வஞ்சிக்கப்பட்டதை உணர்வதற்கு முன் ஷாஹாஜி இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். வெற்றி,
தோல்விகளை வாழ்க்கையில் நிறைய பார்த்தவர் அவர். வஞ்சகமும் அவர் கண்டிருக்கிறார். ஆனால்
இது வரை அவர் இப்படி சிறைப்படுத்தப்பட்டதில்லை. ஜாம்பவான்களிடம் கூட அவர் இது வரை சிக்கிக்
கொண்டதில்லை. அப்படிப்பட்டவர் ஒரு சாதாரண ஒரு பகுதியின் சாதாரணத் தலைவனிடம் சிக்கி
ஏமாந்திருக்கிறார். அது அவரை நிறையவே பாதித்தது.
கதவைத்
திறந்து பாஜி கோர்படே சக மனிதன் ஒருவனிடம் சொல்வது போலச் சாதாரணமாகச் சொன்னான். “உங்களைக்
கைது செய்து அழைத்து வரும்படி சுல்தானின் உத்தரவு. என்னால் மீற முடியவில்லை. தவறாக
நினைத்துக் கொள்ளாதீர்கள்…..”
தலைவரே
இல்லை, ஐயா இல்லை, ஏன் பெயரே இல்லை. வெறும் அறிவிப்பு மட்டும் செய்து விட்டு பாஜி கோர்படே
போய் விட்டான். அவருடைய ஆட்களும் செயலற்றுப் போயிருப்பார்கள், சிறைப்பிடிக்கப்பட்டிருப்பார்கள்
என்பதை ஷாஹாஜி யூகித்தார். விதியைக் கூட அவரால்
இப்போது நொந்து கொள்ள முடியவில்லை. எல்லாம் அவருடைய முட்டாள்தனம்….
அடுத்த
இரண்டு நாட்களில் அவரை பீஜாப்பூர் சுல்தானின் முன்னிலையில் பாஜி கோர்படே நிறுத்தினான்.
ஆதில்ஷா ஷாஹாஜியைப் பார்த்த பார்வையில் பழைய நட்பு தெரியவில்லை. எதிரியைப் பார்ப்பது
போலவே பார்த்தார். ஷாஹாஜி அவருக்கு வணக்கம் தெரிவித்த போது அதையும் அவர் அங்கீகரிக்க
மறுத்தார்.
ஆனால்
அவர் பாஜி கோர்படேயை முதுகில் தட்டிப் பாராட்டினார். “சொன்னபடியே சாதித்து வந்திருக்கிறாய்
பாஜி கோர்படே. நான் இவ்வளவும் வேகமாகவும் கச்சிதமாகவும் நீ காரியத்தை முடிப்பாய் என்று
எதிர்பார்க்கவில்லை…. உன் திறமையை மெச்சுகிறேன்”
பாஜி
கோர்படே முன்பு ஷாஹாஜியிடம் காட்டிய பணிவை இப்போது ஆதில்ஷாவிடம் காட்டினான். “தங்களுக்குப்
பணிவிடையாற்ற முடிந்ததில் பெருமை அடைகிறேன் அரசே”
“நாளை
அரசவைக்கு வா பாஜி கோர்படே. உனக்கு உரிய மரியாதையுடன் வெகுமதிகளும் காத்திருக்கின்றன.”
பிரகாசித்த
முகத்துடன் அவரைப் பயபக்தியுடன் வணங்கி விட்டு பாஜி கோர்படே சென்று விட்டான். அவனை
அனுப்பிய பிறகு சிறிது நேரம் ஷாஹாஜியையே ஆதில்ஷா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஷாஹாஜியாக எதையாவது சொல்வார் என்று அவர் எதிர்பார்த்தது போல் இருந்தது. ஆனால் ஷாஹாஜி
தன் வணக்கத்தையும் சுல்தான் அங்கீகரிக்காததால் இனி எதுவும் தானாகப் பேசுவதில் அர்த்தமில்லை
என்று உணர்ந்து மௌனமாகவே நின்றார்.
பின்
ஆதில்ஷாவே ஆரம்பித்தார். “உங்களை நான் என் நண்பராகவே நினைத்து வந்திருக்கிறேன் ஷாஹாஜி.
அதனால் உங்களிடமிருந்து இந்த வஞ்சகத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை…”
“உங்களை வஞ்சிக்க நான் என்றுமே எண்ணியதில்லை அரசே. தாங்கள் என்னைச் சிறைப்படுத்தியது கூட
எனக்கு வலிக்கவில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் பெரும் வேதனையை நான் உணர்கிறேன்.”
ஷாஹாஜி உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.
“உங்கள்
மகன் என் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய செல்வத்தை அபகரித்ததும், என் கோட்டைகளை அபகரித்ததும்
வஞ்சகத்தில் சேர்ந்தது அல்லவா ஷாஹாஜி?” ஆதில்ஷா ஆக்ரோஷத்துடன் கேட்டார்.
“என்
மகன் செய்த செயல்களுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் மன்னா?”
“அவன்
வயதில் இத்தனையைத் திட்டமிட்டு செயல்படுத்த முடியாது என்பதால் எல்லாம் நீங்கள் சொல்லிக்
கொடுத்து அதன்படி தான் நடந்திருக்கிறது என்றும் எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன
ஷாஹாஜி”
“அப்படி
உங்களுக்குத் தகவல்கள் கிடைத்திருக்குமானால் அவை தவறான தகவல்கள் அரசே. என்னைப் பற்றியும்
என் மகனைப் பற்றியும் முழுவதுமாக அறிந்திருக்கும் நீங்கள் அந்தத் தகவல்களை நம்புவது
என் வேதனையை அதிகரிக்கிறது மன்னா?”
“உங்களைப்
பற்றி நான் முழுவதுமாக அறிந்திருப்பதாக நம்பியே நான் ஏமாந்து போயிருப்பதாகவும் அனைவரும்
கூறுகிறார்கள் ஷாஹாஜி”
“இப்படி
அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதைக் காட்டிலும் உடனடியாக என் நெஞ்சில் ஒரு ஈட்டியைப் பாய்ச்சி
விடுவது சிறந்தது அரசே” ஷாஹாஜி வேதனையுடன் சொன்னார்.
“உங்கள்
மகன் சிவாஜி என் நிதியையும், கோட்டைகளையும் கைப்பற்றியது அபாண்டமா? நான் சொல்வது அபாண்டமா?”
சினம் குறையாமல் ஆதில்ஷா கேட்டார்.
“என்
மகன் உங்கள் நிதியையும், கோட்டைகளையும் கைப்பற்றியதில் என் பங்கு இருப்பதாக அனைத்தும்
அறிந்த நீங்கள் சொல்வதைத் தான் அபாண்டம் என்கிறேன்”
“அனைத்தும்
அறிந்திருந்தால் நான் ஏன் இப்படி ஏமாந்து நிற்கிறேன் ஷாஹாஜி! நான் என்ன அறிந்திருக்கிறேன்
என்று நீங்கள் கூறுகிறீர்கள்?”
“நானும்
என் மகன் சிவாஜியும் சேர்ந்து ஒரு கூரையின் கீழ் வாழ்ந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவன் நடவடிக்கைகளில் என் ஆதிக்கம் இருந்ததேயில்லை.
அதற்கான வாய்ப்புகளை விதி எனக்கு ஏற்படுத்தித் தந்ததேயில்லை. இதுவே சாம்பாஜியோ, வெங்கோஜியோ
இப்படி நடந்து கொண்டு நீங்கள் குற்றம் சாட்டினால் அவர்கள் நடவடிக்கைகளில் என் பங்கு
இல்லா விட்டாலும் கவனக்குறைவாக இருந்த குற்றத்தையாவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
சிவாஜியைப் பொருத்தவரை அவன் ஆரம்பத்திலிருந்தே தான்தோன்றித் தனமாகவே நடந்து வருகிறான்…..”
ஆதில்ஷா
ஷாஹாஜியையே பார்த்தபடி நின்றிருந்தார். ஷாஹாஜி சொன்னதில் உள்ள உண்மையை அவரால் மறுக்க
முடியவில்லை. அவர் முகத்தில் சினம் குறைந்திருந்தது.
ஷாஹாஜி
தொடர்ந்து சொன்னார். “தாதாஜி கொண்டதேவ் இருந்த வரையில் எனக்கு அங்கிருந்து செலவுகள்
போக மீதமிருந்த வரிவசூல் தொகையாவது சரியாக வந்து கொண்டிருந்தது. அவர் இறந்தவுடனே அதை
அனுப்புவதையும் என் மகன் நிறுத்தி விட்டான். அங்குள்ள மக்களின் நலத்திற்குத் தான் அதை
செலவழிக்க முடியும் என்றும் என் செலவுகளை கர்னாடகத்தில் வரும் வருவாயிலேயே நான் பார்த்துக்
கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டான். இது என் ஆதிக்கத்தில் அவன் இருப்பதன் இலட்சணமா?
தயவு செய்து கூறுங்கள்… “
ஆதில்ஷாவுக்கு
கல்யாண் நிதியைப் பறிகொடுத்த வீரர்கள் ’அங்கு வசூல் செய்த நிதியில் சுல்தான் பீஜாப்பூரில்
கட்டிடங்கள் கண்ட வேண்டியதில்லை’ என்ற வகையில் சிவாஜி சொன்னதாகத் தெரிவித்தது நினைவுக்கு வந்தது….. அவருக்கு எழுதிய கடிதத்திலும்
ஷாஹாஜிக்கு தெரிவித்ததையே அவன் தெரிவித்திருக்கிறான். ஷாஹாஜி சொல்வதும் இதற்கு ஒத்துப்
போவதால் இதில் ஷாஹாஜி பொய் சொல்லவில்லை என்பதை அவர் உணர்ந்தார்….
ஷாஹாஜி
தொடர்ந்து சொன்னார். “என் இளைய மனைவியின் சகோதரனை அங்கு சுபா பகுதியின் தலைவனாக நியமித்திருந்தேன்.
அவன் அங்குள்ள வசூலை சிவாஜிக்குத் தர மறுத்தான் என்பதற்காக அவனை அங்கிருந்து துரத்தி
விட்டிருக்கிறான் சிவாஜி. இதிலும் என் சம்மதத்தை அவன் எதிர்பார்க்கவில்லை….. அரசே!
இப்போதும் அவன் செயலைக் கண்டித்து நான் கடிதம் அனுப்பியதற்கு அவன் வளர்ந்து விட்டதாகவும்,
எது நல்லது எது கெட்டது என்பது தெரியும் என்றும் பதில் அனுப்பி இருக்கிறான்…..”
ஷாஹாஜியின்
பங்கு இதில் இல்லை என்பது ஆதில்ஷாவுக்கு மெல்லப் புரிந்தது. இப்போது ஆதில்ஷாவுக்கு சிவாஜி பிரம்மாண்டமாகவே
தெரிந்தான். இத்தனை சிறிய வயதில் இத்தனை துணிச்சலா? அதை நிறைவேற்றுவதில் இத்தனை சாமர்த்தியமா?
அவனை இப்படியே விடுவது பேராபத்து என்பதும் அவருக்குப் புரிந்தது. சிறிது யோசித்தார்….
ஷாஹாஜி
மீதுள்ள கோபம் தணிந்து விட்டிருந்தாலும் ஷாஹாஜி மீது ஆதில்ஷாவுக்குப் பச்சாதாபம் ஏற்பட்டு
விடவில்லை. யோசனைக்குப் பின் அவர் கண்டிப்பான குரலில் உறுதியாகவே சொன்னார். “நீங்கள்
சொன்னது உண்மையாகவே இருக்கலாம் ஷாஹாஜி. ஆனால் உங்கள் மகனை நான் சும்மா விட முடியாது.
அவனை நான் தண்டிக்காமல் விட்டால் அவனைப் பார்த்து தைரியம் பெற்று ராஜ்ஜியம் முழுவதும்
யாரும் கிளம்பி விடும் அபாயம் இருக்கிறது. அதை நான் அனுமதிக்க முடியாது. சிவாஜியை இங்கே
வரவழைக்கவும் அவனைத் தண்டிக்கவும் எனக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு நீங்கள் தான்.
அதனால் உங்களை நான் விடுதலை செய்வதாக இல்லை….”
ஆதில்ஷா
காவலர்களைப் பார்த்து சைகை காட்டி விட்டுப் போய் விட்டார். காவலர்கள் ஷாஹாஜியைச் சிறையில்
அடைத்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
Thrilling events. Waiting for next Monday
ReplyDeleteஷாஹாஜியை எப்படி சிவாஜி காப்பாற்றப் போகிறான் என்று கவலைப்பட வைத்து விட்டீர்களே. அருமை.
ReplyDelete"அங்கு வசூல் செய்த நிதியில் சுல்தான் பீஜாப்பூரில் கட்டிடங்கள் கண்ட வேண்டியதில்லை..." இதன் அர்த்தம் புரியவில்லை...ஐயா...
ReplyDeleteஆதில்ஷாவும் கட்டிடப்பிரியர். பெரிய பெரிய மாளிகைகள் கட்டிடங்கள் பீஜாப்பூரில் கட்டியுள்ளார். அதை மராட்டிய ஏழைகளிடம் வரி வசூல் செய்த பணத்தினால் கட்ட வேண்டியதில்லை என்று சிவாஜி சூசகமாகக் கூறுகிறான்.
Deleteஷாஹாஜியை சிறையில் அடைத்து... சிவாஜியின் அடுத்த தாக்குதலுக்கு..பலியாக...சுல்தான்..தயாராகிவிட்டார்..என நினைக்கிறேன்...
ReplyDelete