருவேறு உலகத்தின் அடுத்த அத்தியாயம் அப்டேட் ஆகும்.)
என்ன சார் இப்படி ஷாஹாஜியை சிறைப்பிடிக்க விட்டு விட்டீர்களே? சிவாஜி என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டுமே.
ReplyDeleteVery interesting and thrilling. You are successfully bringing suspense elements in this historical novel also. Superb sir.
ReplyDeleteஷாஹாஜியை சிறைபிடிச்சிட்டாங்களே...!
ReplyDeleteஇதற்கு சிவாஜி பயங்கரமான பதிலடி கொடுக்கப் போகிறான்...